ஞாயிறு, 8 நவம்பர், 2020

புதுக்கவிதை - இன்று நான் பெரிய பெண்

 

இன்று நான் பெரிய பெண்

அ.சங்கரி

நான்

கல்லாய் மாறிய பூ

பாறையாய் இறுகிய காற்று

பனியாய் உறைந்த நீர்

பூவைப் போலவும்

காற்றைப் போலவும்

நீரைப் போலவும்

குதித்துத் திரிந்து

சுற்றிய பருவத்தில்

காலை உதைத்து

வீரிட்டு அழவும்

கல கல என்று

கைதட்டிச் சிரிக்கவும்

கோபம் வந்தால்

கொப்பியைக் கிழிக்கவும்

முடிந்த காலம்.

மரத்தில் ஏறவும்

மாங்காய் பிடுங்கவும்

பக்கத்து வீட்டுப்

பிள்ளைகளுடனே

கிட்டி அடிக்கவும்

ஒளித்துப் பிடிக்கவும்

ஒன்றும் பேசிலர் எவரும்.

ஒன்று

நான் பெரிய பெண்

உரத்துச் சிரித்தல் கூடாது

விரித்த புகையிலை

அடக்கம்; பொறுமை

நாணம்

பெண்மையின் அணிகலம்

கதைத்தல்; சிரித்தல்

பார்த்தல்; நடத்தல்;

உடுத்தல்

எல்லாம் இன்னபடி என்றெழுதி.

நான்

கல்லாய்

பாறையாய்

பனியாய்

பெண்ணாய்..

பாடல் விளக்கம்

இக்கவிதை பருவம் எய்திய பெண்ணின் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றது.

சிறு குழந்தையாக இருந்தபோது……

நான் சிறு குழந்தையாக இருந்தபோது எந்தக் கட்டுப்பாடுகளும் எனக்கு இல்லை. பூவைப் போல மலர்ந்து சிரித்தேன். காற்றைப்போல எங்கும் சுற்றித் திரிந்தேன். நீரைப்போல ஓடியாடி விளையாடினேன். கிடைக்காத பொருளை எண்ணி ஏங்கும்போது கை கால்களை உதைத்து வீறிட்டு அழுதிருக்கிறேன். என் வயது குழந்தைகளுடன் கல கல என்று சத்தம் போட்டுக் தைட்டிச் சிரித்திருக்கிறேன். நோட்டுப் புத்தகங்கைளக் கிழித்து என் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். (கொப்பி - நோட்டுப் புத்தகங்கள், குறிப்பேடு).  

மரங்களில் எறி மாங்காய்ப் பறித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடியிருக்கிறேன். மற்றக் குழந்தைகளுடன் ஒளிந்து ஓடிப் பிடித்து விளையாடியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனக்கு.

பருவம் எய்திய பின்னர்….

பருவம் எய்திய நாள் முதல் கட்டுப்பாடுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. நான் பெரிய பெண் ஆகிவிட்டதாகக் கூறி என்னை முடக்கினர்.

  • பெண் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்ற பழமொழி என் மீது திணிக்கப்பட்டது. அதனால் சத்தமிட்டு சிரிக்கக்கூடாது என்று கூறப்பட்டது.
  • அடக்கமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். கோபம் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
  •  வெட்கம் பெண்மையின் அணிகலன் என்று கற்றுத் தரப்பட்டது.
  • நான் பேசுவதற்கு, சிரிப்பதற்கு, பார்ப்பதற்கு, நடப்பதற்கு, உடுத்துவதற்கு என எல்லாவற்றுக்கும் வரைமுறைகள் எழுதப்பட்டன.

ஆதலால், பூவாக மலர்ந்து சிரித்த நான் இன்று கல்லாகி விட்டேன். காற்றாக சுற்றித்திரிந்த நான் பாறையாக ஓரிடத்தில் நிலை பெற்று விட்டேன். நீராய் ஓடிக் களித்த நான் பனியாய் உறைந்து விட்டேன் என்று வருத்தம் கொள்ளும் பெண்மையை இக்கவிதையில் படைத்திருக்கின்றார் ஆசிரியர்.

கருத்து

பருவம் எய்தியவுடன் சுதந்திரம் பறிக்கப்பட்டு, விரும்பியதைச் செய்யும் ஆற்றல்கள் யாவும் அடக்கப்பட்டு, யார் யாரோ சொல்லும் கட்டுப்பாடுகளுக்குத் தள்ளப்பட்டு வாழ்கின்ற பெண்களின் அவல நிலையை இக்கவிதையில் கல், பாறை, பனி என்ற குறியீடுகளின் மூலம் நம் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

3 கருத்துகள்: