கடமையைச்
செய் - மீரா
பத்து மணிக்குச்
சரியாய் நுழைந்தேன்.
கூட இருப்போரிடத்தில்
கொஞ்சம் குசல விசாரணை.
தலை வலித்தது
தேநீர் குடிக்க
நாயர் கடைக்கு நடந்தேன்.
ஊரில் இருந்து
யாரோ வந்தார்
ஒரு மணி நேரம்
உரையாடல்.
இடையில்
உணவை மறக்கலாமா?
உண்டு தீர்த்த
களைப்புத் தீர
ஒரு கன்னித் தூக்கம்.
முகத்தை அலம்பிச்
சிற்றுண்டி நிலையம்
சென்று திரும்பினேன்.
வேகமாய்
விகடனும் குமுதமும்
படித்து முடித்தேன்.
மெல்லக்
காகிதக் கட்டை எடுத்துத்
தூசியைத் தட்டித் துடைத்துக்
கடமையைச் செய்யத்
தொடங்கும்போது….
கதவை அடைத்தான்
காவற்காரன்
மணி ஐந்தாயிற்றாம்.
கடமையைச்
செய் - மீரா
கவிதையின் விளக்கம்:
கவிஞர்
மீரா அவர்கள் ‘கடமையைச் செய்’ என்ற தம் கவிதையின் மூலமாக,
அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல் நேரத்தை எவ்வாறு வீணடிக்கின்றனர்
என்பதைத் தெரிவிக்கின்றார். இக்கவிதை அங்கத (கிண்டல், கேலி) முறையில் அமைந்துள்ளது.
- பத்து மணிக்குச் சரியாக அலுவலகத்தில் நுழைந்த ஊழியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடம் உரையாடி நலம் விசாரிக்கின்றார்.
- லேசாக தலை வலிப்பது போல் தோன்றியதால், தேநீர் பருக நாயர் கடைக்குச் செல்கின்றார்.
- தேநீர் அருந்திய பின் ஊரிலிருந்து வந்த யாரோ ஒருவரிடம் ஒரு மணி நேரம் உரையாடுகின்றார்.
- உணவு இடைவேளை வந்து விட்டது. உணவு அருந்துகின்றார்.
- உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உறங்குகின்றார்.
- பின்பு, முகத்தைக் கழுவிக்கொண்டுச் சிற்றுண்டி நிலையத்திற்குப் புறப்படுகின்றார்.
- மீண்டும் அலுவலகம் வந்த பின்பு தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விகடன் குமுதம் போன்ற இதழ்களைப் படிக்கின்றார்.
- அலுவலகம் வந்ததில் இருந்து வேலையைப் பற்றிச் சிறிதும் யோசித்துப் பார்க்காத அவர் மெதுவாக காகிதக் கட்டைகளை எடுத்துத் தூசியைத் தட்டித் துடைத்து கடமையைச் செய்யத் தொடங்கினார்.
- அப்போது காவல்காரன் வந்து, மணி ஐந்து ஆகிவிட்டது எனக் கூறி கதவை அடைக்கின்றார்.
இவ்வாறு
ஊழியர்கள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் அரசாங்கப் பணிகளைச் சரியாகச்
செய்ய முடிவதில்லை என்ற கருத்து இக்கவிதையின்வழி புலப்படுகின்றது.