பாத்திரம் பெற்ற காதை
மணிபல்லவத்தீவின்
காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப்
பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும்.
அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு
உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி
வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து
புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை
இக்காதை விவரிக்கின்றது.
பாத்திரம் பெற்ற காதை - செய்யுள்
நீ
யார் எனத் தீவத்திலகை மணிமேலையை வினவல்
மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல் லவத்திடை மணிமே கலைதான்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரியக் கடவுள் கோலத்துத்
தீவ திலகை செவ்வனந் தோன்றிக்
கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய
இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,
மணிமேலை தன் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுதல்
எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது
பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியில் பூமியங் கிழவன்
இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்
ஆய பிறவியில் ஆடலங் கணிகை
மாதவி ஈன்ற மணிமே கலையான்
என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்
மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்
ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது
பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,
தீவத்திலகைத்
தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்
ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்
தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்
பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெயர் இதுகேள்:
தீவத்திலகை மணிமேலையைப் பாராட்டுகின்றாள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்
கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலை யாக
ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்
அமுதசுரபி உன் கையில் கிடைக்கும்
ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
அந்த
நாள் இந்த நாளே எனல்
அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது
நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை
ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்
மணிமேலையிடம் அமுதசுரபி வந்தடைதல்
என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
தீவ திலகை தன்னொடும் கூடிக்
கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.
மணிமேலை புத்தரை வணங்குதல்
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி
மாரனை வெல்லும் வீர நின்அடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி
பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி
எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி
கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி
தீமொழிக்கு அடைத்த செவியோய்! நின்அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய்! நின்அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின்அடி
வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு
அடங்காது என்ற ஆயிழை முன்னர்,
பசி தீர்க்கும் பணி
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
பசியால் நாயினைத் தின்றவர்
புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி
மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்
இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும்பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
உயிர் அளிப்பவர் யார்?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,
அறம் செய்த பயன்
விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் தனையான் ஊட்டிய
காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்
ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்
ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது
தாய்போல் காப்பேன்
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
வெயில்என முனியாது புயல்என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்
முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,
வானத்தில் பறந்தாள்
மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை
அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை
ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,
தீவ திலகை தன்அடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு
வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்
மணிமேலை மாதவியின் பழைய பிறப்பைக் கூறினாள்
வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது என்மகள் வாராள்
வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்
வந்து தோன்றி,
அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்
அறவணர்த் திருவடி தொழுவோம்
வாய்வ தாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு
அறவண வடிகள் தம்பால் பெறுமின்
செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.
பாத்திரம் பெற்ற காதை பாடல்கள் முற்றும்.
செய்யுள் விளக்கம்
நீயார் என வினவல்
மணிமேகலா தெய்வம்
மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப்
புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள்
பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள்.
அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து
தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக்
கேட்டாள்.
மணிமேலை பதில் கூறல்
மணிமேகைலை தீவதிலகையிடம்,
“யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி
போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி
செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக்
கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு
வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித்
தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?”
என மணிமேலை கேட்டாள்.
நான் தீவதிலகை
மணிமேகலை தனது முற்பிற்பினை
அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத்
தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்,
தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை
உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு
வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல்
செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.
தீவதிலகை பாராட்டுதல்
அறநெறிகளின் தலைவன்
புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப்
பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய
பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள்
இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க
அணியிழையே! இன்னும் கேட்பாயாக!
அமுத சுரபி
“மிக்க புகழுடைய
இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப்
பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன்
திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான்
தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம்
வெளிப்பட்டுத் தோன்றும்.
அந்த நாள் இந்த நாளே
அந்த நல்ல நாளான
வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான்.
நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது
ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே
அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின்
வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.
அமுதசுரபி கிடைத்தது
தீவதிலகை கூறியது
கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து
வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய
அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று
சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.
புத்த பகவானை வணங்கினாள்
மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை
வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத்
தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே!
மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக்
கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை
உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு
சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத
செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.
பசி தீர்க்கும் பணி
புத்த பகவானை மணிமேகலை
வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை
வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில்
பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும்
புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும்.
மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை
நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின்
புகழை அளவிட முடியாது.
பசியால் நாயினைத் தின்றவர்
புல்லும் மரங்களும்
வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு
மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர
முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க
ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது?
தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை
பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.
உயிர் அளிப்பவர் யார்?
கைம்மாறு செய்யும்
தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர்.
இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள்.
இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும்
அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை
அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.
அறம் செய்த பயன்
இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே
என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும்
அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த
உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம்
அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி
ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.
தாய்போல் காப்பேன்
“சம்புத்தீவு என்கிற
இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர்
சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு,
அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர்
வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும்
என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான
பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப்
பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய
ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள்
மணிமேகலை.
வானத்தில் பறந்தாள்
“அதன் திறத்தினை
உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து
அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ
நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே
மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில்
விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து
வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.
பழைய பிறப்பைக் கூறினாள்
“சொன்ன சொல் மாறாத
மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம்
கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து
இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம்
ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை
உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக
இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்!
உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.
(சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று
கூறினாள் மணிமேகலை).
அறவண அடிகள் திருவடி
தொழுவோம்
“உங்கள் இருவருக்கும்
இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப்
பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும்
வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை
நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம்.
நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக