திங்கள், 30 நவம்பர், 2020

புதுக்கவிதை - நிழல்கள்

 

நிழல்கள்

கவிஞர் மு.மேத்தா

 சூரிய நெருப்பு

சுடுகிற பாதத்தில்

ஒத்தடம் கொடுக்கும்

நிழல் ஒற்றர்கள்.

வெய்யில் தாங்காமல்

விரைந்து வரும்

காலுக்குச்

சிறிது நேரச் செருப்புகள்!

வெளிச்சத்தின்

காலடிச் சுவடுகள்!

கவிதையின் விளக்கம்

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது முதுமொழி.  இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கவிதையை இயற்றியுள்ளார் கவிஞர் மு.மேத்தா.

நிழல்கள் - ஒற்றர்கள்

இக்கவிதை நிழலின் தன்மைகளை வாழ்க்கையோடு பிணைத்துக் காட்டியிருக்கின்றது. சூரியனின் கதிர்கள் பாதங்களைச் சுடும்போது கால்கள் நிழல்களைத் தேடி ஓடுவது இயல்பு. வாழ்க்கையில் துன்பங்கள் நம்மை நெருக்கும்போது ஆறுதலைத் தேடி மனம் செல்வதும் இயல்பு.  

நிழல்கள் ஓரிடத்தில் நிற்தில்லை. சூரியக் கதிர்களின் ஓட்டத்தைப் பொறுத்தே நிழல்கள் உருவாகின்றன. மனிதனின் வாழ்க்கையும் ஓரிடத்தில் நிலையாக நிற்பதில்லை. நாம் செய்கின்ற செயல்களின் அடிப்படையில்தான் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது. சூரியனின் தாக்கத்தை முன்னரே அறிவிக்கும் ஒற்றர்கள்போல் நிழல்கள் செயல்படுகின்றன. அதுபோல தோல்விகள் யாவும் வரப்போகின்ற வெற்றியை அறிவிக்கின்ற ஒற்றர்கள்தான் என்பதை உணர்த்துகின்றார் கவிஞர்.

நிழல்கள் - செருப்புகள்

செருப்பில்லாமல் உழைக்கின்ற மக்களின் கால்களுக்கு நிழல்கள் சிறிது நேரம் செருப்புகளாகப் பயன்படுகின்றன. கவலைகளும், கலக்கங்களும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது இளைப்பாறக் கிடைக்கும் தற்காலிக இன்பங்கள் எல்லாமே நிழல்கள்தான் என்ற கருத்தை முன் வைக்கின்றார் ஆசிரியர்.

நிழல்கள் - காலடிச் சுவடுகள்

            ஒளியின் பிம்பங்களே நிழல்களாகத் தோன்றுகின்றன. அதனால் நிழல்களை வெளிச்சத்தின் காலடிச் சுவடுகள் என்று வர்ணிக்கின்றார் கவிஞர். அதே போல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பின்வரும் தலைமுறையினருக்குக் காலடிச்சுவடுகளாய் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றார் கவிஞர்.

 

 

7 கருத்துகள்: