மானுக்குப் பிணை நின்ற படலம்
முகமது நபி
மலை வழியே சென்ற காட்சி
மேகம் வானில்
குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப்
பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை
பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா
நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை
வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில்
பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.
வேடனின் தோற்றம்
வேடன் காட்டடில் திரிகின்ற
விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில்
சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில்
செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற
வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத்
தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான்.
உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு
தோற்றமளித்தான்.
மானைக் கண்ட நபிகளின் நிலை
வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன்
வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான்.
செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப்
பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப்
பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும்
பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே
பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.
நபிகளைக் கண்ட மானின் நிலை
கருணை மிகுந்த கண்களும், அழகு
பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது
பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து
விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம்
கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.
மானின் துயர் நிலை
- தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால்
சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர,
திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில்
நபிகள் சென்றார்.
- கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால்
வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன்
பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
- அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன.
அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர்
சிந்துவது போல இருந்தது.
- மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது
போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
- பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள்
இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த
வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
காட்டில் வேடனால் கட்டுண்டு
கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான
தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு
இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம்.
எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால்
வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி
வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள்
இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என்
முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி
தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை
முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள்
அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான்
என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
சென்ற திசை தெரியாது நான் புகுந்த
காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான்.
புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான்
மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு
கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால்
கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு
நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்”
என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.
நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்
வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள்
நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான்
இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம்.
நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும்
ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல
இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி
இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப்
பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின்
வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல்
கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று
நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த
பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில்
அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி
வேறு கவலையில்லை.
கலிமா என்னும் மூலமந்திரத்தின்
வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத்
தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை
நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள்
விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என்
இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில்
திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.
நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை
மானின்
வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து
வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று
கூறினார்.
வேடனின் மறுமொழி
நபிகளின்
உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை
உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப்
பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு
இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள்.
இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை
விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ?
அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக”
என்றான்.
நபியின் மறுமொழி
வேடனின்
சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால்
ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட
வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை
விடுவித்தான்.
கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்
வேடனிடம்
இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும்
ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி,
குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன்
கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப்
பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும்
வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர்
கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில்
அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது.
இவ்வேண்டுகோளைக்
கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை
மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என்
உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை
என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும்
பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு
மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும்
விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று
நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன்
நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த
அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல்
நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.
மானுடன் கன்றும் செல்ல இசைதல்
தன்
கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை
நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல
முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத
இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.
வேடன் நல்லறிவு பெறல்
பெண்மானும்
அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு
இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள்
பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது
மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச்
சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு
பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று
அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான்
வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு
உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு
கூறினான்.
முகமது
நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை
வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும்,
மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன்.
பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று
நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக