சிற்றிலக்கிய
வரலாறு
தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில்
சிற்றிலக்கியங்கள் தோன்றியதாகக் கூறுவர். புலவர்கள் தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காகவும், மன்னனிடம் பொருள்
பெறுவதற்காகவும் பாடிய சிறு நூல்கள் அனைத்தையும் சிற்றிலக்கியம் என்பர். வட
மொழியில் இதைப் பிரபந்தம் என்று அழைப்பர்.
சிற்றிலக்கியம்
– விளக்கம்
அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகிய நான்கு வகை
உறுதிப்பொருட்களுள் எவையேனும் ஒன்றைப் பற்றியோ, இரண்டைப்
பற்றி மட்டுமோ பாடப்படுபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. இறைவன், மன்னன், வள்ளல், குரு
ஆகியோரின் சிறப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தோற்றம்
அக்கால அரசியல் சூழல் காரணமாக, 12ஆம் நூற்றாண்டு தொடங்கி காப்பிய இலக்கியங்கள்
படைப்பது குறைந்து போனது. சிற்றிலக்கியங்களின் ஆதிக்கம் பெருகியது. பேரரசர்களைப்
பாடிப் பெரும்பொருள் பெற்று பேரிலக்கியங்களைப் படைத்த புலவர்கள், குறுநில
மன்னர்களை விரைவாகப் பாடி உடனே பொருள் பெறும் எளிய நிலை ஏற்பட்டது. ஆகவே சிற்றிலக்கியங்கள்
பெருகத் தொடங்கின.
சிற்றிலக்கிய
வகை
தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களை 96 என்னும் தொகையில் அடக்கிக் கூறுவது மரபு.
சிற்றிலக்கியங்களுக்குப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியங்கள்
குறித்துப் பின்வருமாறு காணலாம்.
கலம்பகம்
பல பூக்களைக் கலந்து மாலையாகத் தொடுப்பது போல பல வகையான செய்யுள் உறுப்புகளைக்
கொண்டு, அகம் புறப்
பொருட்களை கலந்து பாடப்படும் இலக்கியம் கலம்பகம் ஆகும். தெய்வங்கள், மன்னர்கள், மக்களுள் சிறந்து விளங்குபவர்கள்
இவ்விலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்களாவர்.
கலம்பக
உறுப்புகளும் அமைப்பும்
கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை, புயவகுப்பு, அம்மானை, தவம், வண்டு, வாண், மதங்கு, கைக்கிளை,
சித்து, ஊசல், களி,
மடக்கு, ஊர், மறம்,
காலம், தழை, இரங்கல்,
சம்பிரதம், கார், தூது,
குறம், பிச்சியார், கொற்றியார்
ஆகியனவாகும். இவ்விலக்கியம் அந்தாதித் தொடையால் 100
பாடல்கள் வரை பாடப்படும். கடவுளுக்கு 100, முனிவர்க்கு
95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70,
வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 என்னும் பாடல் எண்ணிக்கை அமைப்பைப் பெற்று பாடப்படுகின்றது.
சில
கலம்பக நூல்கள்
திருவரங்கக் கலம்பகம், நந்திக்
கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார்
திருக்கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம், காசிக் கலம்பகம், அழகர் கலம்பகம்
முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.
திருவரங்கக்கலம்பகம்
காவிரிக் கரையில் கோயில்கொண்ட ரங்கநாதப் பெருமாளின் மேல் பாடப்பட்டது. இதனை
இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்நூலில் திருமாலின் அவதாரங்களைப் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன. 107 செய்யுள்கள் உள்ளன.
தூது
தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக
அனுப்புவதே தூது எனப்படும். இத்தூது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும்.
அகத்தூது – தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி,
தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி, தூது
உரைத்துவா என்றும், மாலை வாங்கி வா என்றும், உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூதாக
அனுப்புவது அகத்தூது ஆகும்.
தூது
விடுக்கும் பொருட்கள் – அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல்,
வண்டு ஆகிய பத்துப் பொருட்கள் தூதுக்குரியவை எனக் கூறப்பட்டன.
தற்காலத்தில் பணம், தமிழ், புகையிலை,
செருப்பு, மான், நெல்
ஆகிய எவையும் தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றனர்.
புறத்தூது – போர் காரணமாக மன்னனுக்காக ஒரு
புலவரோ, அமைச்சரோ அல்லது வேறு யாரேனுமோ தூது செல்வது
புறத்தூது ஆகும். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றமையைப்
புறத்தூதிற்குச் சான்றுரைக்கலாம்.
சில
தூது நூல்கள்
உமாபதி சிவாச்சாரியார் பாடிய நெஞ்சு விடு தூது நூலே முதல் தூது இலக்கியமாகக்
கருதப்படுகின்றது. அது தவிர தமிழ்விடுதூது, நெஞ்சு
விடுதூது, அழகர் கிள்ளை விடுதூது முதலியன
குறிப்பிடத்தக்கன.
தமிழ்விடு
தூது
இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நூலின் கருத்தினைக் கொண்டு இதன்
ஆசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பதும், சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படுகின்றது.
மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி, தன் காதல் துன்பத்தை எடுத்துக் கூற, தமிழைத் தூதாக
அனுப்புவதே தமிழ்விடு தூது ஆகும்.
உலா
“ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப“என்ற தொல்காப்பிய நூற்பாவே பிற்காலத்தில் உலா
இலக்கிய வகைக்கு வழிவகுத்தது எனலாம். அனைத்துப் பண்புகளில் சிறந்து
விளங்கும் ஆண்மகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய
குலம், குடிப்பிறப்பு, பெருமை
ஆகியனவற்றை விளங்கக்கூறி, அவன் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை,
அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
உள்ளிட்ட ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதாகப் பாடப்படுவது உலா இலக்கியம்
ஆகும். உலாக் காட்சிகள் முதன் முதலாக இலக்கிய வடிவம் பெறுவது
முத்தொள்ளாயிரம் என்ற நூலில்தான் எனலாம்.
சில
உலா நூல்கள்
திருக்கையிலாய ஞான உலா, மூவருலா, ஏகாம்பர நாதர் உலா, திருக்குற்றலாநாதர் உலா,
திருவானைக்கா உலா, திருவிடை மருதூர் உலா முதலியன குறிப்பிடத்தக்கன.
பிள்ளைத்
தமிழ்
“குழவி மருங்கினும் கிழவதாகும்“ என்ற தொல்காப்பிய நூற்பா பிற்காலத்தில்
பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகைக்கு வித்திட்டது. கண்ணனைக் குழந்தையாக எண்ணித்
தாலாட்டுப் பாடல்களைப் பாடி இவ்விலக்கிய வகையைத் தோற்றுவித்தவர் பெரியாழ்வார்
என்பர். இவ்விலக்கியம் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக் கவி என்றும் கூறப்படும். புலவர்கள் தாம் விரும்பும் மன்னனையோ,
தலைவனையோ, வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து
பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்
பாடல்கள் வீதம் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்படுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என
இரண்டு வகைப்படும்.
ஆண்பாற்
பிள்ளைத்தமிழ்
காப்பு, தால்,
செங்கீரை, சப்பாணி, முத்தம்,
வருகை, அம்புலி, சிற்றில்
சிதைத்தல், சிறுபறை கொட்டல், சிறு தேர்
உருட்டல் ஆகிய பருவங்கள் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.
பெண்பாற்
பிள்ளைத்தமிழ்
காப்பு, தால்,
செங்கீரை, சப்பாணி, முத்தம்,
வருகை, அம்புலி, நீராடல்,
அம்மானை, ஊசல் ஆகிய பருவங்கள்
பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.
சில
பிள்ளைத் தமிழ் நூல்கள்
கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே
முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். கி.பி.17இல் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில்
பெரும்புகழ் படைத்தவை.
பள்ளு
நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற முதுமொழியைக்
கொண்டு பள்ளு இலக்கியப் பெருக்கினை அறியலாம். பள்ளர்களின்
வாழ்க்கையைச் சித்தரிப்பது பள்ளு இலக்கியமாகும். இதனை உழத்திப்பாட்டு என்றும் பள்ளுப்
பாட்டு என்றும் கூறுவர்.
சில
பள்ளு நூல்கள்
திருவாரூர்ப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீர்காழிப்பள்ளு, முக்கூடற்பள்ளு, திருச்செந்தூர்ப்
பள்ளு ஆகியன குறிப்பிடத்தக்கன.
முக்கூடற்பள்ளு
பள்ளு இலக்கியங்களிலேயே தலைசிறந்து விளங்குவதும் முதன்முதலில் தோன்றியதும்
முக்கூடற்பள்ளு ஆகும். இதனை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. காலம் 18ஆம்
நூற்றாண்டு. நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் நகரம் உள்ளது. தாமிரபரணி, சிற்றாறு,
கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும். இந்நகரில் எழுந்திருளியுள்ள அழகரின் பெருமையை
இந்நூல் பேசுகின்றது.
பள்ளர் பெருமை, பள்ளியர் இருவரின் வரலாறு, நாட்டுவளம், மழை வேண்டி நிற்றல்,
மழைக்குறி அறிதல், பண்ணைக்காரன் வருகை, பள்ளியர் பண்ணையாரிடம் முறையிடல்,
பண்ணையார் பள்ளனைத் தண்டித்தல், பள்ளியர் புலம்பல், உழவுப்பணி தொடங்கல், பள்ளனைச்
சிறையிடல், ஏசிய பள்ளியர் மீண்டும் இணைதல் ஆகியவற்றைப் பாடுவது பள்ளு இலக்கிய
அமைப்பு முறையாகும்.
குறவஞ்சி
குறவஞ்சி இலக்கியத்திற்கு “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும் திறம்பட
உரைப்பது குறத்திப் பாட்டே” என்று பன்னிரு பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு
பாடப்படுகின்றது.
சில
குறவஞ்சி நூல்கள்
குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர
பூபாலக் குறவஞ்சி, பெத்லகேம் குறவஞ்சி, அர்த்தநாரீசுவரர் குறவஞ்சி ஆகியன
குறிப்பிடத்தக்கன.
திருக்குற்றாலக்
குறவஞ்சி
குற்றாலம் என்னும் ஊரில் விளங்கும் குற்றாலநாதரைப் போற்றும் வகையில் தெய்வக்
காதல் அமையப் பாடப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். இந்நூல் குறவஞ்சி நாடகம்
என்றும் போற்றப்படும். திரிகூட ராசப்பக் கவிராயர் இந்நூலை இயற்றியுள்ளார்.
திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூலுக்கு அன்றைய மதுரை மன்னன்
சொக்கநாத நாயக்கர் குறவஞ்சி மேடு என்னும் பெருநிலத்தை பரிசாகக் கொடுத்தார்.
இக்கதை குற்றால நாதரின் திருவுலாவோடு தொடங்குகின்றது.
குற்றால நாதரின் திரு உலாவைக் காணப் பெண்கள் வருகின்றனர். தோழியின் வாயிலாக
இறைவனின் அருளைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல் கொள்கின்றாள்.
இந்நிலையில் குறத்தி, வசந்தவல்லியின் கைகளைப் பார்த்து குறிசொல்கின்றாள். அதனால்
மனம் மகிழ்ந்த வசந்தவல்லி அவளுக்குப் பரிசு கொடுக்கின்றாள். குறவன் குறத்தியைத்
தேடி வருகிறான். இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இதுவே
குற்றாலக் குறவஞ்சியின் கதை ஆகும்.
பரணி
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைச் சிறப்பித்துப்
பாடும் இலக்கியம் பரணி ஆகும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காளி
வழிபாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி” என்ற இலக்கண விளக்கப்பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.
அரசனின் படைக் கருவிகளான வில், வாள், வேல் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட போர்ப்பரண்
மீதிருந்து போர்க்காட்சியை நேரில் கண்டு புலவர் பாடுவதால் பரணி எனப்பட்டது என்றும்
கூறுவர். பரணி நாளில் பேய்கள் கூடி சமைத்து, உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடி போரில்
வென்ற மன்னரைப் புகழ்ந்து கூறும் வகையில் இந்நூல் அமைகின்றது.
சில
பரணி நூல்கள்
இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப்
பரணி ஆகியன குறிப்பிடத்தக்கன.
கலிங்கத்துப்
பரணி
காலத்தால் முற்பட்ட பரணி கலிங்கத்துப்பரணியாகும். இதனை இயற்றியவர்
செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர்.
முதல் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் அனந்தவர்மன்
என்னும் கலிங்க மன்னன் மீது போர்தொடுத்துப் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து கூறும்
வகையில் பாடப்பட்டுள்ளது.
அந்தாதி
ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர்
அடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின் முதலில்
வருவதாக அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். “அந்தம் முதலாகத் தொடுப்பது
அந்தாதி” என்று யாப்பருங்கலக்காரிகை அந்தாதிக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்தாதியைத்
தனி ஒரு இலக்கியமாக உருவாக்கிய பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அவருடைய
அற்புதத் திருவந்தாதி என்னும் நூலே முதல் அந்தாதி நூலாகப் போற்றப்படுகின்றது.
சில
அந்தாதி நூல்கள்
அபிராமி அந்தாதி, திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி,சடகோபர் அந்தாதி ஆகியன
குறிப்பிடத்தக்கன.
அபிராமி
அந்தாதி
அந்தாதி இலக்கியங்களில் சிறந்த ஒன்று அபிராமி அந்தாதி ஆகும். இதை இயற்றியவர் அபிராமி
பட்டர். திருக்கடையூரில் உள்ள அபிராமி அன்னையை இந்நூல் பாடுகின்றது. 101 பாடல்கள்
உள்ளன. இவர் வாழ்ந்த காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 19ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி வரை எனக் கணக்கிடப்படுகின்றது.