வியாழன், 21 செப்டம்பர், 2023

பூசலார் நாயனார் புராணம்

 

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

 

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

பாடல் எண் 1

            பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.

பாடல் எண் 2

உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.

பாடல் எண் 3

வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.

பாடல் எண் 4

சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.

பாடல் எண் 5

கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.

பாடல் எண் 6

தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.

பாடல் எண் 7

கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.

பாடல் எண் 8

விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

பாடல் எண் 9

பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.

பாடல் எண் 10

“திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

பாடல் எண் 11

திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.

பாடல் எண் 12

திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.

பாடல் எண் 13

அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.

பாடல் எண் 14

திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

பாடல் எண் 15

மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பாடல் எண் 16

நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

பாடல் எண் 17

பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக