ஆண்டாள் – நாச்சியார் திருமொழி
தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர்
(பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு
குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ்க் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர்
திருவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக்
கொண்டவர். கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார்.
ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும். கோதை
இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல புலமை கொண்டவராகவும்
இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள
வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப்
பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும்
மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து “கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா” என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார்.
இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர்
கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து
இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலைகளே
தனக்கு விருப்பமானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், "இறைவனையே ஆண்டவள்"
என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக
ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில்
உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த
விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம்
கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட
கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.
இயற்றிய நூல்கள்
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன்
இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை
இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக
அனைவராலும் போற்றப்படுகின்றது.
திருப்பாவை
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30
பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக
நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
நாச்சியார் திருமொழி
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார்
திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு
பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. கண்ணனை
மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல்
தொகுப்பு புகழ் பெற்றது. இந் நூலில் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்கள்
அமைந்துள்ளன.
- முதற் பத்துப் பாடல்கள், “கண்ணனை இணக்கு” எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை.
- இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் “சிற்றில் சிதையேல்” எனக் கேட்கும் வகையில் அமைந்தவை.
- மூன்றாம் பத்து கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்துள்ளது.
- நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை.
- ஐந்தாம் பத்து குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடுகின்றன.
- ஆறாம்பத்து மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளன.
- ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை.
- எட்டாம் பத்து மேகவிடு தூதாக அமைந்துள்ளது.
- ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன.
- பத்தாம் பத்து மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
- பதினோராம் பத்து திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளது.
- பன்னிரண்டாம் பத்து சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்துள்ளது.
- பதின்மூன்றாம் பத்து அவலம் தணி என இறைவனைக் கோருவதாக அமைந்துள்ளது.
- பதினான்காம் பத்து பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகிறது.
இவற்றுள் ஏழாம் பத்தில், கற்பூரம் நாறுமோ என்று தொடங்கும் பாடலே இங்கு
நமக்குப் பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.
பாடல்
- 1
கருப்பூரம்
நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச்
செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த
மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக்
கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே.
விளக்கம்
கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையைக் கம்சன் ஏவிவிட, அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற மாதவனின் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும்
விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூவின் மணம் கொண்டிருக்குமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு
சொல்வாயா?
பாடல் - 2
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.
விளக்கம்
நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில்
வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவனின் திருக்கரங்களில் சென்று
குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும்படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.
பாடல் - 3
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.
விளக்கம்
திருமாலுக்கு அழகூட்டும் கோலம்
உடைய சங்கே! இலையுதிர் காலத்தில் முழுநிலா
நாளன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போல், வடமதுரை அரசனான கண்ணனின்
திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.
பாடல் - 4
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தரம் ஒன்றின்றி ஏறி அவன்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே.
விளக்கம்
வலம்புரிச் சங்கே! சந்திர மண்டலம் ஒளி வீசித் திகழ்வதுபோல்,
தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்ந்து, அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய்.
நீ அடைந்த இந்தச் செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.
பாடல் - 5
உன்னோ டுடனே ஒருகடலில் வாழ்வாரை,
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே.
விளக்கம்
பாஞ்சசன்னியமே! கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள்
இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லை! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள்,
நீ ஒருவன் மட்டுமே உலகத்தின் மன்னனாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப்
பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.
பாடல் - 6
போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.
விளக்கம்
வலம்புரிச் சங்கே! நீ எந்தப் புனித தீர்த்தங்களிலும்
நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தாயோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால்
சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம்
என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.
பாடல் - 7
செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்
செங்கண் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா உன்செல்வம் சாலவ ழகியதே.
விளக்கம்
சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே! மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப்
போல, சிவந்த கண்களையும் கருத்த திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது
ஏறி, உறங்கும் உன் செல்வம் மிகவும் அழகுடையதே ஆகும்.
பாடல் - 8
உண்பது சொல்லில் உலகளந்தான்
வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.
விளக்கம்
பாஞ்சசன்னியச் சங்கே! உலகளந்த
உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறக்
கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும் கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண்
குலத்தவர் உன்னிடம் பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பல்லாத இந்தக் காரியத்தை
நீ செய்வது உனக்குத் தகுதியா?
பாடல் - 9
பதினாறாம்
ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்,
பொதுவாக உண்பதனைப் புக்குநீ உண்டக்கால்,
சிதையாரோ உன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.
விளக்கம்
பெருஞ்செல்வம் உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின்
வாய் அமுதத்தைப் பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக்
குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள் யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே
பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?
பாடல் - 10
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே.
விளக்கம்
அழகில் சிறந்த திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான
கோதை, பாஞ்சசன்னியச் சங்கை, அதன் பெருமையைப் பாடிய பாசுரங்களைப் பயின்று எம்பெருமானைத் துதிப்பவர்கள் அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள்
ஆவார்கள்.
நன்றி
http://naachiyaarthirumozhi.blogspot.com/2016/07/64.html
https://www.deivatamil.com/divya-prabandham/andal/66-natchiar-thirumozhi-karuppuram.html
http://koodal1.blogspot.com/2013/06/blog-post.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக