திங்கள், 30 நவம்பர், 2020

புதுக்கவிதை - சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

ஈரோடு தமிழன்பன்

சொல்லில் உயர்வு

தமிழ்ச் சொல்லே என்று பாடிய பாரதி

இங்கு வரவில்லை திருவள்ளுவர்க்குக் கூட

என்வணக்கம் இல்லை

திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம்

என்வணக்கம்.

வள்ளுவர்க்கு இதைவிட

வேறென் வணக்கம் வேண்டும்?


தாயை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது

எவருக்கு விண்ணப்பம் போட்டும்

கையூட்டு காலூட்டுக் கொடுத்தும்

விரும்பியபடி

தாயைப் பெறமுடியாது.

முடியும் என்றால்

அரசாங்கம் தாய்மாற்றுவாரியம்

ஏற்படுத்தியிருக்கும். . .

ஏழைகளுக்கு

இலவசத்தாய் வழங்கு திட்டம்

தொடங்கப்பட்டிருக்கும். . .

தேர்தல் முடியும் வரை

யாரும் தாயாகக் கூடாது என்று

தலைமைத் தேர்தல் ஆணையம்

தடையைப் போட்டிருக்கும்

தாயை மாற்றிக் கொள்ள

முடியாது . . .

தாய் மொழியையும் மாற்றிக் கொள்ளவோ

தானாகத்

தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ முடியாது . . .


தமிழ்நாட்டில்தான்

தள்ளுபடி விலையில், தமிழ்த்தாயை

விற்றுவிட்டு

ஆங்கில ஆயாவையே

தாயின் இடத்தில் அமர்த்தினார்கள்.

உடனே

மம்மிவந்து சேர்ந்தாள்

மம்மி என்றால் என்ன பொருள்

பதப்படுத்தப்பட்ட பிணம்

மம்மிக்குப்பின்

டம்மியான தந்தை டாடியானான்.

மம்மியையும்

மம்என்று இறுக்கமாய்

அமுக்கினார்கள் . . .

சின்னம்மா மினிமம்

பெரியம்மா மேக்சிமம்

ஆனார்கள்.

டாடிகள்

திண்டாடினார்கள்.

அத்தையா

சித்தியா, பேத்தியா

மொத்தக் குழப்பத்தில் ஆண்டி!

மாமாவா

சித்தப்பாவா பெரியப்பாவா . . .

சந்தேக அங்கிளைப் பார்த்து

ஆண்டி ஹாய் என்றாள்.


பள்ளிகளில்

இங்கிலிஷ் மிஸ், கணக்கு மிஸ்

கெமிஸ்ட்ரி மிஸ், டிராயிங் மிஸ்

மொத்தத்தில்

தமிழ் மிஸ்.


கல்லூரிகளில்

மரியாதை அதிகம்

மிஸ்கள் எல்லாம் மேடமானார்கள்.

பைத்தியமான அம்மாக்களாய்

இருக்க வேண்டும் என விரும்பி

அவர்களை

மேடமாக்கினார்களோ

தெரியவில்லை.


ஆங்கிலத்தின் நடுவே

அங்கங்கே

கைதான தமிழ்சசொற்கள்

கண்ணீர் வடித்தபடி . . .

கதை வசனம்.


காதலனுக்கும்

காதலிக்கும் தாய்மொழி வெவ்வேறு

அதற்காக

மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு

உரையாடல் நடத்தினால்

 என்ன நடக்கும்?

தமிழ் தெரியாப் பெண்ணைக்

காதலித்த ஒருவன்

உன்ன நான் காதலிக்கிறேன்

என்று தமிழில் சொல்ல 

மொழிப் பெயர்ப்பாளன் ஐ லவ் யூ

என்றான் மொழிபெயர்த்து.

ஐ டூ லவ் யூஎன்று

தமிழ் தெரியாத அந்தப் பெண்

அவனோடு போய்விட்டாள்

நம் கடவுளிடம்

நம் மொழியில்நாம்

காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கித் தொழ வேண்டாமா?


தமிழில் எழுதவேண்டும்

தமிழாகவும் எழுதவேண்டும்

இப்போது

சென்னை மாநகராட்சியின்

சீர்மிகு துணையால்

பிளைவுட், ஷாப்

வன்பொருள் விற்பனைக் கடை ஆயிற்று

பேக்கரி அடுமனையகமாயிற்று

எத்தனை எத்தனை

விளம்பரங்களில் ...

முத்தான தமிழ்ச் சொற்களால்

அத்தனைக்கும் தமிழ்த்தாய்

முத்தப் பரிசளிப்பாள்

தமிழின் இரத்தம்

சூரியனில் ஒளியாக இருக்கிறது.

நிலவில் குளிச்சியாக இருக்கிறது.


தமிழின் முகவரியில் நெடுங்காலம்

அழகைச் சுவாசித்து வளர்ந்த பிறகுதான்

வசந்தம்

இயற்கையோடு வாழப் புறப்பட்டு வந்தது.

மழை பருவத்து

ஈரம் அவ்ளவும்

மேகங்கள் தமிழின்  மடியிலிருந்து

திரட்டிக் கொண்டவை அல்லவா?

சொல்லோ கல்லோ

எதுவானாலும் மாணிக்கமாய் வைரமாய்

இருக்கட்டும்

அடிபடி நாங்கள் தயாராய் உள்ளோம். !

கவிதையின் விளக்கம்

         கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ்மொழியின் சொல்வளம் கால மாற்றத்தால் எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் இக்கவிதையின் வாயிலாக விளக்குகின்றார்.

பாரதி - வள்ளுவன்

இனிமையும் சொல்வளமும் நிறைந்தது தமிழ்மொழி என்பதை உணர்த்திடவே பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று பாடினான். தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்க பாரதி போன்று இன்றைய இளைய தலைமுறை முயல்வதில்லை என்று வருந்துகின்றார்.

உலகப்பொதுமறை தந்த வள்ளுவனுக்குச் சிலை வைப்பதும், மாலையிட்டு வணங்குவதும் அவருக்குச் செய்யும் மரியாதை அல்ல. வள்ளுவன் இயற்றிய திருக்குறளின் அருமை அறிந்து அதனைப் படித்து, அதன்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களை வணங்குவதுதான் உண்மையில் வள்ளுவனுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று உணர்த்துகின்றார். ஆகவேதான் திருவள்ளுவர்க்குக் கூட என்வணக்கம் இல்லை, திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம் என்வணக்கம் என்றுரைக்கின்றார்.

தாய் – தமிழ்

இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் தங்கள் தாயைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பதும், எங்கேனும் விண்ணப்பம் செய்தோ, எவருக்கேனும் இலஞ்சம் கொடுத்தோ பொருட்களை மாற்றிக் கொள்வதுபோல, தாயை மாற்றிக் கொள்ள முடியாது என்பதும் இயற்கையின் நியதி.

ஒரு குடும்பத்தில் பிறந்தவன் அக்குடும்பத்தின் தாய் மொழியில் பேசி வளர்ந்தால் மட்டுமே அம்மொழி சார்ந்த பண்பாடும் கலாச்சாரமும் நிலை பெற்று நிற்கும் என்ற உண்மையை மறந்து  வேற்று மொழி பேச விரும்புகின்றோம். ஒரு மொழியை அழித்து விட்டால் அம்மொழி பேசும் இனமே அழிந்து விடும் என்ற அச்சம் இன்றி  தாய்மொழியை மாற்றிக் கொள்ளத்  துடிக்கின்றோம்.

அவ்வாறு நாம் விருப்பப்பட்டால், தாயை மாற்றிக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை வந்தால், அரசாங்கம் தாய் மாற்று வாரியம் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கும். ஏழைக் குழந்தைகளுக்காக இலவசத் தாய் வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கும். தலைமைத்தேர்தல் ஆணையமோ, இன்னும் ஒரு படி மேலே சென்று தேர்தல் காலங்களில் யாரும் தாயாகக் கூடாது என்று தடை போட்டிருக்கும் என்று  நகைச்சுவையாக எடுத்துரைக்கின்றார்.த  இதன் மூலம் ஒருவனின் தாய் மொழியை மாற்றி, பிற மொழியைப் புகுத்த நினைக்கும் அரசாங்கத்தின் செயலைத் தோலுரித்துக் காட்டுகின்றார்.  தாயைத் தேர்நதெடுக்கவோ, தாயை மாற்றிக் கொள்ளும் உரிமையோ யாருக்கும் இல்லாததைப்போல தாய்மொழியைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதை ஆணித்தரமாக விளக்கியுரைக்கின்றார்.   

மம்மி  - டாடி

தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ்த்தாயை விற்றுவிட்டுத் தள்ளுபடி விலையில் ஆங்கில ஆயாவைத் தாயின் இருக்கையில் அமர்த்துகின்றனர் என்று கோபம் கொள்கின்றார். தமிழ்த்தாயைப் புறக்கணித்து, சொல் வளம் இல்லாத,  இளமை நலம் இன்றிக் விளங்கும் வேற்று மொழியை ஆட்சியில் அமர்த்தியதால், தமிழ்நாட்டுக் குழந்தைகள் அம்மாவை மம்மி என்று அழைக்கத் தொடங்கினர். மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்ற பொருள் தெரிந்தும், கருவில் உயிரூட்டிய தாயைக் குழந்தைகள் தினம் தினம் பிணம் என்றே அழைக்கும் கொடுமையைச் சுட்டிக் காட்டுகின்றார் கவிஞர். அவ்வாறு அழைப்பதை நாகரிகம் என்று கருதி ஏற்கும் தாய்மார்களைக் கண்டு கவலை கொள்கின்றார்.  அப்பாவை “மம்மிக்குப் பின் டம்மி ஆகியதாகக் கருதி டாடி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். மம்மியை இன்னும் இறுக்கமாக்கி “மம்” என்று சுருக்கிவிட்டனர். இவ்வாறு அழைப்பதால், அன்பும் உயிரோட்டமுள்ள வாழ்வும் சீர்குலைந்து, பண்பாடும் கலாச்சாரமும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலையை நம் கண் முன் நிறுத்துகின்றார் ஆசிரியர்.

ஆண்டி - அங்கிள்

தமிழ் மொழியில் அனைத்து உறவுகளுக்கும் நல்ல தமிழ்ச் சொல் உண்டு. தாயின் இளைய சகோதரியைச் சித்தி என்றும், மூத்த சகோதரியைப் பெரியம்மா என்றும், தந்தையின் மூத்த சகோதரனைப் பெரியப்பா என்றும், இளைய சகோதரனைச் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லி அழைத்த காலம் போய், இன்று பெண்கள்  யாவரும் ஆண்டியாகி விட்டனர். ஆண்கள் யாவரும் அங்கிளாகிவிட்டனர். இதனால் யார் யார் எந்த உறவு முறை என்பதெல்லாம் குழம்பிப்போய்த் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை என்கின்றார்.

மிஸ் -  மேடம்

கல்வி நிலையங்களில் பெண் ஆசியர்கள் மிஸ் என்றும், ஆண் ஆசிரியர்கள் சார் என்றும் ஆகிவிட்டனர். ஆசிரியர்கள் எல்லோரும் மிஸ் ஆனதால் அங்கே தமிழும் மிஸ் ஆகிவிட்டது என்று தன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றார்.  உயர் கல்வியைத் தரும் கல்லூரிகளில் மிஸ்கள் எல்லாம் மேடம் ஆகிவிட்டார்கள். மேட் என்றால் பைத்தியம் என்றொரு பொருள் ஆங்கிலத்தில் உண்டு.

இவ்வாறு பிற மொழிகளின் பொருள் புரியாமல் அவற்றைப் பயன்படுத்தும்போது தமிழின் பெருமையை நாம் உணர மறந்து விடுகின்றோம் என்பதை நினைவூட்டுகின்றார் ஆசிரியர்.

அன்றாட வாழ்க்கையில் நாம் தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுபவதால், தமிழ் ஆங்கிலத்திற்கு நடுவில் சிக்கிச் சிதைந்து போனது. இதனால் மொழியின் தமிழின் வளமை குறைந்து கொண்டே செல்கின்றது என்று அச்சம் கொள்கின்றார்.

ஆங்கிலமும் தமிழும்

வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இருவர் காதலித்தால் எந்த மொழியில் பேசித் தங்கள் காதலை வளர்த்துக் கொள்வார்கள்? அதற்கென்று ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக் கொண்டா காதல் புரிய முடியும். அவ்வாறு புரிந்தால், அந்தப் பெண்ணைக் காதலிக்கின்றவன் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று தமிழில் சொல்ல, மொழிபெயர்ப்பாளன் “ஐ லவ் யூ” என்று ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணிடம் மொழி பெயர்க்க, அந்தப் பெண் மொழிபெயர்ப்பாளனோடு காதல் கொண்டு சென்று விடுவாள் என்று நகைச்சுவையோடு கூறி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். ஞானசம்பந்தர், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இறைவனைத் தொழுதார்.  உணர்வுகளை வெளிப்படுத்த அவரவர் தாய் மொழியே சிறந்தது என்பது இதன்மூலம் உணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் கவிஞர்.

தமிழின் சொல்வளம்

எதை எழுதினாலும் தமிழில்தான் எழுத வேண்டும். அதைத் தமிழாகவே எழுத வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும். இன்று தமிழ் மீது பற்றுக் கொண்ட சிலரின் முயற்சியால், பிளைவுட்ஷாப் என்பது வன்பொருள் விற்பனைக் கடை என்றும், பேக்கரி என்பது அடுமனை என்றும் அழகான தமிழில் எழுதப்படுகின்றது. இது பாராட்டப்பட வேண்டிய மாற்றம் ஆகும்.

காலங்கள் பல மாறினாலும், தொழில்நுட்பங்கள் பல பெருகினாலும், எந்தச் சொற்களையும் அழகு தமிழில் எழுதத் தமிழ் இடங் கொடுக்கும் என்பதைத்தான், “முத்தான  தமிழ்ச் சொற்களால் அத்தனைக்கும் தமிழ்த்தாய் முத்தப் பரிசளிப்பாள்என்ற வரிகளால் விளக்குகின்றார்.       

சூரியனும் நிலவும் எவ்வாறு உலகை ஆளுகை செய்கிறதோ? அது போல, தமிழ் உலகளாவிய மொழியாக வலம் வருகின்ற சிறப்புக்குரியது என்பதையும் தெரிவிக்கின்றார். ஆகவேதான் சூரியனையும், நிலவையும் தமிழின் இரத்தங்கள் என்கின்றார்.

தமிழின் சுவை

இயற்கையோடு இயைந்தது தமிழ்மொழி. நீண்ட காலம் தமிழில் சுவாசித்துக் கொண்டிருப்பதால்தான் இயற்கையோடு வாழ்கின்ற வசந்த வாழ்க்கையை அனுபவிக்க முடிகின்றது. இன்றும் ஒருவன் தமிழ் மொழியின் இலக்கியங்களை ஆழ்ந்து வாசிப்பானேயானால் அவனால் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும்.

 பூமியின் மடியிலிருந்து மேகம் மழை பருவத்தின் ஈரத்தை உறிந்து எடுத்துக் கொண்டு மழையாகப் பொழிவித்து மக்களைக் காக்கின்றது. அது  சாரல் மழையாக இருப்பினும், ஆலங்கட்டி மழையாக இருப்பினும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல, வாழ்க்கைக்குத் தேவையான நல்லறங்களைத் தமிழின் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கொண்டு வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்மொழியைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சியில் சொல் எறிந்து, கல் எறிந்து நம்மைத் துன்பப்படுத்தினாலும், அவற்றை மாணிக்கங்களாய் வைரங்களாய் ஏற்றுக் கொண்டு  அடிபடத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி, தமிழ் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றார் கவிஞர்.


4 கருத்துகள்: