அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும்
பழமையைத் தேடுகின்ற முயற்சியில் தொல்லியல் துறை பயணம் செய்கின்றது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சிறு கற்கருவிகள், சக்கரம், தொல் பொருட்கள் ஆகியவற்றிலிருந்துதான் நவீனக் கருவிகள் உருவாயின. அதைத் தொடர்ந்தே மனித நாகரிகம் வளர்ச்சி பெற்றது.
தொல்லியல் துறையின் செயல்பாடுகள்
மும்பையில் உள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவனமானது, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் தொலையுணர்வுத் துறை போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து அகழாய்வுகளை மேற்கொள்கின்றது.
தொல்லியலும் அகழாய்வும்
தொல்லியல், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல், வரலாற்றுத் தொல்லியல் என இரு பிரிவுகளாகத் திகழ்கிறது. இலக்கியங்கள், கல்வெட்டுகள், காசுகள், கட்டிடங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களைத் தொல்லியல் ஆராய்கின்றது. ஆயினும் அகழாய்வுப் பணியே தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணியாகும்.
தொல்லியல் வல்லுநர்கள்
இந்தியத் தொல்லியல் தந்தை திரு அலெக்ஸாண்டர் கன்னிங்காம், இராபர்ட் புரூஸ்புட், கர்சன் பிரபு, சர் ஜான் மார்ஷல், சர் மார்டிமர் வீலர், ரேமண்ட் ஆல்சின், வி.டி.கிருஷ்ணசாமி, எ.கோஷ், எம்.என்.தேஷ்பாண்டே, பி.பெ.ராவ், பி.பி.லால், எச்.டி.சாங்கலியா, வி.என். மிஸ்ரா, ஆர்.எஸ்.பிஷ்ட் எனப் பல ஆய்வாளர்கள் அகழாய்வுகளில் தனித்தன்மையுடன் பங்களித்து இத்துறையை மேன்மைப்படுத்தியுள்ளனர்.
சிந்துவெளி அகழாய்வில் திராவிடத் தன்மைகள்
வரலாற்றுப் பயணியான யுவான்சுவாங் அவர்களின் குறிப்புகளைக் கொண்டே சிந்துவெளி
ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. தமிழர்கள் யார்? என்ற கேள்வியோடு சிந்துவெளி அகழ்வாராய்ச்சி
தொடங்கப்பட்டது. பேராசிரியர் பர்ரோ உள்ளிட்ட ஆய்வாளர்களின் கருத்தினை ஏற்று ஹீராஸ்
பாதிரியார் தலைமையில் சிந்து வெளியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த அகழாய்வு முடிவுகளை
முதன்முதல் உலகுக்குத் தெரிவித்தவர் சர்.ஜான் மார்ஷல் ஆவார்.
சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மொகஞ்சதாரோ செழிப்பான நகரமாக விளங்கியதாகவும், வெள்ளித்தில் மூழ்கி மணல் மேடானதாகவும்,
அதற்கு மேல் வேறு ஒரு நகரம் எழுந்தது என்றும், அதுவும் வெள்ளத்தில் மூழ்கியது என்றும்
ஆய்வுகள் கூறுகின்றன. ஏழு நகரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து அவை அனைத்தும் மண்ணில்
புதையுண்டு போனதாகவும் தெரிகிறது.
இவ்விரு நகரங்களிலும் ஊருக்கு வெளியே பெரிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருந்தன.
கோட்டைக்குள் மன்னரின் மாளிகையும், நீராடும் குளங்களும், பெரிய சாலைகளும், வீடுகளும்
நெற்களஞ்சியங்களும் இருந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறந்திருந்தது. மொகஞ்சதாரோ
முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தெருக்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.
சிந்து வெளி சிதைவுகளில் இலிங்க உருவங்கள் பல கிடைத்துள்ளன. சிந்துவெளி
மக்கள் பின்பற்றி வந்த சமயமானது கோள்கள், விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் தொடர்பு
கொண்டிருந்தது. மக்கள் கருப்பு, சிவப்பு மண்பாண்டங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின்
நாகரிகம் நகர்ப்புற நாகரிகம் ஆகும்.
சிந்துவெளியில் 300 மொழிக்குறிகள் காணப்படுகின்றன. இது பண்டைய தமிழ்
வடிவமே என்பதற்குப் பல சான்றுகளைத் தருகிறார் ஹீராஸ் பாதிரியார். அதனை இக்கால அறிவியல்வழி
ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சிந்துவெளி எழுத்துகளை ஆராயும் பணியில் முனைந்திருந்த
ஐராவதம் மகாதேவன் அவர்கள், சிந்துவெளி எழுத்துகள் சித்திரமும் ஒலிக்குறிப்பும் இணைந்து
வடிவமைப்பு பெற்றதால் இன்றைய தமிழில் அவற்றை பெயர்த்து எழுத முடியவில்லை என்கின்றார்.
சிந்து வெளி நாகரிகத்திற்கும் ஆரியருடைய நாகரிகத்திற்கும் பல வேற்றுமைகள்
காணப்படுகின்றன. ஆகவே சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகக் கொள்ளக்கூடாது என்பது
ஆய்வாளர்களின் முடிவாகும்.
ஆற்றங்கரை நாகரிகம்
தமிழ் நாட்டில் பழமையான நகர நாகரிகங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரையில்
இருந்தே தொடங்குகின்றன. தாமிரபரணி, வைகை, பாலாறு, காவிரி போன்ற ஆற்றங்கரைப் பகுதிகளில்
தமிழர் நாகரிகம் சார்ந்த அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.
பொருணை ஆற்றங்கரை நாகரிகம் (ஆதிச்ச நல்லூர்)
தாமிரபரணி நதிக்கரையின் முகத்துவார நகரான கொற்கையில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ளது ஆதிச்சநல்லூர். தாமிரபரணி நதிக்கரையில் இருப்பதால் இதை “பொருணை பண்பாடு“ என்று அழைக்கின்றனர். 1876ஆம் ஆண்டு இங்கு முதன்முதலில் ஆய்வு செய்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரூ ஜாகர் என்பவராவார். அங்குக் கிடைத்த பொருட்களை பெர்லின் அருங்காட்சியகத்தில் இடம்பெறச்
செய்தார்.
கிடைத்த பொருட்கள்
ஐம்பதுக்கும் மேற்பட்ட களிமண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், வாள்கள்,
கைக்கோடரிகள், எலும்புகள், மண்டையோடுகள் கிடைத்துள்ளன. பெரிய மண்பாண்டத்தினுள் சிறிய
மண்கலயங்கள் இருந்தன. அவற்றில் நெல் உமி வைக்கப்பட்டிருந்தது. ஈமத்தாழிகளைப் புதைக்க
பாறைகளில் உட்குடைவு செய்யப்பட்டுள்ளது. ஈமத்தாழிகள் பெரிதாக இருந்தன. ஏறத்தாழ 6 அடி
ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் (சிவகளை)
தொன்மையான தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களை ஏராளமாகக் கொண்டுள்ளது சிவகளை.
இவ்வூர் தூத்துக்குடியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து
10 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
சிவகளையின் முதற்கட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற “ஆதன்“ என்ற தமிழில் எழுத்துப்
பொறிக்கப்பட்ட பானை கீழடியை நினைவூட்டுகின்றது. வட்டச் சில்லுகள், நுண்கற்கருவிகள்
முதலியன கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு வண்ணப் பண்டங்கள், குடுவைகள், பானை மூடிகள்
ஆகியவை அழகிய வடிவமைப்பைப் பெற்றுள்ளன. அவற்றில் காணப்படுகின்ற வெள்ளை வண்ண வேலைப்பாடுகள்
தமிழ்ச்சமூகத்தின் பழமையை நிலைநாட்டுகின்றன. இந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கரிமப்
பகுப்பாய்வு செய்ததில் இதன் காலம் கி.மு.1155 என வரையறுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரை நாகரிகம் (கீழடி)
சங்க இலக்கியம் குறிப்பிடும் நகர்மயமாக்கலையும், பெருநிலச் சமூக உருவாக்கமும்
தமிழரின் சங்கால நாகரிகமும் பண்பாட்டுப் பழமையும் வெளிப்படுவதற்கான அடையாளங்களைக் கீழடி
அகழாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழரின் பண்பாட்டுப் புகழைப் பரப்பும் வகையில் “கீழடி தமிழரின் தாய்மடி”
என்ற வகையில், கீழடிப் பகுதியில் 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேல் அதிக சிதைவில்லாமல்
தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு ஒரு தொன்மை நகரக்குடியிருப்பும் தொழில்கூடப் பகுதிகளும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள்
முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் கிட்டத்தட்ட 5800 பொருட்கள் கிடைத்துள்ளன. கட்டடப் பகுதிகள், தமிழி எழுத்துகளும் கீறல்களும் கொண்ட பாறை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், செப்புக் காசுகள், மணிகள், சுடுமண் சிற்பங்கள், தங்க அணிகலன்கள், முத்துகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புகள் என்று இங்குக் கிடைத்த தொல்லியல் பொருட்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதுவரை தமிழகத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில்தான் தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன. மேலும், தந்தம் கொண்டு அமைக்கப்பட்ட சீப்புகள் முதன்முறையாக தமிழகத்தில் கீழடியில்தான் கிடைத்துள்ளன.
கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வில் 5820 பொருட்கள் கிடைத்துள்ளன. இவை
பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் கறை கிணறுகள்,
மழைநீர் வடியும் ஓடுகள் போன்றவை காணப்படுகின்றன. செங்கல் கட்டடப் பகுதிகள், உறைகிணறு, வடிகால் குழாய்கள் என்று மண்ணுக்கடியில் ஒரு நகரத்தின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
நான்காம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்களும், 50க்கும்
மேற்பட்ட தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கலங்களும் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.
இதன் மூலம், தமிழர்கள் வாழ்ந்த காலம் பின்னோக்கித் தள்ளப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த தமிழருக்கு மொழியை எழுதவும் தெரிந்திருக்கின்றது என்பது புலனானது. 2600 ஆண்டுகளுக்கு முன் ஆதன், அதன், குவிரன், உதிரன், இயனன், சேந்தன், அவதி என்று பானை ஓடுகளில் பெயர்களை எழுதும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம்.
தொல்பொருட்கள், தங்க அணிகலன்கள், செம்புப் பொருட்கள், இரும்புப் பாகங்கள்,
சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச் சில்லுகள், காதணிகள், கண்ணாடி மணிகற்கள், மண்பாண்ட
ஓடுகள் ஆகியவை வெளிக்கொண்டு வரப்பட்டன.
அண்மைக்கால அகழாய்வுகளும் அறிவியல் முறையிலான காலக்கணிப்புகளும் தமிழ்நாட்டில்
ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், கீழடி
ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க வரலாற்றுக்காலமான கி.மு.ஆறாம் நூற்றாண்டு அளவில்
மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்பதும் உறுதியாகின்றது.
கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள்
- தமிழக வரலாற்றில் வரையறுக்கப்பட்ட கருதுகோளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
- சங்க காலத்தின் கால வரையறையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
- கீழடியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது.
- கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை உணர்த்துகின்றது.
- சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை காட்டுகின்றது.
- வேளாண்மைத் துணைத் தொழிற்கூடங்கள், பானைத் தொழிற்கூடங்கள், ஆடைகள் தயாரிக்கும் நெசவுக்கூடங்கள் ஆகியவை இருந்துள்ளமையை அடையாளம் காட்டுகின்றது.
- செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு 97 சதவீதம் சுண்ணாம்புச் சாந்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகின்றது.
- தொழிற்கூடங்களுக்கு அருகில் குடிநீர்ப் பயன்பாட்டிற்கு உறை கிணறுகள் அமைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது.
- எளிய மக்கள் தங்களுக்குரிய பானைகளில் தங்களின் பெயர்களைத் தாங்களே தமிழி எழுத்துகளில் பொறித்துக் கொண்டனர் என்பதற்கு 1001 பானை ஓடுகள் சான்றுரைக்கின்றன. இதன் மூலமாக இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை அறிந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.
- கீழடி மக்கள் தங்கம், செம்பு, தந்தம், பளிங்கு கல், கண்ணாடி, பவளம் போன்றவற்றை அணிகலன்களாக அணிந்துள்ளனர். இது அவர்களின் பொருளாதார தன்னிறைவைக் காட்டுகின்றது.
- கீழடியில் கிடைத்துள்ள பானைகள், மணிகள் போன்ற தொல்பொருட்கள் யாவும், தமிழக மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உரோம நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. இச்சான்றுகள் சங்க காலப் பண்பாட்டு வரலாற்று ஆய்வில் முக்கிய திருப்புமுனையாகும்.
- திமில் உள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களின் எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. இவை வேளாண்மைக்குப் பயன்பட்டிருக்கலாம் என்றும், உணவிற்காகக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கருத முடிகின்றது.
- இரண்டாம் கட்ட அகழாய்வில் சிறிய அளவிலான 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38 x 23
x 6 அளவு மற்றும் 38 x 26 x 6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- தூண்கள் மரத்தால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரும்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டதால் மரச்சட்டங்களை இரும்பு ஆணியால் பொருத்தி இருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
- மேற்கூரை மீது விழும் மழைநீர் எளிதில் கீழே வரும் வகையில் கூரை ஓடுகளில் நீர் வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த கட்டுமான அமைப்புகள் சங்ககாலத்தின் வளர்ந்த சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.
- நூல் நூற்கப் பயன்படும் அச்சுகள், தூரிகைகள், தரையில் தொங்கும் கருங்கற்கள், சுடுமண் பாத்திரம், செம்பு ஊசி ஆகியவை, மக்களின் நெசவுத்தொழிலின் மேன்மையை உறுதி செய்கின்றன.
- பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் தங்கத்திலான ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4000க்கும் மேற்பட்ட கல் மணிகள், சீப்பு ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.
- பகடைக்காய், 601 வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள் ஆகியவை மக்களின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கையும் பிரதிபலிக்கின்றன.
- ரௌலட்டட் என்ற பானை ஓடுகள் ரோம் நாட்டைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டது. ஆனால் அவை இந்திய நாட்டுப் பானை வகையைச் சேர்ந்தவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- கீழடியில் கிடைத்துள்ள மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றில் மனிதனின் கைவிரல்களே கருவியாக இருந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
- வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லை என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.
தமிழர்களின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் நோக்கில் தமிழக அரசு மதுரையில் கீழடி அருங்காட்சியகம் ஒன்று அமைத்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக