தம்பிக்கு - மு.வரதராசனார்
முதல் கடிதம்
முன்னுரை
டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு
என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார்.
அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும்
என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் கடிதத்தில் அவர் இளைஞர்களுக்குக்
கூறிய அறிவுரைகளைப் பின்வருமாறு காணலாம்.
நன்மை - வன்மை
நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில்
வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் வாழ்க்கையில் துன்புற்று வீழ்கின்றர்.
வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர். இதற்கு நாடு, வீடு
எதுவும் விதிவிலக்கல்ல. அதன்படி தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும்,
குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக்
கொள்ள வேண்டும்.
உடல் - உள்ளம்
வாழ்க்கையில்
ஒன்றை மட்டும் போற்றுகின்றவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றி வாழ்ந்தால்,
உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்தி அழிக்கின்றது. உள்ளத்தை மட்டும்
தூய்மையாகப் போற்றுகின்றவனுக்கு, உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து, அவனுடைய
உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அழிக்கின்றது. எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும்,
தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.
அறநெறி – பொருள்நெறி
வாழ்க்கையில்
அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
அறத்தை நினைத்து பொருளை மறக்கும்படியாகவோ, பொருளைப் போற்றி அறத்தை மறக்கும்படியாகவோ
அவர் கூறவில்லை. வாழ்க்கையின் பல பகுதிகளைப் போற்றி வாழ அறம், பொருள், இன்பம் என்ற
மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. திருக்குறளைப் பெற்ற நாம், திருவள்ளுவரையும்
போற்றவில்லை. திருக்குறளையும் போற்றவில்லை. போற்றினால் நம் வாழ்வு வளம் பெறும்.
தமிழ்மொழி – வன்மை மொழி
நல்ல மொழியான
தமிழை வன்மை பொருந்திய மொழியாக நாம் ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு
அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை.
வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது. நல்ல இசை தந்த யாழ் என்னும் இசைக்கருவி புறக்கணிக்கப்பட்டு
நாளடைவில் மக்கள் மனதில் இருந்து நீங்கிவிட்டது. தற்போது தமிழ் மொழிக்கும் அதே நிலைதான்
இருக்கின்றது.
பொதுமக்கள் - களிமண்
பொதுமக்களின்
விருப்பம்போலவே ஆட்சி நடக்கின்றது என்று கூறுவது
தவறு. காரணம் பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அணுகுண்டை விரும்பவில்லை. வேலையில்லாத்
திண்டாட்டத்தை, வறுமையை விரும்பவில்லை. தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும்
எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால்
யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.
கடமை – மேடைப் பேச்சு
களிமண் பிசைகின்றவர்களின்
கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவதுண்டா? இல்லை. அவர்களை மாற்றுவதற்காக,
நாம் ஏதேனும் செய்தோமா? அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து
விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதைச்
சற்று நிறுத்திவிட்டால் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும். மேடையின்
மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது. “இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக” என்று கூறிய
வள்ளுவரை எண்ணிப் பார்க்க வேண்டும்.
முடிவுரை
இன்றைய உலகம்
வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது.
ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு
என்று இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.
இரண்டாம் கடிதம்
முன்னுரை
மேடைப்பேச்சு
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது என்பது ஆசிரியரின் கூற்று.
ஆகையால் உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின்
வாயிலாகக் குறிப்பிடுகின்றார் மு.வரதராசனார்.
வீண் கனவு அல்ல
“திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும். அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக
இருக்க வேண்டும். ஆளுநர் தமிழில் கையாப்பம் இட வேண்டும்“ என்ற இவை யாவும் வீண் கனவு
என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை
வீண் கனவு என்று குறிப்பிடுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம்
ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால்
அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.
தமிழரின் திருமணங்களில்
திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல;
அவற்றின் பெருமை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும்,
ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; வங்காளத்திற்குத் தொண்டு செய்ய
சென்றபோது, அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக்
கொண்ட காந்தியடிகளின் நெறி.
தமிழரின் குறை
பிறருடைய சொல்லுக்கு
மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து
கொண்டு, தான் உணர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்றுகின்றனர்.
தமிழர் நெஞ்சம், உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டு
வந்தது. அதனால் சொல்கின்றவர் யார்? உண்மையாக சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா
என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.
விளைவு “புறமுதுகு காட்டாத தமிழர்களை இதோ என்
சொல்லால் வீழ்த்தி விட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்து விட்டேன். இனி, தமிழர்களே
தமிழர்களை அழித்துக் கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம். அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது. அவருடைய
வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்ப வேண்டும் என்று வள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.
மொழிப்பற்று
மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும்,
நாடு அமைவதும் நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள்
நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். நாட்டுப் பற்றையும், இனப்பற்றையும், பொருட்பற்றையும்
வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப் பற்று
அங்கே ஒழிந்தால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுப் பாடத்தை வாழ்ந்து காட்டத்
தொடங்கிவிடுவான் தமிழன். எனவே, தமிழன் மற்றவர் சொல் கேட்கும் பேதை ஆகிவிடக்கூடாது.
உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு
உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.
முடிவுரை
இன்று
தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப்
பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக