சனி, 20 மார்ச், 2021

புறநானூறு - உண்டாலம்ம இவ்வுலகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு

பாடல் எண் : 1

திணை : பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

பொதுவியல் திணை:

          பொதுவியல் திணை என்பது வெட்சித்திணை முதல் பாடாண் திணை வரையுள்ள ஏழு புறத்திணைகளிலும் கூறமுடியாமல் விடுபட்டிருக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. போர், வெற்றி போன்ற செய்திகளைக் கூறாமல், இவ்வுலக வாழ்க்கைக்குரிய அறச்செய்திகளைக் கூறுவதால், இப்பாடல்பொதுவியல் திணை ஆயிற்று.

பொருண்மொழிக்காஞ்சி:

          வாழ்வின் நிலையாமையை விளக்கி உறுதிப்பொருள்களைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும். இப்பாடல் வாழ்க்கைக்கு நலம் தரும் அறச்செயல்களை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.

பாடிய புலவர்:

          கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. இவர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் போருக்காகக் கடற்படையில் சென்றபோது கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்கினார். இதனால் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனப் பெயர் பெற்றார்.

பாடல் விளக்கம்:

          கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சான்றோர்களின் பண்பு நலன்கள் குறித்துப் பாடிய பாடல் ஆகும். 

  • சான்றோர்கள் தேவர்களின் உணவாகிய அமிழ்தம் தவப்பயனாகவோ தெய்வத்தாலோ கிடைத்தாலும் தனியாக உண்ணமாட்டார்கள். அமிழ்தத்தை உண்டால் நீண்டநாள் வாழமுடியும், இருப்பினும் அதைத் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் கொடுத்து உண்பர். 
  • யார் மீதும் வெறுப்பைக் காட்ட மாட்டார்கள். அஞ்சத் தகுந்த பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்பவர்கள். ஒரு போதும் சோம்பலின்றிச் சுறுசுறுப்புடன் வாழ்பவர்கள். 
  • பழந்தமிழர்கள் புகழ் கிடைப்பதாக இருந்தால் தன் உயிரையும் கொடுப்பர். பழி என்றால் உலகம் முழுமையும் கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனக்கவலையின்றி வாழ்பவர்கள். 
  • இத்தகைய பெருமை பொருந்திய குணங்களை உடையவர்களான இவர்கள் ஒருபோதும் தமக்கு என்று முயற்சித்து வாழாமல் பிறருக்காக முயற்சித்து நல்லது செய்து வாழ்பவர்கள்.
  • இத்தகையவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.        

பாடல் எண்: 2

திணை : பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்.

பொதுவியல் திணை :

          இப்பாடல் மக்களின் வாழ்க்கைக்குரிய செய்திகளைக் கூறுவதால் பொதுவியல் திணை ஆயிற்று.

பொருண்மொழிக்காஞ்சி:

          இப்பாடல் உலகத்திலுள்ள உயிர்களுக்கு உறுதியைத் தரக்கூடிய இம்மை மறுமைச் செய்திகளைக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.

 பாடிய புலவர்;

          கணியன் பூங்குன்றனார். இவர் சங்ககாலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊரில் பிறந்தவர். கணிதத்திறமை மிகுந்தவர். ஆதலால் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டார்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

         முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

 பாடல் விளக்கம்:

  • இவ்வுலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்குச் சொந்தமான ஊர்களாகும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நமது உறவினர்கள். ஒருவருக்கு வரக்கூடிய நோய்களும் துன்பமும் பிறரால் வருவதில்லை.
  • நமக்கு வரக்கூடிய துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமேதான் காரணமாக அமைகிறோம். இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறத்தல் என்பது புதியது அல்ல. ஓர் உயிர் கருவில் தோன்றிய நாளிலேயே இறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
  • இவ்வுலக வாழ்க்கை இனியது என்று மகிழ்வதும் இல்லை. வாழ்க்கையில் துன்பம் வந்தபோது வாழ்வை வெறுப்பதும் இல்லை. 
  • வானில் மின்னல் தோன்றி குளிர்ந்த மழை பெய்கிறது. மழைப்பொழிவினால் பெருகிவரும் ஆற்று நீர் கல்லை உருட்டிவருகிறது. ஆற்றுநீரின் வழியே செல்லும் தெப்பம் போல உயிரின் நிலையானது ஊழ்வினை வழியே செல்கிறது. 
  • நல்ல நூல்களைத் தேர்ந்து படித்த சான்றோர் இதனைத் தெளிந்து கூறியுள்ளனர். எனவே பெருமை மிகுந்த பெரியோரை மதித்தலும் இல்லை, சிறுமை உடைய சிறியோரை இகழ்தலும் இல்லை. 
  • உலக உயிர்கள் அனைத்தும் தாம்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் அடைகின்றனர். 
  • இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையின் உண்மை நிலையினை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.   


ஆக்கத்தில் உதவி

நன்றி - முனைவர் ஜா.கீதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாஆதர்ஷ் மகளிர் கல்லூரி.

செவ்வாய், 16 மார்ச், 2021

முல்லைப்பாட்டு – நப்பூதனார்


முல்லைப்பாட்டுநப்பூதனார்

பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.

பாட்டின் உள்ளுறை

போர் காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன், தலைவியிடம் கார்காலம் தொடங்குவதற்கு முன் திரும்பி வந்துவிடுவேன் என்று உறுதியளித்துப் பிரிகின்றான். அவன் வரும்வரை தலைவி அவன் பிரிவை ஆற்றியிருக்கின்றாள். கார்காலம் தொடங்குகின்றது. தலைவன் வரவில்லை. தலைவி துயரம் கொள்கின்றாள். தோழியர் தேற்றுகின்றனர். ஆறுதல் பெறாத தலைவி கண்ணீர் விடுகின்றாள். தலைவன் போர் முடிந்து திரும்ப வருகின்றான். தலைவி தன் துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைகின்றாள். இச்செய்தியைக் கருவாகக் கொண்டு முல்லைப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது. முல்லைத்திணையின் உரிப்பொருளான இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இதன்பாற் விளக்கம் பெறுகிறது.

கார்காலத்தின் சிறப்பு

முல்லைத்திணையின் பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலைக்காலம். கார்கால மாலைக்காலம் தலைவியின் துன்பத்தை மிகுதிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவேதான், தலைவன் கார்காலம் தொடங்கும்முன், தான் வந்து விடுவதாக உறுதியளிக்கின்றான். நிலம், காலம், பொழுது ஆகிய இயற்கைகளின் அடிப்படையில் எழும் மன உணர்வுகளை இம்முல்லைப்பாட்டு நன்கு சித்திரிக்கின்றது.

முல்லையும் வஞ்சியும்

இந்நூல்வஞ்சிதானே முல்லையது புறனேஎன்ற தொல்காப்பியரின் கூற்றுப்படி முல்லைத்திணைக்குப் புறனாக அமையும் வஞ்சித்திணையைத் தொடுத்துச் செல்கின்றது. முல்லைத்திணைக்கு நிலம் காடு, வஞ்சித்திணையின் நிலமும் காடு. தலைவனைப் பிரிந்த தலைவி முல்லைத்திணைக் காட்டில் தங்கியிருத்தல் போல, தலைவனும் தன் போர்ப்படையுடன் பகைவர் நாட்டின் காட்டில் பாசறை அமைத்துத் தங்கியிருக்கின்றான்இதனால் அகத்திணையாகிய முல்லைக்குப் புறத்திணையாகிய வஞ்சி புறனாக அமைகின்றது. முதல், கரு, உரி ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று  தொடர்புடைய முல்லை, வஞ்சி என்னும் இவ்விரண்டு திணைகளையும் நப்பூதனார் தம் முல்லைப்பாட்டில் அடுத்து அடுத்துத் தொடுத்துச் சென்றாலும் முல்லைத்திணை ஒழுக்கமே முதன்மை பெறுகிறது.

சிறப்பு

இப்பாட்டில் முதல் 23 அடிகள் கார்காலத்தின் மாலைப் பொழுதையும், தலைமகளின் பிரிவாற்றாமையையும் பாடுகின்றன. அடுத்த 57 அடிகள் பாசறை அமைப்பு, தலைவனின் நிலையை எடுத்துரைக்கின்றன. அடுத்த 9 அடிகள் தலைவியின் துயரத்தைக் கூறுகின்றன. இறுதி 14 அடிகள் மழைக்காலச் சிறப்பை, தலைவனின் வருகையை உணர்த்துகின்றன. இவ்வாறு காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டி இறுதியில் அவற்றை கலைநயத்துடன் இணைக்கும் திறன் முல்லைப்பாட்டின் மிகப் பெரும் சிறப்பாகும்.

நூலின் ஆசிரியர்

முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகன் நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றது. இதனால் நப்பூதனார் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதும், இவர் வணிக்குடியில் பிறந்தவர் என்பதும், இவருடைய தந்தை பொன்வாணிகம் செய்தவர் என்பதும் அறியப்படுகின்றது. பூதன் என்பது இவருடைய இயற்பெயர். அப்பெயர் முன்பு சிறப்புப்பொருளைத் தரும் இடைச்சொல்லாகியஎன்பதைச் சேர்த்தும், “ஆர்என்ற உயர்வு குறித்த விகுதியும் சேர்ந்து நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றார். நக்கீரனார், நத்தத்தனார், நக்கண்ணையார், நப்பசலையார், நச்செள்ளையார் முதலிய சங்ககாலப் புலவர்களின் பெயர்களைப்போல இப்பெயரும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைப்பாட்டைத் தவிர இவர் பாடியதாக வேறு எந்தப் பாடலும் பண்டைய இலக்கியங்களில் காணப்படவில்லை.

முல்லைப்பாட்டின் பொருள்

மழைப் பொழிவு (1-6)

          அலை ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம். அகன்ற உலகை வளைத்தது. வலப்பக்கமாக உயர்ந்தெழுந்தது. மலையில் தங்கியது. மாலைக்காலத்தில் பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி திருமால் வாமன அவதாரம் கொண்டபோது, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, மாவலி மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர் வார்த்தார். அந்நீர் வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும் மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக் காட்சியளித்தது.


தெய்வத்தை வணங்குதல் (7-11)

          மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு வெளியே உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர்.  யாழிசை போன்று முரலுகின்ற வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள் மலர்ந்தன. அம்மலர்களையும், நெல்லையும் கொண்டு வந்து தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.

நற்சொல் (விரிச்சி) கேட்டல்(12 -16)

ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டுகோவலர் பின்னிருந்து ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு இப்பொழுதே வந்துவிடும்என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

இந்நற்சொற்கள் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.


தலைவியைத் தேற்றுதல்(17 – 23)

நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை நோக்கிச் சென்றனர். தாங்கள் கேட்ட நற்சொற்களைக் கூறிதலைவன் தான் மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து வந்து உன்னைச் சந்திப்பார். ஆதலால், நீ உன் மனத்தடுமாற்றத்தால் அடையும் துன்பத்தைப் போக்கிக் கொள்எனப் பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின் சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

பாசறையின் அமைப்பு (24 - 28)

காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை வீடு உருவாக்கப்பட்டது. அது பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில் தலைவன் தங்கியிருந்தான்.


போர் யானையும் யானைப் பாகனும் (29 - 35)

          பாசறை அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குக் கம்பும், கதிரோடு கூடிய நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத் தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. அந்த யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. கையில் அங்குசம் வைத்திருந்த இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக் கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.


அரண் (36 - 42)

தவம் பூண்ட அந்தணர் மூன்று கோல்கள் இணைந்த முக்கோலைக் கையில் வைத்திருப்பர். அந்தக் கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க விடுவர். அதுபோல  போர் வீரர்கள் தங்கள் வில்லினை நிலத்தில் ஊன்றி அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர். தங்கள் வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம் அமைத்தனர்.  பின்னர் எறிகோல்களை அதன்மீது நட்டு தோலால் ஆன  கருவிகளை வரிசையாகப் பரப்பிப் பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.


அரசனுக்கு அமைத்த பாசறை (43- 44)

          பல்வேறு படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே, வேறு ஒரு தனி இடத்தில் தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர். பலநிறமுடைய மதில் திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.


மங்கையர் விளக்கு ஏற்றுதல் (45- 49)

முதுகில் கூந்தல் புரள, கையில் வளையலுடன், தன் கச்சோடு வாளினைச் சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டனர். நெய் வார்த்து விளக்கேற்றினர். விளக்கின் சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.

மெய்க்காப்பாளர் காவல் புரிதல் (50 -54)

நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. புனலிப்பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, தம் தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக் கட்டியிருக்கும் வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். அவர்கள் மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் (55-58)

பிழையின்றி காலத்தைக் கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம் கையால் தொழுது வணங்கினார். மன்னனை வாழ்த்திவிட்டு கடல் சூழ்ந்த உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இதுவே. காண்பாயாக” என்று மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை வட்டில்வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரை அளந்து காணும் கருவி)


யவனர் செயல் (56- 66)

          வலிமையான கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின் பாசறையில் உள் அறை, புற அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. உள் அறையாகிய பள்ளி அறையில் அரசன் படுத்திருந்தான். அவனருகில் வாய் பேச முடியாத ஊமை வீரர்கள் பாதுகாவலுக்காக நின்றனர். அவர்களின் தோற்றம் அச்சம் கொள்ளத்தக்கதாக இருந்தது. மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக் கட்டின ஆடை அணிந்திருந்தனர். அவ் ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது. வலிமை மிக்க உடம்பில் தங்கள் உடம்பில் சட்டை அணிந்திருந்தனர். பாசறையின் மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.

மன்னன் நிலை (67 - 76)

மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும் முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான்.

  • போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம் பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான்
  • அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
  • தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போரில் இறந்த வீரரை நினைக்கின்றான்.
  • கூர்மையான அம்பின் நுனிகள் தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான்.

இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான்.

பாசறையில் வெற்றி முழக்கம் (77 - 79)

மறுநாள் போரில், படைக்கருவியால் பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த போர் வீரர்கள் பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி முரசை முழங்கினர். பாசறையில் அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான் மன்னன்.

தலைவியின் துயரம் (80 - 88)

பாவை விளக்குகள் ஒளி வீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம் வருந்துகின்றாள்.  நான் வரும் வரை பிரிவை ஆற்றியிரு” எனக் கூறிச் சென்ற தலைவனின் சொல்லை மீறுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத் தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீண்டும் தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள் காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.

அரசன் மீண்டு வருதல் (89 - 92)

பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான் தலைவன்.

மழையால் செழித்த முல்லைநிலம் (93-100)

அரசன் வரும் வழியில் காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை மலர்கள் பூத்திருக்கின்றன. வெண் காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன. தோன்றி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன. அதனருகில் கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்) மடப்பம் பொருந்திய மான்கள் (பெண்) துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.


தேர் வருகை (101 – 103)

வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனது தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அந்த ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.

 முல்லைப்பாட்டு முற்றும்

 

 

 

நாலடியார் - ஈகை

 

நாலடியார்

ஈகை

1.இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு

அடையாவாம் ஆண்டைக் கதவு. 

விளக்கம்

தம்மிடம் பொருள் இல்லாதபோதும், பொருள் உள்ளதுபோலவே மகிழ்ந்து, பிறருக்குக் கொடுத்து வாழும் நற்குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

 

2.முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள

பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே

பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்

கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.       

விளக்கம்

நம் கண்முன்னே நாம் இறக்கும் நாளும், முதுமைப் பருவமும், வலிமையை அழிக்கும் நோய்களும் இருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாமல், இருக்கின்ற பொருளைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்து வாழ வேண்டும்.

 

3.நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.     

விளக்கம்

செல்வம் சேர வேண்டிய காலத்தில் மென்மேலும் சேரும். நல்வினை தொலைந்து போனால், அச்செல்வத்தை இறுகப் பிடித்தாலும் நீங்கிப் போய் விடும். இதை உணர்ந்து, செல்வம் இல்லாமல் துன்புறுவோருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்து வாழ்வதே சிறந்தது.


4.இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்

கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

அடாஅ அடுப்பி னவர்.

விளக்கம்

ஆழமான நீராகிய கடலால் சூழப்பட்ட உலகில் சமைக்க அரிசி இல்லாத அடுப்பினை உடையவர்களும் வாழ்கின்றனர். அவர்கள் நம்மைக் ’கொடாதவர்’ எனப் பட்டம் சூட்டிப் பழிக்காமல் இருக்க வேண்டும். எனவே இம்மி அளவு அரிசியாக இருப்பினும் நம்மால் முடிந்த அளவு நாள்தோறும் அவர்கள் சமைத்துண்ணக் கொடுத்து உதவ வேண்டும். 

 

5.மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்

ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி யுறும்.

விளக்கம்

இம்மை, மறுமைப் பயன்களைச் சிந்தித்தேனும் பிறருக்குக் கொடுத்து வாழவேண்டும். வறுமையால் தன்னால் ஏதும் கொடுக்க முடியாமல் போனால் அடுத்தவரிடம் எதுவும் எதிர்பார்த்துக் கேட்காமலாவது இருக்க வேண்டும்இரவாமை கொடுப்பதை விட இரண்டு மடங்கு மேலானது