திங்கள், 3 ஏப்ரல், 2023

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் - வருகைப்பருவம்

 

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்

வருகைப்பருவம்

அறிமுகம்

இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர். ஐந்து வயது வரை பேசாதிருந்தமையால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டினர். முருகன் அருளால் பேசியதன் காரணமாக முதற்கண் கந்தர் கலிவெண்பா என்னும் பாமாலையை இயற்றினார்.  திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் படைத்தார். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. 102 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், முருகன், விநாயகன், திருமகள், கலைமகள் ஆகியோரிடம் மீனாட்சியம்மையைக் காக்குமாறு 11 பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகின்றார். இந்நூலில் இடம்பெற்றுள்ள வருகைப் பருவத்தின் முதல் ஐந்து பாடல்களின் விளக்கத்தைப் பின்வருமாறு காண்போம்.

பாடல் 1

அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி

                அரற்றுசெஞ் சீறடிபெயர்த்து

        அடிஇடும் தொறும்நின் அலத்தகச் சுவடுபட்டு

                அம்புவி அரம்பையர்கள் தம்

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி

                வளர்இளம் பிறையும்நாற

        மணிநூ புரத்துஅவிழும் மென்குரற் கோஅசையும்

                மடநடைக் கோதொடர்ந்துஉன்

செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு

                சிறைஓதி மம்பின்செலச்

        சிற்றிடைக்கு ஒல்கிமணி மேகலை இரங்கத்

                திருக்கோயில் எனஎன்நெஞ்சக்

கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட

                காமர்பூங் கொடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிர்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

அழகிய சிலம்பு ஒலிக்க, சிறிய அடி வைத்து நீ பூமியில் கால் வைத்து நடக்கும்போது, உன் செம்மையான பாதத்தின் தழும்புகள், தேவமகளிர் கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையிலும், சிவபெருமானின் சடைமுடியில் உள்ள இளம் பிறையிலும் தோன்றுகின்றன. நீ அணிந்திருக்கும் சிலம்பில் இருந்து வெளிவரும் ஓசையினால், தளர்கின்ற உன் இளநடையினால் மனம் பறி கொடுத்து, உன்னைப் பின்பற்றி வருகின்ற தெய்வப் பெண்கள் வருகின்றனர். அவர்களின் கூட்டத்தினுள்ளே அன்னப்பறவைகளும் தொடர்ந்து வருகின்றன. மணிமேகலை என்னும் அரையணி ஒலிக்க என் மனமாகிய தாமரை மலரையும், தமிழ்மொழி பழகும் மதுரை மாநகரையும் திருக்கோயிலாகக் கொண்டிருக்கும் அழகிய மலர்க்கொம்பு போன்றவளே வருக. கற்பகக் காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே வருக.

பாடல் 2

குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்

                கோதையும் மதுரம்ஒழுகும்

        கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக்

                கூந்தல்அம் பிடியும் அறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ

                மணங்கமழ விண்டதொண்டர்

        மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட

                மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல

                தொல்உரு எடுத்துஅமர்செயும்

        தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந்

                துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்

                கலாபமா மயில்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய இலக்குமியும், பெண் யானை போன்றவளாகிய கலைமகளும், வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் புகுந்து கொண்டனர். அதுபோல, சிவமணம் கமழ தொண்டர்களின் மதியாகிய மலர்கள் பூத்திருக்கும் பொய்கை என்னும் கோயிலில் புகுந்துள்ள மாணிக்க வல்லியே! மன்மதன் தன் மனைவி ரதி தேவியுடன் பலவகையான பழைய வடிவங்களைத் தாங்கிப் போர் புரிவதற்கு எடுத்திருக்கும் பல வில்களைப் போல, வானத்தின் உச்சியை எட்டிப் பார்க்கின்ற கரும்புக் காடுகள் நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும் தோகையுடைய மயில் போன்றவளே வருக.

பாடல் 3

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்

                முள்பொதி குடக்கனியொடு

        முடவுத் தடம்தாழை முப்புடைக் கனிசிந்த

                மோதிநீர் உண்டுஇருண்ட

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்கள் அன்றிஏழ்

                பொழிலையும் ஒருங்குஅலைத்துப்

        புறம்மூடும் அண்டச் சுவர்த்தலம் இடித்துஅப்

                புறக்கடல் மடுத்துஉழக்கிச்

செயல்பாய் கடல்தானை செங்களம் கொள அம்மை

                திக்குவிச யம்கொண்டநாள்

        தெய்வக் கயல்கொடிகள் திசைதிசை எடுத்துஎனத்

                திக்குஎட்டும் முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை

                காவலன் மகள் வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே.

பாடல் விளக்கம்

பாண்டியனின் மதுரை நகரத்தின் சோலைகளில், சந்திரன் சூழ்ந்திருக்கின்ற பலாமரத்தில் முட்கள் நிறைந்த பழங்கள் காணப்படுகின்றன. நீண்டு வளர்ந்த தென்னை மரங்களில் மூன்று பக்கமும் புடைத்திருக்கின்ற தேங்காய்கள் நீரைச் சிந்துகின்றன. அந்நீரைப்பருகிய மேகங்கள் கருநிறமாக வானத்தைச் சூழ்ந்துள்ளன. அதுபோல, கடல் போன்ற சேனைகளைக் கொண்டு, ஏழு உலகங்களையும் வென்று, நீ திசையெங்கும் வெற்றியடைந்தாய். வெற்றியடைந்ததன் காரணமாக, வெற்றிக் கொடிகளைத் திசையெங்கும் எடுத்து வந்ததுபோல, பாண்டியனின் மதுரையில் அனைத்துத் திசைகளிலும் கயல்மீன்கள் பாய்கின்றன. வரம்புகள் நெருங்கிய பெரிய வயல்கள் காணப்படுகின்றன. அத்தகு சிறப்பு மிக்க தமிழ் வளர்த்த மதுரைக்குக் காவலனாக விளங்கும் பாண்டியன் மகளே! வருக.

பாடல் 4

வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு

                மதுரஅமு துண்டுகடைவாய்

        வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி

                மருப்பில் பொருப்புஇடித்துத்

தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்

                தலத்துஅணிவது ஒப்பஅப்பிச்

        சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின்

                தானநீ ரால்நிரப்பி

முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன

                முகடுகை தடவிஉடுமீன்

        முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு

                முகில்படாம் நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்

                களிறுஈன்ற பிடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

மணி வடங்கள் பொருந்திய உன் மார்பில் பாலருந்தி, கிம்புரிப் பூண் அணிந்த தந்தங்களினால் மலையை இடித்து, செந்தூளை மத்தகத்தில் பூசி, ஏழு கடலையும் தன் பெரிய கையால் முகந்து, குறைத்து, பின் மத நீரினால் நிறைத்து, வானத்து உச்சியைத் துதிக்கையால் தடவி, நட்சத்திரங்கள் ஆகிய முத்துக்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு, ஏழு முகில்கள் என்ற கூட்டங்களை நெற்றியில் சுற்றி, மதம் பொருந்திய சிறிய கண்களையும் பெரியகொலைத் தொழிலையுமுடைய பிள்ளையாரைப் பெற்ற பெண் யானையே! வருக.

பாடல் 5

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு

                செம்பஞ்சி யின்குழம்பால்

        தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்

                செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை

                வாணிநதி யாச்சிவபிரான்

        மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு

                மரகதக் கொம்புகதிர்கால்

மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்

                வேழத்தின் மத்தகத்து

        வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு

                வெண்கவரி வீசும்வாசக்

கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்

                கவுரியன் மகள்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

உன் சிறிய பாதங்கள் செம்பஞ்சு குழம்பினால் பூசப்பட்டுள்ளன. அச்சீறடிகள் சிவபெருமானின் தலை மீது படுவதால், அங்குள்ள வெண்மை நிறமுடைய சந்திரன் சிவந்த நிறம் பெறுகின்றான். சிவனின் தலையில் உள்ள கங்கையாறு சோணை நதியாக உருப்பெருகின்றது. சிவபெருமானுடைய மகுடமான சடையில் உன் பாதத்தின் சுவடுபட அழுத்துகின்ற பச்சை நிறமுள்ள பூங்கொம்பே! (ஊடல் காலத்தில் சிவபெருமானின் முடி மீது பார்வதி தேவியின் சீறடி படும் என்பது புராணச் செய்தி) ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நடக்கின்ற பெரிய வானத்தில் ஐராவதமாகிய யானையின் முதுகில் வீற்றிருக்கின்ற இந்திராணிக்கு, பாண்டியனின் நாட்டில் உள்ள பச்சைநிற கமுகமரம் வெண்கவரி வீசுவது போல உயர்ந்து நிற்கின்றது. அச்சிறப்பு மிக்க பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கூடலில் வளர்கின்ற பாண்டியன் மகளே! வருக.

 

 

வெள்ளி, 3 மார்ச், 2023

புறநானூறு - சிறப்புத்தமிழ்

புறநானூறு

1

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

மூதின் மகளிர் ஆதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை

யானை எறிந்து களத்துஒழிந் தன்னே

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்       5

பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்       10

செருமுக நோக்கிச் செல்க என விடுமே!  

பாடியவர் - ஒக்கூர் மாசாத்தியார். ஒக்கூர் என்பது ஊரின் பெயர். இவர் பெண் புலவர்களுள் ஒருவர்.

திணை - வாகை. பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்ற வீரர்கள் வாகைப் பூவினை அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்.

துறை  - மூதின் முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும்  வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.

பாடல் விளக்கம்:

    நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வீரம் பொருந்திய ஆண்கள் போரில் பற்கேற்கச் சென்றனர். பாதி பேர் இறந்தனர். வீரம் பொருந்திய மறக்குடியில் பிறந்த மகள் ஒருத்தி, தன் தந்தை நேற்று பகைவர்களின் யானையைக் கொன்று தானும் இறந்தது கண்டு மனம் வருந்தினாள். இன்று பசுக்கூட்டங்களைப் பகைவர் கவர்ந்து செல்லாத வண்ணம் தடுத்துப் போரிட்டதால் தன் கணவனும் இறந்து விட்டான் என்பதை அறிந்து மனம் பதைத்தாள். ஆனால் போர்ப்பறை சத்தம் கேட்டவுடன் மனம் தெளிந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் கையில் வேலை கொடுத்தாள். வெண்மையான ஆடையை அவனுக்கு அணிவித்தாள். அவன் தலைமுடியை எண்ணெய் தடவி முடிந்தாள். பின்னர் ‘போர்க்களம் நோக்கிப் போய் வாஎன்று அனுப்பினாள். தன்னைப் பாதுகாக்கத் தன் மகன் மட்டுமே உள்ளான் என்ற நிலையிலும், தன் தாய் நாட்டிற்காக, சுயநலமின்றி தன் ஒரே மகனை போருக்கு அனுப்பும் அளவிற்குச் சங்ககாலப் பெண்கள் மனவலிமை பெற்றிருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகின்றது.

 2

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

பாடியவர் - பொன்முடியார்

திணை - வாகை. பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்ற வீரர்கள்  வாகைப் பூவினை அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்

துறை - மூதின்முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும் வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.

பாடல் விளக்கம்:

          மறக்குடியில் பிறந்த ஒரு பெண், தாய், தந்தை, கொல்லன், வேந்தன் ஆகியோரின் கடமைகள் குறித்துத் தன் மகனுக்கு எடுத்துரைக்கின்றாள்.

தாயின் கடமை

  மகனைப் பெற்று, வளர்த்து, பாதுகாத்து, அவனை உடலிலும் உள்ளத்திலும் வலிமையுள்ளவனாக வளர்ப்பது ஒரு தாயின் கடமையாகும்.

தந்தையின் கடமை: 

    அவனைத் தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி, அதனைப் பெறுவதற்குரிய அறிவு ஆகியவற்றைக் கொடுத்து அறிவுள்ளவனாக வளர்ப்பது ஒரு தந்தையின் கடமையாகும்.

கொல்லனின் கடமை: 

    அம் மகனுக்கு வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து கொடுத்தல் ஒரு கொல்லனுக்குக் கடமையாகும்.

வேந்தன் கடைமை: 

    அவனும் அவன் குடும்பத்தாரும் குறைவின்றி வாழ நீர் நிலங்களைக் கொடுத்தல் அந்நாட்டை ஆளும் வேந்தனின் கடமையாகும்.

மகனின் கடமை: 

    போரில் பங்கேற்று வாள் வீசி பகைவர்களைத் தோற்கடித்து, யானைகளை அடக்கி மீண்டு வருதல் ஒரு மகனின் கடமையாகும்.

3

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி. துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

பாடல் விளக்கம்:

  • எல்லா ஊரும் நமக்கு சொந்தமான ஊரே. எல்லோரும் நம் உறவினர்களே.
  • தீமையும் நன்மையும் துன்பமும் இன்பமும் பிறரால் வருவதில்லை. நாம் செய்யும் செயல்களாலேயே வருகின்றது.
  • இறப்பு என்பது புதியதன்று. நாம் கருவில் தோன்றிய நாள் முதலே நம் இறப்பு தீர்மானிக்கப்பட்டதாகும்.
  • வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் வேண்டாம். வெறுப்பு வரும்போது துன்பமானது என்று ஒதுக்குவதும் வேண்டாம்.
  • நீர் வழியே செல்லும் தெப்பம் போல, நம் உயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பதை அறிஞர் தம் கருத்துகளால் அறிவோம்.
  • ஆகையால், பெரியோரை மதித்தலும் வேண்டாம். சிறியோரை பழித்தலும் வேண்டாம்.


வெள்ளி, 9 டிசம்பர், 2022

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் - சிறுகதை

 

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்

அறிமுகம்

தனக்கென்று ஒரு தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்கின்ற ஒரு பெண்ணின் மனநிலையை இச்சிறுகதை சித்தரிக்கின்றது.

கதைக்கரு

கணவனை இழந்த ஒரு பெண் தான் தனி மரமான பின்பு வெளிநாட்டில் வசிக்கும் தன் பிள்ளைகளிடம் வாழ்ந்திடச் செல்கின்றாள். தன் உடமையென அவள் கொண்டு போவது பராசக்தி முதலிய சில கடவுள்களின் உருவச்சிலைகளை உள்ளடக்கிய ஒரு பிளாஸ்டிக் டப்பா. வெளிநாட்டுச் சூழ்நிலை, வெவ்வேறான மனிதர்கள், விலங்குகள் எவையும் அவளைப் பாதிக்கவில்லை. எங்கு சென்றாலும் எப்போதும் ஒரே மனநிலையில் இருந்து தன் இயல்பான ஆளுமைப் பண்பை, இரக்கக் குணத்தை வெளிக்காட்டுகின்றாள். எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்புக்குட்படாத அவளின் இந்நிலையைக் கண்டு வியந்து போன மகள்கள் தன் தாயின் சுதந்திரத்தைத் தடை செய்ய விரும்பாமல் சொந்த ஊரிலேயே ஒரு வீடு கட்டித் தர முடிவு செயகின்றனர். இதுவே இக்கதையின் கரு.

கதைச் சுருக்கம்

தனம், பாரதி, தினகரன் ஆகியோரின் தாய் குமுதா. தன் கணவனின் வேலை மாற்றங்களால் அசாம், அகமதாபாத், ஒரிசா எனப் பல மாநிலங்களில் வாழ்ந்தவர். ஆனால் எங்கு சென்றாலும், உணவை ஆதாரமாக வைத்து, தான் இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப் பிடித்த சூழலைக் கட்டியெழுப்பிக் கொள்கிறவர். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக் கொண்டு, திருமணமாகி விவாகரத்தான தன் மகள் பாரதிக்கு ஆதரவாக இருக்க, தன் கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அமெரிக்கா செல்கின்றார்.

பாரதியின் கடிதம்

அமெரிக்க வீட்டிற்கு வந்துள்ள தங்கள் தாயைப் பற்றி, தன் சகோதரி தனத்திற்குக் கடிதம் எழுதுகின்றாள் பாரதி. அதில், விமானப் பரிசோதனையின் போது அவள் கொண்டு சென்ற நாரத்தங்காய் ஊறுகாயைச் சுவைத்துப் பார்த்த விமானக் கம்பெனிக்காரர்கள் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட் தருவதாக சொல்லி பாரதியை நச்சரித்த நிகழ்வு, பக்கத்து வீடுகளில் தாய்மையடைந்திருக்கும் பெண்களுக்குப் பால்கோவா செய்து தருவது, குங்குமப்பூவின் மருத்துவக் குணங்களை எடுத்துரைப்பது எனத் தன் தாய் செய்கின்ற செயல்களை விவரிக்கின்றாள். சில நேரங்களில் அவை தொல்லையாகத் தெரிந்தாலும் அவளுடைய வரவு தனக்கு இன்பம் அளிப்பதாகக் கூறுகின்றாள். அவள் பாடுகின்ற பாரதியார் பாடல், அவள் அழைத்ததும் வருகின்ற அணில் கூட்டங்கள், அவள் செய்து தரும் சுவையான உணவுகள், விவாகரத்து பெற்ற தன் கணவனைச் சந்தித்துத் தனக்குத் திருமணமான பொழுது கொடுக்கப்பட்ட சீர் வரிசைகளைத் திரும்ப வரைவழைத்தல் எனத் தன் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை மீண்டும் சுவையாக்கிவிட்டாள் என்று மகிழ்ந்து கடிதத்தை நிறைவு செய்கின்றாள்.

தனத்தின் கடிதம்

தன் கணவன் இறந்த பிறகு தன் மற்றொரு மகள் தனத்தின் வீட்டில் தங்க வேண்டிய சூழல் குமுதாவிற்கு ஏற்படுகின்றது. வீட்டைக் காலி செய்துவிட்டு, அவளை அழைத்துப் போக வந்த தனம், இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் தன் தாயின் சுவடுகள் இருப்பதை அறிந்து அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், இரண்டு வீடு தள்ளி உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு கார்ஷெட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன் தாயின் அனைத்து உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவளின் வீணையை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள் தனம். அப்போதும் தன் கையில் பிளாஸ்டிக் டப்பாவில் சில தெய்வங்களை எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றாள் அவளுடைய தாய். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர்களின் வீட்டில், புத்தகத்திற்காக அடித்த பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தெய்வங்களை வைத்து வழிபடுகின்றார். இச்சூழலில் தனம் பாரதிக்குக் கடிதம் எழுதுகின்றாள். அக்கடித்ததில், மழைக்காலத்திற்கு ரசப்பொடி, சாம்பார் பொடி அரைப்பது, ஊறுகாய் போடுவது, செம்பருத்திப் பூ போட்டு எண்ணெய் காய்ச்சுவது, பக்கத்து வீட்டின் உறவினர்களுக்குச் சித்த மருத்துவம் தயாரிப்பது எனத் தன் தாய் செய்த செயல்களை விவரிக்கின்றாள். இறுதியாக, தன் சகோதரியிடம், நம் தாய் எங்கிருந்தாலும் தன் இயல்பை விட்டுவிடுவதில்லை. நம் வீட்டில் தங்கியிருந்தாலும் அவள் மனதில் தனக்கென்று ஓர் இடம் இல்லை என்று அவள் மனம் துன்பமடைகின்றது. எனவே நீயும் நானும் நம்முடைய நகைகளை விற்று இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டை விலைக்கு வாங்கி அவளுக்குக் கொடுத்துவிடுவோம். விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் தன் பேரப்பிள்ளைகளுடன் அவள் பொழுது மிக இனிமையாகக் கழியட்டும் என்று கடிதத்தை முடிக்கின்றாள்.

முடிவுரை

         இக்கதையில் குமுதாவிற்குத் தேவை தன் மன விருப்பம் போல் செயல்பட தனக்கென்று ஒரு வீடு. தனக்கான ஒன்றைக் கண்டடைந்து அதன்வழி மகிழ்கின்ற உள்ளம் தான் நிறைவான வாழ்க்கை என்ற கருத்தை உள்ளடக்கியதாக இச்சிறுகதை காணப்படுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் எந்தவிதச் சூழலும் தன்னைப் பாதிப்பதில்லை என்ற மனப்போக்கில், தன்இயல்பிலேயே நிறைவுகாணும் ஆளுமையாகக் குமுதா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் அம்பை அவர்கள்.