நற்றிணை
திணை - குறிஞ்சி
பாடியவர் – கபிலர்
கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத்
தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்”
எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.
பாடல்
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
பாடலின்
விளக்கம்
“தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர்.
நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம்
இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து
நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து
வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர்
இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்.
என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம்
அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுகின்றாள்.
குறிப்பு
இப்பாடலில்,
தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது.
சந்தன மரத்தில் இனிய தேனடை வைத்தது போலத் தலைவன் தலைவியிடம் அன்பு வைத்துள்ளான் என்பது
கருத்து.
பசலை என்பது நிற வேறுபாடு. தலைவனின் பிரிவால் தலைவி வாடும்போது அவள் அழகின் பொலிவு குறைந்து போய் அவள் உடலில் நிற வேறுபாடுகள் தோன்றும். அதுவே பசலை நோய் என்று கூறப்படுகின்றது.
good explaination
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு