வெள்ளி, 5 மே, 2023

கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

 

 கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

1

வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்.


விளக்கம்

 “வேதத்தைத் தமிழிலே அருளிச்செய்த, அழகிய திருக்குருகூருக்குத் தலைவரான மாறன் என்கிற நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றை அறியேன்” என்று சொன்ன மதுரகவி ஆழ்வாரே நம்மை ஆள்பவர், அவரே நமக்குப் புகலிடம்.


2

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே


விளக்கம்

 யசோதைப் பிராட்டி சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்ட கண்ணனை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாவினுக்கு இனியதாகவும் அமுதமாகவும் உள்ளது.


3

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே


விளக்கம்

நான் ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.

4

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே


விளக்கம்

 ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிலையில் இருந்து நழுவினேன். அழகிய திருமேனியை உடைய திருமாலை, எம் ஆழ்வார் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். அங்ஙனம் வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாருங்கள்!


5

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே


விளக்கம்

 நான்கு வேதங்களில் சிறந்த ஞானம் உடையவர்கள் யாவரும் என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார். எனவே அவரே என் இறைவன்.


6

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே


விளக்கம்

முற்காலத்தில் பிறருடைய பொருளையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.


7

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே


விளக்கம்

 திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய இறைவனாகிய நம்மாழ்வார், இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும் படியான நிலையை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்!


8

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே


விளக்கம்

 காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னை ஏற்றுக்கொண்டார். என்னுடைய பாவங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.


9

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே


விளக்கம்

 இறைவனின் அருளைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேதத்தின் மூலப்பொருளைத் திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது.


10

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே


விளக்கம்

 வேதத்தின் சாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உயரிய நிலை எனக்கு உடனே கிடைத்தது.


11

பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே


விளக்கம்

 குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகள் சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்தப் பயனும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், உம் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்தி நற்செயல்களில் ஈடுபடுத்துகின்றீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.


12

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே   


விளக்கம்

 எம்பெருமானாகிய திருமால் எல்லோரிடத்திலும் அன்புடையவன். நம்மாழ்வார் திருமாலின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். மதுரகவியாழ்வாராகிய நான் நம்மாழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். நான் பக்தியுடன் பாடிய இந்த பிரபந்தத்தை முழுவதுமாக படிப்பவர்கள் வைகுந்தத்தை அடைவார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக