வெள்ளி, 5 ஜனவரி, 2024

அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும் குறையாத வயதும்

 

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

விளக்கம்

இந்த உலகத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்கள் தேவை. அவை,

அறிவைத் தருகின்ற கல்வி,

நீண்ட ஆயுள்,

உண்மையான நண்பர்கள்,

நிறைந்த செல்வங்கள்,

முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம்,

நோயற்ற உடல்,

சோர்வின்றி இயங்குகின்ற மனம்,

அன்பைப் பொழிகின்ற மனைவி,

மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள்,

என்றும் குறையாத புகழ்,

வாக்கு மாறாதிருத்தல்,

பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை,

அழியாத செல்வங்கள்,

நீதி தவறாத ஆட்சி,

துன்பம் இல்லாத வாழ்க்கை,

அபிராமியின் திருவடியின் மீது அன்பு

இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும். இவை அனைத்தும் குறைவில்லாமல் தருபவள் அன்னை அபிராமி.  அவள் அலைகள் வீசுகின்ற கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம். சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.

 

வியாழன், 4 ஜனவரி, 2024

கலிங்கத்துப் பரணி

 

கலிங்கத்துப் பரணி

பாடல் எண் 1

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்

பருந்தினமுங் கழுகினமும் தாமே உண்ணப்

பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். (478)

விளக்கம்

விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட மேன்மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அதுபோல பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள், தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருப்பதைக் காணுங்கள்.

பாடல் எண் 2

சாம் அளவும் பிறர்க்கு உதவா தவரை நச்சிச்

சாருநர்போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி

போம் அளவும் அவர் அருகே இருந்து விட்டுப்

போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். (479)

விளக்கம்

பிறர்க்கு எதையும் கொடுத்து உதவாதவர் இறக்கும் வரையில் அவரைச் சுற்றிக் காத்திருந்து, அவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் அருகிலேயே இருந்து விட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்ற நரிக்கூட்டத்தைப் பாருங்கள்.

பாடல் எண் 3

மாமழைபோல் பொழிகின்ற தான வாரி

மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்

பூமழைபோல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு

பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின். (480)

விளக்கம்

யானைகள் உயிருடன் இருந்தவரை, அதன் மதநீரை உண்ட வண்டுகள் மதயானைகள் இறந்ததும், அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட்டு, வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பூ மழை பொழிய, அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண வண்டுகள் எல்லாம் மேலே பறந்து சென்று விட்டன. இது பொருள் உள்ளவரை ஒருவருடன் கூடி இருந்து விட்டு அவன் பொருள் எல்லாம் தீர்ந்தவுடன் அவனை விட்டு நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது. அதையும் காணுங்கள்.

பாடல் 4

சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து

தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்

காந்தருடன் கனல் அமளி தன்மேல் வைகும்

கற்புடைமாதரை த்தல் காண்மின் காண்மின்.(481)

விளக்கம்

போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன், மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கின்றன. இக்காட்சி உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது. அதையும் காணுங்கள்

பாடல் 5

ம் கணவருடன் தாமும் போக என்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

ம் கணவர் கிடந்த ம் எங்கே ன்று என்று

டாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.(482)

விளக்கம்

கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் தாமும் வீர சொர்க்கம் போக வேண்டும் என்று எண்ணி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தம் கைகளால் தேடவித் தேடுவர். தேடியும் காணா முடியாத நிலையில் பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே என்று  கேட்பதைக் காணுங்கள்.

 

 

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

முக்கூடற்பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை

 

முக்கூடற்பள்ளு

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

          போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே.

விளக்கம்

  • நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கு உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னலும், தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும், சூழ வளைத்து மின்னுகின்றன;
  • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றிக் காற்று அடிக்கின்றது;
  • கிணற்று நீரிலே இருக்கின்ற கசொறித்தவளைகள் கூப்பிடுகின்றன; சேற்றிலே வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாதபடி சேற்றினால் வளை வாயில்களை அடைக்கின்றன;
  • நீர்த்துளியை உண்ண ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் ஒரு மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றன;
  • உலகமெல்லாம் போற்றும் திருமாலாகிய அழகருக்குப் பெரியபபண்ணையைச் சேர்ந்த சேரியிலுள்ள பள்ளர் வகையினரெல்லாம் மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோம் வாருங்கள்!