சனி, 28 செப்டம்பர், 2024

கட்டிடக்கலை

 

கட்டிடக்கலை

ஓர் இனத்தின் நாகரிகச் செழுமையினை எடுத்துக்கட்டும் சின்னங்களில் ஒன்று கட்டிடக்கலையாகும். தமிழக மக்களின் கட்டிடக் கலை ஆர்வமானது பல்வேறு காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்று உயர்ந்துள்ளது. அவை மக்களின் அழகியல் உணர்வினை வெளிப்படுத்துகின்றன.

சங்க காலத்தில்….

சங்க காலத்தில் தெய்வங்களுக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் மண், செங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் ஆனவை. “சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்என்று அவை குறிக்கப் பெறுகின்றன. இறைவன் வீற்றிருக்கும் இடத்திற்கும், மன்னன் வீற்றிருக்கும் இடத்திற்கும் கோயில் என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது. அக்கோயில்களைக் கட்டுகின்ற கலை வல்லுநர்கள்நூலறிப் புலவர்கள்எனப்பட்டனர்.

இந்நூலறிப் புலவர்கள் நாள், திசை ஆகியவற்றைக் குறித்து, அவற்றில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி அமைக்கப்பட்டன என்பதையும், அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் உயர்ந்தவையாக, அழகிய வேலைப்பாடு கொண்டவையாக, அவற்றின் மீது செஞ்சாந்து கொண்டு பூங்கொடிகள் எழுதப்பட்டதாக அமைந்திருந்தன என்பதையும் நெடுநல்வாடையின் வரிகள் காட்டுகின்றன.

சிலப்பதிகார காலத்தில் அரசனின் அரண்மனைச் சோதிடன், கட்டிடத்தொழில் நிபுணர் ஆகியோருடன் சிற்பக்கலை அறிஞரும் சென்று கண்ணகிக்குக் கோயில் அமைத்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் பொன்மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மண்டபம் மகத நாட்டு பொற்கொல்லராலும், அவந்தி நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுத் தச்சராலும், தமிழகத்துக் கட்டட வல்லுநராலும் அமைக்கப்பட்டது. மண்டபத்தூண்கள் பவளத்தால் இழைக்கப்பட்டன.

மதுரை மாநரகம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தது என்று பரிபாடல் கூறுகின்றது. கோவிலை நடுநாயகமாக வைத்து அதைச் சுற்றியுள்ள தெருக்கள் ஏறத்தாழ வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.

பல்லவர் காலத்தில்….

கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அழியாத கற்கோயிலைக் கடவுளுக்குக் கட்டினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயில்கள் அனைத்தும் உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிருந்தன. உயர்ந்த மேடைகளின் மீது சில கோயில்கள் கட்டப்பட்டன. அவை பெருங்கோயில்கள் எனப்பட்டன. சில கோயில்களில் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றும் அமைக்கப்பட்டன. திருச்சாய்க்காடு, மேலைக்கடம்பூர், திருவதிகை முதலிய கோயில்கள் இத்தகைய அமைப்புடன் காணப்படுகின்றன.

பல்லவர் காலத்தில் மிகுந்த சிறப்புடையது குடைவரைக்கோயில்கள் ஆகும். குடைவரைக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் அமைகின்றது. இங்கே அமைந்துள்ள ஒவ்வோர் இரதமும் ஒற்றைக் கற்கோயில் ஆகும். ஒவ்வொரு வகைக் கோவிலும் ஒருவகை விமான அமைப்புடையது. ஒரே பாறையில் குடைந்து கோயில்கள் அமைக்கும் சிற்ப மரபானது தமிகத்தில் முதன்முதலாக பல்லவ மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  திருச்சி, பல்லாவரம், செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர், சீய மங்கலம், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் பல்லவர் கட்டியக் குகைக் கோயில்கள் காணப்படுகின்றன.

சோழர்காலத்தில்….

சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியைத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திரிபுவனக்கோயில் ஆகிய கோயில்கள் சோழர்காலக் கட்டிடக் கலையின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.

பாண்டியர் காலத்தில்….

பாண்டியர்கள் கோயில் பிரகாரங்களை அழகுபடுத்தினர். மதிற்சுவர்களில் கண்ணைக் கவரும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். சிதம்பரம் கிழக்குக் கோபுரமும், திருவானைக்காவில் உள்ள சுந்தரபாண்டியன் கோபுரமும் பாண்டியர் கலைக்குச் சான்று பகர்கின்றன.

விசயநகரத்தார் காலத்தில்…..

விசயநகர காலத்தில் புதிய மண்டபங்களும், துணைக்காயில்களும் எழுந்தன. இவர்கள் உருவாக்கியதில் கல்யாண மண்டபங்களும், ஆயிரங்கால் மண்டபங்களும் குறிப்பிடத்தக்கவை. வேலூர், காஞ்சி, திருவரங்கம், கடந்தை ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இவர்களுடைய கட்டிடக் கலையின் சிறப்பினை அறியலாம்.

நாயக்கர் காலத்தில்…..

மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, திருவாரூர், இராமேசுவரம், சிதம்பரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற நாயக்கர்கால கட்டிடங்கள் அவர்தம் கலை ஆர்வத்தைக் காட்டுகின்றன.

முடிவு

பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த கட்டிடக்கலை அரசியல், சமூகநிலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் தொய்வு நிலையை எட்டியது. தற்போது அந்தக் கலைச்சின்னங்களை அழியாமல் பார்த்துக் கொள்வேதே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

இசைக்கலை

 

இசைக்கலை

அனைத்து உயிர்களையும் இசைக்கச் செய்வதால் இசை எனப் பெயர் பெற்றது. தொல்காப்பியர் காலத்திலேயே சையையும் கூத்தையும் துணையாகக் கொண்டு வாழ்வு த்திய கலைத்துறையினர் தனிப்பிரிவாக இயங்கினர் என்பதை ஆற்றுப்படை இலக்கணத்தின் வழியாக அறியலாம். சங்க இலக்கியத்தில் இசைக்கருவிகள், பண்கள், சைவாணர்கள் பற்றிய எண்ணற் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சங்ககாலத்தில் இசை

சங்க காலத்தில் திணைதோறும் தனித்தனிப் பண்கள் அமைந்திருந்தன.

திணை

பண்

தோல் கருவி

நரம்புக்கருவி

குறிஞ்சி

குறிஞ்சிப்பண்

தொண்டகப்பறை

குறிஞ்சியாழ்

முல்லை

சாதாரிப்பண்

ஏறுகோட்பறை

முல்லையாழ்

மருதம்

மருதப்பண்

நெல்லரிகிணை

மருதயாழ்

நெய்தல்

இரங்கற்பண்

மீன்கோட்பறை

விளரியாழ்

பாலை

பஞ்சுரப்பண்

துடி

பாலையாழ்


சங்க காலத்தில் அன்றாட வாழ்வோடு இசையை இணைத்தவர்கள் பாணர்களாவர். அவர்கள் ஊர் ஊராகச் சென்று தங்கள் இசைத்திறமைகளைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர். மன்னர்களும்
வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாராட்டிப் ரிசளித்துள்ளனர். பாணர்கள் வள்ளல்களாலும் மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர். தலைமக்களிடையே தூதுவர்களாக விளங்கினர். பெரு நகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. பிற்காலத்தில் பாணப்பேறு எனப்பட்டது.

சங்க காலத்து இசைக்கருவிகள்

பண்டை இசைக்கருவிகளில் தலையானது யாழ் ஆகும். யாழ் இரண்டு வகைப்படும். அவை, சீறியாழ் (அளவில் சிறியது), பேரியாழ் (அளவில் பெரியது) என்பனவாகும். இஃது  21 நரம்புகளைக் கொண்டது. பச்சை, செறிதுளை, போர்வை, கவைக்கடை, நரம்பு, கோடு, திவவு என்பன யாழின் உறுப்புகளாகும். பரிபாடலில் குழல் வகைகளின் விளக்கத்தைக் காணலாம். ஐந்து துளைகள் கொண்ட குழல் ஐம்புழை என்றும், ஏழு துளைகள் கொண்ட குழல் ஏழ்துளை என்றும் கூறப்பட்டுள்ளது.

இசைக்கருவிகளின் வகைகள்

பொதுவாக இசைக்கருவிகளை,

  1. தோற்கருவிமுழவு, முரசு, பதலை, துடி
  2. துளைக்கருவிகுழல், கோடு, தூம்பு
  3. நரம்புக் கருவியாழ்
  4. கஞ்சக் கருவிபாண்டில் (து உலோகத்கடு) எனப்பகுத்துக் காண்பர்.

இசைக்கல்வெட்டுகள்

இசை தொடர்பான பழமையான கல்வெட்டுகள் ஈரோட்டை அடுத்துள்ள நாகமலை ஆண்டிப்பாறையில் காணக்கிடைக்கின்றன. இவை கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளன.

இசை நூல்கள்

  • இறையனார் களவியல் உரை என்ற நூலானது, முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்கள் முதற்சங்க காலத்தில் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது
  • பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம் முதலிய நூல்கள் குறித்து அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். இசை நுணுக்கம் என்ற நூலினை சயந்தன் என்னும் பாண்டிய இளவரசன் எழுதியுள்ளார் என்றும், இந்திர காளியம் என்ற நூல் ஒன்று இருந்தமையையும் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்
  • அரும்பத உரையாசிரியர் மூலமாக பதினாறு படலம் என்னும் நூலையும், யாப்பருங்கல விருத்தி உரையின் வாயிலாக, வாய்ப்பியம் என்னும் நூலையும் அறிய முடிகின்றது
  • குலோத்துங்கன் இசை நூல் என்பது குலோத்துங்கச் சோழனால் இயற்றப்பட்டது. விபுலாந்தரின் யாழ்நூலும், ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரமும், வரகுண பாண்டியனின் பாணர்கைவழியும் குறிப்பிடத்தக்கவையாகும்.

சிலம்பும் இசையும்

சிலப்பதிகாரத்தைத் தமிழ்க்கலைக் ளஞ்சியம் என்று கூறலாம். இதன் அரங்கேற்றுக் காதையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் தமிழிசையின் பல்வேறு சிறப்புகளை அறிய உதவுகின்றன. இசையாசிரியன், தண்ணுமையாசிரியன் முதலியோரின் இலக்கணங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இசையை ஏழிசை என்பர். குரல், துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என அவை குறிக்கப்படும். இன்று அவை சப்தசுரங்கள் எனப்படுகின்றன.

பல்லவர் கால இசைக்கருவிகள்

தேவாரப் பாடல்கள் மூலமாக இசை வளர்க்கப்பட்டது. காரைக்காலம்மையார் தாம் பாடிய மூத்தத் திருப்பதிகம் ஒன்றில் தக்கை, தாளம், வீணை, மத்தளம் உள்ளிட்ட பல இசைக் கருவிகளைக் குறிப்பிடுகின்றார். கிண்ணி, மிருதங்கம், முரசம், உடுக்கை, தாளம், துடி போன்ற கருவிகளும் தேவாரங்களில் குறிக்கப்படுகின்றன. சேரமான் பெருமாள் நாயனார் தம் திருக்கையிலாய ஞான உலாவில், தட்டழி, சங்கம், தண்ணுமை, பேரி, படகம் ஆகிய இசைக்கருவிகளைக் குறிக்கின்றார்.

பல்லவ மன்னரில் முதலாம் மகேந்திரன், இராசசிம்மன் போன்றோர் இசை அறிஞராக விளங்கினார். பல மன்னர்கள் இசைக்கலையை வளர்த்தனர். ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற பாணர்கள் இறையன்பர்களாக விளங்கினர். இவர்கள் யாவரும், இறைவனையே ஏழிசையாகவும், இசைப்பயனாகவும், ஓசையாகவும், ஒலியாகவும் கண்டனர்.

சோழர்காலத்து இசை

பல்லவர் காலத்தில் பாடப்பட்ட பாடல்கள் எல்லாம் திருக்கோயில்களில் பாடப்படுதற்கு எத்துணையோ நன்மைகளை இவர்கள் உண்டாக்கினர். இவைக் கலைஞர்களுக்குக் கந்தருவர், கந்தருவி என்று பட்டமளித்தனர். “வாச்சிய மாராயன்” என வாத்தியக் கலைஞர் பெயர் பெற்றனர். தஞ்சைக்கோயிலில் மட்டும் 48 ஓதுவார்கள் இருந்துள்ளனர்.

இசை குற்றங்கள்

இசை பாடும்போது ஏற்படக்கூடாத குறைகளை சிந்தாமணி ஆசிரியர் கூறுகின்றார். புருவம் உயர்தல், கண் ஆடல், மிடறு வீங்கல், பல் தோன்றல் என்பவை அக்குற்றங்களாகும். இதனால் அக்காலத்தில் இசையில் ஏற்பட்டிருந்த பெருவளர்ச்சியை அறியலாம்.

பிற்கால இசை

பிற்காலத்தில் பள்ளு, குறவஞ்சி முதலான சிற்றிலக்கியங்களில் இசைப்பாடல்கள் காணப்படுகின்றன. புரட்சிக் கருத்துகளைத் தம் இசைப் பாடல்கள் மூலம் சித்தர்கள் வெளிப்படுத்தினர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் தமிழிசையின் நுட்பங்கள் பல கூறப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தைக் கீர்த்தனைகளின் காலம் என்று கூறலாம். இதனைத் தோற்றுவித்தவர்கள் மு.அருணாசலம் பிள்ளை, முத்துத் தாண்டவர் மரபினர் ஆவர். தற்போது தமிழிசைச் சங்கம் வகுத்த பாடத்திட்டத்தை அரசு இசைக் கல்லூரிகளில் பின்பற்றப்படுகின்றன. குரலிசை, கருவி இசை ஆகிய இரண்டிலும் பயிற்சியளிக்கப்படுகின்றது. கருநாடக இசையோடு, பழைய தேவார இசைமரபும் வளர்ச்சி பெற்று வருகின்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.