ஆடிக்காற்றே
- சிற்பி
ஆடிக்காற்றே வா! வா!
மண் தூவி விதை தூவி
முளை காண விழை காற்றே
என் சொல் கேளேன்.
நெல்லை நாறப் புழுக்குறானே
அவனைப் படியில் உருட்டிவிடு
இளைத்தவன் வயிற்றில்
சொடுக்குறானே
அவனைக் குழியில் இறக்கிவிடு
மஞ்சள் இதழில் பச்சை
கிறுக்குறானே
அவனை பனை மரத்தில் தொங்கவிடு
உதைத்துக் கொள்ளட்டும்
துள்ளல் அடங்கட்டும்.
புரட்சிக் காற்றே!
இன்னும் ஒன்றே ஒன்று
இவற்றைக் காண விழைந்த
என் துணை
இதோ, இங்கே நிலப்படுக்கையில்,
எனக்காக -
மல்லிகை மலர்களைத் தூவ
மாட்டாயா?
மெல்ல -
மெல்லத் தூவு, நோகாமல்
தூவு.
ஆடிக்காற்றே
- சிற்பி
கவிதையின் விளக்கம்:
- ஆடி மாதத்தில் வீசும் காற்றை கவிஞர் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் ‘ஆடிக்காற்றே வா வா’ என்று பாடுகின்றார்.
- ஆடிக்காற்றைப் புரட்சிக் காற்று என்றும் வர்ணிக்கின்றார்.
- மண்ணையும் விதைகளையும் தூவி அவை பயிராவதைக் காண விரும்பும் உழவர்களுக்கு உதவும் வகையில், தன் சொல் கேட்குமாறு ஆடிக்காற்றிடம் கூறுகின்றார் கவிஞர்.
- கல்நெஞ்சம் கொண்டு மக்களைப் பல வகைகளில் துன்புறுத்தும் சில சமுதாய துரோகிகளை எவ்வாறெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை ஆடிக்காற்றிடம் தெரிவிக்கின்றார்.
1.அரிசியைத்
துர்நாற்றத்தோடு எடுத்து வழங்குபவனை படியில் உருட்ட வேண்டும்.
2.அப்பாவி
மக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணமும் கொடுக்காமல் விளைச்சலில் பங்கும் தராமல் அவர்கள்
வயிற்றில் அடித்து பட்டினி போடுகின்றவனைக் குழியில் இறக்க வேண்டும்.
3.பிறரை
இழிவுபடுத்தும் வகையில் மஞ்சள் இதழில் ஆபாசமாக எழுதுகின்றவனைப் பனை மரத்தில் தொங்க
விட்டு, துள்ளல் அடங்கித் தானே இறந்து போக வேண்டும்.
என்று
ஆடிக்காற்றிடம் விண்ணப்பம் செய்கின்றார். இறுதியாக, ‘அவற்றைக் காண விரும்பிய என் மீது
மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா? தூவினால் மெல்லத் தூவு, நோகாமல் தூவு’ என்றும் கூறுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக