புதன், 16 அக்டோபர், 2024

பண்டையத் தமிழகத்தில் கல்வி

 

பண்டையத் தமிழகத்தில் கல்வி

சங்ககாலத் தமிழர்கள் கல்வியின் சிறப்பை நன்கு அறிந்திருந்தனர். கல்வியைக் குற்றமின்றி கற்க வேண்டும். கற்றபடி நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர்.

சங்க காலத்தில் கல்வி

கல்வி பயிலும் உரிமை தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல், எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், மன்னரும், எளிய குடிமக்களும் கல்வியைத் தேடிப் பயின்றுள்ளனர். திருமணமான பின்பும் இளைஞர்கள் தங்கள் மனவியை விட்டுப் பிரிந்து கல்வி கற்றனர் என்பதை, ஓதல் பகையே தூது இவை பிரிவேஎன தொல்காப்பியம் கூறுகின்றது. அந்த அளவிற்குக் கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர் தமிழர். ஆண்களுடன் பெண்களும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்பது அறியப்டுகின்றது.

கணக்காயர், குலபதி

கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கணக்காயர் எனக் கூறப்பட்டனர். கணக்காயர் இல்லாத ஊரும் நன்மை பயத்தல் இல என்று திரிகடுகம் கூறுகின்றது. பதினாயிரம் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தவர்களுக்குக் குலபதி என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.

பள்ளிகளும் ஆசிரியர்களும்

கல்வி பயிற்றும் இடம் பள்ளி எனப்பட்டது.ஆசிரியரின் வீடுகளும், திண்ணைகளும், ஊரின் பொது இடங்களும் பள்ளிகளாகச் செயல்பட்டன. மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். ஓலைகளைச் சேர்த்துக் கட்டிய சுவடி ஏட்டுச் சுவடி எனப்பட்டது. கல்வி கற்பதற்கு வயது வரம்பு இல்லை.

ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகுள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஆசிரியர்கள் மிக உயர்வான நிலையில் மதிக்கப்பட்டனர்.

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும் அவர்களுடைய பாடங்களாக இருந்தன. எண் என்று கூறப்படுகின்ற கணித அறிவு போற்றத்தக்கதாக இருந்ததது. ஒன்று முதல் கோடி வரை எண்களை அறிந்திருந்தனர். அதோடு எண்ணிலடங்காத பேரெண்களைக் குறிக்க தாமரை, ஆம்பல், வெள்ளம் என்னும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். நாழி, தூணி, காணி, முந்திரி, இம்மி என்னும் அளவுகள் சார்ந்த நீட்டல் அளவை, முகத்தல் அளவை சார்ந்த கணிதம் அறியப்பட்டிருந்தது. ஏரம்பம் என்ற கணித நூல் இருந்துள்ளது.

வானியல், மருத்தும், இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம் முதலிய கல்வியும் சிறந்திருந்தன. கோள்கள், அவற்றின் செயல்கள், திங்களின் இயக்கம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் அறிவு பரந்துபட்டு இருந்தது. சோதிடம் குறித்த தெளிவு அக்கால மக்களிடையே இருந்துள்ளது. வருங்கால நிகழ்ச்சிகளைக் கூறுபவரைகணிகர்என்று அழைத்தனர்.

கல்வியின் பயன்

கல்வி அறிவை வளர்ப்பதற்கும், ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் பயன்பட்டது. செல்வத்தை விட கல்விக்கே உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. கல்வி என்பது பண்பாட்டை வளர்க்கின்ற, வீடுபேறு அளிக்கின்ற மருந்து என்றே அம்மக்கள் கருதினர். சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவி என்றும் கருதினர்.

 

சேரர்கள்

 

சேரர்கள்

மூவேந்தர்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுபவர்கள். சேரல் மலை நாட்டை ஆண்டமையால் சேரர்கள் எனப்பட்டனர்.  இவர்கள் மேலைக் கடற்கரை வெளியை ஆண்டனர். இவர்களின் தலைநகரம் வஞ்சி மற்றும் கரூர். துறைமுகம் தொண்டி. வில் கொடியைத் தனது சின்னமாகப் பெற்றவர்கள்.

இலக்கியச் சான்றுகள்

சேரர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தும், பிற சங்க நூல்களும் கூறுகின்றன. மூவேந்தர்களுள் சேரர்களுக்குத் தனி இலக்கியப் பாடல்கள் உள்ளன. சேர நாட்டினைச் சேரலாதன் மரபினரும், பொறையர் மரபினரும் ஆண்டனர். பொறையர் ஆதிக்கம் சேர நாட்டில் வடக்கில் அதிகமாக இருந்தது. பொறையர் மரபினர் கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டனர். மலை நாட்டுப் பகுதியில் இவர்கள் வாழந்த்தால் வேட்டைத் தொழிலில் நாட்டமும், அம்பு எய்துவதில் தேர்ச்சியும் உடையவர்களாக விளங்கினர்.

உதியன் சேரலாதன்

சேரநாட்டை விரிவு படுத்திய பெருமை உதியன் சேரலாதன் என்ற மன்னனையே சாரும் முன்னோர் நினைவால் தனது படையினருக்குப் பெருஞ்சோறு அளித்தான் என்று அகநானூற்றுப்பாடல் 65 தெரிவிக்கின்றது. மாமூலனாரால் பாடப்பட்டவன். பதிற்றுப்பத்தின் முதல் பாட்டுடைத் தலைவனும் இவனேயாவான். இவன் காலத்தில் இறந்தவர் நினைவால் பெரும்பிடி, பெருஞ்சோறு போன்ற படையல்கள் நடத்தும் வழக்கம் தமிழகத்தில் மிகுதியாக இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

உதியன் சேரலாதனுக்குப்பின் அவருடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்டான். பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் தலைவனாக வைத்துப் பாடப்பட்டவன். இம்மன்னனை மாமூலனாரும் பரணரும் பாடியுள்ளனர். இமயம் வரை வென்றதால், இமயத்தில் வில் கொடி பொறித்தவன் என்று பாராட்டப்படுகின்றார். வட இந்தியா வரை படை செலுத்தியவன் என்ற பொருளில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற பெயரைப் பெற்றான். யவனர்களுடன் போரிட்டு வென்றார். சோழர்களுடன் நடந்த போரில் இறந்துபட்டான். இவன் காலத்தில் தமிழகத்துக்கும் பிற நாடுகளுக்கும் தொடர்பு இருந்தன என்பதை இவருடைய போர்கள் விளக்குகின்றன.

பல்யானை செல்கெழுகுட்டுவன்

இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. பாலைக் கௌதமனார் இவரைப் பற்றி மூன்றாம் பத்தில் பாடியுள்ளார். மலை நாட்டுப் பகுதியில் 500 சிற்றூர்கள் அடங்கிய உம்பற்காட்டுப் பிரதேசத்தில் சேரர்களின் ஆதிக்கத்தைப் பரப்பினார்.

களங்காய் கண்ணிநார்முடிச் சேரல்

பல்யானை செல்கெழுகுட்டுவனுக்குப் பிறகு களங்காய் கண்ணி நார் முடிச்சேரல் என்ற மன்னன் சேர நாட்டை ஆண்டான். பூழி நாட்டின் மீது படையெடுத்து வாகைப் பெருந்துறையில் வெற்றி கண்டான். காப்பியாற்றுக் காப்பியனார் இவரைப் பாடியுள்ளார்.

சேரன்வெல்கெழு குட்டுவன்

மேற்குக் கடலில் கடற்கொள்ளையர்கள் வணிகர்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டுத் தீவுகளில் பதுங்கிக் கொண்டனர். அக்கடற் கொள்ளைக்கூட்டத்தினை அழித்த பெருமை இம் மன்னனுக்கு உண்டு. மோகூர் என்ற நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பழையன் என்னும் மன்னனை வெற்றி கொண்டான். இவர் காலத்தில் சேர நாட்டில் மக்கள் ஆடல் பாடல்களுக்குப் பெரிதும் மதிப்பளித்திருந்தனர். இவருடைய மகன் ஆட்டனத்தி, ஆடல் பாடல்களில் வல்லவன்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆட்டனத்தி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் சேர நாட்டை ஆண்டான். கலையார்வம் மிக்க இம்மன்னன் அன்பும், அறனும், அருளும் கொண்டவனாக விளங்கினான். வறுமையில் வாடும் மக்களின் கண்ணீரைக் காணப் பெறாதவனாக ஆட்சி செய்தான். காக்கைப்டிபாடினியாரும், நச்செள்ளையாரும் இவனைப் பாடியுள்ளனர்.

செல்வக்கடுங்கோ வாழியாதன்

பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தில் தலைவனாக விளங்கிய இவர் காலத்தில் தமிகத்தில் பௌத்த சமயம் பரவியுள்ளது. துறவிகளுக்குச் செல்வர்கள் படுக்கைகள் செய்து கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது.

பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் இவன். இவன் அதியர் குலத்து அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டு வென்றான். அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் இவரைப் பாடியுள்ளனர்.

இளஞ்சேரல் இரும்பொறை

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அடுத்து இளஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். இம்மன்னன் பாண்டியர்கள், சோழர்கள், குறுநில மன்னர்களின் எதிர்ப்பைச் சந்தித்தான்.

மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுப்பத்தில் பத்தாவது பாடலின் தலைவன். தொண்டியில் சேரர்களின் ஆதிக்கத்தைச் செலுத்தியவன். இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டை  ஆண்டவன் தலையாலங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். பாண்டியருடன் போரிட்ட இவன் பாண்டியர் சிறையில் அடைக்கபட்டிருந்தான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். கல்வியில் விருப்பம் உடைய இம்மன்னன் புலவர்களை ஆதரித்தான்.

இவருக்குப்பின், குட்டுவன் கோதை, திருக்குட்டுவன், கோக்கோதை மார்பன் போன்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். சேரநாடு வலிமை இழந்தது.

சேரன் செங்குட்டுவன்

கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் சேரலாதன் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய மகனே சேரன் செங்குட்டுவன் ஆவான். சேர நாடு இவன் காலத்தில் மீண்டும் வலிமை பெற்று எழுந்தது. இம்மன்னனின் வரலாற்றைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வட இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வெற்றி கண்டவன் என்று கூறப்படுகின்றது. இவனுக்குப் பின் சேரர் ஆட்சி வலிமை குன்றியது.