சனி, 12 அக்டோபர், 2024

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி இமயம் முதல் குமரி வரையிலும், சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரையிலும் விரிவடைந்திருந்தது. தஞ்சை மராத்திய மன்னன் சரபோஜி வெல்லெஸ்லி பிரபுவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு தான் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டான். அவர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க பல தலைவர்கள் தன் இன்னுயிர் ஈந்தனர். அவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பெரும்பங்காற்றியுள்ளனர். தமிழகத்து விடுதலை இயக்க வரலாறு பல கால கட்டங்களைக் கொண்டுள்ளது.

விடுதலை இயக்க வரலாறு

  • கி.பி.1800 – 1801 ஆகிய ஆண்டுகளில் மருது பாண்டியனின் சீரங்கன் அறிக்கை இந்திய விடுதலை இயக்க வரலாற்றின் துவக்க விழாவாகவும், எல்லைக் கல்லாகவும் அமைந்தது.
  • 1804இல் இராமசாமி என்ற தாசன் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு விடுதலை இயக்கம் மையம் கொண்டது. அவ்வியக்கம் ஆங்கிலேயரால் நசுக்கப்பட்டது.
  • 1841இல் விவசாயிகள் தென்னாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர்.
  • 1852இல் வங்கத்தில் இந்தியக் கழகம் துவங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் தன்னுரிமை நலக் கழகம் தோன்றியது.
  • 1857இல் வட இந்தியாவில் விடுதலை இயக்கம் நடைபெற்றபோது சென்னையில் ஒரு போராட்ட அச்சுறுத்தல் சுவரொட்டி மூலம் காட்டப்பட்டது. “இந்தியாவை விடுவிக்க ஒரே வழிதான் இருக்கிறது. அது பயங்கரமான யுத்தம்தான். இது சுதந்திர யுத்தம். இதில் பங்கு பெறுவர்கள் உண்மைத் தியாகிகள்என்ற வேண்டுகோள் விடுத்த சுவரொட்டிகள் சென்னையில் தோன்றின.
  • 1865 இல் தாதாபாய் நவரோஜி, பானர்ஜி போன்றோர் இந்தியக் கழகத்தை இலண்டனில் நிறுவியபோது அதன் கிளை ஒன்று 1869இல் சென்னையில் தோன்றியது.
  • 1884 மற்றும் 1885 ஆகிய ஆண்டுகளில் சுப்பிரமணிய ஐயர், இராகுநாத ராவ், இரங்கைய நாயுடு உள்ளிட்ட பதினேழு பேர் சென்னை பிரமஞான சங்கத்தில் கூடி, நிர்வாகப் பிரச்சனைகள் குறித்துப் பேசினர்.
  • 1885 ஆம் ஆண்டு இந்தியப் பேரவையின் முதல் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர், விஜயராகவாச்சாரியர், கேசவப்பிள்ளை முதலியோர் பங்கேற்றனர்.
  • 1887இல் இந்தியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. வீரராகவச் சாரியார் தேசியப் பேரவை அமைப்புச் சட்டத்தைத் தயாரித்தார்.
  • 1876,1883,1895 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரிப்பளுவும் பஞ்சமும் மக்களை வாட்டின. பல தலைவர்கள் சட்டமன்றங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வழியாகவும் அரசின் போக்கைக் கண்டித்தனர்.
  • 1881 இல் கிராண்ட் டஃப் சென்னை ஆளுநராகப் பதவி ஏற்ற பின் இயற்றப்பட்ட சட்டங்களும், அதிகாரிகளின் இரக்கமற்ற போக்குகளும் பொதுமக்களைத் துன்புறுத்தின.
  • 1891இல் கொண்டு வரப்பட்ட காட்டிலாகா சட்டம் சாதாரண மக்களின் ஆடு மாடுகள் மேய்ப்புரிமையைப் பறித்தது.

20 ஆம் நூற்றாண்டில் விடுதலை இயக்கம்

  • இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் விடுதலை இயக்க வரலாற்றில் பெரும் திருப்பத்தைக் கண்டது.
  • 1905இல் கர்சன் பிரபுவின் வங்கப்பிரிவினை விடுதலை வேட்கையை அதிகப்படுத்தியது.
  • தமிழகத்தில் 1905 முதல் 1912 வரை ..சிதம்பரனார் தலைமையிலும், 1913 முதல் 1919 வரை பல தலைவர்கள் முன்னிலையிலும் விடுதலை இயக்கம் புரட்சிப் பாதையில் முன்னேறியது.

நீதிக்கட்சியின் தோற்றம்

1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று ஓர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் செயலாளராக சர்.பி.தியாகராசச் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டில் எல்லா வகுப்பினரும் சமநிலையை எய்திய பிறகுதான் சுதந்திரம் பெற வேண்டும் எனவும், சுதந்திரத்தின் பலன் அப்போதுதான் எல்லாக் குடிமக்களுக்கும் கிடைக்கும் எனவும் தம்முடைய அறிக்கையில் வெளியிட்டார். பிராமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த அக்காலக் கட்டத்தில், பிராமணர் அல்லாதோர் இணைந்த இயக்கத்திற்கு நீதிக்கட்சி என்று பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்ற நாளேடும், தமிழில் திராவிடன் என்ற நாளேடும் தொடங்கப்பட்டன.

1920இல் மாண்டேகு செம்ஸ்போர்டு அளித்த இரட்டை ஆட்சி முறையின்கீழ் முதல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி பெரும்பான்மை பலத்தோடு அமைச்சரவையை அமைத்தது. .சுப்புராயலு ரெட்டியார் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1923ஆம் நடைபெற்ற தேர்தலிலும் நீதிக்கட்சியே வென்றது. இராமராயனிங்கர் முதல் அமைச்சரானார். இவ் அமைச்சரவையினால் பல நன்மைகள் நடைபெற்றன. சென்னைப் பல்கலைக்கழகச் சட்டமும், ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன.

நீதிக்கட்சியின் ஆட்சியில் எம்.சி.ராஜா என்ற ஆதி திராவிட தலைவரின் முயற்சியால் பறையர் என்ற சொல் மறைந்து ஆதிதிராவிடர் என்ற சொல் உருவாகியது. ஆதிதிராவிடர்களின் உரிமையை மீட்க காந்தியடிகள் வைக்கம் சத்தியாகிரகம் என்ற பெயரில் அறப்போர் நடத்தினார்.

சுயமரியாதை இயக்கம்

வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்ட இராமசாமி நாயக்கர் கூர்த்த அறிவும், நாவன்மையும் மிக்கவர். அரசியலிலும், சமூக வாழ்விலும் ஒரு பிரிவினர் மட்டுமே உயர்ந்திருந்தமையையும், பிற பிரிவினர் விழிப்பின்றி மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருந்தமையையும் கண்டு மனம் புழுங்கினார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்பி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் சீர்த்திருத்த இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். அதற்குச் சுயமரியாதைக் கட்சி என்று பெயர் வைத்தார். குடியரசு என்ற நாளிதழைத் தொடங்கினார். அவருடைய வீரம் மிக்க பணிகளைக் கண்டு தமிழக மக்கள் அவரைப் பெரியார் என்று அழைத்தனர். அவருடைய புரட்சிமிகு சிந்தனைகளால் சமயத்துறையில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. கோயில்கள் பழுது பார்க்கப்பட்டன. அறங்காவலர்கள் கோயில் திருப்பணிகளில் மும்முரமாக இறங்கினர். அவருடைய எளிமையான பேச்சால் பல தலைவர்கள் உருவாயினர். 

விடுதலைப் புரட்சியின் தீவிரச் செயல்பாடுகள்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும்பாலும் சுப்பிரமணிய பாரதியாரும், சுப்பிரமணிய சிவாவும், ..சியும், தீவிரவாதிகளாக விளங்கினர். இக்காலத்தில் சென்னை மயிலாப்பூரில் திவ்விய ஞான சங்கப்பணியில் ஈடுபட்டிருந்த அன்னிபெசன்ட் அம்மையார் தாழ்த்தப்பட்டோர் நலப்பணியுடன் தீவிர அரசியலில் தலைமை தாங்கிச் சென்னையில் தன்னாட்சி இயக்கத்தைத் துவங்கினார்.

  • 1905இல் பாரதியார் பொது மேடைகள் வழியாகவும், தன் கவிதைகளின் மூலமாகவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டினார்.
  • 1906இல் பிபின் சந்திர பாலரின் வந்தேமாதரம் போர்க்குரலாகியது.
  • 1907இல் சூரத்துப் பேரவைக் கூட்டத்தில் தீவிரவாதமும் மிதவாதமும் ஒன்றோடொன்று மோதின.
  • 1908இல் வங்கத்தில் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டன. தூத்துக்குடியில் அயலார் கப்பல் ஆதிக்கத்தை ..சி தலைமையில் எதிர்த்தனர். இந்தியா எங்கும் புரட்சிக் குரல்கள் ஒலித்தன.
  • வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் முடிதாழ்த்துவோம் என்ற பாரதியாரின் குரல் எங்கும் ஒலித்தது.
  • 1910 இல் .வே.சு ஐயர் காந்தியடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். வீரசாவர்க்கரின் சுதந்திரப் போராட்டம் என்ற நூலை மொழிபெயர்த்துத் தடையை மீறி உலகெங்கும் அனுப்பினார் .
  • 1911 சூன் மாதம் வரை ஆஷ்துரை நடத்திய கொடுமைகளை எதிர்த்து பல தலைவர்கள் ஒன்றிணைந்தனர்.
  • வாஞ்சிநாதன் 1911இல் ஆஷ்துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன் உயிரையும் போக்கிக் கொண்டான்.

சுயாட்சி இயக்க காலம்

  • 1912இல் ..சி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • 1913இல் அன்னிபெசன்ட் அம்மையார் அரசியலில் முழு நேரப் பணியில் இறங்கினார்.
  • 1913இல் விசயராகவாச்சாரியார் மத்திய சட்டசபையில் குடிமக்கள் உரிமை பறிமுதல் சட்டத்தை முழு மூச்சுடன் எதிர்த்தார்.
  • 1919இல், பேரவையில் குடிமக்களின் உரிமைகளின் தொகுதியை ஏற்கச் செய்தார். இவை இரண்டும் முக்கிய சாதனைகள் ஆகும்.
  • 1916இல் டாக்டர் டி.எம்.நாயர், தியாகராசச் செட்டியார், முதலியோரால் சுயாட்சி இயக்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. திரு.வி.கல்யாணசுந்தரனார், கேசவப்பிள்ளை போன்றோர் பத்திரிகைகளின் துணையுடன் தேசிய இயக்கத்திலும் தொழிலாளர் நல இயக்கத்திலும் ஈடுபட்டனர்.  டாக்டர் வராராசலு நாயுடு, பெரியார் போன்றோர் தேசிய இயக்கப் பணியுடன் சமூகப்புரட்சிப் போராட்டங்களை நடத்தினர்.
  • 1918இல் காஞ்சிபுரத்தில் சரோஜினி அம்மையார் தலைமையில் தமிழ்மாநில மாநாடு நடைபெற்றது.

சத்தியாகிரக இயக்க காலம்

  • 1919க்குப் பின் தமிழகத்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காந்தியடிகள் சென்னை வந்து தனது ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவை பெற்றார். சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதி ஆனார்.
  • 1920இல் தேசியப் பேரவையைச் சுர்ந்த சீனிவாச ஐயங்கார் இருபதாம் நூற்றாண்டின் தேசிய இய்கத்தின் ஒப்பற்ற தலைவரானார்.
  • 1921இல் இராசகோபாலச்சாரியார் அரசின் தடையை மீறி வேலூரில் அறநெறிப் போராட்டத்தைத் துவக்கினார்.
  • ஒத்துழையாமை இயக்கத்தைத் தகர்க்க ஆங்கிலேயர்கள் தங்கள் அத்தனை வலிமையையும் பயன்படுத்தினர். 20,000 தொண்டர்கள் சிறை சென்றனர். மக்களின் தேசிய உணர்ச்சியை அடக்க ஆங்கிலேய அரசு முனைப்புடன் செயல்பட்டது. வட இந்தியாவில் ஜெனரல் டையர் என்னும் ஆங்கிலேயப் படைத்தலைவன் ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் குடிமக்கள் மேல் எந்திரத் துப்பாக்கியால் 1650 முறை சுட்டான். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைக் கண்டு அச்சம் கொண்ட காந்தியடிகள் தன் ஒத்துழையாமை இயக்கத்தைச் சிறிது காலம் நிறுத்திவிட்டுப் பின்பு மீண்டும் தொடங்கினார். மக்கள் கொதித்தெழுந்தனர். தலைவர்கள் தங்கள் விடுதலைப் புரட்சியை மேலும் தீவிரமாக்கினர். மலபாரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற்றது.
  • 1925 இல் வைக்கம் போராட்டத்துக்குப்பின் பேரவையை விட்டு வெளியேறிய பெரியார் மக்களின் உரிமைகளுக்காகத் தன்மான இயக்கத்தில் ஈடுபட்டார்.

சட்டமறுப்பு, சட்டசபைப் புகல் காலம்

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் துவக்கினார்.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தண்டி யாத்திரையைத் தொடங்கினார். தமிழகத்தில் இராசகோபாலச்சாரியார் தலைமையில் திருமறைக்காடு யாத்திரை நடைபெற்றது. ஓமந்தூர் இராமசாமி செட்டியார், .வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட 100 தொண்டர்கள் இந்த யாத்திரையில் இணைந்தனர். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞரின் பாடலை முழக்கியவாறு திருமறைக்காடு யாத்திரை நடைபெற்றது. இராசகோபாலச்சாரியர் கைது செய்யப்பட்டார் எனினும் அந்த யாத்திரை வெற்றி கண்டது.

1932இல் தொண்டர்கள் காங்கிரஸ் கொடியை ஆயுதமாக ஏந்திக் கொண்டு போராட்டக்களத்தில் இறங்கினர். திருப்பூரில் குமாரசாமி என்பவர் தொண்டர்களுடன் முன்னணியில் கொடியேந்தி வந்தே மாதரம் என்று முழங்கிக் கொண்டு முன்னேறினார். போலீசார் அவரை வழிமறித்தனர். கொடியைப் பிடுங்க முயன்றனர். தடியடி நடத்தினர். போலீசாரின் தாக்குதலால் குமரனின் உடல் செயலற்று விழுந்த பின்பே அக்கொடியை ஆங்கிலேயர்களால் பறிக்க முடிந்தது. இக்குமரனே, “கொடி காத்த குமரன்என்று வரலாற்றில் இடம்பெற்றார்.

தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். பொய் வழக்கிட்டுக் கொல்லப்பட்டனர். அறநெறியில் போராடிய காமராசரை திருவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் குண்டு வீசியதாகப் பொய் வழக்கிட்டுச் சிறைபிடித்தனர்.

1934 இல் சட்ட மறுப்பு இயக்கம் கைவிடப்பட்டது. சட்டசபைப் புகல் இயக்கத்தைக் காங்கிரஸ் ஏற்றது. 1935இல் இந்தியச் சட்டம் மூலம் மாநிலங்களுக்குத் தன்னாட்சி கிடைத்தது. சத்திய மூர்த்தியின் முழக்கங்கள், எண்ணற்ற தொண்டர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றின் விளைவாக 1937இல் பிற மாநிலங்கள் வெற்றி காணத் தமிழகம் முன்னோடியாக விளங்கியது.

பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறுமானால் அயலார் படையெடுப்பு அபாயம் தவிர்க்கப்படும் என்று தேசத் தலைவர்கள் கருதினர். ஆங்கிலேயர் அதற்கு உடன்படாததால் 1942இல் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை காந்தியடிகள் துவக்கினார். சென்னை மாகாணப் பேரவையின் தலைவர் என்ற முறையில் தலைவர் காமராசர் போலீசாரின் கையில் சிக்காது மறைந்து தமிழகம் முழுவதும் பேராட்ட ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு விருதுநகைரை அடைந்ததும் கைதானார்.

விடுதலை இயக்கத்தில் பத்திரிகைகளும்,திரைப்படங்களும், நாடக மேடைகளும் ஒத்துழைத்தன. 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மக்களும் தொண்டர்களும் பங்கேற்றனர். நாடெங்கும் கலவரம் ஆனது. பொது அலுவலகங்கள் தீக்கிரையாயின. விமான நிலையங்கள் நொறுக்கப்பட்டன. விடுதலை இயக்கப் புயலில் ஆங்கிலேய அரசு இயந்திரம் தடுமாறியது. இராணுவம் வரவழைக்கப்பட்டது. மக்கள் பலர் பலியாயினர். 582முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரே நாள் போராட்டத்தில் அரசு கணக்குப்படி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தாய்நாட்டு விடுதலைக்காக உயிர்க்காணிக்கை செய்தனர். போராட்டம் வெற்றி கண்டது.

விடுதலை காலம்

இரண்டாம் உலகப்போர் 1945ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த்து. பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி பெரும்பான்மை அடைந்தது. அட்லி பிரபு முதல் அமைச்சரானார். மௌன்ட் பேட்டன் பிரபு 1947 மார்ச் மாதம் 24 ஆம்நாள் இந்தியாவின் வைஸ்யராகப் பதவி ஏற்றார். அவருடைய நல்லெண்ணமும், பெருந்தன்மையும் இந்தியாவுக்கு நல்வாய்ப்புகளாக அமைந்தன. அவர் இந்தியத் தலைவர்களை நன்கு கலந்தாலோசித்த பிறகு இந்தியாவை இரு சுயேட்சை நாடுகளாகப் பிரித்தார். இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் தோன்றின. இந்தியர் கண்டு வந்த கனவு பலித்தது. 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

புதன், 9 அக்டோபர், 2024

பாளையக்காரர்கள்

 

பாளையக்காரர்கள்

தமிழகத்து அரசியலில் புகுந்த ஆங்கிலேயர்களுக்குப் பாளையக்காரர்கள் குறுக்கே நின்றனர். அதனால் அவர்களைப் பணிய வைப்பது அல்லது அகற்றி விடுவது என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய வட்டாரத்தில் பல பாளையக்காரர்களைப் பணிய வைத்தனர்.

புலித்தேவன்

திருநெல்வேலியின் மேற்குப் பகுதியில் நெற்கட்டுச் செவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்குக் கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். எனினும் 1761இல் ஆங்கிலேயரால் அவன் தோற்கடிக்கப்பட்டான். தமிழகத்தின் வடக்கிலும், தெற்கிலும் பல பாளையக்காரர்கள் பணிந்தனர் அல்லது தற்காலிகமாகப் பணிய வைக்கப்பட்டனர் என்றாலும் பலருடைய விடுதலை வேட்கை தணியாது இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கும், அடக்குமுறைக்கும் முற்றுப் புள்ளியிட சில பாளையக்காரர்கள் திட்டமிட்டனர். அதில் விருபாட்சி கோபால நாயக்கரும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பிறகு அவர்களுக்கு வரி தண்டி கொடுத்தும், படை வீரர்களைத் திரட்டி கொடுத்தும் உதவி வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு மன்னராக மாறிவிட்டனர். பாஞ்சாலங்குறிஞ்சி என்ற பாளையத்துக்குக் கட்டபொம்மன் பாளையக்காரன் ஆனான். வரி கட்டுவதில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கட்டபொம்மன் கம்பெனிக்கு 1797ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய வரி பணத்தைக் கொடுக்க மறுத்தான். கம்பெனிக்குத் திறை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின்மேல் அடிக்கடி பாய்ந்து மக்களைச் சூறையாடினான். கம்பெனிக்குத் துணிகள் வழங்கி வந்த நெசவாளரைத் துன்புறுத்தி அவர்களிடமிருந்து துணிகளைப் பறித்தான். அவர்களைச் சாட்டையால் அடித்தான். அவர்களின் உடம்பில் அட்டைகளைக் கட்டிவிட்டான்.

கட்டபொம்மனின் கொடுங்கோன்மை கம்பெனியின் செவிகளுக்கு எட்டிற்று. இராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சன் என்பான் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தான். அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நானூறு கல் தொலைவு பின்தொடர்நது சென்றும் கட்டபொம்மனுக்கு ஜாக்சனுடைய தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் கலகங்கள் நேரிட்டன. இரு பக்கமும் பலர் கொல்லப்பட்டனர்.

கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமைத்துரையும் கம்பெனியின் பிடியினின்றும் தப்பி ஓடி பல கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி மக்களைக் கொன்று அவர்கள் உடைமைகளைச் சூறையாடி மக்களுக்குத் துன்பம் விளைவித்தனர். கம்பெனியின்மேல் கட்டபொம்மன் கொண்டிருந்த வெறுப்பு தீவிரமாகியது. கட்டபொம்மன் பாளையக்காரர் பலரைத் தனக்கு உடந்தையாக்கிக் கொண்டான். மேஜர் பானர்மேன் என்ற படைத்தலைவனிடம் பிரிட்டிஷ் அரசு கட்டபொம்மனைக் கட்டுப்படுத்தும் பணியை ஒப்படைத்தது. பானர்மேனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன. கட்டபொம்மனுக்கு உதவிய சுந்தர பாண்டிய நாயக்கனும், தானாதிப் பிள்ளையும் தூக்கிலிடப்பட்டனர். புதுக்கோட்டை மன்னன் விசயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு முதலில் அடைக்கலம் கொடுத்து பிறகு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டான். பானர்மேன் தீர்ப்பின்படி கட்டபொம்மன் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டான். பின்னர் கட்டபொம்மனின் உறவினர்களையும், பிற தலைவர்களையும் பாளையங்கோட்டையில் சிறையில் அடைத்தனர்.

மருது பாண்டியர்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர் ஆட்சி செய்தனர். அவருடைய தம்பி சின்ன மருது என்பவர் அவருக்குப் பெருந்துணையாக நின்றார். இவ்விரு சகோதரர்களிடமும் புதுக்கோட்டை தொண்டைமான் பகைமை காட்டினான். மருது சகோதரர்களுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு தொண்டைமான் பல உதவிகள் புரிந்தான். இவ்விரு சகோதரர்களின் ஆட்சி 21 ஆண்டுகள் நீடித்தன. அவர்களின் ஆட்சியில் பல ஆக்கப்பணிகள் சிறந்தன.  

ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடியில் இருந்த சிவகங்கையை மீட்டான் மருது பாண்டியன். விடுதலை வேட்கையால் தூண்டப்பட்ட மருதுபாண்டியன் மக்களிடம் இருந்த விடுதலை உணர்ச்சியைப் புரட்சிக்குத் திருப்பினான். மதுரை மக்கள் புரட்சி வீரர்களாக மாறினர். ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை அரியணையினின்று இறக்கிவிட்டு உடையத்தேவன் என்ற ஒருவனை மன்னனாக்கினர். மருதுபாண்டியரைச் சிறை பிடிக்க முயன்றனர். மருதுபாண்டியர் காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர். இறுதியில் அவர்கள் ஆங்கிலேய சேனாதிபதி ஒருவனிடம் சிக்கினர். அவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும், நண்பர்களும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களோடு பாளையக்காரர் ஆங்கிலேயருக்குக் கொடுத்து வந்த தொல்லைகளும் ஓய்ந்தன.

தீரன் சின்னமலை

தமிழக விடுதலைப்போரில் கட்பொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் முதலியோரை அழித்தபின், கொங்கு நாட்டில் கிளர்ச்சி நடந்தது. தீர்த்தகிரி என்ற கொங்கு நாட்டு வீரன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினார். 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து நின்றார். இவர் கொங்கு நாட்டில் ஓடா நிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி ஒரு படையைத் திரட்டி எதிரிகளுடன் போரிட்டார். எனினும் ஆங்கிலேயரால் அடக்கப்பட்டார். தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்த கடைசி வீரனாகிய இவர் தீரன் சின்னமலை என்னும் பெயரால் தமிழகத்து வரலாற்றில் இடம் பெற்றார்.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.