புதன், 12 அக்டோபர், 2022

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

 

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது 'மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்' என்கிறார் முனைவர் சு.சக்திவேல். எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை,

1) நாட்டுப்புறப் பாடல்கள்

2) நாட்டுப்புறக் கதைகள்

3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

4) நாட்டுப்புறப் பழமொழிகள்

5) விடுகதைகள்

6) புராணங்கள்

முதலியனவாகும். இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

தாலாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.

1) குழந்தை பற்றியன.

2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.

3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,

1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.

2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.

3) சிறுவர் பாடல்கள்.

என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

காதல் பாடல்கள்

காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1) காதலர்களே பாடுவது, 2) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.

தொழில் பாடல்கள்

மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.

 கொண்டாட்டப் பாடல்கள்

மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.

அகப்பாடல்

சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

புறப்பாடல்

பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.

பக்திப் பாடல்கள்

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.

1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.

2) சிறுதெய்வப் பாடல்.

3) பெருந்தெய்வப் பாடல்.

சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்

சந்திரரே சூரியரே

சாமி பகவானே

இந்திரரே வாசுதேவா

இப்பமழை பெய்யவேணும்

மந்தையிலே மாரியாயி

மலைமேலே மாயவரே

இந்திரரே சூரியரே

இப்பமழை பெய்யவேணும்

இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.

ஒப்பாரிப் பாடல்கள்

இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்புச் சொல்லி அதாவது ஒப்பிட்டுப் பாடுவது ஒப்பாரியாகும். இறந்தவரின் பெருமையும் அவரது குணநலன்களும் பிறரால் போற்றப்பட்ட முறையும், ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவரை நேசித்த முறையும், தன்னுடைய நிலைமை, குடும்பத்தின் நிலைமை, ஈமச் சடங்குகள் பற்றிய விவரங்களும் அப்பாடல்களில் கூறப்படுவதுண்டு.

 

நாட்டுப்புறக் கதைகள்

நாட்டுப்புற மக்களிடையே கதை கூறுவது என்பது பொதுவான பண்பாகும். மக்கள் தங்களது வாழ்வியல் நீதிகளுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கதைகளை உரைத்தனர். இன்றளவும் உரைத்து வருகின்றனர். நாளையும் கதையினைக் கூறுவார்கள். ஏனென்றால் கதையினைக் கூறுபவரும், கதையினைக் கேட்பவரும் அந்தந்தக் கதைகளோடு தங்களையும் இணைத்துக் கதை கேட்கின்றனர்.

கதைகளின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகையாகப் பிரிக்கின்றார்.

1) மனிதக் கதைகள்

2) மிருகக் கதைகள்

3) மந்திர - தந்திரக் கதைகள்

4) தெய்வீகக் கதைகள்

5) இதிகாச புராணக் கதைகள்

6) பல்பொருள் பற்றிய கதைகள்

கதைகளின் சிறப்புக் கூறுகள்

இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், சாதிப் பூசல், காதல், ஒழுக்கம், வேதனை, முட்டாள்தனம், பொறாமை, மன உணர்வெழுச்சி, கள்ள நட்பு, மந்திரம், புத்திசாலித்தனம், நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும், சமகாலச் செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது.

 

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை - பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் - கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள், மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை. இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம்.

கதைப் பாடலின் தன்மை

கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.

1) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action)

2) பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். (Characters)

3) கதைக் கரு உண்டு (Theme)

4) வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். (Prominence of Heroism)

5) உரையாடல் (Dialogue) உண்டு,

6) திரும்பத் திரும்ப வரல் (Repetition)

கதைப் பாடலின் அமைப்பு

கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன,

1) காப்பு அல்லது வழிபாடு.

2) குரு வணக்கம்

3) வரலாறு

4) வாழி

என்பவையாகும்.

சான்று : கதைப் பாடல்கள்

1) முத்துப்பட்டன் கதை

2) நல்லதங்காள் கதை

3) அண்ணன்மார் சுவாமி கதை

கதைப் பாடலின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக வகைப்படுத்துகிறார்.

1) புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள்

2) வரலாற்றுக் கதைப் பாடல்கள்

3) சமூகக் கதைப் பாடல்கள்

 

நாட்டுப்புறப் பழமொழிகள்

பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறுகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி, எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல், விளக்கம் செய்யும் வகையில் எடுத்துக் கூறுதல் ஆகியவற்றைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும்.

பழமொழியின் இயல்புகள்

1) பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம், தெளிவு, பொருத்தமுடைமை.

2) அறவுரையையும், அறிவுரையையும் கொண்டிருக்கும்.

3) ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் கூறு (Descriptive element) ஒன்றினைப் பெற்றிருக்கும்.

4) பழமொழிக்கு ஒரு சொல்லில் அமைவதில்லை.

பழமொழி வகைப்பாடு

முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.1) அளவு அடிப்படை (Size Basis)

2) பொருள் அடிப்படை (Subject Basis)

3) அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)

4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)

5) பயன் அடிப்படை (Functional Basis)

 

விடுகதைகள்

விடுகதை என்பது ஏதாவது ஒரு கருத்தைத் தன்னிடம் மறைத்துக் கொண்டு கூறுவது. இதனை அறிவுத்திறத்தோடு ஆராய்ச்சி செய்யும் பொழுது, குறைந்த பட்சம் சிந்தனை செய்யும் பொழுதுதான் புலப்படும். மேலும் ‘விடுகதைஎன்ற நாட்டுப்புற வழக்காற்றில் ஈடுபாடும் விருப்பும் உடையவர்களால் விடுகதையிலுள்ள ‘புதிருக்கு (புரியாத நிலையிலுள்ளது) விடையினைக் கூறமுடியும். இவ்வாறு விடுகதை என்பது,

1) அறிவு ஊட்டும் செயல்

2) சிந்தனையைத் தூண்டுதல்

3) பயனுள்ள பொழுது போக்கு

என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.

விடுகதையின் வகைகள்

விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை,

1) விளக்க விடுகதைகள் (Descriptive Riddles)

2) நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles)

3) கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles)

4) பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles)

விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை,

1) உருவகமில்லாதது (Literal)

சான்று :

சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி - என்பது குன்றி மணியைக் குறிக்கும்.

2) உருவகமுடையது.

சான்று :

செத்துக் காய்ந்த மாடு சந்தைக்குப் போகுது - என்பது கருவாட்டினைக் குறிக்கிறது.

இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும் மக்களின் வாழ்வில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிப்பதற்கும், சிந்திப்பதற்கும் துணை நின்று உள்ளன. இன்றும் விடுகதை, பழமொழி இவற்றை, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வானொலியின் பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில், நிலையத்தார் வானொலி கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

புராணங்கள்

புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள், விந்தைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு, அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன.

புராணங்களின் வகைகள்

தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள,

1) வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas)

2) எழுத்திலக்கியப் புராணங்கள் (தல புராணங்கள்) என்று பகுத்து ஆராயலாம்.

உரைநடையின் தோற்றம் வளர்ச்சி

 

உரைநடையின் தோற்றம் வளர்ச்சி

ஒரு மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும் போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும், ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே முந்தியது என்பர். இந்த அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர் அறிஞர். உரைநடை தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும், உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய்யுளைப் போலவே உரைநடையும் ‘செப்பமாகச் செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினையும் தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கூறினார். தொடக்கக் கால உரைநடையின் தன்மை செய்யுளிலிருந்து பெரிதும் மாறுபடாத நிலையிலேயே இருந்தது.

தமிழ் பிராமிக் கல்வெட்டு உரைநடை

தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டன. இவை பெரும்பாலும் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பர் கல்வெட்டு அறிஞர்கள். இத்தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் தொன்மைக் கால உரைநடையைப் பற்றி அறிவதற்குச் சான்றாக உள்ளன.

 தொன்மைக் கால உரைநடை

        தொன்மைக் காலத்தில் குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு முந்திய காலத்திலும், தொல்காப்பிய காலத்திலும், சங்க காலத்திலும் வழங்கப்பட்ட உரைநடையைப் பற்றிப் பார்ப்போம்.

தொல்காப்பியத்துக்கு முந்திய உரைநடை

மூலபாடம், உரைப்பாடம் என்ற பாகுபாடு தொன்மையானது; இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. செய்யுள்களுக்கு விளக்கமாக எழுதப்பட்ட உரைகளே உரைநடை வளர்ச்சிக்கு உதவின. தொல்காப்பிய நூற்பாக்களில் என்ப, என்மனார், என்மனார் புலவர், நூல் நவில்புலவர்  முதலிய சொற்களும் தொடர்களும் எங்கும் பரந்து கிடக்கின்றன. ஆகவே தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உரைநூல்களும், உரைநடையும் இருந்ததைத் தொல்காப்பிய நூற்பாக்கள் வழி அறிய முடிகின்றது.

தொல்காப்பியக் கால உரைநடை

தொல்காப்பியர் எழுதிய உரை பற்றிய செய்திகளே, நமக்கு அக்கால உரைநடை குறித்து அறிவதற்கு உதவுகின்றன. தொல்காப்பியர், காண்டிகை என்றும், உரை என்றும் இருவகை உரை அமைப்புகளைக் காட்டுகின்றார். இவ்விரு வகை உரை முறைகளும் அவர் காலத்து நிலவிய உரைகூறும் மரபு என்று கருதலாம். தொல்காப்பியர் செய்யுளை ஏழாக வகுத்துக் கூறுகிறார். அவற்றுள் ஒன்று, செய்யுட்பகுதியாகிய பாட்டு. மற்றவை அடிவரையறையில்லாச் செய்யுள் பகுதிகள் ஆறு. அந்த ஆறனுள் ஒன்றாக உரைநடை வகையைக் கூறி, அதனை நான்காகக் கூறுவார்.

பண்டைக் கால உரைநடை

சங்க இலக்கியச் செய்யுள்களில் கீழ்க்காணப்பெறும் துறை, திணை விளக்கங்கள் ஆகிய பாடலின் குறிப்புகள் உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,

நற்றிணையில்,

        பொருள் வயிற்பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த

        நெஞ்சிற்கு உரைத்தது             (நற்றிணை - 157)

சங்க கால உரைநடை, செய்யுள் நடை போல் செறிவுடையதாகவும், அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

சிலப்பதிகார உரைநடை

தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே, வாழ்த்து வரந்தரு காதையொடு இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற குறிப்பு வருகிறது. ‘உரை பெறு கட்டுரை, ‘உரைப்பாட்டுமடைஎன்னும் பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே காணலாம். இக்காப்பியத்தில் உரைநடை இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உரைநடை வளர்ச்சி

அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளுள் உரைநடை வளர்ந்தது. 1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.

உரைநடை முன்னோடிகள்

ராபர்ட்-டி.நொபிலி, அருளானந்த அடிகள், வீரமா முனிவர், கால்டுவெல், போப்ஐயர் என்பவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில் நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும் போட்டிபோட்டுக் கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச் சங்கமும் சென்னைப் புத்தகக் கழகமும் பாட நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல நிலையை அடைந்தது.

ஆறுமுக நாவலர்

கற்ற பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக் கூற ஒரு நடை என மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும் இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய, தெளிந்த நடையைத் தோற்றுவித்ததால் இவரைதமிழ்க் காவலர் என்றும் தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தைஎன்றும் கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு உயிர் ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல உரைநடையில் அவரால் புகழ்பெற இயலவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதத் தயங்கவில்லை.

அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

 வ.உ.சிதம்பரம்பிள்ளை

      வ.உ.சிதம்பரம் பிள்ளை தேச விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள் பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி நூல்களைத் திருக்குறள் கருத்துக்களை ஒட்டி விளக்கி எழுதியுள்ளார். மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும், மேடைப்பேச்சுப் பயிற்சியும் இருந்தபடியால் வ. உ. சி யின் நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது என்கிறார் மு.வரதராசனார்.

மறைமலையடிகள்

மறைமலையடிகளால் இயற்றப் பெற்ற பல்வகை உரைநடை நூல்கள் பின்வருமாறு.

1) அறிவியல் நூல்கள் - மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி.

2) நாவல் - 

குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

திரு.வி.க

       தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும் விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை எளியது; இனியது. இவரது பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்திஎன்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை,தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

செல்வக்கேசவராய முதலியார் 

    திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ்,தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, கண்ணகிகதை, அவிநவக்கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப் பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும் மெருகும் தந்தார்.

பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை 

    தமிழ்க் கட்டுரைகள்,மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் 

    உரைநடைக் கோவை என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது இவர் நடை.

சோமசுந்தர பாரதியார் 

    தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை 

    அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியவர் .  ஊரும்பேரும்,  வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும், தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.

உ.வே.சாமிநாத அய்யர்.

     தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்சுருக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை

       வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம்முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

முடிவுரை

இவ்வாறாக பல்வேறு அறிஞர்களின் முயற்சியால் செய்யுள் வடிவம் மாற்றம் பெற்று உரைநடை என்னும் புத்திலக்கியம் உருப்பெற்றது. அதனால் எண்ணிலடங்கா உரைநடை நூல்கள் தோற்றம் பெற்று தமிழிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.       

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

       காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் அனைத்து மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்தபோது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.

தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

                               பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

  • அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. 
  • சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை.
  • குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். 
  • புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி.

சிறுகதை தோன்றிய சூழல்

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’. அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்

  • வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவேக போதினி என்னும் இதழ் ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்க்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம். 
  • செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 
  • ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். 
  • கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
  • சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
  • மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்

 இதழ்களால் வளர்ந்த சிறுகதை

தமிழ்ச் சிறுகதையின் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

 தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கெனவே பல இணையதளங்களும் வலைப்பூக்களும் உயிர்ப்பெறுகின்றன. மேலும் அலைபேசியிலும் வாட்பேட், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

முடிவுரை

காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.