கவிஞர் அப்துல் ரகுமான்
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது.
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்.
“ஏன்
தீக்குச்சியை
வணங்குகிறாய்?”
என்று கேட்டேன்.
“ஏற்றப்பட்டதை
விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா” என்றான்.
அவன் மேலும் சொன்னான்
தீக்குச்சிதான் பிரசவிக்கிறது
விளக்கோ வெறும் காகிதம்!
தீக்குச்சி பிச்சை போடுகிறது
விளக்கோ வெறும் பிச்சைப் பாத்திரம்
தீக்குச்சி
ஒரே வார்த்தையில் பேசிவிடுகின்றது
விளக்கோ வளவளக்கிறது!
விளக்கம்
தீக்குச்சி விளக்கை ஏற்றியது. அனைவரும் தீபத்தை வணங்கினர். பித்தன் மட்டும் தீபத்தை ஏற்றுவதற்கு மூலகாரணமாகிய தீக்குச்சியை வணங்கினான். தீபத்தை வணங்குவதை விட்டு தீக்குச்சியை ஏன் வணங்கினாய் என்று கேட்டதற்கு, “ஏற்றப்பட்டதை விட ஏற்றியது உயர்வானது” என்று பித்தன் பதில் கூறுகின்றான். மேலும், “தீக்குச்சி நெருப்பை உருவாக்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் நெருப்பைப் பிச்சையிடுகின்றது. விளக்கு நெருப்பைப் பெறுகின்ற பிச்சைப் பாத்திரமாகின்றது. தீக்குச்சி சில நிமிடங்கள் வாழ்ந்து தன் ஒளி என்னும் மொழியால் பேசி அளவாகப் பேசுகின்றது. விளக்கோ தன் அறியாமையால், அரைகுறை அறிவால் பேசிக்கொண்டே நேரத்தை வீணடிக்கின்றது” என்று கூறுகின்றான்.
இக்கவிதை பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்பவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைகின்றது.