புதன், 18 செப்டம்பர், 2024

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

 

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

உழவுத்தொழிலும், வாணிகமும் பண்டையத் தமிழரின் இருபெரும் முக்கியத் தொழில்களாக இருந்தன. வாழ்க்கை நலன்களுக்காக பல பண்டங்களும், ஏற்றமதி செய்யப்பட்ட பல பொருள்களும் தமிழ்நாட்டில் உற்பத்தியாயின.

உழவுத்தொழில் சிறப்பு

தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக உழவு விளங்கியது. அது மக்களுடைய வளத்துக்கும், மன்னனுடைய வளத்துக்கும் அடிப்படையாக விளங்கியது. உழவுகின்ற நிலம் செழிப்பாக இருந்தமையால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக் காணப்பட்டது. நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், மஞ்சளும், இஞ்சியும், பருத்தியும் தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டன. நிலத்தை உழுவதும், எரு விடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை எடுப்பதும், பயிரைக் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.

மருத நிலத்தில் நெல்லும் கரும்பும் முக்கியப் பயிர்களாகும். வரகும், தினையும் முல்லை நிலத்தின் முக்கியப் பயிர்கள். பழங்கள், கிழங்குகள், வள்ளிச் செடிகள் ஆகியவை குறிஞ்சி நிலத்திற்குரியவையாகும்.

உழவுத்தொழிலுக்கு நீர் வசதி அளித்தனர். காவிரியில் அணை கட்டினர். கால்வாய்கள் அமைத்தனர். குளங்கள், ஏரிகள், கிணறு ஆகியவற்றை உருவாக்கினர்

ஆநிரை மேய்த்தல்

          உழவுத்தொழிலின் ஒரு பகுதியாக ஆடு மாடுகளை மேய்த்தனர். இது ஆயர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. கையில் கோலுடன் மந்தைகளின் பின்னால் சென்று ஆயர்கள் கடினமாக உழைத்தனர். பானைகளில் மோர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றனர்.

தமிழ்நாட்டினரும் அயல் நாட்டினரும்

தமிழ்நாட்டுக் கைவினைஞர்களுடன் அயல்நாட்டுத் தொழிலாளர்களும் இணைந்து பல கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மகத நாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவன நாட்டின் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடி கண்கவரும் பொருட்களைப் படைத்தனர் என்பதை மணிமேலை குறிப்பிடுகின்றது. கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக் கம்மர்களும் தமிழகத்தில் பிழைக்க வந்தனர்.

வணிகர்கள்

  • ·    ஓவியத்திற்கான வண்ணக்குழம்பு பூசு சுண்ணம், நறுமணக் கூட்டுகள், மலர் மாலைகள், சந்தனம், பச்சைக் கற்பரம் போன்ற நறுமணப் பண்டங்களை விற்பவர்களும்,
  • · பட்டு நூலாலும், எலியின் முடி, பருத்தி நூல், ஊசி ஆகியவற்றைக் கொண்டு தறியின் அச்சினைக் கட்டும் காருகர்களும்,
  • ·  பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, மணி, பொன் ஆகியவற்றை நோட்டம் பார்ப்பவர்களும்,
  • ·       நெல், புல்லரிசி, வரகு, திணை, சாமை, மூங்கிலரிசி வணிகர்களும்,
  • ·  கள் விற்கும் பெண்களும், மீன் விற்கும் பரதவரும், உப்பு விற்கும் உமணரும், வெற்றிலை வணிகரும்,
  • ·       தக்கோலம், தீம்பு, இலவங்கம், சாதிக்காய் விற்பர்களும்,
  • ·       எண்ணெய் வாணிகரும்,
  • ·       வெண்கலம், செம்புக் கலங்கள் தட்டுபவர்களும்,
  • ·       தச்சர், ஓவியர், சிற்பிகள் முதலியோரும்,
  • ·   செயற்கைப் பூங்கொத்துகள், வாடாமாலைகள், பொய்க்கொண்டைகள் செய்வோர்களும்,
  • · சிறுசிறு கைத்தொழில்களைப் பிறருக்குப் பயிற்றுவோர்களும் பூம்புகாரில் திரண்டிருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் கூறுகின்றது.

வணிக மக்களின் பண்பு

பல தொழிலைச் செய்யும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தொழில்முறையில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை. நாட்டு வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வுக்கும் தங்களின் உழைப்பு இன்றியமையாததது என்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியிருந்தது. தங்கள் தொழிலை நேர்மையாக நடத்தினர்.

வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களை பல ஊர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வர். இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். கள்வர்களுக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாகச் செல்வர்.

சிறந்த வாணிகம்

உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவை சிறப்பான வாணிகங்களாகப் போற்றப்பட்டன.

பண்டமாற்று வாணிகம்

பண்டமாற்று முறையிலே வாணிகம் நடைபெற்றது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீன், நறவு ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டன. கரும்பு, அவல் ஆகியவை மானின் இறைச்சிக்கும், கள்ளுக்கும் மாறின. நெய்யை விற்று எருமை வாங்கினர். உப்புக்கு நெல் மாற்றப்பட்டது. பச்சைப் பயறுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றப்பட்டது.

பண்டமாற்று முறையில் குறிப்பிட்ட பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திலுப்பிக் கொடுக்கும்குறியெதிர்ப்பைஎன்ற ஒரு முறை வழங்கி வந்தது.

நாணயங்கள்

பண்டமாற்று வாணிகம் இல்லாதபோது நாணயங்களைப் பயன்படுத்தி பண்டங்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். சங்க காலத்தில் மன்னர்கள் நாணயம் அச்சிட்டிருப்பதையும், வெளிநாட்டு வணிகர்கள் அவர்கள் நாட்டு நாணயங்களைக் கொண்டு வந்து பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது.

விற்பனை செய்யப்பட்ட நிலை

சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனை செய்யப்பட்டன. சில பண்டங்கள் ஊர் ஊராக எடுசத்துச் சென்று விற்றனர். உப்பு, மிளகு ஆகியவை ஊர் ஊராக விற்கப்பட்டன. பண்டங்களை வண்டிகளின் மேலும, கழுதையின் மேலும் ஏற்றிச் செல்வர். சரக்கு மூட்டைகளின் மேல் அவற்றின் அளவு அல்லது எடை பொறிக்கப்பட்டன. தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின் மேல் பறக்க விட்டனர். வணிகச் சாத்துகள் கழுதையின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தினர்.

    கீழைக் கடற்கரையிலிருந்து மதுரைக்குக் கப்பலில் அகில் முதலிய நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றி வந்த யவனர்கள் அதே மரக்கலங்களில பொன் அணிகலன்களையும், புளி கருப்பட்டி சேர்ந்து பிசைந்த தீம்புளி என்ற பண்டத்தையும், மீனையும், உப்பையும், தத்தம் நாட்டுக்கு ஏற்றிச் செல்வர்.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

கொங்கு நாடடுத் தங்கம், பாண்டி நாட்டு முத்து, மிளகு, வாசனைப் பொருட்கள், இஞ்சி, தந்தம், ஏலம், கிராம்பு போன்றவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. உயர்தரமான ஆடைகள், பட்டு ஆடைகள், விரிப்புகள், ஓவிய வேலைப்பாடுடைய பொருட்கள், வைரம், பிற விலை உயர்ந்த கற்கள் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.

மேற்கு நாடுகளில் இருந்து உயர் ரக மது வகைகள், கண்ணாடிப் பொருட்கள், குதிரைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் உணவுப் பொருட்கள் வந்து இறங்கின. சீனாவில் இருந்து அழகிய பட்டுகளும், சர்க்கரையும் வரவழைக்கப்பட்டன.

தங்கக்காசுகள்

அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்தன. கணம் என்றொரு பொற்காசு சங்க காலத்தில் இருந்தது. மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகளைப் பரிசுகளாக்க் கொடுத்தனர். பெண்கள் பொற்காசுகளை மாலையாக்க் கோர்த்து அணிந்து கொண்டனர். அக்காலத்தில் இரும்புக்கும் பொன் என்று பெயர் வழங்கப்பட்டது.

அளவைகள்

வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல் அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர். எண் என்னும் சொல் எண்ணையும் கணிதத்தையும் குறித்தது. நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் காணப்படுகின்றன.

துறைமுகங்கள்

தமிழகத்துத் துறைமுகங்களில் அயலார் கலங்கள் குவிந்து கிடந்தன. பொறையாறு, புகார், கொற்கை ஆகியவை சிறந்த துறைமுகங்களாகச் செயல்பட்டன. கோட்டாறு, மதுரை, முசிறி, உறையூர் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களின் ஆரவாரம் பெற்ற உள்நாட்டு நகரங்களாக விளங்கின. தமிழ்நாட்டில் வணிகம் சிறந்திருந்தது என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது.

 ---------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


சனி, 14 செப்டம்பர், 2024

நாயக்கர்கள்

 

நாயக்கர்கள்

விசயநகரத்தினுடைய நிர்வாக அமைப்பின்வழி தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி தோன்றியது. கிருஷ்ணதேவராயர் தமிழகத்தின் மீது படையெடுத்து, எழுச்சி செய்த நாயக்கர்கள் மீது வெற்றி கண்டபின் நிர்வாகப் பொறுப்பை மாற்றி அமைத்தான். அதன்படி செஞ்சியில் வையப்ப நாயக்கனும், தஞ்சையில் விசயநகர நாயக்கனும், மதுரையில் வெங்கடப்ப நாயக்கனும் அமர்த்தப்பட்டனர். 1542இல் அமைச்சர் அச்சுதராயனின் மறைவுக்குப்பின் விசயநகரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தமிழகத்து நாயக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கன் நிர்வாக ஒழுங்குகள் ஏற்படுத்தி நாயக்கர்களின் வலிமையை நிலைநாட்ட அடிகோலினான். அவன் மதுரையில் நாயக்க மன்னனாகப் பேரரசால் முடிசூட்டப்பட்டான். செஞ்சியில் கிருட்டிணப்ப நாயக்கனும், தஞ்சையில் அச்சுத நாயக்கனும், மதுரையில் விசுவநாதனின் புதல்வன் கிருட்டிணப்பனும் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டு சுயாட்சிப் பாதையை நோக்கினர்.

வேலூர் நாயக்கர்

வேலூரில் சின்னபொம்ம நாயக்கன் விசயநகர அரசின்கீழ் கி.பி 1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டான். வேலூர்க் கோட்டையும் அதனுள் வழிபாடற்றுக் கிடக்கும் சலகண்டேஸ்வரர் கோயிலையும் கட்டினார்.

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்கர்கள் பாலாற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டனர். குமார கம்பணன் காலத்தில் செஞ்சி சோழ மண்டலத்தின் தலைநகரமாகியது. விசயநகரப் பேரரசின் கீழ், செஞ்சியானது படைபலத்திலும், அரசாக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையை எட்டியது. சிதம்பரம் திருச்சித்திரகூடத்துக்கு இவர் பல பெரும் திருப்பணிகள் செய்தார். இவனுடைய திருப்பணிகளைத் தில்லை தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தனர். பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேல் ஏறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். கிருஷ்ணப்ப நாயக்கன் வெகுண்டு பல தீட்சிதர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருட்டினப்பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து, அதில் ஜெசூட் பாதிரிகள் மாதா கோயில்கள் கட்டிக் கொள்ள உரிமை வழங்கினான். அவ்வூர் இப்போது பரங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.

தஞ்சை நாயக்கர்கள்

திம்மப்ப நாயக்கனின் புதல்வன் சேவப்ப நாயக்கன். இவர் அச்சுதராயனுக்கு மனைவி வழி உறவினன். சலுவ நரசிங்க செல்லப்பன் கி.பி.1532 இல் தோற்கடிக்கப்பட்டது முதல் தஞ்சை தனித்து நின்றது. சில பல காரணங்களால் அச்சுதராயன் காலத்தில் தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி துவங்கியது. சோழ நாடு மதுரையினின்று பிரிக்கப்பட்டது. அச்சுதனுடைய மைத்துனியின் கணவன் செல்லப்பன் என்பவன் தஞ்சாவூரில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். செல்லப்பன் முஸ்லீம் தர்க்காக்களுக்கு நிவந்தங்கள் வழங்கினார். குடிமக்களுக்குப் பாசன வசதி செய்து கொடுத்தார். நாகப்பட்டினத்தில் போர்ச்சுக்கீசியர் குடியேறுவதற்குப் பெரிதும் துணை புரிந்தார்.

    தஞ்சாவூர் இரகுநாத நாயக்கன் பெரும வீரனாகத் திகழ்ந்தார். வடமொழியில் பல நூல்களை இயற்றியுள்ளார். வடமொழிப் புலவர்கள் பலர் இவருடைய அரசவை அலங்கரித்தனர்.

    இரகுநாத நாயக்கனின் மகன் விசயராகவ நாயக்கன் அளவு கடந்த சமயப் பற்றும், பொருளற்ற சடங்கிலும் பெரும் ஆர்வம் கொண்டார். இவரைப் பற்றி கிறித்துவப் பாதிரிகள் தவறான சிந்தனையைப் பரப்பினர். அதனை முறியடிக்கும் வண்ணம் போரில், கையில் பிடித்த வாளுடன் வீர மரணம் அடைந்து தன் வீரத்தை நிலைநாட்டினார்.

மதுரை நாயக்கர்கள்

    மதுரையில் விசுவநாத நாயக்கன் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கினார். இவனுடைய தலைமை அமைச்சர் அரியநாதர். அவருடைய உதவியுடன் மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சீரமைத்தார். தஞ்சாவூர் பிரிந்து சென்ற பிறகு இவருடைய ஆட்சி திருச்சிராப்பள்ளி முதல் கன்னியாகுமரி வரையிலும் விரிந்தது. சேலம், கோயமுத்தூர், ஆகிய மாவட்டங்கள் ஓங்கி நின்றன. முதன்முதல் நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்தவர் இவரே. ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரன் கையில் ஒப்படைக்கப்பட்டது.

பாண்டியர்கள் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த மதுரையில் புதிய ஆட்சியாளர்களை அமைத்து, சிதறிக் கிடந்த பரம்பரை அரசர்களின் போட்டியைச் சந்தித்தார். ஆற்றுப்படுகைகளில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய நாட்டில் கொள்ளைக் கூட்டத்தினரின் தொல்லைகளை அகற்றினார். உழவுத் தொழிலை தூண்டி விட்டார். நாடுமுழுவதும் பாசன வசதிகளை அமைத்தார். நாடு அமைதி கொண்டது. திருநெல்வேலி நகரம் விரிவடைந்தது. அங்குப் புதிய கோயில்கள் எழுந்தன. பழைய கோயில்கள் பழுது பார்க்கப்பட்டன. தெருக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன.

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கன்

விசுவநாதனின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன். தன் தந்தையைப் போலவே வீரத்திலும், திறனிலும் சிறந்து காணப்பட்டார். இவர் திருவிதாங்கூரின் மீதும், சிங்களத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான். அமைச்சர் அரியநாதர் தொடர்ந்து கி.பி.1570 வரையில் பணியாற்றி வந்தார். இவர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசனாக விளங்கினார். பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள கிருட்டிணாபுரத்தில் நகரமும், ஆலயமும் எழுப்பினார். அந்நகரில் திருவேங்கடநாதர் ஆலயத்தை எழுப்பிப் பல சிற்றூர்களை இறையிலியாக விட்டுக் கொடுத்தார். இக்கோயிலின் சிற்பங்கள் நாயக்கர் காலத்து கலைக்கு விளக்கமளிக்கின்றன. இவர் மதுரை மீனாட்சி ஆலயத்திலும் திருப்பணிகள் செய்துள்ளார்.

முதலாம் வீரப்ப நாயக்கன்

கிருஷ்ணப்ப நாயக்கன் மகன் முதலாம் வீரப்ப நாயக்கன் பட்டத்திற்கு வந்தான். அவனுடைய ஆட்சியின் போது மதுரையில் பாதிரிகள் கிறித்துவ நிறுவனம் ஒன்றை அமைத்தனர். இந்நிறுவனத்தைச் சார்ந்த பாதிரிகளுள் இராபர்ட்டி நொபிலி என்பார் சிறந்து விளங்கினார். இவருடைய ஆட்சியிலும் அரியநாதர் அமைச்சராக இருந்தார். திருச்சிக் கோட்டையைச் சீர்ப்படுத்தியதும், அருப்புக் கோட்டையில் அரண்மனை அமைத்ததும், தில்லைக் கூத்த பெருமான் ஆலயத்தைச் சுற்றி அரண் அமைத்ததும், வேதியர் குலத்தாருக்குக் குடியிருப்பு வசதி பெருக்கியதும் வீரப்பன் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

குமார கிருட்டிணப்பன்

வீரப்பனுக்குப் பின் அவனுடைய புதல்வர் குமார கிருட்டிணப்பன் ஆண்டார். இவருடைய காலத்தில் பாண்டி நாடு தெற்கே கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தது. வடக்கில் சேலம், கோயம்புத்தூர் முதலிய பகுதிகளையும் உள்ளிட்டிருந்தது. இவருடைய ஆட்சிக் காலத்தில் நான்கு நாயக்கர் காலத்தில் அரும் தொண்டாற்றிய அரியநாதர் மறைந்தார். இவருடைய அரும்பணிகளை மதித்து, மதுரை ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில், குதிரைமேல் அமர்ந்த அவருடைய உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முத்துக் கிருட்டிணப்பன்

ஐந்தாவது நாயக்கனான முத்துக் கிருட்டிணப்பன் 1609 வரை அரசாண்டான். விசுவநதாதனின் பேரனுக்குப் பேரனான இவர் பதவிக்கு வரும்போது சிறியதொரு அரசுரிமைப் போட்டி நடைபெற்றது. இவருடைய காலத்தில் இத்தாலி நாட்டைச் சார்ந்த உரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் மதுரையில் வந்து தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் புலமை பெற்று கிறித்துவ சமயத் தொண்டாற்றி வெற்றி கண்டார்.

திருமலை நாயக்கர்

முத்துக் கிருஷ்ணனின் இரண்டாவது புதல்வரான திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டார். இவர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். மைசூர், வேணாடு, இராமநாதபுரம், வேலூர் ஆகிய இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றார். இவருடைய காலத்தில் நடைபெற்ற மூக்கறுப்புப் போரால் மக்கள் பலர் மடிந்தனர். நெஞ்சு உரத்திலும், போர்த்திறனிலும் திருமலை நாயக்கன் மேம்பாடு உடையவர். பெரும் கொடை வள்ளலாக விளங்கினார். கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஆர்வம் கொண்டார். மதுரைக்குத் தலைநகரை மாற்றினார். அங்கு பாழ்பட்டுக் கிடந்த கோயில்களைச் செப்பனிட்டு அழகுபடுத்தினார். ஆண்டு ஒன்றுக்குப் பெருவிழாக்கள், சிறுவிழாக்கள் நடத்தி மதுரையை விழா நகரமாக்கினார். மதுரையில் அழகிய தெப்பகுளம், புதுமண்டபம், ஆவணி மூலை, இராயர் கோபுரம் ஆகியவை இவருடைய சீரிய பணிக்குச் சான்றுகளாகும். மதுரையின் மற்றொரு சிறப்பு திருமலை நாயக்கர் மகால் ஆகும். அது அடிமைகளின் உழைப்பைப் பெற்று வெளிநாட்டுக் கட்டிடக் கலையில் எழுந்தது. கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட விசயம் ஆகிய பல புகழ் பெற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய அறப்பணிகளும், கலைப்பணிகளும், இறவாப் புகழை தந்தன.

திருமலையின் சந்ததிகள்

திருமலைக்குப்பின் அவனுடைய புதல்வர் இரண்டாம் முத்து வீரப்பன் பதவிக்கு வந்தார். இவருக்குப்பின் இவருடைய மகன் முதலாம் சொக்கநாத நாயக்கன் அரியணை ஏறினார். பல சூழ்ச்சிகளும், சிக்கல்களும் நிறைந்த காலமாக இவருடைய காலம் அமைந்தது. இவருக்குப்பின் அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவி ஏற்றார். இராநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதியின் சதியை தஞ்சை மன்னனின் துணையுடன் முறியடித்தார். திறமை மிக்க, நல்லொழுக்கமுடைய மன்னனாக விளங்கினார். மாறுவேடத்தில் சென்று சோதனையிட்டு நல்லாட்சி நடத்தினார். இவர் இறந்த பின்பு மக்கள் செங்கோன்மையை இழந்தனர்.

இராணி மங்கம்மாள்

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் மடிந்த சில மாதங்களில் அவருடைய புதல்வன் விசயரங்க சொக்கநாதன் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆயினும், அவருடைய பாட்டியும், சொக்கநாதனின் மனைவியுமான மங்கம்மாள் ஆளுநராக ஆட்சி நடத்தினார். முகலாயர்களின் வலிமையைம், நாயக்கர்களின் பலவீனத்தையும் உணர்ந்த மங்கம்மாள், முகலாய மனன்னுக்குப் பணிந்து, திறை செலுத்த இணங்கி, உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவருடைய உதவியை நாடினார். மராட்டியர்களிடத்தில் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டார். சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் ஆதரித்தார். இதனால் நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றனர். நீர்நிலைகளை உருவாக்குதல், சாலைகள் அமைத்தல், சாலையில் நிழல் தரும் மரங்கள் நடுதல், சத்திரங்கள் அமைத்தல், அன்னச் சாவடிகள் அமைத்தல், தண்ணீர்ப்பந்தல் நிறுவுதல் உள்ளிட்ட பல அரும்பணிகளைச் செய்தார். உய்யக்கொணடான் வாய்க்காலைச் செப்பனிட்டார் என்று சாசனங்கள் கூறுகின்றன. இவரின் ஆட்சி “மங்கம்மாள் சாலை மலைமேலே சோலை” என்ற பாராட்டுதலைப் பெற்றது. போர் தவிர்க்கப்பட்டது. குளம் வெட்டி வளம் பெருக்கிச் சாலைகளும், சோலைகளும் உருவாக்கி, மனிதப் பண்புடன் ஆட்சி நடத்தினார். இவரின் பெருமையை நாடறியும் வண்ணம், மங்கம்மாளின் உருவம் ஓவிய வடிவில் மதுரைப் பொற்றாமரைக் குளத்தின் அருகில் இருக்கில் கலியாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.

நாயக்கர்களின் சமூக வாழ்க்கை

நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் வாணிகம் வளர்ச்சியுறவில்லை. கடற்படையும், கப்பல்களும் அவர்களிடம் இல்லாததே மிகப் பெரும் காரணமாகும். மதுரையில் துணி வாணிகம் செழிப்பாக நடைபெற்றது.

நாயக்கர் காலத்தில் சைவ வைணவப் பூசல்கள் காணப்படவில்லை. சமய ஓருமைப்பாடு நிலவியது. நாயக்க மன்னர்கள் கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நிவந்தங்களை வழங்கினர்.

தர்மசத்திரம் வகுத்த சமூகநீதி அடிப்படையில் சமஸ்கிருதக் கல்வியை ஆலயம் வழியாக அரசு பேணிக்காத்தது. ஆசிரியர்களுக்கு நிலமானியமும், மாணவர்களுக்கு இலவச உணவும், உறைவிடமும் வழங்கப்பட்டன. வசதியுடையோர் திண்ணைப் பள்ளிகளை நம்பிக் கல்வி பெற்றனர்.

 கட்டிடக்கலை

ஆலயங்கள் இந்தியக் கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் எழுந்தன. அரண்மனைகள் இந்தோசாரசானிய கட்டிடக் கலையின் அடிப்படையில் எழுந்தன. நெல்லைக் கூத்தப்பர் ஆலயம் கலைப்பணியடன் கம்பீர எழுச்சி கண்டது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் விரிவடைவதற்குத் திருமலை நாயக்கர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. மரமும் இரும்பும் இன்றி வெறும் சுதையை மட்டும் கொண்டு கட்டப்பட்டுள்ள மதுரை நாயக்கர் மகால் இவர்களுடைய கலைப்பணிக்குச் சான்று வழங்குகின்றது.

இலக்கியம்

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணிமாலை, பிரபுலிங்கலீலை, தாயுமானவரின் திருப்பாடல்கள் ஆகியவை நாயக்கர் காலத்து இலக்கியங்களாகும். எல்லப்ப நாவலர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், படிக்காசுப் புலவர் உள்ளிட்டோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த புலவர்களாவர்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த புலவர்கள் பலர் நாயக்கர் காலத்தை அணி செய்துள்ளனர். சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், உமறுப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, செய்குத் தம்பிப் பாவலர் ஆகிய புலவர்கள் அளித்துள்ள இல்க்கியப் படைப்புகள் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன.

கிறித்துவப் பாதிரிகளும் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் வீரமாமுனிவர். தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் புதிய திருப்பங்களை உருவாக்கினார். தேம்பாவணி என்ற ஒப்பற்ற காப்பியத்தை இயற்றினார்.

குறவஞ்சி, பள்ளு முதலிய புதிய இலக்கியங்கள் முகிழ்த்தன. அதனால் திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு ஆகிய இலக்கியங்கள் தோன்றின.

 -----------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


பாண்டியர் வரலாறு

 

பாண்டியர் வரலாறு

            கி.பி 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்கள் சோழர்களின் இசைவுடன் ஆட்சியமைத்தனர். கி.பி.13ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழர்கள் வீழ்ந்த பின்னர் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் முதலியோர் பாண்டியர்களின் வலிமையைப் பெருக்கி நாட்டை அமைத்தனர். அவர்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்.

பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன்

வேள்விக்குடி செப்பேடுகளையும், சீவரமங்கலத்துச் செப்பேடுகளையும் வழங்கியவர் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன். இவர் வைணவச் சார்புடையவர். இவர் காலத்தில் பெரியாழ்வாரும், ஆண்டாளும் வாழ்ந்தனர்.

வரகுணன்

பராந்தகனை அடுத்து அவர் மகன் இரண்டாம் இராச்சிம்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவருடைய மகன் வரகுண மகாராசன் என்பவராவார். சோழ நாடு முழுவதிலும் வரகுணனின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வரகுணன் சோழ நாடு முழுவதையும் வென்று தன் குடைக்கீழ்க் கொண்டு வந்தார் எனலாம். வரகுணன் சைவப் பற்றுடையவர். மாணிக்கவாசகரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்த பெருமை வாய்ந்தவர்.

சீமாற சீவல்லபன்

வரகுணனுக்குப் பிறகு அவருடைய மகன் சீமாற சீவல்லபன் அரியணை ஏறினார். பல்லவர், சோழர், சேரர், கங்கர் உள்ளிட்ட பல மன்னர்களை வென்றவர் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, புத்தர் சிலைகளையும், பொன்னையும் கவர்ந்து கொண்டு சிங்களத்தை வறுமைக்குள் ஆழ்த்தினான் என்று மகாவம்சம் கூறுகின்றது. தெள்ளாற்றில் நடைபெற்ற போரில் மூன்றாம் நந்திவர்மனுடன் போரிட்டுத் தோற்றார்.

இரண்டாம் வரகுணன்

சீமாற சீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுணன். இவருக்குச் சடையவர்மன் என்னும் பெயர் உண்டு. அரசியல் சூழ்ச்சியும், காலம் கருதி வினையாற்றும் ஆற்றலும் வாய்ந்தவர்.

பராந்தக பாண்டியன்

வரகுணனுக்கு ஆண் பிள்ளை இல்லாத காரணத்தால் அவருடைய தம்பி பராந்தக பாண்டியன் மணிமுடி ஏற்றார். இவருக்குச் சடையவர்மன், வீரநாராயணன் என்ற பெயர்கள் உண்டு. இவர் பெண்ணாகடத்தை அழித்தார் என்றும், கொங்கர்களை வென்றார் என்றும் கூறப்படுகின்றது. கோயில்களுக்கும், அந்தணர்களுக்கும், சமணப் பள்ளிகளுக்கும் கொடைகள் வழங்கினார் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன.

மூன்றாம் இராசசிம்மன்

தன் தந்தை பராந்தக பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர். பகைவர் பலரை வெற்றி கொண்டவர்.

வீரபாண்டியன்

இராசசிம்மனின் மகன் வீரபாண்டியர். பாண்டிய நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவர். “சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன் என்று தன்னைப் பாராட்டிக் கொண்டவர். இவருக்குப் பின் பல பாண்டியர்கள் அரசாண்டு வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய தெளிவான குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

இவர் கி.பி.1190இல் ஆட்சிக்கு வந்தார். மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடன் போரிட்டுத் தோற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குலோத்துங்கச் சோழன் பாண்டி நாட்டு அரசுரிமையை மீண்டும் குலசேகரனுக்குத் தந்து விட்டார்.

முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன்

சடையவர்ம குலசேகரனின் தம்பி இவர். மூன்றாம் இராசராசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார். எனினும் சோழநாட்டு அரியணையை மூன்றாம் இராசராசனுக்கே தந்து அவனிடம் திறை பெற்றுக் கொண்டார். இதனால் “சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்” என்ற விருதை இணைத்துக் கொண்டார். இம்மன்னன் ஆலயப்பணிகள் பல செய்துள்ளார.

இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன்

சுந்தரபாண்டியனை அடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டார். அவன் மூன்றாம் இராசேந்திரனிடம் தோல்வியுற்றார். இவருக்குப்பின் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினார்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன்

பாண்டிய மன்னருள் பேரிலும் புகழிலும் முன்னணியில் நின்றவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆவார். இவர் மாபெரும் வீரர். இவருடைய ஆட்சியில் பாண்டியநாட்டு ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து கேரளம், ஆந்திரம், கொங்கு நாடு ஆகிய நாடுகளில் பரந்த்து. தான் அரியணை ஏறிய ஆறாண்டுகளுக்குள் பாண்டியநாட்டு மேலாட்சியைச் சேரர், போசளர், சோழர், காடவர், சிங்களவர் ஆகியோர் ஏற்றுக் கொள்ளம் அளவுக்குச் சடையவர்மனின் படைபலச் செல்வாக்கானது அவனை உயர்த்திக் கொண்டே போயிற்று. அவருடைய ஆட்சியானது தெற்கில் திருவிதாங்கூரியலிருந்து வடக்கில் தென்னார்க்காடு மாவட்டம் வரை பரவியிருந்தது. சிதம்பரம், திருவரங்கம் கோயில்களுக்கு இவர் பொன் வேய்ந்துள்ளார். இதனால் இவருக்குப் “பொன்வேய்ந்த பெருமாள்” என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. சிதம்பரத்தில் பொன்னம்பலம் ஒன்று கட்டினார். திருவரங்கம் கியலுக்குபதினெண் நூறாயிரம் பொன் தானமாக்க் கொடுத்தார். சமணப் பள்ளிகளுக்கும் கொடையளித்தார். இதனால் சமயப் பொறையுடன் ஆட்சி செய்த சிறப்புக்குரியவர் என்பதை அறியலாம்.

மாறவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனை அடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தார்.  சோழ நாடு, சேர நாடு, கொங்கு நாடு, தொண்டைநாடு, ஈழ நாடு ஆகியவற்றில் படை செலுத்தி வெற்றி கண்டதால், “எம்மண்டலமும் கொண்டருளிய கொல்லம் கொண்டான்” என்ற விருதினை ஏற்றார். வெனிஸ் நாட்டுப் பயணியான மார்க்கோபோலா இக்காலத்தில் பாண்டிய நாட்டில் பயணம் செய்தார். தன் பயணக் குறிப்பில் பாண்டிய நாட்டு வளத்தைப் புகழ்ந்துள்ளார். அதேபோன்று இசுலாமியப் பயணி வாசப் என்பவரும் பாண்டிய நாட்டின் மீது புகழ்மாலை சூட்டியுள்ளார். அந்தளவிற்குக் குலசேகர பாண்டியனின் ஆட்சி சிறப்புற்றிருந்தது. நீதியுடன் நேர்மையுடன் ஆட்சி செய்தார். நாடு வளம் கொழித்தது. அயலார் படையெடுப்பு இல்லாததால் நாட்டில் அமைதி நிலவியது. அவருடைய கருவூலத்தில் பொன்னும் மணியும், முத்தும், மாணிக்கமும், நவரத்தினங்களும் குவிந்திருந்தன. காயல் பட்டினத்தில் வாணிகம் செழுத்திருந்தது. இவருடைய அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர். சுங்க அமைச்சு அப்துர் ரஹ்மான் என்ற இசுலாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று முஸ்லிம் வரலாறுகள் கூறுகின்றன. மேலும் பாண்டிய நாட்டில் வீர பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியன் என ஐவர் ஆட்சி செய்தனர் என்றும், குலசேகர பாண்டியன் மூத்தவன் என்றும் அறியப்படுகின்றது.

உள்நாட்டுக் குழப்பங்களும் பாண்டியரின் வீழ்ச்சியும்

குலசேகரனுக்கு சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களுள் சுந்தர பாண்டியன் பட்டத்தரசியின் மகன். வீர பாண்டியன் வேறொரு மனைவியின் மகன். சுந்தர பாண்டியனை விட, வீர பாண்டியனே திறமை மிக்கவனாக இருந்தான். எனவே பதவி அவனைச் சென்றடைந்தது. இதைக் கண்டு பொறுக்காத சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று விட்டு மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த வீரபாண்டியன் கொதித்தெழுந்து மக்களின் துணையுடன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்துத் துரத்தினான்.

அச்சமயம் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் ஒரு பெரும் படையுடன் வந்து நாட்டைக் கைப்பற்றினான். வீர பாண்டியன் ஓடி ஒளிந்தான். வீர பாண்டியனைத் துரத்திக் கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். சிதம்பரத்தில் 250 யானைகளைக் கைப்பற்றினான். தன் கண்ணில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்தான். மதுரைக்கு வந்து சுந்தர பாண்டியனைத் தேடினான். சுந்தர பாண்டியன் அரண்மனைச் செல்வத்துடன் ஓடிவிட்டதையறிந்து, கோபம் கொண்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தீயிட்டான். 

சுந்தர பாண்டியனின் சித்தப்பா விக்கிரம பாண்டியன் பெரும்படை ஒன்றைத் திரட்டி மாலிக்காபூர்மேல் படையெடுத்தான். அவரின தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் புறமுதுகிட்டு ஓடினான். ஓடியவன் இராமேசுவரம் சென்று அங்குள்ள நகரை அழித்தும், கொள்ளையிட்டும் படுசேதம் விளைவித்தான். பாணடிய நாடு தீப்பற்றி எரிந்தது. கோயில்கள் இடிந்து விழுந்தன. மக்கள் படுகொலைக்குள்ளாயினர். உடமைகள் பறிபோயின. ஆயினும் பாண்டியர் தளர்ச்சி கொள்ளவில்லை. அவர்களை அடிமை கொள்ளாமலேயே மாலிக்காபூர் டெல்லி நோக்கிப் பயணமானான். பாண்டிய நாட்டில் இசுலாமியரின் தலையீடு அவனோடு மறைந்தது. மீண்டும் சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் பாண்டிய நாட்டை ஆண்டனர். எனினும் இவர்களுக்குள் பூசல் குறையவில்லை. இதனால் விசயநக மன்னர்களின் ஆட்சி பாண்டிய நாட்டில் தொடங்கலாயிற்று.

பாண்டியர்களின் சமூக வாழ்க்கை

பாண்டிய நாட்டில் தாமிர பரணியும், வைகையும் நீர்வளம் அளித்த ஆறுகளாக விளங்கின. வேளாண்மை நீங்கலாக காட்டுவளம், கடல்வளம், தொழில்வளம் முதலியவையும், வாணிப வளர்ச்சியும் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தின. நில உரிமை மூன்று வகைப்பட்டன. தலைமுறை தலைமுறையாக உழுது வந்த செழிப்பான நிலங்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த மக்கள் பெயரில் பதிவாயின. இந்த நிலங்கள் வெள்ளான் வகை எனப்பட்டன. கோயில்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனப்பட்டன.

வேளாண்மையில் கவனம் செலுத்திய மன்னர்கள் நில மீட்புப் பணி செய்துள்ளனர். காடுகளையும், கரம்பு நிலங்களையும் பயிர் நிலங்களாக மாற்றும் முயற்சி நடைபெற்றுள்ளது.

நெசவு, செக்கு ஆலை எண்ணெய் உற்பத்தி, கரும்புச்சாற்றிலிருந்து வெல்ல உற்பத்தி, உப்பு உற்பத்தி, மீன் பிடித்தல், முத்துக் குளித்தல் முதலியவை முக்கியத் தொழில்களாகும்.  மதுரையில் பருத்தி ஆடைகளும், பட்டாடைகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

    கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக்க் கொற்கையில் சங்குகள் எடுக்கப்பட்டன. இவை சங்கு வளையல்கள் செய்யப் பயன்பட்டன. பாண்டி நாட்டு முத்துகள் புகழ் பெற்றவை. பலவகையான முத்துக வணிகர்கள் பெற்றுப் பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

    பரதவர்களின் முக்கியத் தொழிலாக மீன் பிடித்தல் இருந்தது. மீன்களைக் கருவாடாக்கி உள்நாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பி வைத்தனர். வெல்ல உற்பத்தி குடிசைத் தொழிலாக இருந்தது.

    பருத்தி ஈடைகள், பட்டாடைகள், பலவகை நவமணிகள், இரத்தினங்கள், சந்தனம் ஜவ்வாது, இஞ்சி வேர், ஏலம், இலவங்கம், மிளகு போன்ற பொருட்கள், இயற்கை வழங்கிய மருந்துப் பொருட்கள், யானைகள், குதிரைகள் முக்கிய வாணிபப் பொருள்களாக இருந்தன. காயல் பட்டினம் சிறந்து துறைகமாக இருந்தது.

    மக்கள் உருவ வழிபாடு செய்தனர். வீடு முழுவதும் சாணம் பூசினர். அரசன் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தரையில அமர்வதைப் பெருமையாகக் கருதினர். வெற்றிலை பாக்கு போடும் வழக்கம் இருந்தது.

    குற்றம் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மரண தண்டனை பெற்றவர்கள் தாமாக முன்வந்து தெய்வத்துக்குப் பலியாயினர். பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட்டனர். பெண்கள் கூலி வேலை, தயிர், மோர் விற்றல், நாற்று நடுதல், மீன் விற்றல் உள்ளிட்ட வேலைகளைச் செய்தனர். மக்கள் சகுனம் பார்ப்பவர்களாகவும், சோதிட நம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

    கோயில்களில் பணிப் பெண்களும், ஆடற் மகளிரும் இருந்தனர். தெய்வங்களுக்கு விழா எடுக்கும்போது ஆடல் பாடல்களில் தேறிய தேவர் அடியார்களை அழைப்பது ஒரு சிறந்த வழக்கமாக இருந்தது.

-------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.