ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பாபஞ்செய் யாதிரு மனமே - கடுவெளிச்சித்தர்

 

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

விளக்கம்

மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.

1

சாபங்கொடுத்திட லாமோ – விதி

தன்னைநம் மாலே தடுத் திடலாமோ

கோபந் தொடுத்திட லாமோ - இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

விளக்கம்

ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.

2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் - எந்த

நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

விளக்கம்

சூது என்பது சூதாட்டம். பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும், உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள், உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.

3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

விளக்கம்

தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.

4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

விளக்கம்

 ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.

5

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே

ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

விளக்கம்

யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.

6

நல்ல வழிதனை நாடு - எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

விளக்கம்

நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

7

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட

பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

விளக்கம்

உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.

8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

விளக்கம்

வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.

9

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னை யாளாதே - சிவன்

இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

விளக்கம்

ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.

10

மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டி னோர்க் கானந்த மாம் வழி கூறு

விளக்கம்

மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.

காடே திரிந்து, தாயும் பகை - பட்டினத்தார்

பட்டினத்தார்

இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர்

பாடல்

காடே திரிந்து என்ன காற்றே புசித்து தென்ன கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்

நாடே இடைமருதீசர்க்கு மெய் அன்பர் நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டு இன்பம் மேவும் வரை (1)

விளக்கம்

உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.

பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டிர் பெரும் பகை தன்னுடைய

சேயும் பகை உறவோரும் பகை இச் செகமும் பகை

ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்

தோயும் நெஞ்சே மருதீசர் பொன் பாதஞ் சுதந்தரமே (2)

விளக்கம்

வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.


ஈர் ஒற்று, ஒரு, ஓர், அது, அஃது, தான், தாம் வரும் இடங்கள்

 

ஈர் ஒற்று வரும் இடங்கள்

இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

சான்று - புகழ்ச்சி (இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது)

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – காய்ச்சல், மெய்ஞ்ஞானம், மேய்த்தல், வாய்ப்பு

‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – பார்க்கிறாள், உயர்ச்சி, பார்த்தல்,

‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – வாழ்க்கை, வாழ்த்து, வாழ்ந்து, தாழ்ப்பாள்


அது, அஃது வரும் இடங்கள்

அது என்ற சொல்லுக்கும், அஃது என்ற சொல்லுக்கும் பொருளில் வேறுபாடு கிடையாது.

அது – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அது புலி, அது வண்டி, அது மாட்டு வண்டி.

அஃது – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அஃது இல்லை, அஃது ஆமை, அஃது ஏணி


ஒரு, ஓர் வரும் இடங்கள்

ஒரு – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஒரு வீடு,  ஒரு சிங்கம்

ஓர் – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஓர் ஆசிரியர்,  ஓர் ஆடு.


தான் தாம் வரும் இடங்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

சான்று - கன்று தனது தலையை ஆட்டியது.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

சான்று - மாடுகள் தமது தலையை ஆட்டின.

 


நன்றி

https://theenthamizhchaaral.wordpress.com/2016/09/11/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-9/