சனி, 24 ஏப்ரல், 2021

ஆங்கில மரபுத் தொடர்கள் - தமிழாக்கம்

ஆங்கில மரபுத் தொடர்கள் - தமிழாக்கம்

வ.எண்

ஆங்கில மரபுத் தொடர்

தமிழாக்கம்

1.

To take into

கருத்தில் கொண்டு

2

To look after

மேற்பார்வை செய்தல்

3

A1

முதல் தரம்

4

Abc

அடிப்படையான அறிவு

5

To add fuel to the fire

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது

6

A golden age

பொற்காலம்

7

To go ahead

முன்னேறுதல்

8

All in all

முழு அதிகாரமுடைய

9

All out

முழு மனத்துடன்

10

Once for all

முடிவாக

11

Above all

எல்லாவற்றிற்கும் மேலாக

12

Above board

ஒளிவு மறைவற்ற

13

Over and above

கூடுதலாக

14

Account for

விவரித்தல்

15

On account of

ஏனெனில்

16

Arm in arm

கை கோர்த்து

17

From  A to Z

தொடக்கத்திலிருந்து முடிவு வரை

18

Back out

வாக்கு மீறுதல்

19

Back bite

புறங்கூறுதல்

20

Bad blood

வெறுப்பு

21

Beard the lion

தைரியமாகச் சந்தித்தல்

22

Bell the cat

பூனைக்கு மணி கட்டுதல்

23

Balck mail

பயமுறுத்தல்

24

Once in a blue moon

மிக அரிதாக

25

Miss the boat

வாய்ப்பு பறிபோதல்

26

Breathing time

குறுகிய ஓய்வுக் காலம்

27

Brush

ஒதுக்கித் தள்ளுதல்

28

Chalk out

திட்டமிடு

29

Cock and bull story

கட்டுக்கதை

30

Nip in the bud

முளையிலேயே கிள்ளி எறிதல்

31

High and dry

தனியே தவிக்க விட்டுச் செல்லுதல்

32

Jack of all trades

பல திறமைகளைப் பெற்றிருத்தல்

33

To look down upon

ஏளனமாக

34

To hit the mark

இலக்கை அடைதல்

35

To talk back

அகந்தையுடன் பதில் கூறுதல்

36

To take off

தரையை விட்டு மேலே கிளம்புதல்

37

To tear oneself

துயரத்துடன் பிரிதல்

38

To tell upon

பாதித்தல்

39

Ups and downs

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்

40

Upon my word

நிச்சயமாக

41

At one’s zenith

பெரிய பதவியில்

42

Breath freely

கவலையின்றி இயல்பாக இருத்தல்

43

To bring to book

குற்றம் சாட்டுதல்

44

Beat a retreat

பின்வாங்குதல்

45

To turn one’s back upon

அலட்சியம் செய்தல்

46

Back stair influence

பரிவுரை

47

Back and forth

முன்னும் பின்னும்

48

Bacon

இலட்சியத்தை அடைதல்

49

To save one’s back

காயமின்றித் தப்பித்தல்

50

Back bone

ஆதரவு தரும் மனிதர் அல்லது பொருள்

51

By accident

தற்செயலாக

52

For instance

சான்றாக

53

To call up

நினைவிற்கு

54

Dog sleep

சிறு தூக்கம்

55

Call off

திரும்பப் பெறுதல்

56

Be of a mind

இணங்கு

57

Called on

சந்தித்தல்

58

Bring to mind

நினைவுப்படுத்திப்பார்

59

Not a dog chance

சிறு வாய்ப்புக்கூட இன்றி

60

At discretion

மனம் போனபடி

61

At a discount

உயர்வாகக் கருதப்படாமல்

62

To work like a horse

கடின உழைப்பு

63

Hot and strong

கோபத்துடன்

64

Keep one’s head

பொறுமை இழக்காதிரு

65

Nip in the bud

முளையிலேயே கிள்ளி எறி

66

Be absorbed by

தன்னை மறந்து ஈடுபடு

67

Mind your step

எச்சரிக்கையாயிரு

68

Turn over a now leaf

திருந்திப் புதுவழி தொடங்கு

69

Win by head

மயிரிழையில் வெற்றி பெறுதல்

70

Win one’s way

போராடி முன்னேறுதல்

71

To look after

மேற்பார்வை செய்தல்

72

Answer back

எதிர்த்துக் கூறுதல்

73

All by oneself

தன்னந்தனியாக

74

Run over

அடிபடுதல்

75

Body politic

பொதுமக்கள்

76

Cry out

எதிர்த்தல்

77

Boast of

தற்பெருமை கொள்ளல்

78

Cast to the wind

புறக்கணி

79

Pen and ink

எழுத்து மூலம்

80

A pillar of faith

நம்பிக்கைத் துருவம்

81

In peril of

ஆபத்தான நிலையில்

82

Pin point

நுட்பமான

83

With a pinch of salt

முன் எச்சரிக்கையுடன்

84

Pit fall

எதிர்பாராத ஆபத்து

85

Rotten egg

உபயோகமில்லாத மனிதர்

86

A house of cards

மணல் வீடு கட்டுதல்

87

Heavy purse

செல்வந்தன்

88

Light purse

ஏழை

89

Put off

காலம் தாழ்த்துதல்

90

Put on

அணிந்துகொள்

91

Put up with

தாங்கிக்கொள்

92

The quality oa a defect

நன்மையோடு கலந்த தீய குணம்

93

The defect of quality

தீமையோடு கலந்த நன்மைக் குணம்

94

Really and truly

உண்மையில்

95

Tempt fate

அழிவைத் தேடிக் கொள்ளல்

96

Rain or shine

எல்லாச் சூழலிலும்

97

Radical error

அடிப்படைத் தவறு

98

Behind the scence

திரைக்குப் பின்னால்

99

The lion’s share

பலனில் பெரும் பங்கு

100

Castles in spain

மனக்கோட்டை

 


வல்லினம் மிகும், மிகா இடங்கள்

 

வல்லினம் மிகும் இடங்கள்

1.அ, இ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வரும் வல்லினங்களாகிய க, ச, த, ப மிகும்.

                          அ + பையன் - அப்பையன்

இ + பெண் - இப் பெண்

எ + திசை - எத்திசை

2.அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி? என்ற சுட்டு, வினாச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

                          அந்த + பெட்டி - அந்தப்பெட்டி

இந்த + பழம் - இந்தப் பழம்

                          எந்த + கோயில் - எந்தக் கோயில்

அங்கு + கண்டேன் - அங்குக் கண்டேன்

எங்கு + போனார்    - எங்குப் போனார்

அப்படி + கேள் - அப்படிக் கேள்

எப்படி + போனார் - எப்படிப் போனார்?

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

                          நூலை + படி - நூலைப் படி

பூவை + சூடு - பூவைச் சூடு

4.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

                          தோழனுக்கு + கொடு - தோழனுக்குக் கொடு

ஊருக்கு + செல் - ஊருக்குச் செல்

 

5.இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.

                           தண்ணீர் + பானை - தண்ணீர்ப் பானை

 மரம் + பெட்டி - மரப் பெட்டி

 சட்டை + துணி - சட்டைத் துணி

                           விழி + புனல் - விழிப்புனல்.

6.பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

                          பச்சை + கிளி - பச்சைக் கிளி

வெள்ளை + குதிரை - வெள்ளைக் குதிரை

7.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

                          தாமரை + பூ - தாமரைப் பூ

சாரை + பாம்பு - சாரைப் பாம்பு

8.உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

                          மலர் + கண் - மலர்க் கண்

தாமரை + கை - தாமரைக் கை

9.ஓர் எழுத்துச் சொற்கள் சிலவற்றில் வல்லினம் மிகும்.

                          தை + பாவை - தைப் பாவை

பூ + தொட்டி - பூத் தொட்டி

                          தீ + சுடர் - தீச் சுடர்

10.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

வளையா + செங்கோல் - வளையாச் செங்கோல்

அழியா + புகழ் - அழியாப் புகழ்.

 

11.வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு - பத்துப் பாட்டு

எட்டு + தொகை - எட்டுத் தொகை.

12.முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

                          திரு + குறள் - திருக்குறள்

பொது + சொத்து - பொதுச் சொத்து.

13.உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

                          மழை + காலம் - மழைக் காலம்

பனி + துளி - பனித் துளி

14.சால, தவ முதலான உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

சால + பேசினான் - சாலப் பேசினான்.

தவ + பெரிது - தவப் பெரிது

15.ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

                          ஆடு + பட்டி - ஆட்டுப் பட்டி

நாடு + பற்று - நாட்டுப் பற்று

 

 வல்லினம் மிகா இடங்கள்

 1.உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

                          தாய் + தந்தை - தாய் தந்தை

இரவு + பகல் - இரவு பகல்

2.வினைத்தொகையில் வல்லினம் மிகாது

                          பாய் + புலி - பாய் புலி

சுடு + சோறு - சுடு சோறு.

3.இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகாது

சல + சல - சலசல

பாம்பு + பாம்பு - பாம்பு பாம்பு!

கல + கல - கலகல

பார் + பார் - பார் பார்!

4.விளித்தொடரில் வல்லினம் மிகாது.

கண்ணா + பார் - கண்ணா பார்!

நண்பா + கேள் - நண்பா கேள்!

5.வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது

வீழ்க + தண்புனல் - வீழ்க தண்புனல்

வாழ்க + பல்லாண்டு - வாழ்க பல்லாண்டு

6.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

                          கதை + சொன்னார் - கதை சென்னார்

தமிழ் + கற்றேன் - தமிழ் கற்றேன்.

7.அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

 

அத்தனை + பழங்கள் - அத்தனை பழங்கள்

இத்தனை + கடைகள் - இத்தனை கடைகள்

எத்தனை + பெண்டிர் - எத்தனை பெண்டிர்

8.எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்கள் தவிர பிற எண்ணுப் பெயர்கள் பின் வல்லினம் மிகாது.

                          ஐந்து + படங்கள் - ஐந்து படங்கள்

இரண்டு + பேர் - இரண்டு பேர்

மூன்று + பள்ளி - மூன்று பள்ளி

9.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

வண்டு + பறந்தது - வண்டு பறந்தது

மலர் + பூத்தது - மலர் பூத்தது.

10.அவை, இவை - என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அவை + பறந்தன - அவை பறந்தன

இவை + சென்றன - இவை சென்றன

11.அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது, எவை என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

                          அது + போனது - அது போனது

இது + சென்றது - இது சென்றது

எது + கேட்டது - எது கேட்டது?

எவை + பார்த்தன - எவை பார்த்தன?

12.ஆ, ஏ, ஓ, என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

                          அவளா + சொன்னாள் - அவளா சொன்னாள்?

அவனோ + போனான் - அவனோ போனாள்?

அவனே + கேட்டான் - அவனே கேட்டான்?

13.மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது.

                          பூ வொடு + சேர்ந்த - பூ வொடு சேர்ந்த

கபிலரோடு + பரணர் - கபிலரோடு பரணர்

14.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

படித்த + பெண் - படித்த பெண்

நடித்த + கலைஞர் - நடித்த கலைஞர்

‘15.படிஎன்னும் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது.

சொன்னபடி + செய்தார் - சொன்னபடி செய்தார்

பாடியபடி + தொடர்ந்தார் - பாடியபடி தொடர்ந்தார்


 நன்றி

www.srmist.edu.in

புதன், 21 ஏப்ரல், 2021

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

“நாலடி நான்மணி நாநாற்பது ஐந்திணை

முப்பால் கடுங்கோவை பழமொழி - மாமூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பனவே

கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு

என வரும் பாடல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் அறநூல்கள் 11, அகநூல்கள் 6, புறநூல் 1.

அறநூல்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம்,       

ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள், முதுமொழிக்காஞ்சி  

அகநூல்கள்

 ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை                   

புறநூல்

களவழி நாற்பது

 

நூல்களின் சிறப்புகள்

நாலடியார்

1.திருக்குறளுக்கு அடுத்தப்படியாகப் போற்றப்படும் நீதி நூல். 

2.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி இதன் சிறப்பை விளக்குகின்றது.

3.சமண முனிவர்களால் பாடப்பட்டது. இதனைத் தொகுத்தவர்  பதுமனார்.

4.கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களும், 12 இயல்களும், 400 வெண்பாக்களும் உள்ளன.

5.வேளாண் வேதம், நாலடி நானூறு, குட்டித்திருக்குறள் என்றும் அழைக்கப்படுகின்றது.

6.திருக்குறள் போலவே அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.

அறத்துப்பால்       -     13 அதிகாரங்கள்

பொருட்பால்        -     24 அதிகாரங்கள்

காமத்துப்பால்      -     3 அதிகாரங்கள்

7.G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

8.கல்வியின் சிறப்பு குறித்த நாலடியார் பாடல் ஒன்று பின்வருமாறு.

                  குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

                 மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

                 நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்

                 கல்வி அழகே அழகு

நான்மணிக்கடிகை

1.இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார்.

2.கடிகை என்பதற்குத் துண்டு என பொருள். நான்கு மணித்துண்டுகள் இணைந்த மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரைப் பெற்றது.

3.கடவுள் வாழ்த்து உட்பட 104 வெண்பாக்கள் உள்ளன.

4.இந்நூலின் 7 மற்றும்100 வது பாடலை ஜி.யூ.போப் மொழிபெயர்த்துள்ளார்.

5.எக்குடியிலும் நன்மக்கள் பிறப்பர் என்ற கருத்தை,

                 கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்

                 ஒள்ளரிதாரம் பிறக்கும் பெருங்கடலுள்

                 பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

                 நல்லாள் பிறக்கும் குடி

என்ற பாடலால் விளக்குகின்றார் விளம்பி நாகனார்.

இன்னா நாற்பது

1.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.

2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களைக் கொண்டது.

3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இன்னாதவை என வற்புறுத்துவதால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

4.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று முடிவதாலும் இப்பெயர் பெற்றது எனலாம்.

5.கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

5.இந்நூலில் மொத்தம் 164 இன்னாத பொருட்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சில….

                 ஆற்றல் இல்லாதான் பிடித்த படை இன்னா

                 தீமையுடையார் அயலிருத்தல் இன்னா

                 உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா

                 கடுமொழியாளர் தொடர்பு இன்னா

                 திருவுடையாரைச் செறல் இன்னா

இனியவை நாற்பது

1.இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.

2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இனியவை என்று கூறப்படும் காரணத்தால் இது இனியவை நாற்பது என்ற பெயர் பெற்றது.

                 மானமிழந்தபின் வாழாமை முன் இனிதே

                 வருவாயறிந்து வழங்கல் இனிதே

                 குழவி தளிர்நடை காண்டலினிதே

                 கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே

என்பன போன்ற இனியவைகளை இந்நூலில் காணலாம்

திரிகடுகம்

1.திப்பிலி, சுக்கு, மிளகு எனும் மூன்றினால் ஆன பொருளுக்குத் திரிகடுகம் என்று பெயர். இவை உடல்நோயைப் போக்க வல்லது.

2.அதேபோன்று இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் வரும் மூன்று அறக்கருத்துகள் மக்களின் மனமயக்கத்தைப் போக்குகின்றன.

3.இது 100 வெண்பாக்களைக் கொண்டது.

4.இதன் ஆசிரியர் நல்லாதனார்.

5.ஒரு பெண் தன் கணவனுக்கு நண்புடையவாய், தாயாய், மனைவியாய் விளங்குவாள் என்ற பொருளில்,

                 நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்

                 இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் தொல்குடியின்

                 மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்

                 கற்புடையாள் பூண்ட கடன்

என்ற பாடல் தெரிவிக்கின்றது.

ஆசாரக்கோவை

1.ஆசாரம்    -     ஒழுக்கம். நாள்தோறும் செய்யவேண்டிய கடமைகள் பற்றிக் கூறுகிறது.

2.இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.

3.100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

4.வடமொழி மரபை ஒத்துள்ளது.

5.நீராடுதல், உண்ணும் முறை, துயிலும் முறை ஆகியவற்றை விரிவாகப் பேசுகின்றது.

                    நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்

                    இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்

                    அசையாது நிற்கும் பழி

என்ற பாடல் பெரியார் முன் செய்யக்கூடாத செயல்களை வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.

                நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

                 இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

                 ஒப்புரவாற்ற அறிதல் அறிவுடைமை

                 நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்

                 சொல்லிய ஆசார வித்து

என்ற பாடல் ஒழுக்கத்திற்கு எவை முதன்மை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பழமொழி

1.இதன் ஆசிரியர் முன்றுரை அரையனார்.

2.நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில் அமைந்த நூல்.

3.திருக்குறள், நாலடியாரோடு ஒருங்கே வைத்து எண்ணத்தக்க பெருமை உடைய நூல்.

4.தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக் குறிப்பிடுகிறார்.

5. இதன் வேறுபெயர்கள் - பழமொழி நானூறு, உலக வசனம், முதுமொழி

6. இது 400 பாடல்களை உடையது.

7. பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பல அறியப்படுகின்றன.

                    உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

                    நரைமுது மக்கள் உவப்ப நரை முடித்து

                    சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்

என்ற பாடலின் சொற்சுருக்கமும், பொருள் ஆழமுடையதாக இருக்கின்றன.

சிறுபஞ்சமூலம்

1. இதன் ஆசிரியர் காரியாசான்.

2. இந்நூல் கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களைக் கொண்டது.

3. சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த ஐந்து கருத்துகள் மக்களின் மனதிற்கு வலிமை கொடுக்கின்றன.

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்

இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்

கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு

வாடாத வன்கண் வனப்பு.

சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும் என்பது இப்பாடலின் பொருள்.

ஏலாதி

1. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.

2.ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 6 மருந்துப்பொருட்களால் ஆன கலவையை ஏலாதி என்பர். அவை உடல் நோய்க்கு மருந்தாகும்.

3.அதுபோல இந்நூல் நான்கு அடியில் ஆறு அறக்கருத்துகளைக் கூறுகிறது. இக்கருத்துக்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்றன.

4.இந்நூல் சிறப்பாயிரம் (முன்னுரை), தற்சிறப்பாயிரம் (முடிவுரை) உட்பட 81 வெண்பாக்களை உடையது.

                 கொலைபுரியான் கொல்லான் புலான் மயங்கான்

                 அலை புரியான் வஞ்சியான் யாதும் – நிலை திரியான்

                 மண்ணவர்க்கு மன்றி மதுவலி பூங்கோதாய்

                 விண்ணவர்க்கு மேலாய் விடும்

என்பன போன்ற அறக் கருத்துக்களை இந்நூலில் காணலாம்.

முதுமொழிக்காஞ்சி

1.இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.

2.பத்து அதிகாரங்களையும், 100 செய்யுட்களையும்  கொண்டது.

3.உலக நிலையாமையை எடுத்துக் காட்டிச் சான்றோர் தம் அறிவுடைமையால் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும்.

4.இளமைப்பருவத்தில் கல்லாமை குற்றம், ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்பன போன்ற நற்செய்திகள் இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றன.

                    ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்

                    ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை

                    மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை

                    நசையிற் பெரியதோர் நல்குரவில்லை

                    வண்மையிற் சிறந்தன்று வாய்மையுடைமை

என்பன போன்ற முதுமொழிகளை இந்நூலில் கற்கலாம்.

திருக்குறள்

1.இதன் ஆசிரியர் திருவள்ளுவர்.

2.133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.

3.அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பரும் பகுப்புகள் கொண்டது.

        அறத்துப்பால்  - 38 அதிகாரங்கள்

        பொருட்பால்   - 70 அதிகாரங்கள்

        காமத்துப்பால் – 25 அதிகாரங்கள்

4.இந்நூலின் பெருமைகளைத் திருவள்ளுவமாலை என்ற நூல் எடுத்துரைக்கின்றது.

5.உலகப் பொதுமறை, பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனப் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது.

6. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

கார்நாற்பது

1.இதன் ஆசிரியர் கண்ணங்கூத்தனார்.

2.கார்காலத்தைச் சிறப்பிக்கும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டமையால் இந்நூல் கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.

3.முல்லை நிலத்தின் அழகும், அதன் முதல், கரு, உரிப் பொருட்களும் அழகுற விளக்கப்படுகின்றன.

ஐந்திணை ஐம்பது

1.ஆசிரியர் பொறையனார்.

2.அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

3. இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

4. “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.

                 சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்

                 பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்

                 கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர்

                 உள்ளம் படர்ந்த நெறி

என்ற பாடல் காதலுணர்வை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஐந்திணை எழுபது

1.ஆசிரியர் மூவாதியார்.

2.ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 வெண்பாக்கள் அமைந்துள்ளன.

3.குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன.

4.இது அகப்பொருள் துறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.

திணைமொழி ஐம்பது

1.ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.

2.அகத்திணை ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாக்கள் அமைந்த நூலாதலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.

3.இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.

4.குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள அமைக்கப்பட்டுள்ளன.

திணைமாலை நூற்றைம்பது

1.ஆசிரியர் கணிமேதாவியார்.

2.ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.

3.அகத்திணைக் கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.

4.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.

5.குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற முறையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன.

 கைந்நிலை (ஐந்திணை அறுபது)

1.ஆசிரியர் புல்லங்காடனார்.

2.ஐந்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு.

3.அறுபது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

4. இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.

களவழி நாற்பது

1.ஆசிரியர் பொய்கையார்

2.போர்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் 40 வெண்பாக்களைக் கொண்டது.

3.கீழ்க்கணக்கு நூல்களுள் புறம் பற்றிக் கூறும் நூல் இது ஒன்றே ஆகும்.

4.யானைப்போரைப் பற்றி மிகுதியாகப் பேசுகின்றது.