நிலத்தை ஜெயித்த
விதை
இரா.வைரமுத்து
அது எப்படி
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த கருப்பை
அதுகூடச் சாத்தியம்தான்
ஆனால் இது எப்படி?
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?
ஒரு வீரிய விதை
முளைக்கும் போதே
பூமியை ஜெயிக்கிறதே
அப்படித்தான் அது
பாரதீ
உனக்கு என் ராஜ வணக்கம்
சில நூற்றாண்டுகளின்
நித்திரை கலைந்து
தமிழ்
உன் தோளில் தொங்கிச்
சோம்பல் முறித்தது
உன் பேனா
தமிழ்த்தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது
உன் கிழிசல் கோட்டு
கவிதாதேவிக்குப்
பீதாம்பரமானது
உன் எழுத்தில்தான்
முதன்முதலில்
வார்த்தை வாக்கியத்தைப் பேசியது.
உன் பாதங்களுக்குப்
பூச்சொரிவது – எங்கள்
பொறுப்பு.
ஆனால் பொறு.
உன் பாதங்களில்
சொரிவதற்கு
எங்கள்
பூக்களைக் கொஞ்சம்
புனிதப்படுத்திக் கொள்கிறோம்.
பாடல் விளக்கம்
பாரதியார் சொல்லிலும் செயலிலும் நெருப்புப்
போன்றவர். அவரது சுதந்திரப் பாடல்களும் ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பாகச் சுடர்விட்டு
எரிந்தது. பாரதி என்னும் தீக்குச்சி அந்நிய ஏகாதிபத்திய எரிமலையைத் தனி ஒருவனாக நின்று
சுட்டது. நிலத்தை ஒரு சிறிய விதை பிறந்து வெளிவருவது விதைக்கு வெற்றி. பாரதி என்ற விதை
இந்திய நாடு என்னும் நிலத்தில் வீரியம் மிக்கதாக முளைத்து எழுந்தது.
கவிதைகளுக்குரிய வளமையின்றி சில நூற்றாண்டுகளாக உறங்கிக்
கிடந்த தமிழன்னை பாரதியின் வருகையால் உறக்கம் கலைந்து எழுந்தாள். உரிமையும் மகிழ்ச்சியும்
கண்டுவிட்ட துடிப்பில் பாரதியின் தோள்களில் சோம்பல் முறித்தாள். பாரதியின் எழுதுகோல்
எளிமை, இனிமை, இயல்பு ஆகியவற்றைக் கவிதையாகத் தந்தது. அவருடைய கிழிந்த ஆடையே கவிதைத்
தாய்க்குப் பட்டாடையாக ஆனது.
பாரதியைப் போற்ற வேண்டியது கவிஞர்களின்
கடமை. கவிதைப் பூக்களால் அருடைய பாதங்களுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பது கவிஞரின்
எண்ணம். ஆனால் பாரதியைக் பாராட்டிப் பாத பூசை செய்வதற்குக் கவிதையில் தூய்மை காண வேண்டும்.
உண்மை காண வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக