மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்
வருகைப்பருவம்
அறிமுகம்
இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர். ஐந்து வயது வரை பேசாதிருந்தமையால்
இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டினர். முருகன் அருளால் பேசியதன் காரணமாக
முதற்கண் கந்தர் கலிவெண்பா என்னும் பாமாலையை இயற்றினார். திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழ் படைத்தார். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. 102 பாடல்கள்
இடம் பெற்றுள்ளன. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், முருகன், விநாயகன், திருமகள்,
கலைமகள் ஆகியோரிடம் மீனாட்சியம்மையைக் காக்குமாறு 11 பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகின்றார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள வருகைப் பருவத்தின் முதல் ஐந்து பாடல்களின் விளக்கத்தைப் பின்வருமாறு
காண்போம்.
பாடல் 1
அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி
அரற்றுசெஞ்
சீறடிபெயர்த்து
அடிஇடும் தொறும்நின்
அலத்தகச் சுவடுபட்டு
அம்புவி அரம்பையர்கள்
தம்
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி
வளர்இளம் பிறையும்நாற
மணிநூ புரத்துஅவிழும்
மென்குரற் கோஅசையும்
மடநடைக் கோதொடர்ந்துஉன்
செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு
சிறைஓதி மம்பின்செலச்
சிற்றிடைக்கு ஒல்கிமணி
மேகலை இரங்கத்
திருக்கோயில்
எனஎன்நெஞ்சக்
கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட
காமர்பூங் கொடிவருகவே
கற்பக அடவியில் கடம்பாடு
அவிர்பொலி
கயல்கண்நா யகிவருகவே
பாடல் விளக்கம்
அழகிய சிலம்பு ஒலிக்க, சிறிய அடி வைத்து நீ பூமியில் கால் வைத்து நடக்கும்போது,
உன் செம்மையான பாதத்தின் தழும்புகள், தேவமகளிர் கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையிலும்,
சிவபெருமானின் சடைமுடியில் உள்ள இளம் பிறையிலும் தோன்றுகின்றன. நீ அணிந்திருக்கும்
சிலம்பில் இருந்து வெளிவரும் ஓசையினால், தளர்கின்ற உன் இளநடையினால் மனம் பறி கொடுத்து,
உன்னைப் பின்பற்றி வருகின்ற தெய்வப் பெண்கள் வருகின்றனர். அவர்களின் கூட்டத்தினுள்ளே
அன்னப்பறவைகளும் தொடர்ந்து வருகின்றன. மணிமேகலை என்னும் அரையணி ஒலிக்க என் மனமாகிய
தாமரை மலரையும், தமிழ்மொழி பழகும் மதுரை மாநகரையும் திருக்கோயிலாகக் கொண்டிருக்கும்
அழகிய மலர்க்கொம்பு போன்றவளே வருக. கற்பகக் காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற
கயற்கண் அம்மையே வருக.
பாடல் 2
குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்
கோதையும் மதுரம்ஒழுகும்
கொழிதமிழ்ப் பனுவல்
துறைப்படியும் மடநடைக்
கூந்தல்அம்
பிடியும் அறுகால்
வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ
மணங்கமழ விண்டதொண்டர்
மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட
மாணிக்க வல்லிவில்வேள்
துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல
தொல்உரு எடுத்துஅமர்செயும்
தொடுசிலை எனக்ககன முகடுமுட்
டிப்பூந்
துணர்த்தலை
வணங்கிநிற்கும்
கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்
கலாபமா மயில்வருகவே
கற்பக அடவியில் கடம்பாடு
அடவிப்பொலி
கயல்கண்நா யகிவருகவே
பாடல் விளக்கம்
திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய இலக்குமியும், பெண் யானை போன்றவளாகிய
கலைமகளும், வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் புகுந்து கொண்டனர். அதுபோல, சிவமணம் கமழ
தொண்டர்களின் மதியாகிய மலர்கள் பூத்திருக்கும் பொய்கை என்னும் கோயிலில் புகுந்துள்ள
மாணிக்க வல்லியே! மன்மதன் தன் மனைவி ரதி தேவியுடன் பலவகையான பழைய வடிவங்களைத் தாங்கிப்
போர் புரிவதற்கு எடுத்திருக்கும் பல வில்களைப் போல, வானத்தின் உச்சியை எட்டிப் பார்க்கின்ற
கரும்புக் காடுகள் நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும் தோகையுடைய மயில் போன்றவளே
வருக.
பாடல் 3
முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்
முள்பொதி குடக்கனியொடு
முடவுத் தடம்தாழை முப்புடைக்
கனிசிந்த
மோதிநீர் உண்டுஇருண்ட
புயல்பாய் படப்பைத் தடம்பொழில்கள் அன்றிஏழ்
பொழிலையும்
ஒருங்குஅலைத்துப்
புறம்மூடும் அண்டச்
சுவர்த்தலம் இடித்துஅப்
புறக்கடல் மடுத்துஉழக்கிச்
செயல்பாய் கடல்தானை செங்களம் கொள அம்மை
திக்குவிச யம்கொண்டநாள்
தெய்வக் கயல்கொடிகள்
திசைதிசை எடுத்துஎனத்
திக்குஎட்டும்
முட்டவெடிபோய்க்
கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை
காவலன் மகள்
வருகவே
கற்பக அடவியில் கடம்பாடு
அடவிப்பொலி
கயல்கண்நா யகிவருகவே.
பாடல் விளக்கம்
பாண்டியனின் மதுரை நகரத்தின் சோலைகளில், சந்திரன் சூழ்ந்திருக்கின்ற
பலாமரத்தில் முட்கள் நிறைந்த பழங்கள் காணப்படுகின்றன. நீண்டு வளர்ந்த தென்னை மரங்களில்
மூன்று பக்கமும் புடைத்திருக்கின்ற தேங்காய்கள் நீரைச் சிந்துகின்றன. அந்நீரைப்பருகிய
மேகங்கள் கருநிறமாக வானத்தைச் சூழ்ந்துள்ளன. அதுபோல, கடல் போன்ற சேனைகளைக் கொண்டு, ஏழு உலகங்களையும் வென்று, நீ திசையெங்கும் வெற்றியடைந்தாய். வெற்றியடைந்ததன் காரணமாக, வெற்றிக் கொடிகளைத் திசையெங்கும் எடுத்து வந்ததுபோல, பாண்டியனின் மதுரையில் அனைத்துத்
திசைகளிலும் கயல்மீன்கள் பாய்கின்றன. வரம்புகள் நெருங்கிய பெரிய வயல்கள் காணப்படுகின்றன. அத்தகு சிறப்பு மிக்க தமிழ்
வளர்த்த மதுரைக்குக் காவலனாக விளங்கும் பாண்டியன் மகளே! வருக.
பாடல் 4
வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு
மதுரஅமு துண்டுகடைவாய்
வழியும்வெள் அருவியென
நிலவுபொழி கிம்புரி
மருப்பில் பொருப்புஇடித்துத்
தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்
தலத்துஅணிவது
ஒப்பஅப்பிச்
சலராசி ஏழும் தடக்கையின்
முகந்துபின்
தானநீ ரால்நிரப்பி
முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன
முகடுகை தடவிஉடுமீன்
முத்தம் பதித்திட்ட
முகபடாம் எனவெழு
முகில்படாம்
நெற்றிசுற்றும்
கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்
களிறுஈன்ற பிடிவருகவே
கற்பக அடவியில் கடம்பாடு
அடவிப்பொலி
கயல்கண்நா யகிவருகவே
பாடல் விளக்கம்
மணி வடங்கள் பொருந்திய உன் மார்பில் பாலருந்தி, கிம்புரிப் பூண் அணிந்த
தந்தங்களினால் மலையை இடித்து, செந்தூளை மத்தகத்தில் பூசி, ஏழு கடலையும் தன் பெரிய கையால்
முகந்து, குறைத்து, பின் மத நீரினால் நிறைத்து, வானத்து உச்சியைத் துதிக்கையால் தடவி,
நட்சத்திரங்கள் ஆகிய முத்துக்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு, ஏழு முகில்கள்
என்ற கூட்டங்களை நெற்றியில் சுற்றி, மதம் பொருந்திய சிறிய கண்களையும் பெரியகொலைத் தொழிலையுமுடைய
பிள்ளையாரைப் பெற்ற பெண் யானையே! வருக.
பாடல் 5
தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு
செம்பஞ்சி யின்குழம்பால்
தெள்ளமுது இறைக்கும்
பசுங்குழவி வெண்திங்கள்
செக்கர்மதி
யாக்கரைபொரும்
வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
வாணிநதி யாச்சிவபிரான்
மகுடகோ டீரத்து அடிச்சுவடு
அழுத்தியிடு
மரகதக் கொம்புகதிர்கால்
மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்
வேழத்தின் மத்தகத்து
வீற்றிருக் கும்சேய்
இழைக்கும் பசுங்கமுகு
வெண்கவரி வீசும்வாசக்
கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்
கவுரியன் மகள்வருகவே
கற்பக அடவியில் கடம்பாடு
அவிப்பொலி
கயல்கண்நா யகிவருகவே
பாடல் விளக்கம்
உன் சிறிய பாதங்கள் செம்பஞ்சு குழம்பினால் பூசப்பட்டுள்ளன. அச்சீறடிகள்
சிவபெருமானின் தலை மீது படுவதால், அங்குள்ள வெண்மை நிறமுடைய சந்திரன் சிவந்த நிறம்
பெறுகின்றான். சிவனின் தலையில் உள்ள கங்கையாறு சோணை நதியாக உருப்பெருகின்றது. சிவபெருமானுடைய
மகுடமான சடையில் உன் பாதத்தின் சுவடுபட அழுத்துகின்ற பச்சை நிறமுள்ள பூங்கொம்பே! (ஊடல்
காலத்தில் சிவபெருமானின் முடி மீது பார்வதி தேவியின் சீறடி படும் என்பது புராணச் செய்தி)
ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நடக்கின்ற பெரிய வானத்தில் ஐராவதமாகிய யானையின் முதுகில்
வீற்றிருக்கின்ற இந்திராணிக்கு, பாண்டியனின் நாட்டில் உள்ள பச்சைநிற கமுகமரம் வெண்கவரி
வீசுவது போல உயர்ந்து நிற்கின்றது. அச்சிறப்பு மிக்க பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த
கூடலில் வளர்கின்ற பாண்டியன் மகளே! வருக.