எட்டுத்தொகை
சங்க இலக்கியங்களுள் ஒன்று எட்டுத்தொகை. இது எட்டு
நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப்
பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் எழுதியவரின் பெயர் காணப்படவில்லை.
அகம், புறம் என இந்நூல்களைப் பகுக்கின்றனர். அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால்
தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை
700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு.
ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும்
தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன.
3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச்
சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு
என்றும் கருதுவர்.
எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.புறநானூறு
எட்டுத்தொகை நூல்களைப்
பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றிணை நல்ல குறுந்தொகை
ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை
:
புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து
வருவது:
பரிபாடல்.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. இதைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணை புரிகின்றன.
குறுந்தொகை
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற
நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
205 புலவர்களால் பாடப்பெற்றது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும்,
20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளார்கள். 4 அடிச் சிற்றெல்லையும்
8 அடிப் பேரெல்லையும் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
ஐங்குறுநூறு
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந்நூல். இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த
அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந்நூல் ஐங்குறுநூறு என்னும் பெயர்
பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரவேந்தன். இந்நூலில் ஐந்து திணைகளும் ஐந்து புலவர்களால்
பாடப்பட்டுள்ளது.
மருதம் - ஓரம்போகி
நெய்தல் - அம்மூவனார்
குறிஞ்சி - கபிலர்
பாலை - ஓதலாந்தையார்
முல்லை - பேயனார்
கலித்தொகை
இந் நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். பா வகையால் பெயர்பெற்ற இந்நூலில் அமைந்துள்ள பல பாடல்கள் நாடக அமைப்புடன் காணப்படுகின்றன.
அகநானூறு
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந்
நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. பாடிய புலவர்கள் எண்ணிக்கை 146. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன்
உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். 13 அடி முதல் 31 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பகுப்புகளைக்
கொண்டுள்ளது.
- களிற்றியானை நிரை - 1 முதல் 120வரை
- மணிமிடைப்பவளம் - 121 முதல் 300 வரை
- நித்திலக்கோவை - 301 முதல் 400 வரை
அகநானூற்றின் பாடல்களைத் தொகுத்த உருத்திரசன்மன்
ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றியுள்ளார். அவை,
- 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணாக வரும் பாடல்கள் பாலைத் திணைக்குரியன.
- 4, 14, 24 என நான்கு எனும் எண்ணுடன் முடிபவை முல்லைத்திணைக்குரியவை.
- 6, 16, 36 என ஆறு எனும் எண்ணில் முடிவன மருதத்திணைக்குரியவை.
- 2, 8 என இரண்டையும் எட்டையும் இறுதியாக முடிவன குறிஞ்சித்திணைக்குரியவை.
- 10, 20 என முடிபவை நெய்தல் திணைக்குரியவை என்றும் வகுத்துள்ளார்.
பதிற்றுப்பத்து
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக்
கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே,
ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை.
நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.
- 2ஆம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
- 3ஆம் பத்து – பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது
- 4ஆம் பத்து – களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
- 5ஆம் பத்து – கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது
- 6ஆம்பத்து – ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் பாடியது
- 7ஆம் பத்து – செல்வக்கடுங்குா வாழியாதனைக் கபிலர் பாடியது.
- 8ஆம் பத்து - தகடூர் எறிந்த பெருஞ்சுரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
- 9ஆம் பத்து – இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.
புறநானூறு
புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு
நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160.
இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார்.
4 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளது. 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ மன்னர்களையும்,
18 சேர மன்னர்களையும் பாடுகின்றது.
பரிபாடல்
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது.
70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரைஎழுதியுள்ளார்.
25 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூலில் திருமால், செவ்வேள் பெருமைகளும், வையை ஆற்றின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக