ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

 

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர்  ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ்க் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.  கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும். கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல புலமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து “கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா” என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

 இயற்றிய நூல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது.

திருப்பாவை

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

நாச்சியார் திருமொழி

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக     காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இந் நூலில் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்கள் அமைந்துள்ளன.

  • முதற் பத்துப் பாடல்கள், “கண்ணனை இணக்கு” எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை.
  • இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் “சிற்றில் சிதையேல்” எனக் கேட்கும் வகையில் அமைந்தவை.
  • மூன்றாம் பத்து கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்துள்ளது.
  • நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை.
  • ஐந்தாம் பத்து குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடுகின்றன.
  • ஆறாம்பத்து மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளன. 
  • ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை.
  • எட்டாம் பத்து மேகவிடு தூதாக அமைந்துள்ளது.
  • ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன.
  • பத்தாம் பத்து மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • பதினோராம் பத்து திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளது.
  • பன்னிரண்டாம் பத்து சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்துள்ளது.
  • பதின்மூன்றாம் பத்து அவலம் தணி என இறைவனைக் கோருவதாக அமைந்துள்ளது.
  • பதினான்காம் பத்து பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகிறது.

இவற்றுள் ஏழாம் பத்தில், கற்பூரம் நாறுமோ என்று தொடங்கும் பாடலே இங்கு நமக்குப் பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் - 1

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ,

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே.

 விளக்கம்

கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையைக் கம்சன் ஏவிவிட, அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற மாதவனின் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும் விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூவின் மணம் கொண்டிருக்குமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு சொல்வாயா?

பாடல் - 2

கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்

உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்

திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.

விளக்கம்

நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில் வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவனின் திருக்கரங்களில் சென்று குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும்படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.

பாடல் - 3

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே!  இலையுதிர் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போல், வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.

பாடல் - 4

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தரம் ஒன்றின்றி றி அவன்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! சந்திர மண்டலம் ஒளி வீசித் திகழ்வதுபோல், தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்ந்து, அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய். நீ அடைந்த இந்தச் செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.

பாடல் - 5

உன்னோ டுடனே ஒருகடலில் வாழ்வாரை,

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

பாஞ்சசன்னியமே! கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லை! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலகத்தின் மன்னனாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.

பாடல் - 6

 போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! நீ எந்தப் புனித தீர்த்தங்களிலும் நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தாயோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால் சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம் என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.

பாடல் - 7

 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்

செங்கண் கருமேனி வாசுதே வனுடய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா உன்செல்வம் சாலவ ழகியதே.

விளக்கம்

 சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே!  மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப் போல, சிவந்த கண்களையும் கருத்த திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது ஏறி, உறங்கும் உன் செல்வம் மிகவும் அழகுடையதே ஆகும்.

பாடல் - 8

 உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

 பாஞ்சசன்னியச் சங்கே! உலகளந்த உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறக் கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும் கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண் குலத்தவர் உன்னிடம் பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பல்லாத இந்தக் காரியத்தை நீ செய்வது உனக்குத் தகுதியா?

பாடல் - 9

 பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்,

பொதுவாக உண்பதனைப் புக்குநீ உண்டக்கால்,

சிதையாரோ உன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 பெருஞ்செல்வம்  உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின் வாய் அமுதத்தைப் பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக் குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள் யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?

பாடல் - 10

 பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே.

விளக்கம்

அழகில் சிறந்த திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான கோதை, பாஞ்சசன்னியச் சங்கை, அதன் பெருமையைப் பாடிய பாசுரங்களைப் பயின்று எம்பெருமானைத் துதிப்பவர்கள் அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆவார்கள்.

 

நன்றி

http://naachiyaarthirumozhi.blogspot.com/2016/07/64.html

https://www.deivatamil.com/divya-prabandham/andal/66-natchiar-thirumozhi-karuppuram.html

http://koodal1.blogspot.com/2013/06/blog-post.html

 

 

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

திருநீற்றுப் பதிகம் - திருநாவுக்கரசர்

 

 திருநீற்றுப் பதிகம்

திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசர்  கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்தமிழ் நாட்டில்  பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.  திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடியில் உள்ள  திருவாமூர்  எனும் ஊரில் புகழனார் மற்றும் மாதினியாருக்கு மகனாகப் பிறந்தவர்.  இவருடைய இயற்பெயர் மருண்நீக்கியார். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி)  ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.

    பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியான உழவாரப் பணியை மேற்கொண்டார். அதனால் "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இவர் இறைவனை தொண்டு வழியில், அடிமை நெறியில் வழிபட்டார். திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில்  இறைவனடி கலந்தார்.

வேறு பெயர்கள்

  • தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்
  • நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
  • அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
  • உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.

அற்புதங்கள்

  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது    உயிர் பிழைத்தார்.
  • சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச்      சென்றது.
  • சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே    தோணியாகக் கரையேறியது.
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  • வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  • காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

திருநாவுக்கரசரைத் திருநீற்றறையில் இட்டபோது அவர் பாடிய திருநீற்றுப் பதிகத்தின் பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல் எண்: 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

விளக்கம்

இறைவனின் திருவடி நிழல் குற்றமற்ற வீணையின் நாதம் போலவும், மாலையில் ஒளி வீசும் நிலவின் குளிர்ச்சி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், மாட்சியும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.

 

பாடல் எண்: 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

விளக்கம்

நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.

பாடல் எண்: 3
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர்செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.

விளக்கம்

சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்; அவர்கள் சிவபிரானுக்கு அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகளால் சிவபிரானின் நாமத்தை கேட்க மாட்டார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை எந்த பயனையும் அடையாமல் வீணாகக்கழிகின்றது.

பாடல் எண்: 4
நடலை வாழ்வுகொண்டு என்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சு அமுதுண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்து ஊர்முனி பண்டமே.

விளக்கம்

நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத் தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சிசெய்யவேண்டும்.

 

பாடல் எண்: 5
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே.

விளக்கம்

சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.

பாடல் எண்: 6
 குறிகளும் அடையாளமும் கோயிலும்
 நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
 அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
 பொறி இலீர்மனம் என்கொல் புகாததே.

விளக்கம்
சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும் சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை), அவனை வழிபடுவதற்கு உரிய சைவ நெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்?


பாடல் எண்: 7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன்நெடுங் காலமே.

விளக்கம்

தன்னை வாழ்த்துதற்கு வாயும், தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும், தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித் துதிக்காமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்து விட்டேனே?

பாடல் எண் : 8
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே.

விளக்கம்
சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்?


பாடல் எண்: 9
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

விளக்கம்

உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில் புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான், பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான்.

பாடல் எண்: 10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

விளக்கம்:
சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

நன்றி:

https://vaaramorupathigam.wordpress.com/

 

திருப்பள்ளியெழுச்சி மாணிக்கவாசகர்

 

திருப்பள்ளியெழுச்சி

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும், திருக்கோவையாரும் பாடியுள்ளார். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தர். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

அற்புதங்கள்

1.   சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.

2.   பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை

3.  தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவனே  வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.

4.   எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

திருப்பள்ளியெழுச்சி

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை இயற்றினார்.  திருப்பள்ளியெழுச்சி என்பது, 'சுப்ரபாதம்' என வடமொழியில் வழங்கும். வைகறையில் - அதிகாலைப் பொழுதில் - இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய  ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன.  இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதும் ஆகும்.

பாடல் - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:

சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!

பாடல் - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
 
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:

திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான் (இந்திரனின் திசை கிழக்கு). உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.

பாடல் - 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:

திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! பொழுது புலர்ந்ததை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

பாடல் - 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:

திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறைவனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

 பாடல் - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:

குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.

பாடல் - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:

பார்வதிதேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர். கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

 

பாடல் -7
அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:

தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று  திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.

பாடல் - 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:

என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.

பாடல் - 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.


பாடல் -10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:

திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!