பண்டையத் தமிழகத்தில் கல்வி
சங்ககாலத் தமிழர்கள் கல்வியின் சிறப்பை நன்கு அறிந்திருந்தனர். கல்வியைக் குற்றமின்றி கற்க வேண்டும். கற்றபடி நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர்.
சங்க காலத்தில் கல்வி
கல்வி பயிலும் உரிமை தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல், எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், மன்னரும், எளிய குடிமக்களும் கல்வியைத் தேடிப் பயின்றுள்ளனர். திருமணமான பின்பும் இளைஞர்கள் தங்கள் மனவியை விட்டுப் பிரிந்து கல்வி கற்றனர் என்பதை, ஓதல் பகையே தூது இவை பிரிவே” என தொல்காப்பியம் கூறுகின்றது. அந்த அளவிற்குக் கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர் தமிழர். ஆண்களுடன் பெண்களும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்பது அறியப்டுகின்றது.
கணக்காயர், குலபதி
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கணக்காயர் எனக் கூறப்பட்டனர். கணக்காயர் இல்லாத ஊரும் நன்மை பயத்தல் இல என்று திரிகடுகம் கூறுகின்றது. பதினாயிரம் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தவர்களுக்குக்
குலபதி என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.
பள்ளிகளும் ஆசிரியர்களும்
கல்வி பயிற்றும் இடம் பள்ளி எனப்பட்டது.ஆசிரியரின் வீடுகளும், திண்ணைகளும், ஊரின் பொது இடங்களும் பள்ளிகளாகச் செயல்பட்டன. மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். ஓலைகளைச் சேர்த்துக் கட்டிய சுவடி ஏட்டுச் சுவடி எனப்பட்டது. கல்வி கற்பதற்கு வயது வரம்பு இல்லை.
ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகுள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஆசிரியர்கள் மிக உயர்வான நிலையில் மதிக்கப்பட்டனர்.
எண்ணும் எழுத்தும்
எண்ணும் எழுத்தும் அவர்களுடைய பாடங்களாக இருந்தன. எண் என்று கூறப்படுகின்ற கணித அறிவு போற்றத்தக்கதாக இருந்ததது. ஒன்று முதல் கோடி வரை எண்களை அறிந்திருந்தனர். அதோடு எண்ணிலடங்காத பேரெண்களைக் குறிக்க தாமரை, ஆம்பல், வெள்ளம் என்னும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். நாழி, தூணி, காணி, முந்திரி, இம்மி என்னும் அளவுகள் சார்ந்த நீட்டல் அளவை, முகத்தல் அளவை சார்ந்த கணிதம் அறியப்பட்டிருந்தது. ஏரம்பம் என்ற கணித நூல் இருந்துள்ளது.
வானியல், மருத்தும், இசை, ஓவியம், நாட்டியம்,
சிற்பம் முதலிய கல்வியும் சிறந்திருந்தன. கோள்கள், அவற்றின் செயல்கள், திங்களின் இயக்கம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் அறிவு பரந்துபட்டு இருந்தது. சோதிடம் குறித்த தெளிவு அக்கால மக்களிடையே இருந்துள்ளது. வருங்கால நிகழ்ச்சிகளைக் கூறுபவரை “கணிகர்” என்று அழைத்தனர்.
கல்வியின் பயன்
கல்வி அறிவை வளர்ப்பதற்கும், ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் பயன்பட்டது. செல்வத்தை விட கல்விக்கே உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. கல்வி என்பது பண்பாட்டை வளர்க்கின்ற, வீடுபேறு அளிக்கின்ற மருந்து என்றே அம்மக்கள் கருதினர். சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவி என்றும் கருதினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக