ஞாயிறு, 8 நவம்பர், 2020

புதுக்கவிதை - லீலை

 

லீலை

ந.பிச்சமூர்த்தி

மண்ணில் பிறந்தால் வானேற ஆசை
காலோடிருந்தால் பறப்பதற்கு ஆசை
வானாயிருந்தால் பூமிக்கு வேட்கை
கொண்டலாயிருந்தால் மழையாகும் ஆசை

மின்னலாயிருந்தால் எருக்குழிக்கு ஆசை
எருக்குழியாயிருந்தால் மலராகும் பித்து
இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆசை
துரும்பாயிருந்தால் நெருப்புக்கு ஆசை

தனியாயிருந்தால் வீட்டுக்கு ஆசை
வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்கு ஆசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை
உனக்கோ !  உலகாளும் ஆசை.

கவிதையின் விளக்கம்

    மாற்றம் பெற வேண்டும் என்பதுதான் உலகத்தின் இயற்கை. எந்த ஒரு பொருளும் தன் இயல்பில் நின்றாலும், அடுத்த நிலைக்குச் செல்வதையே விரும்புகின்றன. மனிதனின் மனமும் அவ்வாறே செயல்படுகின்றது. இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே லீலை என்ற கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர் ந. பிச்ச மூர்த்தி.                                                                  

  • மண்ணில் பிறந்தவன் வானத்தில் ஏறிச் செல்ல விரும்புகின்றான். 

  • கால்கள் இருப்பவன் நடந்து செல்ல விரும்பாமல் வானத்தில் பறப்பதற்கு ஆசைப்படுகின்றான். 

  •  வானமாக இருப்பின் பூமியாக இருக்க வேண்டும் என வேட்கைக் கொள்கின்றது. 

  • மேகமாக இருப்பினும் அவை மழையாகப் பொழிவதையே விரும்புகின்றன. 

  • மின்னல்கள் யாவும் மண்ணில் எருக்குழியாக விரும்புகின்றன. 

  •   எருக்குழியோ மலர்களாக மாற முயற்சி செய்கின்றன. 

  •   இரும்பு காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதன்பால் செல்கின்றது. 

  •  துரும்புகள் நெருப்பினைத் தேடி போகின்றன. 

  • தனிமையில் இருப்பவன் வீட்டைத் தேடுகின்றான். 

  •  வீட்டில் இருப்பவனோ மோட்சத்தை விரும்புகின்றான். 

  •  நான் நீயாக இருப்பதை விரும்புகின்றேன். 

  •  நீயோ உலகமாக இருப்பதை விரும்புகின்றாய்!

என்று பாடி முடிக்கின்றார் கவிஞர்.  எல்லா உயிர்களும் இறையைச் சென்று அடைய விரும்புகின்றன என்பதை “நான் நீயாகும் ஆசை” என்ற வரியும், இறைவன் உலகை வளப்படுத்தவே விரும்புகின்றான் என்பதை “ உனக்கோ உலகாகும் ஆசை” என்ற வரியும் மெய்ப்பிக்கின்றன.

உட்பொருள்

ஒன்று பலவாகவும், பலது ஒன்றாகவும் மாறி வருவதுதான் இறைவனின் நியதி. அதை இறைவனின் விளையாட்டு என்றும் கூறலாம். உலக வாழ்க்கை ஒரு நிலையில் இல்லாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்ற தத்துவத்தை மிக நேர்த்தியாக இக்கவிதையில் படைத்திருக்கின்றார் ஆசிரியர். அத்தகைய இறைவனின் விளையாட்டில் மாயம் உண்டு. ஆனந்தம் உண்டு. உண்மையை அறிய வேண்டிய தெளிவும் உண்டு என்பதே இக்கவிதை உணர்த்தும் பொருளாகும்.

 

புதுக்கவிதை - காதல்

கவிஞர் ந.பிச்சமூர்த்தி

காதல்

எண்ணாத நாள் ஒன்றில்
வந்தார்

கோடை மழைபோல்
காட்டாற்று வெள்ளம்போல்
வீடெங்கும் குப்பைகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் வேர்வை
கைஎங்கும் சமையல் மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்
.

கவிதையின் விளக்கம்

ந.பிச்சமூர்த்தி அவர்கள் தன்னைக் காதலியாகக் கற்பனை செய்து பாடிய கவிதை இது. தன் வீட்டு வழியாகச் செல்லும் காதலனைக் காணுகின்றாள் காதலி. தன் வீட்டிற்கு அழைத்து அவரோடு காதல் மொழி பேச விரும்பி காதலனை அழைக்கின்றாள். காதலன் “நாளை வருகிறேன்” என்று கூறிவிட்டுச் செல்கின்றான். மறுநாள் தன் இல்லத்தைத் தூய்மைப்படுத்திவிட்டு, தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு காதலனின் வரவிற்காகக் காத்திருக்கின்றாள் காதலி. காதலன் அன்று வரவில்லை.

ஆனால், கோடையில் வரும் மழைபோல, காட்டாற்றில் வரும் வெள்ளம் போல எதிர்பாராத நாள் அன்று காதலன் வீட்டிற்கு வந்து நிற்கின்றான். அன்று பார்த்து வீடெங்கும் குப்பைக் கூளங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கும் கந்தல் துணிகள் சிதறிக் கிடக்கின்றன. காதலியின் முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. கைகளில் சமையல் மணம் கழந்திருந்தது. வீட்டின் இயல்பான நிலையே எங்கும் காட்சியாக இருந்தது. சமையல் செய்தமையால் வீடெங்கும் சிறு புகைச்சல் ஏற்பட்டது. ஆங்காங்கு சில ஒட்டடைகளும் இருந்தன.

இந்த நேரத்தில்தானா தன் காதலர் வர வேண்டும் என்று தவிக்கின்றாள் காதலி. என்ன செய்வதென்று அறியாது, ஏதும் செய்ய மறந்து நின்றிருந்தாள். ஆனால் வந்தவரோ, “கேட்டுப் பெறுவதல்ல காதல். தருவதுதான் காதல்” என்று கூறி வீட்டின் நிலைமையைக் கருத்தில் கொள்ளாது தரையில் அமர்ந்தார். அவருடைய காதலில் கரைந்து போனவளாய், தன்னையே தொலைத்தவளாய் நின்றாள் காதலி.

உட்பொருள்

தேடும்போது கிடைக்காது, எதிர்பாராத நிலையில் கிடைக்கும் ஆன்மக் காதலால் உண்டாகும் இன்பத்தை இக்கவிதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. நம் மனம் என்னும் இல்லம் எத்தகைய அழுக்குடன் இருந்தாலும் அன்பைத் தாங்கி நிற்கும் ஆன்மாவைத் தேடியே இறைவன் நம்மை ஆட்கொள்வார் என்ற இறைத் தத்துவம் இக்கவிதையில் கூறப்படுகின்றது. “என்னைக் காணேன்” என்ற தொடர், “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்” என்ற நாவுக்கரசரின் ஆன்மக் காதலை நமக்கு நினைவுப்படுத்துகின்றது.


வியாழன், 15 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - வழிப்பயணம்


வழிப்பயணம்

 கவிஞர் தமிழ் ஒளி

தோள் கனக்குது சுமை கனக்குது
தொல்லை வழிப்பயணம் ! – இது
தொல்லை வழிப்பயணம் !

நாள் கனக்குது நடை கனக்குது
நைந்த வழிப்பயணம் !-இது
நைந்த வழிப்பயணம்!

 

கால் கடுக்குது கை கடுக்குது
கைத்த வழிப்பயணம்! –இது
கைத்த வழிப்பயணம் !


மேல் கடுக்குது வெயில் முடுக்குது

வெற்று வழிப்பயணம் ! –இது
சுற்று வழிப்பயணம் !

 

பள்ள மிருக்குது பாதை சறுக்குது
பார வழிப்பயணம் ! – இது
பார வழிப்பயணம் !


உள்ள மிருக்குது துள்ளி நடந்திட
ஒற்றை வழிப்பயணம் ! – இது
ஒற்றை வழிப்பயணம் !


தேகம் நடுங்குது வேகம் ஒடுங்குது
தேச வழிப்பயணம் !- இது
தேச வழிப்பயணம்!


காகம் இறங்குது கழுகு சுற்றுது
காட்டு வழிப்பயணம்! –இது
காட்டு வழிப்பயணம் !

 

நேரம் கிடக்குது தூரம் கிடக்குது
நீண்ட வழிப்பயணம் ! –இது
நீண்ட வழிப்பயணம்!


பாரம் நெருக்குது பாதை சறுக்குது
கெட்ட வழிப்பயணம்! –இது
கெட்ட வழிப்பயணம்!

 

போது குறுகுது போதை பெருகுது
போகும் வழிப்பயம்! –உயிர்
போகும் வழிப்பயம் !


வாது பெருகுது வம்பு வருகுது
வாழ்க்கை வழிப்பயணம்! - இது
வாழ்க்கை வழிப்பயணம் !


பாடலின் பொருள்

கவிஞர் தமிழ்ஒளியின் வழிப்பயணம் என்ற கவிதை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை விளக்குகின்றது.

நிலையற்ற வாழ்க்கை

மனிதனின் வாழ்க்கை நிலையில்லாதது. அவன் கொண்ட ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் நிலையில்லாதது. வாழ்க்கை என்ற பயணத்தைத் தொடர்கின்ற மனிதன் தன் பயணத்தில் பல்வேறு பரிமாணங்களை அடைகின்றான்.

தொல்லைவழிப்பயணம்

பிறந்தது முதல் இறக்கின்ற வரை ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டே இருப்பதால் வாழ்க்கை தொல்லைவழிப் பயணமாக அமைகின்றது.

நைந்த வழிப்பயணம்

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பதால் மனம் துன்பமடைகின்றது. அதனால் நைந்த வழிப்பயணமாக அமைகின்றது.

கைத்த வழிப்பயணம்

கால்களும், கைகளும் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தாலும், விரும்பியதை அடைய முடியாமல் போகும்போது வாழ்க்கை வெறுப்பாகின்றது. அதனால் கைத்த வழிப்பயணமாக அமைகின்றது. (கைத்த என்றால் அலைச்சல் என்று பொருள்)

வெற்று வழிப்பயணம்

வெயில், மழை என காலங்கள் மாறி மாறிச் சுழன்றாலும் போகின்ற இடம் எது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் அப்பயணம் வெற்று வழிப்பயணமாக அமைகின்றது.

பாரவழிப்பயணம்

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளால் விரும்பியதை அடைய முடியாத சூழல் உருவாகின்றது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையாக அமைவதால் இது பாரவழிப் பயணமாக இருக்கின்றது.

ஒற்றைவழிப்பயணம்

எத்தகைய துன்பங்கள் வந்தாலும், பல சோதனைகளைக் கடந்தாலும் இன்னும் செல்வோம் என்ற நம்பிக்கையின் வழிகளில் பயணத்தைத் தொடர மனம் விரும்புகின்றது. போனால் திரும்பி வர முடியாது என்று தெரிந்திருந்தும் அப்பயணத்தை விரும்புவதால் இது ஒற்றை வழிப்பயணம் என்பதை நினைவூட்டுகின்றார் கவிஞர்.

தேசவழிப்பயணம்

நோய்களும் முதுமையும் வாழ்க்கைப் பயணத்திற்குத் தடையாக அமைவதால் இறைவனின் தேசத்தை விரும்பி ஏற்கின்ற தேசவழிப் பயணமாக அமைகின்றது.

காட்டுவழிப்பயணம்

இளமையில் செய்த குற்றங்களையும், பாவங்களையும் முதுமையில் எண்ணிப் பார்ப்பதால் குற்ற உணர்ச்சிகளால் ஆட்படுகின்றோம். எனவே, அப்பயணம் காட்டுவழிப் பயணம்போல் அமைகின்றது. “காகம் இறங்குது கழுகு சுற்றுது” என்ற வரிகள் நாம் செய்த குற்றங்கள், பாவங்களின் குறியீடாகும்.

நீண்ட வழிப்பயணம்

நாம் எத்தனை காலம் வாழ்வோம் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆகவே நமக்குத் தெரியாத பயணத்தை நாம் மேற்கொண்டிருப்பதால் இது நீண்ட வழிப்பயணமாக இருக்கின்றது.

கெட்ட வழிப்பயணம்

குடும்பத்தின் கடமைகளால் நெருக்கப்படும்போதும், கடமைகளை நிறைவேற்றப் போராடும்போதும் தடங்கல்கள் பல ஏற்படுகின்றன. அதனால் மனம் சோர்வுறும்போது கெட்டவழிப்பயணமாகத் தெரிகின்றது.

உயிர்ப்பயம்

வாழ்நாள் குறுகும்போது மனம் அச்சம் கொள்கிறது. அந்த அச்சத்தின் போதை பெருகப் பெருக மரணத்தை எதிர்பார்த்து வாழும் பயம் ஏற்படுகின்றது. (போது என்பதற்கு வாழ்நாள் என்று பொருள்)

வாழ்க்கை வழிப்பயணம்

வாழ்நாளின் இறுதிப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கும்போது உடலும் மனமும் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதனால் நம் மனதில் நியாய தர்மங்களின் விவாதங்கள் தொடர்கின்றன. இதுவே வாழ்க்கை வழிப்பயணம் என்று குறிப்பிடுகின்றார் கவிஞர்.