சனி, 9 மார்ச், 2024

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஏழாவது சுரம்

கதவை இழுத்து மூடியதால்

எட்டாவது சுரம்

ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை

ஆலாபனை நிறுத்திவிட்டுக்

கதவைத் திறக்க

ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்

எழுதி வைத்திருக்கலாம் வாசலில்

“எட்டாவது வண்ணத்திற்கு

இங்கு இடம் இல்லை“!

அதற்காக

உறங்க முடியாத வானம்

நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்

வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத்து துடித்த

எட்டாவது கிழமை

ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால்

மாதத்தின் மார்பு துடித்து

வெடித்திருக்காதா?

வள்ளுவ!

எட்டாவது சீர்

உன்னைத் தேடி வந்தபோது

என்ன செய்தாய்?

“போடுவதற்கு ஒன்றுமில்லை

போ”

என்று

வாசல் யாசகனை

வீடுகளில் விரட்டுவதுபோல்

விரட்டி விட்டாயா?

எட்டாவது சீர்

ஏன் உனக்கு தேவைப்படவில்லை?

யாப்பு

கூப்பிட்டு மிரட்டியதால்

ஏற்பட்ட அச்சமா?

ஏழு சீர்களிலேயே

ஒளி தீர்ந்து போனதா? – ஈற்று

முச்சீரடியில் உனக்கும்

மூச்சு முட்டியதா?

“காசும்” “பிறப்பும்”

உன்முன் வந்து கண்களைக்

கசக்கினவா?

“நாளும்” மலரும்”

நச்சரித்தனவா?

இல்லை

எட்டாவது சீர்தான்

அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்

கடைசிக் குறளின் காலடியே

எட்டாவது சீர் ஒன்று

தோளில் என்னைத் தூக்கிக்கொள்

என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்

கடைசி அலையின்

தாகத்தைத் தணிப்பது என்வேலை

இல்லை என்கிறாயா?

சிந்தனைகளை எண்ணியவனே?

நீ

சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு

எண்ணங்களே முக்கியம்

எங்களுக்கோ

எண்ணிக்கையே முக்கியம்

ஏழு சீர்களில்

சொன்னதே எதற்கு என்று

எண்ணிக் கொண்டிருக்கிறேன்

ஏன்

எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு

என்கிறாயா?

போதைப் “பொருளுக்கு”

அறத்தையும் இன்பத்தையும்

அவசரமாய் அடகு வைப்பவர்கள்

நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

வீடு தேடுகிற

வெறியில்

அறம் பொருள் இன்பத்தை

மிதித்துக் கொண்டு

ஓடுகிறவர்கள் நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

இலக்கணக்காரன்

இப்போது எப்படி ஏங்குகிறான்

தெரியுமா?

எட்டாவது சீருக்கு

இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்

சொல்லியிருப்பாயே!

வாய்ப்புள்ளவன்

அந்த ஒரு சீரில் சிந்தித்து

வரிகளைச் சமப்படுத்தட்டும்

என நான்தான்

விட்டு வைத்திருக்கிறேன்” என்கிறாயா?

என்னோடு

நிறைவடைந்து விடவில்லை

சிந்திக்க இடம்

இன்னும் உண்டு என்பதைக்

கோடி காட்டுகிறாயா?

உண்மையின்

உள்ளத்திலிருந்து பேசுபவர்

எவரோ அவரே – நீ

எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்

வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்

இப்போது உன் சிலை முன்

உண்ணாவிரதம் இருக்கின்றன

என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்

நீ வந்து இன்னொரு திருக்குறள்

எழுதும்போது

ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

விளக்கம்

உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமடளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

இசையின் சுரங்கள் ஏழு

இசையின் சுரங்கள் ஏழு. எட்டாவது சுரம் அனுமதிக்கப் படாததால் இசையின் தேவதை தன் ஆலாபனையை நிறுத்தி விட்டுக் கதவை திறக்க ஓடியிருப்பாள். ஏனெனில் இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை.

வானவில்லின் நிறம் ஏழு

வானவில்லின் நிறம் ஏழு. எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால் வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம். நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை என்பதை வானவில் உணர்ந்திருக்கும்.

வாரத்தின் நாட்கள் ஏழு

வாரத்தின் நாட்கள் ஏழு. எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

வள்ளுவத்தின் சீர் ஏழு

எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடி போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

ஏழு சீர்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் ஒளி தீர்ந்திருக்கலாம்.

அலகிடும் வாய்ப்பாடுகளான காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதல் அடியாக இருக்கின்றதோ என்று எண்ணினால் இல்லை. ஏனெனில், கடைசி குறளின் காலடி என்னைத் தோளில் வைத்துக் கொள் என்று கெஞ்சியிருக்க வாய்ப்புண்டு.

கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்க்க முடியாது என்பதுபோல   கடைசிக் குறளின் வேண்டுகோளை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

சிந்தனைகளை எண்ணிய வள்ளுவர் சீர்களை எண்ணவில்லை. ஆனால் நமக்கோ எண்ணிக்கைதான் முக்கியம். அவர் தந்த கருத்துகளை ஆராய்வதை விட்டு, ஏன் அவர் ஏழு சீர்களுக்குள் திருக்குறளை அமைத்திருக்கின்றார் என்று ஆராய்கின்றோம்.

ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

பணம் என்ற போதைக்கு அடிமையாகி அறத்தையும், இன்பத்தையும் அடகு வைக்கின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

வீடுபேறு தேடுகின்ற வெறியில் அறம், பொருள், இன்பத்தை எல்லாம் மதிக்காமல் மிதித்துக் கொண்டு ஓடுகின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

வாய்ப்புள்ளவர்கள் சீர்களைச் சமப்படுத்தட்டும் என்று வள்ளுவர் அதை விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்.

உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

மீண்டும் அவர் வந்து இன்னொரு திருக்குறள் படைக்கும்போது ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டும் என்று எட்டாவது சீர்கள் எல்லாம் திருவள்ளுவரின் சிலை முன் உண்ணாவிரதம் இருக்கின்றன.

என்று கவிநயத்தோடு இக்கவிதையைப் படைத்திருக்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

 

 

 

தமிழ்ஒளி – மீன்கள்

தமிழ்ஒளி – மீன்கள்

வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ – ஏழை

வாழும் குடிசையின் பொத்தல்களோ?

மாநில மீதில் உழைப்ப வர்கள் – உடல்

வாய்ந்த தழும்புகளோ அவைகள்?

செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம் – அங்குச்

சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?

சொந்த உரிமை இழந்திருக்கும் – பெண்கள்

சோக உணர்ச்சிச் கிதறல்களோ?

இரவெனும் வறுமையின் கந்தல் உடை தனில்

எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?

அருந்தக் கூழின்றியே வாடுபவர் – கண்ணீர்

அருவித் துளிகளோ வான்குன்றிலே?

காலம் உழுதும் எழுத்துக்களோ – பிச்சைக்

காரர் இதயத்தின் விம்மல்களா?

நீலக் கண்ணாடியின் கோட்டையிலே – மின்னல்

தெளிவை இறைத்திட்ட அற்புதமோ?

வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும் – இருள்

வேலிகட்டி யிங்கு வைத்திடினும்

பொய்யில் தொழிலாளர் எண்ண மெலாம் – அங்குப்

பொங்கிக் குமுறி இறைத்தனவோ?

விளக்கம்

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குமுறல்கள் எல்லாம், வானில் விண்மீன்களாக அமைந்திருப்பதாகக் கற்பனை செய்கின்றார் கவிஞர்.

  • கடல் போன்று விரிந்த வானத்தில் தோன்றுகின்ற முத்துகளாக,
  • ஏழைகளின் குடிசையில் இருக்கின்ற ஓட்டைகளாக,
  • உழைப்பவர்களின் உடலில் உள்ள தழும்புகளாக,
  • உரிமை இழந்த பெண்களின் உணர்ச்சிச் சிதறல்களாக,
  • உணவின்றி வாடுபவர்களின் கண்ணீர்த் துளிகளாக,
  • வாழ வழியின்றி பிச்சையெடுப்பவர்களின் விம்மல்களாக

விண்மீன்கள் காணப்படுவதாகக் கவிஞர் காட்சிப்படுத்துகின்றார். இதன் மூலம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். கோடைகாலத்து வெயில் போல அரசாங்கம் துன்புறுத்தினாலும், தங்கள் வாழ்க்கை இருளாகக் காட்சியளித்தாலும் பொய்யாக உழைக்கத் தெரியாதவர்கள் தொழிலாளர்கள். அவர்களின் எண்ணங்கள் எல்லாம் வானில் பொங்கி இறைந்துள்ளன என்றும் பாடுகின்றார். தங்கள் துன்பங்களுக்கு அரசால் என்றாவது ஒருநாள் முடிவு கிடைக்கும் என்ற தொழிலாளர்களின் எண்ணங்களை இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

 


வியாழன், 29 பிப்ரவரி, 2024

சிறுத்தையே வெளியில்வா - பாரதிதாசன்

சிறுத்தையே வெளியில்வா

பாரதிதாசன்

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!

சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்

பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்

புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்

வையம் ஆண்ட வண்டமிழ் மரபே

கையிருப்பைக் காட்ட எழுந்திரு!

குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?

மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!

பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!

மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!

கைக்குள திறமை காட்ட எழுந்திரு!

வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!

வாழ்க திராவிட நாடு!

வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

பாடல் விளக்கம்

தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் இப்பாடலில் வலியுறுத்துகின்றார். இளைஞர்களைப் பார்த்து,

  • “இதுவரை அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டன. அதனால் சிறுத்தை போன்ற இளைஞர்களே! வெளியே வாருங்கள்! எலி என நினைத்து இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாக புறப்படுங்கள்!
  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்!
  • சிங்கம் போன்ற இளைஞர்களே! உங்கள் சிந்தனைகளை, தாய் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கச் செயல்படுத்துங்கள்! உங்கள் அறிவுக் கண்களைத் திறந்து பாருங்கள்!
  • தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா? 
  • வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள், பொய்களை உரைத்து, அறிவை மழுங்கச் செய்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து, நாட்டைக் கைப்பற்றி விட்டனர். 
  • நம் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் அதைக் கேட்டுக் கொண்டு இருக்கலாமா? உங்கள் மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!
  • மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். அப்படிப்பட்ட வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே! உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்!
  • கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து இணைத்து வாருங்கள்! அதன் மூலம் தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!” என்று இளைஞர்களைத் தம் பாடல் மூலம் வீறு கொள்ளச் செய்கின்றார் பாரதிதாசன்.