வியாழன், 18 மே, 2023

நாட்டுப்புறப் பாடல் - மானம் விடிவெதெப்போ?

 

நாட்டுப்புறப் பாடல் 

மானம் விடிவெதெப்போ?

மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.

பூமியை நம்பி புத்திரைத் தேடி வந்தோம்.

பூமி பலி எடுக்க புத்திரர் பரதேசம்,

மானத்தை நம்பி மக்களைத் தேடி வந்தோம்.

மானம் பலியெடுக்க மக்களெல்லாம் பரதேசம்.

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் பின்னப் பட்டு நிக்கிறாங்க.

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ண தேவா...

மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ் சோர்ந்து நிக்கிறாங்க...

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ணதேவா....

காட்டுத் தழை பறித்து கையெல்லாம் கொப்புளங்கள்

கடி மழை பெய்யவில்லை கொப்புளங்கள் ஆறவில்லை.

வேலித் தழை பறித்து விரலெல்லாம் கொப்புளங்கள்

விரைந்து மழை பெய்யவில்லை வருத்தங்கள் தீரவில்லை.

மானம் விடிவதெப்போ எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?

பூமி செழிப்பதெப்போ எங்க புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ?

ஓடி வெதச்ச கம்பு ஐயோ! வருணதேவா

ஊடு வந்து சேரலையே பாடி வெதச்ச கம்பு

ஐயோ வருணதேவா பானை வந்து சேரலையே.

பாடல் விளக்கம்:

          மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மழை பெய்யச் செய்யுமாறு வருணனிடம் வேண்டுகின்றனர்.

  • மக்கள் உயிர் பிழைக்க ஊர்விட்டு ஊர் வந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் உணவு நீர் இல்லாமல் தவித்தனர்.
  • மழை வரும் என்று வானத்தை நம்பியதும் வீண்போனது. மழை பெய்யவில்லை. மக்களெல்லாம் உடல் மெலிந்து இறக்கும் சூழ்நிலைக்கு ஆளானார்கள்.
  • ஏர் பிடித்து உழவு செய்பவர்களெல்லாம் தாங்கள் விதைத்த விதை பயிராகவில்லையே என்று வருந்தி முகம் சோர்ந்து நிற்கின்றனர். அவர்கள் குறையைத் தீர்க்க மழையாக வந்திறங்கு வருணதேவா என்று வேண்டுகின்றனர்.
  • தங்களுக்கு உணவு இல்லாமல் போனாலும் தங்களை நம்பியிருக்கும் மாடு, கன்றுக்கு உணவு தரவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு காட்டிலும் வேலியிலும் தழை பறித்ததால், அவர்களின் கைகளிலும், விரல்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. 
  • அப்பொழுதும் மழை பெய்யவில்லை. அவர்களின் குறை தீரவில்லை. கொப்புளங்கள் ஆறவில்லை.
  • மழை வரும் என்று நம்பி வானத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்கள் தங்கள் பஞ்சம் எப்பொழுது தீரும் என்றும், பூமி எப்பொழுது செழிக்கும் என்றும் அழுது புலம்பினர்.
  • ஓடியும் பாடியும் விதைத்த கம்பு பயிராகவில்லையே தாங்கள் விதைத்த பானையளவுகூட விளைச்சல் இல்லையே என்று கவலையோடு கூறி இக்குறையைத் தீர்க்க வந்திறங்கு வர்ணதேவா என்று அவ்வூரிலுள்ள கன்னிப் பெண்கள் வருணதேவனை வேண்டிப் பாடினர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக