சனி, 5 நவம்பர், 2022

சிற்றிலக்கிய வரலாறு

 

சிற்றிலக்கிய வரலாறு

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோன்றியதாகக் கூறுவர். இக்காலத்தில் தொடர்நிலைச் செய்யுட்களான காப்பியங்கள், புராணங்கள் போன்ற இலக்கியங்கள் எழவில்லை. மாறாக, பள்ளு, குறவஞ்சி, உலா உள்ளிட்ட சிறு சிறு இலக்கியங்கள் தோன்றின. இவ்வகை இலக்கியங்கள் பிரபந்தங்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. பிரபந்தங்கள் 96 வகைப்படும் என்றும், பாட்டியல் நூல்கள் அவ்விலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன என்றும் தமிழிலக்கிய வரலாறு குறிப்பிடுகின்றது. இப்பிரபந்த நூல்களே சிற்றிலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன.

சிற்றிலக்கியம் – விளக்கம்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை உறுதிப்பொருட்களுள் எவையேனும் ஒன்றைப் பற்றியோ, இரண்டைப் பற்றி மட்டுமோ பாடப்படுபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன.
  • இவை ஒரு சில துறைகளை மட்டும் பாடுகின்றன.
  • சுருங்கிய அளவில் எளிதில் படித்து முடிக்கக் கூடியனவாக இருக்கின்றன.
  • இறைவன், மன்னன், வள்ளல், குரு ஆகியோரின் சிறப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இவ்விலக்கியங்கள் அகம் பற்றியனவாகவும், புறம் பற்றியனவாகவும், அகம் புறம் இரண்டும் பற்றியனவாகவும் வகை பிரிக்கப்படுகின்றன.

மக்கள் செல்வாக்கு பெற்ற சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கிய வகைகள் 96 என்பர். வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி 96 நூல்களைப் பட்டியலிடுகின்றது. அவற்றுள் மக்கள் செல்வாக்குப் பெற்ற சிற்றிலக்கியங்கள் சிலவேயாகும். அவை, கலம்பகம், தூது, உலா, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, பள்ளு, பரணி ஆகியனவாகும்.  இவ்விலக்கியங்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

கலம்பகம்

பல பூக்களைக் கலந்து மாலையாகத் தொடுப்பது போல பல வகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு, அகம் புறப் பொருட்களை கலந்து பாடப்படும் இலக்கியம் கலம்பகம் ஆகும். தெய்வங்கள், மன்னர்கள், மக்களுள் சிறந்து விளங்குபவர்கள் இவ்விலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்ளாவர்.

கலம்பக உறுப்புகளும் அமைப்பும்

கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை, புயவகுப்பு, அம்மானை, தவம், வண்டு, வாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் ஆகியனவாகும்.  இவ்விலக்கியம் அந்தாதித் தொடையால் 100 பாடல்கள் வரை பாடப்படும். கடவுளுக்கு 100, முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 என்னும் பாடல் எண்ணிக்கை அமைப்பைப் பெற்று பாடப்படுகின்றது.

சில கலம்பக நூல்கள் – திருவரங்கக் கலம்பகம், நந்திக் கலம்பகம், தில்லைக் கலம்பகம்.

நந்திக்கலம்பகம்

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிப் பாடியுள்ளது. கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது. இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. 144 பாடல்களைக் கொண்டுள்ளது. 44 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பர். நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் இவனை வீரத்திலும் அறிவிலும் கொல்ல முடியாமல் தவித்து, இறுதியாக அறம் வைத்துப் பாடல் பாட முடிவு செய்கின்றனர். அறம் வைத்துப் பாடப்பட்ட பாடலின் சொற்சுவையில் மயங்கிய நந்திவர்மன் பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும், தமிழின் மீதுள்ள தணியா காதலால் தன் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழ் அமர்ந்து பாடல் கேட்டு உயிர் துறந்தான் என்று கூறப்படுகின்றது. “நந்திக் கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும்” என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா வரி இக்கருத்திற்குச் சான்றுரைக்கின்றது.

தூது

தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும். இத்தூது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும்.

அகத்தூது – தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி, தூது உரைத்துவா என்றும், மாலை வாங்கி வா என்றும், உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூதாக அனுப்புவது அகத்தூது ஆகும்.

தூது விடுக்கும் பொருட்கள் – அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்கள் தூதுக்குரியவை எனக் கூறப்பட்டன. தற்காலத்தில் பணம், தமிழ், புகையிலை, செருப்பு, மான், நெல் ஆகிய எவையும் தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றனர்.

புறத்தூது – போர் காரணமாக மன்னனுக்காக ஒரு புலவரோ, அமைச்சரோ அல்லது வேறு யாரேனுமோ தூது செல்வது புறத்தூது ஆகும். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றமையைப் புறத்தூதிற்குச் சான்றுரைக்கலாம்.

சில தூது நூல்கள் – தமிழ்விடுதூது, நெஞ்சு விடுதூது, அழகர் கிள்ளை விடுதூது.

தமிழ்விடு தூது

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நூலின் கருத்தினைக் கொண்டு இதன் ஆசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பது, சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படுகின்றது. மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி, தன் காதல் துன்பத்தை எடுத்துக் கூற, தமிழைத் தூதாக அனுப்புவதே தமிழ்விடு தூது ஆகும்.

உலா

அனைத்துப் பண்புகளில் சிறந்து விளங்கும் ஆண்மகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய குலம், குடிப்பிறப்பு, பெருமை ஆகியனவற்றை விளங்கக்கூறி, அவன் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் உள்ளிட்ட ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதாகப் பாடப்படுவது உலா இலக்கியம் ஆகும்.

சில உலா நூல்கள் – திருக்கையிலாய ஞான உலா, மூவருலா.

பிள்ளைத் தமிழ்

இவ்விலக்கியம் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக் கவி என்றும் கூறப்படும். புலவர்கள் தாம் விரும்பும் மன்னனையோ, தலைவனையோ, வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். குழந்தையின் மூன்றாம் மாதம் ல் 21ஆம் மாதம் வரை ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்படுகின்றது. ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல், சிறு தேர் உருட்டல் ஆகிய பருவங்கள் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் ஆகிய பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

சில பிள்ளைத் தமிழ் நூல்கள் – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

பள்ளு

பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பது பள்ளு இலக்கியமாகும். இதனை உழத்திப்பாட்டு என்றும் கூறுவர். பள்ளன் ஒருவன் இரு மனைவியரை மணந்து கொள்ள, அவ்விரு மனைவியரிடையே ஏற்படும் பூசல், அதனால் பள்ளனுக்கு ஏற்படும் துன்பம் ஆகியவற்றைப் பற்றி  இந்நூல் விவரிக்கின்றது.

சில பள்ளு நூல்கள் – திருமலை முருகன் பள்ளு, சீர்காழிப்பள்ளு, முக்கூடற்பள்ளு.

குறவஞ்சி

            இந்நூல் அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு பாடப்படுகின்றது. தலைவன் உலா வரல், தலைவி காதல் கொள்ளல், குறத்தி குறி கூறல், தலைவி குறத்திக்குப் பரிசளித்தல், குறவன் குறத்தியைத் தேடி வருதல், குறத்தியின் அணிகலன் கண்டு குறவன் ஐயம் கொள்ளுதல், குறத்தி அவனுடைய ஐயத்தைத் தெளிவித்தல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகக் குறவஞ்சி நூல் அமைகின்றது.

சில குறவஞ்சி நூல்கள் – குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி.

பரணி

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைச் சிறப்பித்துப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காளி வழிபாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் பாடப்படும்.

சில பரணி நூல்கள் – கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி.

அந்தாதி

    ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின் மதலில் வருவதாக அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்று யாப்பருங்கலக்காரிகை அந்தாதிக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்தாதியைத் தனி ஒரு இலக்கியமாக உருவாக்கிய பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அவருடைய அற்புதத் திருவந்தாதி என்னும் நூலே முதல் அந்தாதி நூலாகப் போற்றப்படுகின்றது. 

சில அந்தாதி நூல்கள் - அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி,சடகோபர் அந்தாதி.


 

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

நாற்காலிக்காரர்

 

நாற்காலிக்காரர் - ந.முத்துசாமி

ஆசிரியர் குறிப்பு

          ந.முத்துசாமி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். நடேசன் முத்துசாமி என்ற பெயரில் சிறுகதைகள் படைத்தவர். 'யார் துணை' என்பது இவருடைய முதல் சிறுகதை. 'காலம் காலமாக' என்பது இவருடைய முதல் நாடகம். 1977ஆம் ஆண்டு கூத்துப் பட்டறையை நிறுவினார். இவருடைய 'அப்பாவும் பிள்ளையும்', 'சுவரொட்டிகள்', 'படுகளம்', 'கட்டியக்காரன்', 'நாற்காலிக்காரர்' ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்மை என்னும் சிறுகதைத் தொகுப்பையும், பூட்டிய வண்டி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். சங்கீத நாடக அகாதெமியின் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவை இவர் பெற்ற சிறப்புகள் ஆகும்.

நாற்காலிக்காரர்

            நாற்காலிக்காரர் என்னும் நாடகம் அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நாடககத்தில் நாற்காலிக்காரர், வேடிக்கைப் பார்ப்பவன், சீட்டுக் கட்டுக் குழுவினர் ஒன்பது பேர், கோலி குண்டு குழுவினர் ஒன்பது பேர் ஆகியோர் கதை மாந்தர்களாக அமைகின்றனர்.

நாற்காலிக்காரர் - கதைக்கரு

        பொது மக்களால் அரசியல் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்பதே இந்நாடகத்தின் கதைக்கருவாகும்.

இந்நாடகத்தில் நாற்காலிக்காரர் பொதுமக்களாகவும், வேடிக்கைப் பார்ப்பவர் ஊடகமாகவும், சீட்டுக் கட்டுக் குழுவினர் மற்றும் கோலி குண்டு குழுவினர் இருவேறு அரசியல் கட்சிகளாகவும் குறிக்கப்படுகின்றனர்.

கதைச் சுருக்கம்

            அரங்கில் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்கின்றார். அரங்கின் இடது புறத்தில் சீட்டுக்கட்டுக் குழுவினர் ஒன்பது பேரும், வலது புறத்தில் கோலிக்குண்டு குழுவினர் ஒன்பது பேரும் இருக்கின்றனர். அவர்கள் விளையாடுவதை ஒருவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

நாற்காலிக்காரரும் வேடிக்கைப் பார்ப்பவரும்

வேடிக்கைப் பார்ப்பவர் கோலி குண்டு குழுவினரிடம் “இந்த விளையாட்டு நல்ல விளையாட்டு. இந்தச் சீட்டுக் கட்டு நம் பரம்பரையே இல்லை” என்று கூற, நாற்காலிக்காரர் அவரிடம், “நீ காட்டும் ஆர்வத்தில் அவர்கள் வேட்டி விலகுவது கூட தெரியாமல் ஆடுகின்றனர். அமைதியாக இருந்து விளையாட்டைப் பார். ஆர்வம் காட்டாதே” என்று கூறுகின்றார். அதைக் கேட்ட வேடிக்கைப் பார்ப்பவர், “உன்னால் அமைதியாக இருக்க முடிகின்றதா. ஊருக்கு அறிவுரை சொல்வதை நிறுத்து” என்று வாதிடுகின்றார்.

கோஷம் போட வலியுறுத்தல்

அதே வேளையில் சீட்டுக் கட்டுக் குழுவினரிடம் “சீட்டு மூளைக்கு வேலை கொடுக்கும். இதில் தோற்பவன் முட்டாள். வெற்றி பெறுபவன் அறிவாளி” என்று தூண்டி விடுகின்றார். அதைக் கேட்ட சீட்டுக் கட்டுக் குழுவினரில் ஒருவன், வேடிக்கைப் பார்ப்பவனைப் பார்த்து “போயா போயா” என்று கூறு, கோலிக் குண்டு குழுவினரும் “போயா போயா” என்று கேலி பேசுகின்றனர். உடனே வேடிக்கைப் பார்ப்பவர் “போயா போயா என்று கூறுவதெல்லாம் ஒரு விளையாட்டா?” என்று கூற, சீட்டுக் கட்டுக் குழுவில் ஒருவன் ‘பேசாமல் வாழ்க ஒழிக என்று கோஷம் போடலாம்’ என்று ஆலோசனை வழங்குகிறான். உடனே அது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன.

கோஷம் வேறு காரியம் வேறு

வேடிக்கைப்பார்ப்பவன் “உங்களுடைய விவாதத்தில் யாரும் கவனிக்காதபோது தவறு நடந்துவிட்டது” என்று கூற, இரண்டு குழுவினரும் ஒருவருக்கொருவர் அடுத்தவரைச் சுட்டிக் காட்டினர். உடனே வேடிக்கைப் பார்ப்பவன் “அடுத்தவரைக் கைகாட்டும் உங்கள் ஆட்காட்டி விரல்களை எல்லாம் இணைத்தால் குறுக்கும் நெடுக்குமாகப் பல கோடுகள் உருவாகும். அனைவரும் தவறு செய்துள்ளீர்கள். கோஷம் வேறு காரியம் வேறு” என்று கூற, கோஷம் காரியம் இரண்டுமே செய்யலாமா என்று விவாதித்து இறுதியில், கோஷமே போடலாம் என்று முடிவாகின்றது. ஆனால், “வாழ்க ஒழிக” என எதைக் கூறுவது என்று கூட்டத்தில் ஒருவன் கேள்வி எழுப்பினான்.

கவிதை எழுதுவதிலும் விவாதம்

வேடிக்கைப் பார்ப்பவர், “சீட்டுக்கட்டு குழுவினர் கோலிகுண்டு குழுவினரை ஒழிக என்றும், கோலிகுண்டு குழுவினர் சீட்டுக் கட்டுக் குழுவினரை ஒழிக என்றும் கோஷம் போடலாம். இருவரும் தங்களைத் தாங்களே வாழ்க என்று கூறிக் கொள்ளலாம் என்றும், வாழ்க ஒழிக கவிதை போல இல்லை” என்று அவர்களை மேலும் தூண்டி விடுகின்றார். கவிதை எழுதுவதிலும் இரு குழுவினருக்கும் சண்டை ஏற்படுகின்றது. இருவரையும் அமைதிப் படுத்துகின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் தண்ணீர் கூஜா

அந்நேரத்தில் தாகம் ஏற்பட்டு சிலர் தண்ணீர் தண்ணீர் என்று கோஷம் போடத் தொடங்கினர். “கோஷம் போட வேண்டிய இடத்தில் காரியம் செய்கின்றீர்கள். காரியம் செய்ய வேண்டிய இடத்தில் கோஷம் போடுகின்றீர்கள், தண்ணீர் வேண்டுமென்றால் நாம் தான் போய் எடுத்துக் கொண்டு வரவேண்டும்” என்று வேடிக்கைப் பார்ப்பவர் கூற, ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் சென்று தண்ணீர் கூஜாவைக் கொண்டு வந்தனர். வேடிக்கைப் பாரப்பவன், “ஆளுக்கொரு கூழாங்கல்லை எடுத்து கூஜாவில் போடுவோம். யாருடைய கூஜா முதலில் தண்ணீரால் நிரம்புகின்றதோ அவரே வெற்றியாளர்” என்று கூற, அனைவரும் ஏற்கின்றனர். நாற்காலியில் அமர்ந்திருப்பவரிடமும் ஒரு கல் தரப்படுகின்றது.

பிரச்சாரம் தொடங்குகின்றது

இரு குழுவினரும் தத்தம் கூஜாவில் பால் உள்ளது, இளநீர் உள்ளது, தேன் உள்ளது, பதநீர் உள்ளது என்று கூறி பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர். “திக்கெட்டும் சென்று வெற்றி வாகை சூடுங்கள்” என்று வேடிக்கைப் பார்ப்பவர் அவர்களை வெவ்வேறு திசைக்கு அனுப்பி வைக்கின்றார்.

நாற்காலிக்காரரின் தீர்ப்பினால் உண்டான அவலம்

இறுதியில் இரண்டு கூஜாக்களும் சமமமாக இருப்பதைக் கண்ட வேடிக்கைப் பார்ப்பவர், நாற்காலிக்காரரிடம் சென்று, “உன்னிடம் உள்ள ஒரு கல்லை யாருக்காவது போட்டு வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டும்” என்று கூற, நாற்காலிக்காரர் அச்சம் கொண்டு மறுக்கின்றார். நாற்காலிக்காரருக்கு எந்த ஆபத்தும் வராது என்று இரண்டு குழுவினரும் வாக்குறுதி கொடுக்குமாறு வேடிக்கைப் பார்ப்பவர் கூறுகின்றார். அவர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். அந்த வாக்குறுதியை நம்பி, “சீட்டுக் கட்டு நம் மரபில் இல்லை. கோலிதான் நம் பாரம்பரிய விளையாட்டு” என்று கூறி கோலி குண்டு குழுவினரின் கூஜாவில் கல்லைப் போடுகின்றார். வெற்றி பெற்ற கோலி குண்டு குழுவினர் சீட்டுக் கட்டு குழுவினரைக் கேலி செய்து பாடத் தொடங்கினர். வேடிக்கைப் பார்ப்பவன் சீட்டுக் கட்டு குழுவினரிடம் “அடுத்த முறை வெற்றி பெறலாம்” என்று சமாதானம் கூற, அவர்கள் கோபம் கொள்கின்றனர். அவர்களின் கோபத்தைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.

 சீட்டுக் கட்டுக் குழுவினரின் கோபம் நாற்காலிக்காரர் மேல் திரும்புகிறது. “சீட்டுக் கட்டு நம் மரபில் உண்டு என்றும், மனைவியை வைத்து ஆடுவது மரபு” என்றும் கூறி அவரை அடித்தனர். “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்ற நாற்காலிக்காரரின் அறைகூவலுடன் நாடகம் முடிவடைகின்றது.

கருத்து

பொதுமக்களை மையப்படுத்தியே அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் விவாதங்களுக்கும், சண்டைகளுக்கும் ஊடகமே காரணியாக அமைகின்றது. அவர்களுக்குள் சிக்கல்கள் பெரிதாகும்போது ஊடகம் காணாமல் போய்விட, பொதுமக்கள் மாட்டிக் கொள்கின்றனர் என்ற கருத்தை மையப்படுத்தி இந்நாடகம் அமைகின்றது.

           

 

 

புதன், 12 அக்டோபர், 2022

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

 

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது 'மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்' என்கிறார் முனைவர் சு.சக்திவேல். எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை,

1) நாட்டுப்புறப் பாடல்கள்

2) நாட்டுப்புறக் கதைகள்

3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

4) நாட்டுப்புறப் பழமொழிகள்

5) விடுகதைகள்

6) புராணங்கள்

முதலியனவாகும். இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

தாலாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.

1) குழந்தை பற்றியன.

2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.

3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,

1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.

2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.

3) சிறுவர் பாடல்கள்.

என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

காதல் பாடல்கள்

காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1) காதலர்களே பாடுவது, 2) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.

தொழில் பாடல்கள்

மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.

 கொண்டாட்டப் பாடல்கள்

மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.

அகப்பாடல்

சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

புறப்பாடல்

பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.

பக்திப் பாடல்கள்

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.

1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.

2) சிறுதெய்வப் பாடல்.

3) பெருந்தெய்வப் பாடல்.

சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்

சந்திரரே சூரியரே

சாமி பகவானே

இந்திரரே வாசுதேவா

இப்பமழை பெய்யவேணும்

மந்தையிலே மாரியாயி

மலைமேலே மாயவரே

இந்திரரே சூரியரே

இப்பமழை பெய்யவேணும்

இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.

ஒப்பாரிப் பாடல்கள்

இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்புச் சொல்லி அதாவது ஒப்பிட்டுப் பாடுவது ஒப்பாரியாகும். இறந்தவரின் பெருமையும் அவரது குணநலன்களும் பிறரால் போற்றப்பட்ட முறையும், ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவரை நேசித்த முறையும், தன்னுடைய நிலைமை, குடும்பத்தின் நிலைமை, ஈமச் சடங்குகள் பற்றிய விவரங்களும் அப்பாடல்களில் கூறப்படுவதுண்டு.

 

நாட்டுப்புறக் கதைகள்

நாட்டுப்புற மக்களிடையே கதை கூறுவது என்பது பொதுவான பண்பாகும். மக்கள் தங்களது வாழ்வியல் நீதிகளுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கதைகளை உரைத்தனர். இன்றளவும் உரைத்து வருகின்றனர். நாளையும் கதையினைக் கூறுவார்கள். ஏனென்றால் கதையினைக் கூறுபவரும், கதையினைக் கேட்பவரும் அந்தந்தக் கதைகளோடு தங்களையும் இணைத்துக் கதை கேட்கின்றனர்.

கதைகளின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகையாகப் பிரிக்கின்றார்.

1) மனிதக் கதைகள்

2) மிருகக் கதைகள்

3) மந்திர - தந்திரக் கதைகள்

4) தெய்வீகக் கதைகள்

5) இதிகாச புராணக் கதைகள்

6) பல்பொருள் பற்றிய கதைகள்

கதைகளின் சிறப்புக் கூறுகள்

இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், சாதிப் பூசல், காதல், ஒழுக்கம், வேதனை, முட்டாள்தனம், பொறாமை, மன உணர்வெழுச்சி, கள்ள நட்பு, மந்திரம், புத்திசாலித்தனம், நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும், சமகாலச் செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது.

 

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை - பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் - கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள், மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை. இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம்.

கதைப் பாடலின் தன்மை

கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.

1) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action)

2) பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். (Characters)

3) கதைக் கரு உண்டு (Theme)

4) வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். (Prominence of Heroism)

5) உரையாடல் (Dialogue) உண்டு,

6) திரும்பத் திரும்ப வரல் (Repetition)

கதைப் பாடலின் அமைப்பு

கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன,

1) காப்பு அல்லது வழிபாடு.

2) குரு வணக்கம்

3) வரலாறு

4) வாழி

என்பவையாகும்.

சான்று : கதைப் பாடல்கள்

1) முத்துப்பட்டன் கதை

2) நல்லதங்காள் கதை

3) அண்ணன்மார் சுவாமி கதை

கதைப் பாடலின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக வகைப்படுத்துகிறார்.

1) புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள்

2) வரலாற்றுக் கதைப் பாடல்கள்

3) சமூகக் கதைப் பாடல்கள்

 

நாட்டுப்புறப் பழமொழிகள்

பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறுகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி, எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல், விளக்கம் செய்யும் வகையில் எடுத்துக் கூறுதல் ஆகியவற்றைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும்.

பழமொழியின் இயல்புகள்

1) பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம், தெளிவு, பொருத்தமுடைமை.

2) அறவுரையையும், அறிவுரையையும் கொண்டிருக்கும்.

3) ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் கூறு (Descriptive element) ஒன்றினைப் பெற்றிருக்கும்.

4) பழமொழிக்கு ஒரு சொல்லில் அமைவதில்லை.

பழமொழி வகைப்பாடு

முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.1) அளவு அடிப்படை (Size Basis)

2) பொருள் அடிப்படை (Subject Basis)

3) அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)

4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)

5) பயன் அடிப்படை (Functional Basis)

 

விடுகதைகள்

விடுகதை என்பது ஏதாவது ஒரு கருத்தைத் தன்னிடம் மறைத்துக் கொண்டு கூறுவது. இதனை அறிவுத்திறத்தோடு ஆராய்ச்சி செய்யும் பொழுது, குறைந்த பட்சம் சிந்தனை செய்யும் பொழுதுதான் புலப்படும். மேலும் ‘விடுகதைஎன்ற நாட்டுப்புற வழக்காற்றில் ஈடுபாடும் விருப்பும் உடையவர்களால் விடுகதையிலுள்ள ‘புதிருக்கு (புரியாத நிலையிலுள்ளது) விடையினைக் கூறமுடியும். இவ்வாறு விடுகதை என்பது,

1) அறிவு ஊட்டும் செயல்

2) சிந்தனையைத் தூண்டுதல்

3) பயனுள்ள பொழுது போக்கு

என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.

விடுகதையின் வகைகள்

விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை,

1) விளக்க விடுகதைகள் (Descriptive Riddles)

2) நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles)

3) கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles)

4) பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles)

விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை,

1) உருவகமில்லாதது (Literal)

சான்று :

சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி - என்பது குன்றி மணியைக் குறிக்கும்.

2) உருவகமுடையது.

சான்று :

செத்துக் காய்ந்த மாடு சந்தைக்குப் போகுது - என்பது கருவாட்டினைக் குறிக்கிறது.

இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும் மக்களின் வாழ்வில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிப்பதற்கும், சிந்திப்பதற்கும் துணை நின்று உள்ளன. இன்றும் விடுகதை, பழமொழி இவற்றை, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வானொலியின் பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில், நிலையத்தார் வானொலி கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

புராணங்கள்

புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள், விந்தைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு, அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன.

புராணங்களின் வகைகள்

தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள,

1) வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas)

2) எழுத்திலக்கியப் புராணங்கள் (தல புராணங்கள்) என்று பகுத்து ஆராயலாம்.