பண்டைத் தமிழர்களின் வாணிகம்
உழவுத்தொழிலும், வாணிகமும் பண்டையத் தமிழரின் இருபெரும் முக்கியத் தொழில்களாக இருந்தன. வாழ்க்கை நலன்களுக்காக பல பண்டங்களும், ஏற்றமதி செய்யப்பட்ட பல பொருள்களும் தமிழ்நாட்டில் உற்பத்தியாயின.
உழவுத்தொழில் சிறப்பு
தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக உழவு விளங்கியது. அது மக்களுடைய வளத்துக்கும், மன்னனுடைய வளத்துக்கும் அடிப்படையாக விளங்கியது. உழவுகின்ற நிலம் செழிப்பாக இருந்தமையால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக் காணப்பட்டது. நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், மஞ்சளும், இஞ்சியும், பருத்தியும் தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டன. நிலத்தை உழுவதும், எரு விடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை எடுப்பதும், பயிரைக் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.
மருத நிலத்தில் நெல்லும் கரும்பும் முக்கியப் பயிர்களாகும். வரகும், தினையும் முல்லை நிலத்தின் முக்கியப் பயிர்கள். பழங்கள், கிழங்குகள், வள்ளிச் செடிகள் ஆகியவை குறிஞ்சி நிலத்திற்குரியவையாகும்.
உழவுத்தொழிலுக்கு நீர் வசதி அளித்தனர். காவிரியில் அணை கட்டினர். கால்வாய்கள் அமைத்தனர். குளங்கள், ஏரிகள், கிணறு ஆகியவற்றை உருவாக்கினர்
ஆநிரை மேய்த்தல்
உழவுத்தொழிலின் ஒரு பகுதியாக ஆடு மாடுகளை மேய்த்தனர். இது ஆயர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. கையில் கோலுடன் மந்தைகளின் பின்னால் சென்று ஆயர்கள் கடினமாக உழைத்தனர். பானைகளில் மோர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றனர்.
தமிழ்நாட்டினரும்
அயல்
நாட்டினரும்
தமிழ்நாட்டுக் கைவினைஞர்களுடன் அயல்நாட்டுத் தொழிலாளர்களும் இணைந்து பல கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மகத நாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவன நாட்டின் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடி கண்கவரும் பொருட்களைப் படைத்தனர் என்பதை மணிமேலை குறிப்பிடுகின்றது. கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக் கம்மர்களும் தமிழகத்தில் பிழைக்க வந்தனர்.
வணிகர்கள்
- · ஓவியத்திற்கான வண்ணக்குழம்பு பூசு சுண்ணம், நறுமணக் கூட்டுகள், மலர் மாலைகள், சந்தனம், பச்சைக் கற்பரம் போன்ற நறுமணப் பண்டங்களை விற்பவர்களும்,
- · பட்டு நூலாலும், எலியின் முடி, பருத்தி நூல், ஊசி ஆகியவற்றைக் கொண்டு தறியின் அச்சினைக் கட்டும் காருகர்களும்,
- · பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, மணி, பொன் ஆகியவற்றை நோட்டம் பார்ப்பவர்களும்,
- · நெல், புல்லரிசி, வரகு, திணை, சாமை, மூங்கிலரிசி வணிகர்களும்,
- · கள் விற்கும் பெண்களும், மீன் விற்கும் பரதவரும், உப்பு விற்கும் உமணரும், வெற்றிலை வணிகரும்,
- · தக்கோலம், தீம்பு, இலவங்கம், சாதிக்காய் விற்பர்களும்,
- · எண்ணெய் வாணிகரும்,
- · வெண்கலம், செம்புக் கலங்கள் தட்டுபவர்களும்,
- · தச்சர், ஓவியர், சிற்பிகள் முதலியோரும்,
- · செயற்கைப் பூங்கொத்துகள், வாடாமாலைகள், பொய்க்கொண்டைகள் செய்வோர்களும்,
- · சிறுசிறு கைத்தொழில்களைப் பிறருக்குப் பயிற்றுவோர்களும் பூம்புகாரில் திரண்டிருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் கூறுகின்றது.
வணிக மக்களின் பண்பு
பல தொழிலைச் செய்யும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தொழில்முறையில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை. நாட்டு வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வுக்கும் தங்களின் உழைப்பு இன்றியமையாததது என்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியிருந்தது. தங்கள் தொழிலை நேர்மையாக நடத்தினர்.
வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களை பல ஊர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வர். இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். கள்வர்களுக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாகச் செல்வர்.
சிறந்த வாணிகம்
உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவை சிறப்பான வாணிகங்களாகப் போற்றப்பட்டன.
பண்டமாற்று வாணிகம்
பண்டமாற்று முறையிலே வாணிகம் நடைபெற்றது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீன், நறவு ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டன. கரும்பு, அவல் ஆகியவை மானின் இறைச்சிக்கும், கள்ளுக்கும் மாறின. நெய்யை விற்று எருமை வாங்கினர். உப்புக்கு நெல் மாற்றப்பட்டது. பச்சைப் பயறுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றப்பட்டது.
பண்டமாற்று முறையில் குறிப்பிட்ட பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திலுப்பிக் கொடுக்கும் “குறியெதிர்ப்பை” என்ற ஒரு முறை வழங்கி வந்தது.
நாணயங்கள்
பண்டமாற்று வாணிகம் இல்லாதபோது நாணயங்களைப் பயன்படுத்தி பண்டங்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். சங்க காலத்தில் மன்னர்கள் நாணயம் அச்சிட்டிருப்பதையும், வெளிநாட்டு வணிகர்கள் அவர்கள் நாட்டு நாணயங்களைக் கொண்டு வந்து பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது.
விற்பனை செய்யப்பட்ட நிலை
சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனை செய்யப்பட்டன. சில பண்டங்கள் ஊர் ஊராக எடுசத்துச் சென்று விற்றனர். உப்பு, மிளகு ஆகியவை ஊர் ஊராக விற்கப்பட்டன. பண்டங்களை வண்டிகளின் மேலும, கழுதையின் மேலும் ஏற்றிச் செல்வர். சரக்கு மூட்டைகளின் மேல் அவற்றின் அளவு அல்லது எடை பொறிக்கப்பட்டன. தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின் மேல் பறக்க விட்டனர். வணிகச் சாத்துகள் கழுதையின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தினர்.
கீழைக்
கடற்கரையிலிருந்து மதுரைக்குக் கப்பலில் அகில் முதலிய நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றி வந்த யவனர்கள் அதே மரக்கலங்களில பொன் அணிகலன்களையும், புளி கருப்பட்டி சேர்ந்து பிசைந்த தீம்புளி என்ற பண்டத்தையும், மீனையும், உப்பையும், தத்தம் நாட்டுக்கு ஏற்றிச் செல்வர்.
ஏற்றுமதியும் இறக்குமதியும்
கொங்கு நாடடுத் தங்கம், பாண்டி நாட்டு முத்து, மிளகு, வாசனைப் பொருட்கள், இஞ்சி, தந்தம், ஏலம், கிராம்பு போன்றவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. உயர்தரமான ஆடைகள், பட்டு ஆடைகள், விரிப்புகள், ஓவிய வேலைப்பாடுடைய பொருட்கள், வைரம், பிற விலை உயர்ந்த கற்கள் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.
மேற்கு நாடுகளில் இருந்து உயர் ரக மது வகைகள், கண்ணாடிப் பொருட்கள், குதிரைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் உணவுப் பொருட்கள் வந்து இறங்கின. சீனாவில் இருந்து அழகிய பட்டுகளும், சர்க்கரையும் வரவழைக்கப்பட்டன.
தங்கக்காசுகள்
அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்தன. கணம் என்றொரு பொற்காசு சங்க காலத்தில் இருந்தது. மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகளைப் பரிசுகளாக்க் கொடுத்தனர். பெண்கள் பொற்காசுகளை மாலையாக்க் கோர்த்து அணிந்து கொண்டனர். அக்காலத்தில் இரும்புக்கும் பொன் என்று பெயர் வழங்கப்பட்டது.
அளவைகள்
வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல் அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர். எண் என்னும் சொல் எண்ணையும் கணிதத்தையும் குறித்தது. நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் காணப்படுகின்றன.
துறைமுகங்கள்
தமிழகத்துத் துறைமுகங்களில் அயலார் கலங்கள் குவிந்து கிடந்தன. பொறையாறு, புகார், கொற்கை ஆகியவை சிறந்த துறைமுகங்களாகச் செயல்பட்டன. கோட்டாறு, மதுரை, முசிறி, உறையூர் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களின் ஆரவாரம் பெற்ற உள்நாட்டு நகரங்களாக விளங்கின. தமிழ்நாட்டில் வணிகம் சிறந்திருந்தது என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது.
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக