ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மானுக்குப் பிணை நின்ற படலம் - சீறாப்புராணம்

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

        மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

    வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

    வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

    கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

  • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
  • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
  • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
  • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
  • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.

மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது

    காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.

    சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

    வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.

    கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

          மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

        நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

          வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

          வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 

          இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

          தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

           பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.

          முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

 

 


பாத்திரம் பெற்ற காதை - மணிமேகலை

 

பாத்திரம் பெற்ற காதை

மணிபல்லவத்தீவின் காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும். அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

பாத்திரம் பெற்ற காதை - செய்யுள்

நீ யார் எனத் தீவத்திலகை மணிமேலையை வினவல்

மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல் லவத்திடை மணிமே கலைதான்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரியக் கடவுள் கோலத்துத்
தீவ திலகை செவ்வனந் தோன்றிக்
கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய
இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,

மணிமேலை தன் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுதல்

எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது
பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியில் பூமியங் கிழவன்
இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்
ஆய பிறவியில் ஆடலங் கணிகை
மாதவி ஈன்ற மணிமே கலையான்
என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்
மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்
ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது
பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,

தீவத்திலகைத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்
தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்
பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெயர் இதுகேள்:

தீவத்திலகை மணிமேலையைப் பாராட்டுகின்றாள்

தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்
கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலை யாக
ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்
அமுதசுரபி உன் கையில் கிடைக்கும்
ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்த நாள் இந்த நாளே எனல்
அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது
நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை
ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

மணிமேலையிடம் அமுதசுரபி வந்தடைதல்
என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
தீவ திலகை தன்னொடும் கூடிக்
கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.

மணிமேலை புத்தரை வணங்குதல்
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி
மாரனை வெல்லும் வீர நின்அடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி
பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி
எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி
கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி
தீமொழிக்கு அடைத்த செவியோய்! நின்அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய்! நின்அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின்அடி
வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு
அடங்காது என்ற ஆயிழை முன்னர்,

பசி தீர்க்கும் பணி
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
பசியால் நாயினைத் தின்றவர்
புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்
இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும்பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
உயிர் அளிப்பவர் யார்?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,
அறம் செய்த பயன்
விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் தனையான் ஊட்டிய
காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்
ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்
ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது

தாய்போல் காப்பேன்
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
வெயில்என முனியாது புயல்என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்
முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,
வானத்தில் பறந்தாள்
மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை
அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை
ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,
தீவ திலகை தன்அடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு
வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்

மணிமேலை மாதவியின் பழைய பிறப்பைக் கூறினாள்
வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது என்மகள் வாராள்
வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்
வந்து தோன்றி,
அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்

அறவணர்த் திருவடி தொழுவோம்
வாய்வ தாக மானிட யாக்கையில்

தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு
அறவண வடிகள் தம்பால் பெறுமின்
செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.

பாத்திரம் பெற்ற காதை பாடல்கள் முற்றும்.


செய்யுள் விளக்கம்

நீயார் என வினவல்

மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

நான் தீவதிலகை

மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை பாராட்டுதல்

அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க அணியிழையே! இன்னும் கேட்பாயாக!

அமுத சுரபி

“மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசி தீர்க்கும் பணி

புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

பசியால் நாயினைத் தின்றவர்

புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.

உயிர் அளிப்பவர் யார்?

கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர். இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.

தாய்போல் காப்பேன்

“சம்புத்தீவு என்கிற இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர் சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு, அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும் என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

“அதன் திறத்தினை உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

“சொன்ன சொல் மாறாத மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம் கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள். (சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று கூறினாள் மணிமேகலை).

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

“உங்கள் இருவருக்கும் இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப் பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.

சனி, 26 ஆகஸ்ட், 2023

வழக்குரை காதை - சிலப்பதிகாரம்

 

சிலப்பதிகாரம்

வழக்குரை காதை

தன் கணவன் கோவலன் பாண்டிய மன்னனின் தவறான ஆணைக்கிணங்கக் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி, பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்து நீதி கேட்கின்றாள். அவளுடைய வாதத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து, தான் நீதி தவறியதை எண்ணி மனம் கலங்கி, பாண்டிய மன்னன் உயிர் துறக்கின்றான். மன்னனோடு அரசியும் உயிர் துறக்கின்றாள். சினம் தணியாத கண்ணகி மதுரை மாநகரை எரிக்கின்றாள். இத்தகு செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

 

வழக்குரை காதை

கோப்பெருந்தேவியின் தீக் கனவு
ஆங்கு,

‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’
கெடுதிக்குக் காரணம்
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-
ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே-
கண்ணகி பெருஞ் சீற்றத்தோடு அரசனை நோக்கிச் செல்லல்
இப்பால்,
‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-
காவலோன் மருண்டு மன்னனிடம் கூறுதல்
வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-
‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-

கண்ணகி தன்னைப் பற்றிக் கூறுதல்
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

தன் கணவன் கள்வன் அல்லன் எனச் சிலம்பினை உடைத்தல்
‘பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-
‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

வெண்பா

1.‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.

2.காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான்.

3.மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

வழக்குரைகாதை முற்றும்

 

விளக்கம்

பாண்டிமாதேவியின் தீக்கனவு

         கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். “தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்” என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.

கோப்பெருந்தேவியின் வருகை

         கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாக” என வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.

கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது

அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாக” என்று கூறினாள்.

வாயிற்காவலன் கூற்று

வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்” என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.

கண்ணகி வழக்குரைத்த நிலை

வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.

கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகி” என்று கூறினாள்.

கண்ணகி வழக்கில் வென்றமை

கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்” என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டது” என்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்” என்று கூறினான். பின்பு “கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.

பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்

அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் “வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். “கெடுக என் ஆயுள்” எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். ”தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாது” எனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.

வெண்பா உரை

கண்ணகி கூற்று

பாவச்செயல்களைச் செய்தவர்களை அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று சான்றோர் கூறும் சொற்கள் பொய்யல்ல. கொடிய தீமையைச் செய்த பாண்டிய மன்னனின் தேவியே! தீவினைக்கு ஆட்பட்ட நான் இனிச் செய்யவிருக்கும் செயல்களையும் நீ காண்பாயாக” என பாண்டிமாதேவி இறந்தது தெரியாமல் கண்ணகி கூறினாள்.

கண்ணகி கூற்று

“கண்ணகியின் கண்ணீரையும், அவள் கையில் ஏந்திய சிலம்பையும், உயிர் நீத்த உடல் போன்ற அவள் வடிவத்தையும், காடு போல விரிந்து உடல் முழுவதும் சூழ்ந்த அவளது கூந்தலையும், பாண்டிய மன்னன் கண்டு அச்சமுற்று உயிர் துறந்தான். தீவினை மிக்க பாவியாகிய நான் அதைக் கண்கூடாகக் கண்டேன்” என்று கூறினாள்.

கண்டோர் கூற்று

“கண்ணகியின் உடம்பில் படிந்த புழுதியையும், விரிந்து கிடந்த கூந்தலையும், கையில் இருந்த ஒற்றைச் சிலம்பையும், கண்ணீரையும் பாண்டியன் கண்ட உடனே வழக்கில் தோற்றான். அக்கண்ணகி வழக்காடிய சொற்கள் செயியில் புகுந்தபோது அவன் உயிர் விட்டான்” என்று கூறினர்.