வியாழன், 16 ஜூலை, 2020

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

ஆண்டாள்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாராகப் போற்றப்படுபவர் ஆண்டாள். இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் பறித்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர். ஒரு நாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்றபோது, ஒரு குழந்தையை (ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ்க் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராக இருந்தார் கோதை. கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காகப் பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக நாம் இருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.


ஒருநாள் இதனை அறிந்து கொண்ட பெரியாழ்வார் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை ஒன்றைத் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்கு உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காகச் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடன் இருந்த பெரியாழ்வாரின் கனவில் இறைவன் தோன்றி, கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு கூறினார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள். இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

 நூல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் இலக்கியச் செழுமை மிக்கதாகவும்,  தத்துவக் கருத்துகள் உடையதாகவும் காணப்படுகின்றன.

திருப்பாவை

இவரது முதல் படைப்பான திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.  மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, காத்தியாயினி என்னும் பாவைக்கு வழிபாடு செய்வர்.  அதன்படி ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கண்ணனாகவும் பாவித்து நோன்பு நோற்பதாக அமைந்த பாடல்களே திருப்பாவை ஆகும். இப்பாடல்களில் பல வியக்கத்தக்க அறிவியல் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நாச்சியார் திருமொழி

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார்  திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூல் இறைவனை நினைத்து உருகிப்பாடும் காதல் சுவை மிகுந்த பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இப்பாடல்களில் அகப்பொருள் கூறுகள் நிறைந்துள்ளன.

பாடலின் உள்ளுறை

'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று தன் உடல், பொருள், ஆவி யாவும் இறைவனுக்கே உரியது என்ற உறுதியுடன், தனது உள்ளம் என்றுமே திருவரங்கனின் திருமலர்க்கரங்களைக் கைப்பிடிக்க கனவு கண்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து ஏங்குகிறாள். மார்கழி மாதம் முழுநிலவு தினத்தன்று பாவை நோன்பினைத் தொடங்கி,  இறைவனைப் பாடி இறையருளைப் பெறுகின்றாள். இதுவே நாச்சியார் திருமொழியில் உள்ள செய்தியாகும்.  இந்நூலில் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புகள் காணப்படுகின்றன.

1.   முதற் பத்துப் பாடல்கள் காமனைத் தொழுகின்றன.

2.   இரண்டாம் பத்துப் பாடல்கள், சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைகின்றன.

3.   மூன்றாம் பத்துப் பாடல்கள் கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறுகின்றன.

4.   நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் இழைத்தல் பற்றியன.

5.   ஐந்தாம் பத்துப் பாடல்கள் குயிலை விளித்துப் பாடுகின்றன.

6.   ஆறாம் பத்துப் பாடல்கள் திருமால் தன்னை மணஞ்செய்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைகின்றன.

7.   ஏழாம் பத்துப் பாடல்கள் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்துள்ளன.

8.   எட்டாம் பத்துப் பாடல்கள் மேகவிடுதூதாக அமைந்துள்ளன.

9.   ஒன்பதாம் பத்துப் பாடல்கள் திருமாலை வழிபடும் பாங்கில் அமைந்துள்ளன.

10. பத்தாம் பத்துப் பாடல்கள் மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்துள்ளன.

11.  பதினோராம் பத்துப் பாடல்கள் திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளன.

12. பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்தவை.

13. பதிமூன்றாம் பத்துப் பத்துப் பாடல்கள் அவலம் தணி என இறைவனை வேண்டுகின்றன.

14. இறுதிப் பத்துப் பாடல்கள் பிருந்தாவனத்தில் பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகின்றன. 

இங்கே நமக்குப் பாடமாக வைத்திருப்பது ஆறாம் பத்தில் உள்ள பகுதியாகும்.  கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கனவு கண்டாள். தன் கனவினைத் தன் தோழிக்குக் கூறுகின்றாள். தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப் பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். என் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்து வைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ!' என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள். அச்சுவை மிகுந்த பாடல்களைக் காண்போம்.

 நாச்சியார் திருமொழி பாடலும் விளக்கமும்




பாடல் எண் - 1

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகின்றன. அவற்றின் நடுவே என் தலைவனாகிய கண்ணன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவனை எதிர் கொண்டு வரவேற்கும் வகையில், நகர் முழுவதும் பூரணக் கும்பம் வைத்த தோரணக் கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்டக் காட்சியைக் கனவில் கண்டு மகிழ்ந்தேன் தோழி! எனத் தன் தோழியிடம் கூறுகின்றாள் கோதை.


பாடல் எண் - 2

நாளைவதுவை மணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்

காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம்

நாளை திருமணம் என்று நிச்சயம் செய்வதற்கு, நரசிம்மன் என்றும், மாதவன் என்றும், கோவிந்தன் என்றும் அழைக்கப்படுகின்ற திருமால், பாளைகளோடு கூடிய பாக்கு மரங்கள் கட்டிய மணப்பந்தலின் கீழ்ப் புகுவது போல் கனவு கண்டேன். அவன் காளை போன்ற அழகுடையவனாக இருந்தான் என்று அதிசயிக்கின்றாள் கோதை.


பாடல் எண் 3

இந்திரன் உள்ளிட்ட, தேவர் குழாம் எல்லாம்,

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை,

அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

திருமாலுக்கு என்னைத் திருமணம் பேச, இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரும் பூமிக்கு வந்திருந்தனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு திருமாலின் தங்கையாகிய துர்க்கை திருமணப் புடவையை எனக்கு உடுத்தி மணமாலை அணிவித்ததுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 4

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்  எடுத்து ஏத்தி,

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்று என்னை,

காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

பல அந்தணர்கள் நான்கு திசைகளிலிருந்தும் புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து எங்களை வாழ்த்தி, கண்ணபிரானோடு என்னை இணைத்து காப்பு கட்ட கனவு கண்டேன் தோழி என்று நாணம் கொள்கின்றாள் கோதை.

பாடல் எண் – 5

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,

சதிர் இள மங்கையர் தாம்வந்து  எதிர்கொள்ள,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மணமகனை வரவேற்க, அழகிய இளம் பெண்கள் மங்கல தீபத்தையும், பொற் கலசங்களையும் தம் கைகளில் ஏந்திக் கொண்டு வந்தனர். அப்போது வட மதுரைக்கு அரசனாகிய கண்ணபிரான் ஆண்மை நிறைந்த கம்பீர நடையுடன் திருமணம் நடைபெற இருக்கும் இடத்தில் நுழைந்ததாகக் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 6

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத,

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மத்தளங்கள் கொட்டவும், சங்குகள் முழங்கவும், முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின்கீழ் கண்ணன் என்னைக் கைத்தலம் பற்ற கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 7

வாய்நல் லார்நல்ல மறைஓதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி,

தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மந்திரம் ஓதும் வைதிகர்கள் சிறந்த வேதங்களை ஓதினர். திருமணச் சடங்குகள் அந்தந்த மந்திரங்களால் நிறைவேற்றப்பட்டன. அப்போது திருமால் என் கரம் பிடித்து பசுமையான தர்ப்பைகளால் சூழப்பட்ட தீயை வலம் செய்வது போல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 8

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மை உடையவன் நாராய ணன்நம்பி,

செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

இப்பிறவிக்கும் ஏழேழ் பிறவிக்கும் பாதுகாவலனாக விளங்கும் கண்ணன், செம்மயுடைய தனது திருக்கையால் என் காலைப் பிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அம்மியின் மேல்  வைப்பதுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 9

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி,

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து,

பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம்

என் சகோதரர்கள் வந்து அக்னியின் முன்னால் என்னை நிறுத்தி நரசிம்மனாய் அவதரித்த கண்ணனின் திருக்கையின் மேல் என் கையை வைத்துப் பொரிகளை அள்ளிப் பரிமாறுவதுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 10

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதிவலம்செய்து மணநீர்,

அங்கு அவனோடும் உடன்சென்று அங் கானைமேல்,

மஞ்சனம் ஆட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

குங்குமத்தையும், சந்தனத்தையும் நன்றாகத் தடவி யானையின் மேல் அமர வைத்தனர். கண்ணனோடு இணைந்திருந்து அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் ஊர்வலம் வந்தேன். அதன் பின்னர் நல்ல மணநீரால் எங்கள் இருவரையும் நீராட்டுவதாக நான் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 11

ஆயனுக்காகத்தான் கண்ட கனாவினை,

வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

விளக்கம்

பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் கோவிந்தனுக்கு வாழ்க்கைப்பட்டதாக எண்ணி கனவு கண்ட தன்மையை ஓதுபவர்கள் நற்குணங்கள் அமைந்த கணவனையும் நன்மக்களையும் பெற்று மகிழ்வர்.

 முற்றும்

 


பன்னிரு ஆழ்வார்கள்

பன்னிரு ஆழ்வார்கள்

வைணவ சமயத்தின் தெய்வமாகக் கருதப்படுபவர் திருமால். அவர் மீது பக்தி கொண்டு தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்களை ஆழ்வார்கள் என்று கூறுவர். திருமாலின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்ற சொல்லால் குறித்தனர். நாதமுனிகள் என்பவர் இவர்கள் இயற்றிய 4000 பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரில் பெரும் நூலாகத் தொகுத்துள்ளார். திவ்விய என்ற சொல் திருமாலையும், பிரபந்தம் என்ற சொல் பாடலையும் குறிக்கின்றதுஇந்நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிடப் பிரபந்தம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. இந்நூல்,

முதலாயிரம்                 -    947 பாடல்கள்

பெரிய திருமொழி         1134 பாடல்கள்

திருவாய்மொழி             1102 பாடல்கள்

இயற்பா                           817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் திருமாலையும், அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்துப் பாடுகின்றன. பெரும்பாலான பாடல்கள் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இனி இவற்றைப் பாடிய பன்னிரு ஆழ்வார்கள் குறித்துக் காண்போம்.



 பன்னிரு ஆழ்வார்கள்

முதலாழ்வார் மூவர்

பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுகின்றனர். மூவரும் ஐப்பசி மாத்தில் அடுத்தடுத்த நாளில் தோன்றியவர்கள். மூவரும் தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி என்னும் மலர்களில் அவதரித்துள்ளனர். திருமாலின் பாஞ்சசன்னியம், கதாயுதம், நந்தகம் என்ற ஆயுதங்களின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். பிற ஆழ்வார்களோடு காலத்தால் முற்பட்டவர்களாக இருக்கின்றனர். மூவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் திருமாலால் ஆட்கொள்ளப்பட்டனர். இத்தகைய காரணங்களால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர்.

முதலாழ்வார் மூவரும் ஆட்கொள்ளப்பட்ட நிலை

திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு வீட்டின் திண்ணையில் பொய்கையாழ்வார் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பூத்தாழ்வார் அங்கு வந்து சேர்ந்தார். “இங்கே ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்” என்று கூறி பூதத்தாழ்வார் அமரப் பொய்கையாழ்வார் இடம் தந்தார். அப்போது பேயாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது முதல் இருவரும் “இங்கு ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்” என்று கூறிப் பேயாழ்வாருக்கு இடம் தந்தனர். இருள்மயமாக இருந்த அப்பொழுதில் இம்மூவருக்கும் இடையில் இன்னொருவர் சேர்ந்து நெருக்குவதுபோல மூவரும் உணர்ந்தனர். அது திருமால் தான் என உணர்ந்து மூவரும் இறைவனைப் பாடினர். இறையனுபவத்தில் இம்மூவரும் பாடிய நூறு நூறு பாடல்களே முதல் மூன்று திருவந்தாதிகளாக அமைந்துள்ளன.


1.பொய்கையாழ்வார்

இவர் முதலாழ்வார் மூவருள் முதலாமவர். காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னும் இடத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப்படுகிறார். திருமாலின் பாஞ்சசன்னியம் என்ற சங்கின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் பாடிய 100 பாடல்கள் முதல் திருவந்தாதியாக அமைந்துள்ளன.  காலம் கி.பி. 6 அல்லது 8 ஆம் நூற்றாண்டு ஆகும்.

2. பூதத்தாழ்வார்

இவர் முதலாழ்வார் மூவருள் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் குருக்கத்தி மலரில் தோன்றினார் என்பர். திருமாலின் கௌமோதகி என்ற கதாயுதத்தின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தம் பாடல்களில் பூதம் என்ற சொல்லைப் பல இடங்களில் அமையப் பாடியுள்ளமையால் பூதத்தாழ்வார் எனப்படுகிறார். காலம் கி.பி.6 அல்லது 8ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய 100 பாடல்கள் இரண்டாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.

3. பேயாழ்வார்

முதலாழ்வார் மூவருள் மூன்றாமவர். இவர் மயிலாப்பூரில் செவ்வல்லி மலரில் பிறந்தார். திருமாலின் நந்தகம் என்ற வாளின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். திருமாலின் மீது கொண்ட பக்தியால் நெஞ்சம் சோர்ந்து அழுது சிரித்து ஆடிப் பாடிப் பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் பேயாழ்வார் என்ற பெயர் பெற்றார். காலம் கி.பி. 6 அல்லது 8ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய 100 பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.

4. திருமழிசையாழ்வார்

இவர் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். பக்திசாரர் என்று அழைக்கப்படுகின்றார். திருமாலின் திருச்சக்கரத்தின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். திருமாலைத் தன் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு.

கோயில் பணி செய்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் முதுமையால் பணி புரிய முடியாமல் தள்ளாடியதைக் கண்டார். திருமாலிடம் மனமுருகி வேண்ட அம்மூதாட்டி இளமை பெற்றார். இந்தச் செய்தியை அறிந்த அந்நாட்டு மன்னன் அவரின் சீடனான கணிகண்ணனிடம் ஆழ்வாரை அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னையும் இளமையாக்குமாறுகூறினான். கணிகண்ணன் மறுத்தார். உடனே தன்னைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டான். “நாராயணனைப் பாடும் வாயால் நரனை (மனதினை) பாடேன்என்றார் கணிகண்ணன்.  கோபமுற்ற மன்னன் உடனே நீ ஊரை விட்டு வெளியேற வேண்டும்என உத்தரவிட்டான். இதனை அறிந்த திருமழிசையாழ்வார் கோயிலில் திருமாலிடம் சென்று,

கணிகண்ணன் போகின்றான் காமரும் பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டாதுணிவுடைய

செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

எனக் கூறினார். இறைவனும் ஆழ்வார் சொன்னவண்ணம் திருமழிசையாழ்வாரோடும் கணிகண்ணனோடும் புறப்படத் தயாராகி கோயிலில் இருந்து மறைந்து விட்டார். உண்மை உணர்ந்த மன்னன் அச்சம் கொண்டு, திருமழிசையாழ்வாரிடமும், கணிகண்ணனிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். உடனே, திருமழிசையாழ்வார் திருமாலிடம் செந்நாப் புலவன் போக்கொழிந்தேன் நீயும் உன்றன் பைந்நாகப் பாய் விரித்துக் கொள் என்று பாட, இறைவன் சிலை, முன்பு போல் தோன்றியது. ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்த காரணத்தால் காஞ்சிப் பெருமாளுக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் நிலைத்து விட்டது.  இவர் இயற்றிய நூல்கள் திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியனவாகும்.

5. நம்மாழ்வார்

இவர் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாறன் காரி. தாய் உடைய நங்கை. நம்மாழ்வார் குழந்தையாக இருந்தபோது இவரது பெற்றோர் இவரைப் பெருமாள் கோயிலில் இறக்கி விட்டனர். நம்மாழ்வார் தவழ்ந்து சென்று புளியமரத்தடியில் பத்மாசனம் இட்டு யோகத்தில் அமர்ந்தார். அந்தப் புளிய மரத்தை ஆதிசேடனின் அவதாரம் என்றும் கூறுவர்.  பிறந்தது முதல் பேசாதிருந்து புளியமரத்தடியில் தவமியற்றி திருமாலின் திருவருளால் பேசியவர். குழந்தை முதலே யோகத்தில் இருந்த இவர் அசைவு தரும் காற்றாகிய சடம் என்னும் வாயுவைச் சினந்து அடக்கியதால் சடகோபர் எனப்பட்டார். திருமால் இவரை நம்சடகோபன் என அழைத்தமையால் நம்மாழ்வார் என அழைக்கப்படுகின்றார். காரிமாறன், பராங்குசன், தமிழ் மாறன், வகுளாபரணன் என்பன இவருடைய வேறு பெயர்களாகும். திருஆசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்களைப் பாடியுள்ளார். இவரை வேதம் செய்த தமிழ்மாறன் என்றும், வைணவத்து மாணிக்கவாசகர் என்றும் புகழ்வர். இவர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு. 

6. மதுரகவியாழ்வார்

இவர் பாண்டிய நாட்டுத் திருக்கோளூரில் பிறந்தவர். செவிக்கினிய சிந்தனைக்கினிய பல பாடல்களைப் பாடிய காரணத்தால் இவர் மதுரகவியாழ்வார் எனப் பெயர் பெற்றார். இவர் நம்மாழ்வாரின் சீடர். திருமால் அடியவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், நம்மாழ்வாரையே தெய்வமாக நினைத்துப் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள்கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று அறியப்படுகின்றன. 11 பாசுரங்களைக் கொண்ட இந்நூல் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்குவதால் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.

7.குலசேகராழ்வார்

இவர் சேர நாட்டில் உள்ள திருவஞ்சைக்களம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். திருடவரதன் என்னும் மன்னனின் மகன். திருமால் மீது கொண்ட பக்தியால் அரச பதவியைத் துறந்தவர். திருமாலின் கௌத்துப மணியின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். கடல் நாயகன், கோழிக்கோன் என்பது இவருடைய வேறு பெயர்கள்.  திருவேங்கட மலையில் பறவையாக, மீனாக, ஆறாக, படியாக, கொடிமரமாகப் பிறக்கும் வரம் கிடைக்க வேண்டும் என வேண்டியவர். தமிழில் பெருமாள் திருமொழி, வடமொழியில் முகுந்த மாலை என்று நூல்களை இயற்றியுள்ளார்.  இவருடைய காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு என்பர்.

8. பெரியாழ்வார்

இவர் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். இவரை விஷ்ணுசித்தன் என்றும், பட்டர்பிரான் என்றும் கூறுவர். திருவில்லிப்புத்தூரில் ஒரு நந்தவனம் அமைத்துப் பூமாலை கட்டி இறைவனுக்கு அணிவித்து வழிபாடு செய்து வந்தார்.  கண்ணனுடைய குழந்தைப் பருவத்தைப் பிள்ளைத்தமிழ் நூலாகப் பாடியுள்ளார். ஆண்டாளைத் தம் மகளாகக் கருதி வளர்த்தார். திருமொழி, திருப்பல்லாண்டு என்ற இரு நூல்களை இயற்றியுள்ளார். திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் எனப் போற்றப்படுகின்றார். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

9. ஆண்டாள்

பெரியாழ்வார் வளர்த்த பெண்பிள்ளை இவர். இவர் அணிந்த மலர்மாலையை இறைவன் மனமுவந்து ஏற்றதால் இவரைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைப்பர். “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்என்று உறுதியான மனம் கொண்டு திருமாலையே காதலானாக எண்ணியவர். இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் எனப்படுகின்றார். நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்ற இரு நூல்களைக் காதல் சுவை ததும்பப் பாடியுள்ளார்.  இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.

10.திருப்பாணாழ்வார்

இவர் உறையூரில் பிறந்தவர். இசை வழிபாடு செய்யும் பாணர் குலத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் ஏந்திப் பெருமாளைப் பாடி வந்ததால் திருப்பாணாழ்வார் எனப் பெயர் பெற்றார். திருமாலின் மார்பில் இருக்கும் மருவின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். தீண்டத்தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப்பட்டதால் காவிரியைக் கடந்து திருமாலைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் கரையில் நின்றபடியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார். திருப்பாணாழ்வார் காவிரிக் கரையில் நிற்பதையே தீட்டுப்பட்டதாகக் கருதி அந்தணர் குழுவினர் கல்லால் எறிந்து அவரைக் காயப்படுத்தினர். அந்தணர்களின் செயலைக் கண்டிக்க விரும்பிய திருமால் திருப்பாணாழ்வார் பட்ட காயத்தின் குருதியைத் தன் நெற்றியில் காட்டினார். தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றி, கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் அமலனாதிப்பிரான் என்னும் பத்துப் பாசுரங்களைப் பாடினார்.

11. தொண்டரடிப்பொடியாழ்வார்

விப்பிர நாராணன் என்பது இவருடைய இயற்பெயர். திருவரங்க நாதனுக்குத் தினந்தோறும் மாலை அணிவிக்க ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார். அங்கு தேவதேவி என்ற பரத்தைப் பெண்ணுடன்  காதல் வயப்பட்டுச் சிறை செல்லும் நிலைக்கு ஆளானார். பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். தன் தவறுக்கு வருந்தி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். தொண்டர்களுக்கெல்லாம் நான் அடியவன் என்ற பொருளில் தொண்டரடிப்பொடியாழ்வார் என அழைக்கப்படுகின்றார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற நூல்களைப் பாடியுள்ளார். திருமாலின் வனமாலையின் அவதாரமாகக் கருதப்படுகின்றார்.

12.திருமங்கையாழ்வார்

சோழ நாட்டில் திருக்குறையலூரில் கள்ளர் மரபில் நீலன் என்பவரின் மகனாகத் தோன்றியவர். மாவீரனாகத் திகழ்ந்த இவர் திருவாலி நாட்டின் மன்னனாகவும், சோழனுக்குப் படைத்தலைவனாகவும் பணியாற்றினார். இவருடைய இயற்பெயர் கலியன். வைணவ குலத்தைச் சேர்ந்த குமுதவல்லி என்னும் பெண்ணை மணந்தார். மனைவியின் விருப்பப்படி நாள்தோறும் 1008 அடியவர்களுக்கு அமுது படைத்து வந்தார். இதனால் சோழப் பேரரசனுக்குத் திறை செலுத்த முடியாமல் வருந்தினார். அடியவர்க்கு அமுது படைக்க வழியின்றி வழிப்பறியில் ஈடுபட்டார். ஒருநாள் வழிப்பறியின்போது திருமால் தன் தேவியுடன் மணமக்கள் கோலத்தில் வந்து இவரை ஆட்கொண்டார். இவர் இறைவனின் சாரங்கம் என்னும் வில்லின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். நீலன், ஆலி நாடன், பரகாலன், கலியன் என்பன இவருடைய வேறு பெயர்கள். பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமொழி, சிறிய திருமொழி ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.