வியாழன், 21 செப்டம்பர், 2023

ஊதாரிப்பிள்ளை - இயேசு காவியம்

 

இயேசு காவியம்  

ஊதாரிப்பிள்ளை

ஒரு தந்தை இரு மக்கள் ஊர் முழுதும் சொத்து

ஒரு பிள்ளை அவர்களிலே மணியான முத்து

சிறுபையன் ஊதாரி தேறாத நெத்து

தீராத மழையினிலே கரையேறும் வித்து

தன் பாகம் வேண்டுமெனத் தந்தையிடம் கேட்டான்

தந்தை அவன் மொழி கேட்டுச் சரிபாதி தந்தான்

தந்தானே யல்லாது தாளாது துடித்தான்

தன் பிள்ளை வாழட்டும் என்றேதான் கொடுத்தான்.

குருட்டுமகன் தன் சொத்தைக் குறைந்தவிலை விற்றுக்

கொண்டோடி வெளிநாட்டில் கும்மாளமிட்டான்!

பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி சென்று

பொருள் தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே நின்றான்!

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை சூழ

அறியாத இளமைந்தன் அலைந்தானே வாழ!

தன்னாட்டு மனிதனிடம் ஒரு வேலை தேட

தந்தானே ஒருவேலை பன்றிகளோடாட!

பன்றிக்குத் தருகின்ற உணவேதான் உணவு

பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன் கனவு

அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய அறிவு

அப்பாவின் கால்களிலே விழுகின்ற நினைவு!

என்தந்தாய் வானுக்கும் உமக்கும் எதிரானேன்

எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப் போனேன்.

உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய்!

உன்பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய்!

இப்படிப்போய் விழ வேண்டும் என்றெண்ணிச் சென்றான்.

எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன் நின்றான்.

அப்பா என் மகனே என்றணைத்தானே தந்தை

அன்பான தந்தையின்முன் அழுதவன் சிந்தை.

எப்போது வருவாய் என்று எண்ணியிருந்தேனே

இளைத்தாயே என் மகனே கண்மணியே தேனே

தப்பான பிள்ளையல்ல எதுவும்சொல்லாதே

சந்தர்ப்பம் செய்த சதி! வருவாய் இப்போதே!

யாரங்கே பணியாள் வா! பட்டாடை நகைகள்

அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்

பேர்சொல்லும் மகனுக்குப் பருங்கன்றின் கறிகள்

பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச் சொன்னான்.

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும்போது

மனையிலே சங்கீதம் நடனவகை நூறு

சாலையிலே நின்றபடி ஏன் சத்தம்? என்றான்

தம்பி இன்று வந்துள்ளார் என்றொருவன் சொன்னான்

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன் நின்றான்

அப்போது தந்தையவன் அந்த இடம் வந்தான்

சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய் ஏற்றீர்

சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர் போற்றி!

உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்

ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை உண்டா,

கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு சொல்ல

கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை சொன்னான்.

என்னோடு என்றும்நீ இருப்பவனேயன்றோ!

என் செல்வம் எந்நாளும் உன்னுடையதன்றோ!

உன் தம்பி இறந்ததன்பின் உயிர் பெற்று வந்தான்!

உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

விளக்கம்

தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக