திருவரங்கக் கலம்பகம் - மறம்
பேசவந்த தூதசெல்லரித்தவோலைசெல்லுமோ
பெருவரங்களருளரங்கர்பின்னைகேள்வர்தாளிலே
பாசம்வைத்த மறவர்பெண்ணைநேசம்வைத்துமுன்னமே
பட்டமன்னர்பட்டதெங்கள்பதிபுகுந்துபாரடா
வாசலுக்கிடும்படல்கவித்துவந்தகவிகைமா
மகுடகோடி தினையளக்கவைத்தகாலுநாழியும்
வீசுசாமரங்குடிற்றொடுத்தகற்றைசுற்றிலும்
வேலியிட்டதவர்களிட்டவில்லும்வாளும்வேலுமே.
விளக்கம்
எங்கள்பெண்ணை மணம் பேச வந்த தூதனே! செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது. தம் அன்பர்களுக்குப் பெரிய வரங்களை அருளுகின்ற, திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார்.
- எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகள், அவர்கள் பிடித்துவந்த, குடைகள்.
- தினையரிசிகளை, அளக்கும்படியாக, வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.
- எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள்.
- அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.
- ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக