சனி, 14 செப்டம்பர், 2024

நாயக்கர்கள்

 

நாயக்கர்கள்

விசயநகரத்தினுடைய நிர்வாக அமைப்பின்வழி தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி தோன்றியது. கிருஷ்ணதேவராயர் தமிழகத்தின் மீது படையெடுத்து, எழுச்சி செய்த நாயக்கர்கள் மீது வெற்றி கண்டபின் நிர்வாகப் பொறுப்பை மாற்றி அமைத்தான். அதன்படி செஞ்சியில் வையப்ப நாயக்கனும், தஞ்சையில் விசயநகர நாயக்கனும், மதுரையில் வெங்கடப்ப நாயக்கனும் அமர்த்தப்பட்டனர். 1542இல் அமைச்சர் அச்சுதராயனின் மறைவுக்குப்பின் விசயநகரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தமிழகத்து நாயக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கன் நிர்வாக ஒழுங்குகள் ஏற்படுத்தி நாயக்கர்களின் வலிமையை நிலைநாட்ட அடிகோலினான். அவன் மதுரையில் நாயக்க மன்னனாகப் பேரரசால் முடிசூட்டப்பட்டான். செஞ்சியில் கிருட்டிணப்ப நாயக்கனும், தஞ்சையில் அச்சுத நாயக்கனும், மதுரையில் விசுவநாதனின் புதல்வன் கிருட்டிணப்பனும் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டு சுயாட்சிப் பாதையை நோக்கினர்.

வேலூர் நாயக்கர்

வேலூரில் சின்னபொம்ம நாயக்கன் விசயநகர அரசின்கீழ் கி.பி 1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டான். வேலூர்க் கோட்டையும் அதனுள் வழிபாடற்றுக் கிடக்கும் சலகண்டேஸ்வரர் கோயிலையும் கட்டினார்.

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்கர்கள் பாலாற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டனர். குமார கம்பணன் காலத்தில் செஞ்சி சோழ மண்டலத்தின் தலைநகரமாகியது. விசயநகரப் பேரரசின் கீழ், செஞ்சியானது படைபலத்திலும், அரசாக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையை எட்டியது. சிதம்பரம் திருச்சித்திரகூடத்துக்கு இவர் பல பெரும் திருப்பணிகள் செய்தார். இவனுடைய திருப்பணிகளைத் தில்லை தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தனர். பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேல் ஏறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். கிருஷ்ணப்ப நாயக்கன் வெகுண்டு பல தீட்சிதர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருட்டினப்பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து, அதில் ஜெசூட் பாதிரிகள் மாதா கோயில்கள் கட்டிக் கொள்ள உரிமை வழங்கினான். அவ்வூர் இப்போது பரங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.

தஞ்சை நாயக்கர்கள்

திம்மப்ப நாயக்கனின் புதல்வன் சேவப்ப நாயக்கன். இவர் அச்சுதராயனுக்கு மனைவி வழி உறவினன். சலுவ நரசிங்க செல்லப்பன் கி.பி.1532 இல் தோற்கடிக்கப்பட்டது முதல் தஞ்சை தனித்து நின்றது. சில பல காரணங்களால் அச்சுதராயன் காலத்தில் தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி துவங்கியது. சோழ நாடு மதுரையினின்று பிரிக்கப்பட்டது. அச்சுதனுடைய மைத்துனியின் கணவன் செல்லப்பன் என்பவன் தஞ்சாவூரில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். செல்லப்பன் முஸ்லீம் தர்க்காக்களுக்கு நிவந்தங்கள் வழங்கினார். குடிமக்களுக்குப் பாசன வசதி செய்து கொடுத்தார். நாகப்பட்டினத்தில் போர்ச்சுக்கீசியர் குடியேறுவதற்குப் பெரிதும் துணை புரிந்தார்.

    தஞ்சாவூர் இரகுநாத நாயக்கன் பெரும வீரனாகத் திகழ்ந்தார். வடமொழியில் பல நூல்களை இயற்றியுள்ளார். வடமொழிப் புலவர்கள் பலர் இவருடைய அரசவை அலங்கரித்தனர்.

    இரகுநாத நாயக்கனின் மகன் விசயராகவ நாயக்கன் அளவு கடந்த சமயப் பற்றும், பொருளற்ற சடங்கிலும் பெரும் ஆர்வம் கொண்டார். இவரைப் பற்றி கிறித்துவப் பாதிரிகள் தவறான சிந்தனையைப் பரப்பினர். அதனை முறியடிக்கும் வண்ணம் போரில், கையில் பிடித்த வாளுடன் வீர மரணம் அடைந்து தன் வீரத்தை நிலைநாட்டினார்.

மதுரை நாயக்கர்கள்

    மதுரையில் விசுவநாத நாயக்கன் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கினார். இவனுடைய தலைமை அமைச்சர் அரியநாதர். அவருடைய உதவியுடன் மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சீரமைத்தார். தஞ்சாவூர் பிரிந்து சென்ற பிறகு இவருடைய ஆட்சி திருச்சிராப்பள்ளி முதல் கன்னியாகுமரி வரையிலும் விரிந்தது. சேலம், கோயமுத்தூர், ஆகிய மாவட்டங்கள் ஓங்கி நின்றன. முதன்முதல் நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்தவர் இவரே. ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரன் கையில் ஒப்படைக்கப்பட்டது.

பாண்டியர்கள் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த மதுரையில் புதிய ஆட்சியாளர்களை அமைத்து, சிதறிக் கிடந்த பரம்பரை அரசர்களின் போட்டியைச் சந்தித்தார். ஆற்றுப்படுகைகளில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய நாட்டில் கொள்ளைக் கூட்டத்தினரின் தொல்லைகளை அகற்றினார். உழவுத் தொழிலை தூண்டி விட்டார். நாடுமுழுவதும் பாசன வசதிகளை அமைத்தார். நாடு அமைதி கொண்டது. திருநெல்வேலி நகரம் விரிவடைந்தது. அங்குப் புதிய கோயில்கள் எழுந்தன. பழைய கோயில்கள் பழுது பார்க்கப்பட்டன. தெருக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன.

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கன்

விசுவநாதனின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன். தன் தந்தையைப் போலவே வீரத்திலும், திறனிலும் சிறந்து காணப்பட்டார். இவர் திருவிதாங்கூரின் மீதும், சிங்களத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான். அமைச்சர் அரியநாதர் தொடர்ந்து கி.பி.1570 வரையில் பணியாற்றி வந்தார். இவர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசனாக விளங்கினார். பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள கிருட்டிணாபுரத்தில் நகரமும், ஆலயமும் எழுப்பினார். அந்நகரில் திருவேங்கடநாதர் ஆலயத்தை எழுப்பிப் பல சிற்றூர்களை இறையிலியாக விட்டுக் கொடுத்தார். இக்கோயிலின் சிற்பங்கள் நாயக்கர் காலத்து கலைக்கு விளக்கமளிக்கின்றன. இவர் மதுரை மீனாட்சி ஆலயத்திலும் திருப்பணிகள் செய்துள்ளார்.

முதலாம் வீரப்ப நாயக்கன்

கிருஷ்ணப்ப நாயக்கன் மகன் முதலாம் வீரப்ப நாயக்கன் பட்டத்திற்கு வந்தான். அவனுடைய ஆட்சியின் போது மதுரையில் பாதிரிகள் கிறித்துவ நிறுவனம் ஒன்றை அமைத்தனர். இந்நிறுவனத்தைச் சார்ந்த பாதிரிகளுள் இராபர்ட்டி நொபிலி என்பார் சிறந்து விளங்கினார். இவருடைய ஆட்சியிலும் அரியநாதர் அமைச்சராக இருந்தார். திருச்சிக் கோட்டையைச் சீர்ப்படுத்தியதும், அருப்புக் கோட்டையில் அரண்மனை அமைத்ததும், தில்லைக் கூத்த பெருமான் ஆலயத்தைச் சுற்றி அரண் அமைத்ததும், வேதியர் குலத்தாருக்குக் குடியிருப்பு வசதி பெருக்கியதும் வீரப்பன் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

குமார கிருட்டிணப்பன்

வீரப்பனுக்குப் பின் அவனுடைய புதல்வர் குமார கிருட்டிணப்பன் ஆண்டார். இவருடைய காலத்தில் பாண்டி நாடு தெற்கே கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தது. வடக்கில் சேலம், கோயம்புத்தூர் முதலிய பகுதிகளையும் உள்ளிட்டிருந்தது. இவருடைய ஆட்சிக் காலத்தில் நான்கு நாயக்கர் காலத்தில் அரும் தொண்டாற்றிய அரியநாதர் மறைந்தார். இவருடைய அரும்பணிகளை மதித்து, மதுரை ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில், குதிரைமேல் அமர்ந்த அவருடைய உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முத்துக் கிருட்டிணப்பன்

ஐந்தாவது நாயக்கனான முத்துக் கிருட்டிணப்பன் 1609 வரை அரசாண்டான். விசுவநதாதனின் பேரனுக்குப் பேரனான இவர் பதவிக்கு வரும்போது சிறியதொரு அரசுரிமைப் போட்டி நடைபெற்றது. இவருடைய காலத்தில் இத்தாலி நாட்டைச் சார்ந்த உரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் மதுரையில் வந்து தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் புலமை பெற்று கிறித்துவ சமயத் தொண்டாற்றி வெற்றி கண்டார்.

திருமலை நாயக்கர்

முத்துக் கிருஷ்ணனின் இரண்டாவது புதல்வரான திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டார். இவர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். மைசூர், வேணாடு, இராமநாதபுரம், வேலூர் ஆகிய இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றார். இவருடைய காலத்தில் நடைபெற்ற மூக்கறுப்புப் போரால் மக்கள் பலர் மடிந்தனர். நெஞ்சு உரத்திலும், போர்த்திறனிலும் திருமலை நாயக்கன் மேம்பாடு உடையவர். பெரும் கொடை வள்ளலாக விளங்கினார். கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஆர்வம் கொண்டார். மதுரைக்குத் தலைநகரை மாற்றினார். அங்கு பாழ்பட்டுக் கிடந்த கோயில்களைச் செப்பனிட்டு அழகுபடுத்தினார். ஆண்டு ஒன்றுக்குப் பெருவிழாக்கள், சிறுவிழாக்கள் நடத்தி மதுரையை விழா நகரமாக்கினார். மதுரையில் அழகிய தெப்பகுளம், புதுமண்டபம், ஆவணி மூலை, இராயர் கோபுரம் ஆகியவை இவருடைய சீரிய பணிக்குச் சான்றுகளாகும். மதுரையின் மற்றொரு சிறப்பு திருமலை நாயக்கர் மகால் ஆகும். அது அடிமைகளின் உழைப்பைப் பெற்று வெளிநாட்டுக் கட்டிடக் கலையில் எழுந்தது. கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட விசயம் ஆகிய பல புகழ் பெற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய அறப்பணிகளும், கலைப்பணிகளும், இறவாப் புகழை தந்தன.

திருமலையின் சந்ததிகள்

திருமலைக்குப்பின் அவனுடைய புதல்வர் இரண்டாம் முத்து வீரப்பன் பதவிக்கு வந்தார். இவருக்குப்பின் இவருடைய மகன் முதலாம் சொக்கநாத நாயக்கன் அரியணை ஏறினார். பல சூழ்ச்சிகளும், சிக்கல்களும் நிறைந்த காலமாக இவருடைய காலம் அமைந்தது. இவருக்குப்பின் அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவி ஏற்றார். இராநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதியின் சதியை தஞ்சை மன்னனின் துணையுடன் முறியடித்தார். திறமை மிக்க, நல்லொழுக்கமுடைய மன்னனாக விளங்கினார். மாறுவேடத்தில் சென்று சோதனையிட்டு நல்லாட்சி நடத்தினார். இவர் இறந்த பின்பு மக்கள் செங்கோன்மையை இழந்தனர்.

இராணி மங்கம்மாள்

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் மடிந்த சில மாதங்களில் அவருடைய புதல்வன் விசயரங்க சொக்கநாதன் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆயினும், அவருடைய பாட்டியும், சொக்கநாதனின் மனைவியுமான மங்கம்மாள் ஆளுநராக ஆட்சி நடத்தினார். முகலாயர்களின் வலிமையைம், நாயக்கர்களின் பலவீனத்தையும் உணர்ந்த மங்கம்மாள், முகலாய மனன்னுக்குப் பணிந்து, திறை செலுத்த இணங்கி, உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவருடைய உதவியை நாடினார். மராட்டியர்களிடத்தில் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டார். சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் ஆதரித்தார். இதனால் நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றனர். நீர்நிலைகளை உருவாக்குதல், சாலைகள் அமைத்தல், சாலையில் நிழல் தரும் மரங்கள் நடுதல், சத்திரங்கள் அமைத்தல், அன்னச் சாவடிகள் அமைத்தல், தண்ணீர்ப்பந்தல் நிறுவுதல் உள்ளிட்ட பல அரும்பணிகளைச் செய்தார். உய்யக்கொணடான் வாய்க்காலைச் செப்பனிட்டார் என்று சாசனங்கள் கூறுகின்றன. இவரின் ஆட்சி “மங்கம்மாள் சாலை மலைமேலே சோலை” என்ற பாராட்டுதலைப் பெற்றது. போர் தவிர்க்கப்பட்டது. குளம் வெட்டி வளம் பெருக்கிச் சாலைகளும், சோலைகளும் உருவாக்கி, மனிதப் பண்புடன் ஆட்சி நடத்தினார். இவரின் பெருமையை நாடறியும் வண்ணம், மங்கம்மாளின் உருவம் ஓவிய வடிவில் மதுரைப் பொற்றாமரைக் குளத்தின் அருகில் இருக்கில் கலியாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.

நாயக்கர்களின் சமூக வாழ்க்கை

நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் வாணிகம் வளர்ச்சியுறவில்லை. கடற்படையும், கப்பல்களும் அவர்களிடம் இல்லாததே மிகப் பெரும் காரணமாகும். மதுரையில் துணி வாணிகம் செழிப்பாக நடைபெற்றது.

நாயக்கர் காலத்தில் சைவ வைணவப் பூசல்கள் காணப்படவில்லை. சமய ஓருமைப்பாடு நிலவியது. நாயக்க மன்னர்கள் கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நிவந்தங்களை வழங்கினர்.

தர்மசத்திரம் வகுத்த சமூகநீதி அடிப்படையில் சமஸ்கிருதக் கல்வியை ஆலயம் வழியாக அரசு பேணிக்காத்தது. ஆசிரியர்களுக்கு நிலமானியமும், மாணவர்களுக்கு இலவச உணவும், உறைவிடமும் வழங்கப்பட்டன. வசதியுடையோர் திண்ணைப் பள்ளிகளை நம்பிக் கல்வி பெற்றனர்.

 கட்டிடக்கலை

ஆலயங்கள் இந்தியக் கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் எழுந்தன. அரண்மனைகள் இந்தோசாரசானிய கட்டிடக் கலையின் அடிப்படையில் எழுந்தன. நெல்லைக் கூத்தப்பர் ஆலயம் கலைப்பணியடன் கம்பீர எழுச்சி கண்டது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் விரிவடைவதற்குத் திருமலை நாயக்கர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. மரமும் இரும்பும் இன்றி வெறும் சுதையை மட்டும் கொண்டு கட்டப்பட்டுள்ள மதுரை நாயக்கர் மகால் இவர்களுடைய கலைப்பணிக்குச் சான்று வழங்குகின்றது.

இலக்கியம்

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணிமாலை, பிரபுலிங்கலீலை, தாயுமானவரின் திருப்பாடல்கள் ஆகியவை நாயக்கர் காலத்து இலக்கியங்களாகும். எல்லப்ப நாவலர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், படிக்காசுப் புலவர் உள்ளிட்டோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த புலவர்களாவர்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த புலவர்கள் பலர் நாயக்கர் காலத்தை அணி செய்துள்ளனர். சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், உமறுப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, செய்குத் தம்பிப் பாவலர் ஆகிய புலவர்கள் அளித்துள்ள இல்க்கியப் படைப்புகள் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன.

கிறித்துவப் பாதிரிகளும் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் வீரமாமுனிவர். தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் புதிய திருப்பங்களை உருவாக்கினார். தேம்பாவணி என்ற ஒப்பற்ற காப்பியத்தை இயற்றினார்.

குறவஞ்சி, பள்ளு முதலிய புதிய இலக்கியங்கள் முகிழ்த்தன. அதனால் திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு ஆகிய இலக்கியங்கள் தோன்றின.

 -----------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக