புதன், 9 அக்டோபர், 2024

பாளையக்காரர்கள்

 

பாளையக்காரர்கள்

தமிழகத்து அரசியலில் புகுந்த ஆங்கிலேயர்களுக்குப் பாளையக்காரர்கள் குறுக்கே நின்றனர். அதனால் அவர்களைப் பணிய வைப்பது அல்லது அகற்றி விடுவது என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய வட்டாரத்தில் பல பாளையக்காரர்களைப் பணிய வைத்தனர்.

புலித்தேவன்

திருநெல்வேலியின் மேற்குப் பகுதியில் நெற்கட்டுச் செவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்குக் கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். எனினும் 1761இல் ஆங்கிலேயரால் அவன் தோற்கடிக்கப்பட்டான். தமிழகத்தின் வடக்கிலும், தெற்கிலும் பல பாளையக்காரர்கள் பணிந்தனர் அல்லது தற்காலிகமாகப் பணிய வைக்கப்பட்டனர் என்றாலும் பலருடைய விடுதலை வேட்கை தணியாது இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கும், அடக்குமுறைக்கும் முற்றுப் புள்ளியிட சில பாளையக்காரர்கள் திட்டமிட்டனர். அதில் விருபாட்சி கோபால நாயக்கரும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பிறகு அவர்களுக்கு வரி தண்டி கொடுத்தும், படை வீரர்களைத் திரட்டி கொடுத்தும் உதவி வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு மன்னராக மாறிவிட்டனர். பாஞ்சாலங்குறிஞ்சி என்ற பாளையத்துக்குக் கட்டபொம்மன் பாளையக்காரன் ஆனான். வரி கட்டுவதில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கட்டபொம்மன் கம்பெனிக்கு 1797ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய வரி பணத்தைக் கொடுக்க மறுத்தான். கம்பெனிக்குத் திறை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின்மேல் அடிக்கடி பாய்ந்து மக்களைச் சூறையாடினான். கம்பெனிக்குத் துணிகள் வழங்கி வந்த நெசவாளரைத் துன்புறுத்தி அவர்களிடமிருந்து துணிகளைப் பறித்தான். அவர்களைச் சாட்டையால் அடித்தான். அவர்களின் உடம்பில் அட்டைகளைக் கட்டிவிட்டான்.

கட்டபொம்மனின் கொடுங்கோன்மை கம்பெனியின் செவிகளுக்கு எட்டிற்று. இராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சன் என்பான் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தான். அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நானூறு கல் தொலைவு பின்தொடர்நது சென்றும் கட்டபொம்மனுக்கு ஜாக்சனுடைய தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் கலகங்கள் நேரிட்டன. இரு பக்கமும் பலர் கொல்லப்பட்டனர்.

கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமைத்துரையும் கம்பெனியின் பிடியினின்றும் தப்பி ஓடி பல கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி மக்களைக் கொன்று அவர்கள் உடைமைகளைச் சூறையாடி மக்களுக்குத் துன்பம் விளைவித்தனர். கம்பெனியின்மேல் கட்டபொம்மன் கொண்டிருந்த வெறுப்பு தீவிரமாகியது. கட்டபொம்மன் பாளையக்காரர் பலரைத் தனக்கு உடந்தையாக்கிக் கொண்டான். மேஜர் பானர்மேன் என்ற படைத்தலைவனிடம் பிரிட்டிஷ் அரசு கட்டபொம்மனைக் கட்டுப்படுத்தும் பணியை ஒப்படைத்தது. பானர்மேனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன. கட்டபொம்மனுக்கு உதவிய சுந்தர பாண்டிய நாயக்கனும், தானாதிப் பிள்ளையும் தூக்கிலிடப்பட்டனர். புதுக்கோட்டை மன்னன் விசயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு முதலில் அடைக்கலம் கொடுத்து பிறகு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டான். பானர்மேன் தீர்ப்பின்படி கட்டபொம்மன் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டான். பின்னர் கட்டபொம்மனின் உறவினர்களையும், பிற தலைவர்களையும் பாளையங்கோட்டையில் சிறையில் அடைத்தனர்.

மருது பாண்டியர்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர் ஆட்சி செய்தனர். அவருடைய தம்பி சின்ன மருது என்பவர் அவருக்குப் பெருந்துணையாக நின்றார். இவ்விரு சகோதரர்களிடமும் புதுக்கோட்டை தொண்டைமான் பகைமை காட்டினான். மருது சகோதரர்களுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு தொண்டைமான் பல உதவிகள் புரிந்தான். இவ்விரு சகோதரர்களின் ஆட்சி 21 ஆண்டுகள் நீடித்தன. அவர்களின் ஆட்சியில் பல ஆக்கப்பணிகள் சிறந்தன.  

ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடியில் இருந்த சிவகங்கையை மீட்டான் மருது பாண்டியன். விடுதலை வேட்கையால் தூண்டப்பட்ட மருதுபாண்டியன் மக்களிடம் இருந்த விடுதலை உணர்ச்சியைப் புரட்சிக்குத் திருப்பினான். மதுரை மக்கள் புரட்சி வீரர்களாக மாறினர். ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை அரியணையினின்று இறக்கிவிட்டு உடையத்தேவன் என்ற ஒருவனை மன்னனாக்கினர். மருதுபாண்டியரைச் சிறை பிடிக்க முயன்றனர். மருதுபாண்டியர் காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர். இறுதியில் அவர்கள் ஆங்கிலேய சேனாதிபதி ஒருவனிடம் சிக்கினர். அவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும், நண்பர்களும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களோடு பாளையக்காரர் ஆங்கிலேயருக்குக் கொடுத்து வந்த தொல்லைகளும் ஓய்ந்தன.

தீரன் சின்னமலை

தமிழக விடுதலைப்போரில் கட்பொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் முதலியோரை அழித்தபின், கொங்கு நாட்டில் கிளர்ச்சி நடந்தது. தீர்த்தகிரி என்ற கொங்கு நாட்டு வீரன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினார். 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து நின்றார். இவர் கொங்கு நாட்டில் ஓடா நிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி ஒரு படையைத் திரட்டி எதிரிகளுடன் போரிட்டார். எனினும் ஆங்கிலேயரால் அடக்கப்பட்டார். தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்த கடைசி வீரனாகிய இவர் தீரன் சின்னமலை என்னும் பெயரால் தமிழகத்து வரலாற்றில் இடம் பெற்றார்.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக