சனி, 26 ஆகஸ்ட், 2023

வழக்குரை காதை - சிலப்பதிகாரம்

 

சிலப்பதிகாரம்

வழக்குரை காதை

தன் கணவன் கோவலன் பாண்டிய மன்னனின் தவறான ஆணைக்கிணங்கக் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி, பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்து நீதி கேட்கின்றாள். அவளுடைய வாதத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து, தான் நீதி தவறியதை எண்ணி மனம் கலங்கி, பாண்டிய மன்னன் உயிர் துறக்கின்றான். மன்னனோடு அரசியும் உயிர் துறக்கின்றாள். சினம் தணியாத கண்ணகி மதுரை மாநகரை எரிக்கின்றாள். இத்தகு செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

 

வழக்குரை காதை

கோப்பெருந்தேவியின் தீக் கனவு
ஆங்கு,

‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’
கெடுதிக்குக் காரணம்
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-
ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே-
கண்ணகி பெருஞ் சீற்றத்தோடு அரசனை நோக்கிச் செல்லல்
இப்பால்,
‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-
காவலோன் மருண்டு மன்னனிடம் கூறுதல்
வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-
‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-

கண்ணகி தன்னைப் பற்றிக் கூறுதல்
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

தன் கணவன் கள்வன் அல்லன் எனச் சிலம்பினை உடைத்தல்
‘பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-
‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

வெண்பா

1.‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.

2.காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான்.

3.மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

வழக்குரைகாதை முற்றும்

 

விளக்கம்

பாண்டிமாதேவியின் தீக்கனவு

         கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். “தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்” என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.

கோப்பெருந்தேவியின் வருகை

         கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாக” என வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.

கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது

அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாக” என்று கூறினாள்.

வாயிற்காவலன் கூற்று

வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்” என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.

கண்ணகி வழக்குரைத்த நிலை

வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.

கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகி” என்று கூறினாள்.

கண்ணகி வழக்கில் வென்றமை

கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்” என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டது” என்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்” என்று கூறினான். பின்பு “கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.

பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்

அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் “வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். “கெடுக என் ஆயுள்” எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். ”தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாது” எனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.

வெண்பா உரை

கண்ணகி கூற்று

பாவச்செயல்களைச் செய்தவர்களை அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று சான்றோர் கூறும் சொற்கள் பொய்யல்ல. கொடிய தீமையைச் செய்த பாண்டிய மன்னனின் தேவியே! தீவினைக்கு ஆட்பட்ட நான் இனிச் செய்யவிருக்கும் செயல்களையும் நீ காண்பாயாக” என பாண்டிமாதேவி இறந்தது தெரியாமல் கண்ணகி கூறினாள்.

கண்ணகி கூற்று

“கண்ணகியின் கண்ணீரையும், அவள் கையில் ஏந்திய சிலம்பையும், உயிர் நீத்த உடல் போன்ற அவள் வடிவத்தையும், காடு போல விரிந்து உடல் முழுவதும் சூழ்ந்த அவளது கூந்தலையும், பாண்டிய மன்னன் கண்டு அச்சமுற்று உயிர் துறந்தான். தீவினை மிக்க பாவியாகிய நான் அதைக் கண்கூடாகக் கண்டேன்” என்று கூறினாள்.

கண்டோர் கூற்று

“கண்ணகியின் உடம்பில் படிந்த புழுதியையும், விரிந்து கிடந்த கூந்தலையும், கையில் இருந்த ஒற்றைச் சிலம்பையும், கண்ணீரையும் பாண்டியன் கண்ட உடனே வழக்கில் தோற்றான். அக்கண்ணகி வழக்காடிய சொற்கள் செயியில் புகுந்தபோது அவன் உயிர் விட்டான்” என்று கூறினர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக