திங்கள், 24 மார்ச், 2025

கார் என்று பேர் படைத்தாய் - காளமேகப் புலவர்

 

காளமேகப் புலவர்

கார் என்று பேர் படைத்தாய்

ஒரு முறை காளமேகப்புலவர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆய்ச்சியர் குலப் பெண் மோர் விற்றுக் கொண்டு இருந்தாள். அவருக்குத் தாகமாக இருந்ததால் அப்பெண்ணிடம் சென்று ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார். பின்பு குடித்த மோருக்குப் பணம் கொடுத்தார். அவரை புலவர் என்று அறிந்திருந்த அப்பெண் பணம் வேண்டாம் என்றும் பதிலாகத் தன் மோரைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறும் கேட்டாள். அவர் பாடிய பாடல் பின்வருமாறு.

பாடல்

கார் என்று பேர் படைத்தாய் ககனத்து உறும்போது

நீர் என்று பேர் படைத்தாய் கொடுந்தரையில் வந்ததற்பின்

வார் ஒன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேறும் பெற்றாயே

விளக்கம்

“மோரே! நீ வானத்தில் இருக்கும்போது மேகம் என்று பெயரைப் பெற்றிருந்தாய். இந்த மண்ணுலகை அடைந்து நிலத்தில் ஓடியபோது நீர் என்று பெயர் கொண்டாய். இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்று பெயர் பெற்றாய். இவ்வாறு கார், நீர், மோர் என்ற மூன்று பெயர்களையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்” என்று பாடினார். மோரில் சிறிது தண்ணீர் அதிகமாகக் கலந்து இருந்ததை நகைச்சுவை கலந்து பாடியுள்ளார் புலவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக