திங்கள், 29 ஜனவரி, 2024

காளமேகப்புலவர் - ஆமணக்கும் யானைக்கும் சிலேடை

 

காளமேகப்புலவர்

ஆமணக்கும் யானைக்கும் சிலேடை

பாடல்

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண்டு ஏந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

விளக்கம்

எல்லாப் பக்கங்களிலும் மணம்வீசும் சோலைகளை மிகுதியாக உடையது திருமலைராயனது மலை.

ஆமணக்கு

முத்துக்களாகிய விதைகளைத் தன்னிடத்துப் பெற்றிருக்கும். கிளைகளை அசைத்துக் கொண்டே நிற்கும். முதிர்வுற்ற தண்டைத் தாங்கி வளர்ந்து வரும். லிங்கத்தைப் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாகப் பெற்றிருக்கும். எதிர் நின்று காண்பவர்களைக் கவருகின்ற குலைகளைச் சாய்த்துக் கொண்டிருக்கும்.

யானை

நல் ஒளி வீசும் முத்துக்களை நெற்றியில் பெற்றிருக்கும். தனது கொம்பாகிய தந்தங்களை அசைத்துக் கொண்டே இருக்கும். வன்மையான கட்டைகளை மிகவும் எளிமையாக துதிக்கையால் தூக்கி வந்து கொண்டே இருக்கும்.  பாகர்கள் அங்குசத்தால் குத்திய வடுக்கள் காணப்படும். மலையில் உள்ள வாழைக் குலைகளை முறித்துப் பூமியிலே விழும்படி அடித்து உண்ணும்.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

திருவரங்கக் கலம்பகம் - மறம்

 

திருவரங்கக் கலம்பகம் - மறம்

பேசவந்த தூதசெல்லரித்தவோலைசெல்லுமோ

பெருவரங்களருளரங்கர்பின்னைகேள்வர்தாளிலே

பாசம்வைத்த மறவர்பெண்ணைநேசம்வைத்துமுன்னமே

பட்டமன்னர்பட்டதெங்கள்பதிபுகுந்துபாரடா

வாசலுக்கிடும்படல்கவித்துவந்தகவிகைமா

மகுடகோடி தினையளக்கவைத்தகாலுநாழியும்

வீசுசாமரங்குடிற்றொடுத்தகற்றைசுற்றிலும்

வேலியிட்டதவர்களிட்டவில்லும்வாளும்வேலுமே.

விளக்கம்

 எங்கள்பெண்ணை மணம் பேச வந்த தூதனே!  செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது. தம் அன்பர்களுக்குப் பெரிய வரங்களை அருளுகின்ற, திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார்

  • எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகள், அவர்கள் பிடித்துவந்த, குடைகள்.  
  • தினையரிசிகளை, அளக்கும்படியாக, வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.
  • எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள்
  • அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.
  • ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக.

 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும் குறையாத வயதும்

 

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

விளக்கம்

இந்த உலகத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்கள் தேவை. அவை,

அறிவைத் தருகின்ற கல்வி,

நீண்ட ஆயுள்,

உண்மையான நண்பர்கள்,

நிறைந்த செல்வங்கள்,

முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம்,

நோயற்ற உடல்,

சோர்வின்றி இயங்குகின்ற மனம்,

அன்பைப் பொழிகின்ற மனைவி,

மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள்,

என்றும் குறையாத புகழ்,

வாக்கு மாறாதிருத்தல்,

பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை,

அழியாத செல்வங்கள்,

நீதி தவறாத ஆட்சி,

துன்பம் இல்லாத வாழ்க்கை,

அபிராமியின் திருவடியின் மீது அன்பு

இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும். இவை அனைத்தும் குறைவில்லாமல் தருபவள் அன்னை அபிராமி.  அவள் அலைகள் வீசுகின்ற கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம். சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.