ஞாயிறு, 15 அக்டோபர், 2023

காடே திரிந்து, தாயும் பகை - பட்டினத்தார்

பட்டினத்தார்

இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர்

பாடல்

காடே திரிந்து என்ன காற்றே புசித்து தென்ன கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்

நாடே இடைமருதீசர்க்கு மெய் அன்பர் நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டு இன்பம் மேவும் வரை (1)

விளக்கம்

உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.

பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டிர் பெரும் பகை தன்னுடைய

சேயும் பகை உறவோரும் பகை இச் செகமும் பகை

ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்

தோயும் நெஞ்சே மருதீசர் பொன் பாதஞ் சுதந்தரமே (2)

விளக்கம்

வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.


ஈர் ஒற்று, ஒரு, ஓர், அது, அஃது, தான், தாம் வரும் இடங்கள்

 

ஈர் ஒற்று வரும் இடங்கள்

இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

சான்று - புகழ்ச்சி (இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது)

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – காய்ச்சல், மெய்ஞ்ஞானம், மேய்த்தல், வாய்ப்பு

‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – பார்க்கிறாள், உயர்ச்சி, பார்த்தல்,

‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – வாழ்க்கை, வாழ்த்து, வாழ்ந்து, தாழ்ப்பாள்


அது, அஃது வரும் இடங்கள்

அது என்ற சொல்லுக்கும், அஃது என்ற சொல்லுக்கும் பொருளில் வேறுபாடு கிடையாது.

அது – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அது புலி, அது வண்டி, அது மாட்டு வண்டி.

அஃது – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அஃது இல்லை, அஃது ஆமை, அஃது ஏணி


ஒரு, ஓர் வரும் இடங்கள்

ஒரு – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஒரு வீடு,  ஒரு சிங்கம்

ஓர் – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஓர் ஆசிரியர்,  ஓர் ஆடு.


தான் தாம் வரும் இடங்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

சான்று - கன்று தனது தலையை ஆட்டியது.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

சான்று - மாடுகள் தமது தலையை ஆட்டின.

 


நன்றி

https://theenthamizhchaaral.wordpress.com/2016/09/11/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-9/

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

 

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம்

தமிழின் தொன்மைக்கும், தமிழரின் மேன்மைக்கும் சான்றாக விளங்குவது தொல்காப்பியம். ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல்கள் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்திருக்க, வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியது தொல்காப்பியம். இதை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவர் பாயிரம் பாடியுள்ளார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு.

 

எழுத்ததிகாரம்

சொல்லதிகாரம்

பொருளதிகாரம்

1

நூல் மரபு

கிளவியாக்கம்

அகத்திணையியல்

2

மொழிமரபு

வேற்றுமையியல்

புறத்திணையியல்

3

பிறப்பியல்

வேற்றுமை மயங்கியல்

களவியல்

4

புணரியல்

விளி மரபு

கற்பியல்

5

தொகை மரபு

பெயரியல்

பொருளியல்

6

உருபியல்

வினையியல்

செய்யுளியல்

7

உயிர் மயங்கியல்

இடையியல்

உவமவியல்

8

புள்ளி மயங்கியல்

உரியியல்

மெய்ப்பாட்டியல்

9

குற்றியலுகரப் புணரியல்

எச்சவியல்

மரபியல்

 தொல்காப்பியர் – குறிப்பு

          தொன்மை வாய்ந்த காப்பியக் குடியில் தோன்றியமையால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்று இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். இவர் அகத்தியரின் மாணவர். அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூலை முதன்மையாகக் கொண்டே தொல்காப்பியத்தை இயற்றினார் என்பதை அவருடைய தொல்காப்பிய நூற்பாக்கள் சான்று கூறுகின்றன. இவர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன எனினும், கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்ற கருத்துப் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இறையனார் களவியல் உரை

தமிழர்களின் அக வாழ்க்கையைப் பற்றிய இலக்கணநூல். இறையனார் அகப்பொருள் என்றும் கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுந்த நூல். இதனை இயற்றியவர் நக்கீரர். காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு.

நம்பியகப் பொருள்

இந்நூலை இயற்றியவர் நாற்கவிராசநம்பி. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். புளியங்குடியில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்தில் காணப்படும் அகப்பொருள் கருத்துகளைக் காலத்திற்குப் பொருந்திய வகையில் இந்நூல் விரிவாக விளக்குகின்றது. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை என்றும் நூலின் 400 பாடல்களும் நம்பியகப் பொருளின் சான்று பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்பர். இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல் கற்பியல், ஒழிபியல் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.

புறப்பொருள் வெண்பா மாலை

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஐயனாரிதனார் என்பரால் இயற்றப்பட்டது. புறப்பொருளைப் பற்றிக் கூறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை பெருந்திணை  ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. 19 சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையும் ஈரடி நூற்பா ஒன்றால் விளக்கப்படுகிறது. இதனை இதன் உரையாசிரியர் கொளு என்று குறிப்பிடுகிறார். இந்நூலில் 342 கொளுக்கள் உள்ளன.

நன்னூல்

நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இருபெரும் பிரிவுகளை உடையது. ஒவ்வோர் அதிகாரமும் ஐந்து இயல்களைப் பெற்றுள்ளன. 462 நூற்பாக்களை உடையது. இந்நூலுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவர் மயிலைநாதர். சிவஞான முனிவர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர் ஆகியோரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.

எழுத்ததிகாரம் – இயல்கள்

சொல்லதிகாரம் - இயல்கள்

எழுத்தியல்

பெயரியல்

பதவியல்

வினையியல்

உயிரீற்றுப் புணரியல்

பொதுவியல்

மெய்யீற்றுப் புணரியல்

இடையியல்

உருபு புணரியல்

உரியியல்

தண்டியலங்காரம்

    தண்டி என்பவர் வடமாழியில் எழுதிய காவ்யதர்ஸம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பே தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் ஆகும். இது அணி இலக்கணம் பற்றியது. 125 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. இந்நூலின் ஆசிரியர் காஞ்சிபுரத்தில் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியில் வாழ்ந்தவர். இந்நூலின் உரையாசிரியர் குணசாகரர். ஐந்திலக்கணங்களுள் யாப்பிலக்கணம் பற்றி கூறுகின்றது. காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம். “காரிகைக் கற்றுக் கவி பாடுவதைவிட பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது இந்நூலுக்குக் கூறப்படும் பழமொழி ஆகும்.