சனி, 9 மார்ச், 2024

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஏழாவது சுரம்

கதவை இழுத்து மூடியதால்

எட்டாவது சுரம்

ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை

ஆலாபனை நிறுத்திவிட்டுக்

கதவைத் திறக்க

ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்

எழுதி வைத்திருக்கலாம் வாசலில்

“எட்டாவது வண்ணத்திற்கு

இங்கு இடம் இல்லை“!

அதற்காக

உறங்க முடியாத வானம்

நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்

வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத்து துடித்த

எட்டாவது கிழமை

ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால்

மாதத்தின் மார்பு துடித்து

வெடித்திருக்காதா?

வள்ளுவ!

எட்டாவது சீர்

உன்னைத் தேடி வந்தபோது

என்ன செய்தாய்?

“போடுவதற்கு ஒன்றுமில்லை

போ”

என்று

வாசல் யாசகனை

வீடுகளில் விரட்டுவதுபோல்

விரட்டி விட்டாயா?

எட்டாவது சீர்

ஏன் உனக்கு தேவைப்படவில்லை?

யாப்பு

கூப்பிட்டு மிரட்டியதால்

ஏற்பட்ட அச்சமா?

ஏழு சீர்களிலேயே

ஒளி தீர்ந்து போனதா? – ஈற்று

முச்சீரடியில் உனக்கும்

மூச்சு முட்டியதா?

“காசும்” “பிறப்பும்”

உன்முன் வந்து கண்களைக்

கசக்கினவா?

“நாளும்” மலரும்”

நச்சரித்தனவா?

இல்லை

எட்டாவது சீர்தான்

அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்

கடைசிக் குறளின் காலடியே

எட்டாவது சீர் ஒன்று

தோளில் என்னைத் தூக்கிக்கொள்

என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்

கடைசி அலையின்

தாகத்தைத் தணிப்பது என்வேலை

இல்லை என்கிறாயா?

சிந்தனைகளை எண்ணியவனே?

நீ

சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு

எண்ணங்களே முக்கியம்

எங்களுக்கோ

எண்ணிக்கையே முக்கியம்

ஏழு சீர்களில்

சொன்னதே எதற்கு என்று

எண்ணிக் கொண்டிருக்கிறேன்

ஏன்

எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு

என்கிறாயா?

போதைப் “பொருளுக்கு”

அறத்தையும் இன்பத்தையும்

அவசரமாய் அடகு வைப்பவர்கள்

நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

வீடு தேடுகிற

வெறியில்

அறம் பொருள் இன்பத்தை

மிதித்துக் கொண்டு

ஓடுகிறவர்கள் நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

இலக்கணக்காரன்

இப்போது எப்படி ஏங்குகிறான்

தெரியுமா?

எட்டாவது சீருக்கு

இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்

சொல்லியிருப்பாயே!

வாய்ப்புள்ளவன்

அந்த ஒரு சீரில் சிந்தித்து

வரிகளைச் சமப்படுத்தட்டும்

என நான்தான்

விட்டு வைத்திருக்கிறேன்” என்கிறாயா?

என்னோடு

நிறைவடைந்து விடவில்லை

சிந்திக்க இடம்

இன்னும் உண்டு என்பதைக்

கோடி காட்டுகிறாயா?

உண்மையின்

உள்ளத்திலிருந்து பேசுபவர்

எவரோ அவரே – நீ

எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்

வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்

இப்போது உன் சிலை முன்

உண்ணாவிரதம் இருக்கின்றன

என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்

நீ வந்து இன்னொரு திருக்குறள்

எழுதும்போது

ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

விளக்கம்

உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமடளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

இசையின் சுரங்கள் ஏழு

இசையின் சுரங்கள் ஏழு. எட்டாவது சுரம் அனுமதிக்கப் படாததால் இசையின் தேவதை தன் ஆலாபனையை நிறுத்தி விட்டுக் கதவை திறக்க ஓடியிருப்பாள். ஏனெனில் இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை.

வானவில்லின் நிறம் ஏழு

வானவில்லின் நிறம் ஏழு. எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால் வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம். நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை என்பதை வானவில் உணர்ந்திருக்கும்.

வாரத்தின் நாட்கள் ஏழு

வாரத்தின் நாட்கள் ஏழு. எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

வள்ளுவத்தின் சீர் ஏழு

எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடி போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

ஏழு சீர்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் ஒளி தீர்ந்திருக்கலாம்.

அலகிடும் வாய்ப்பாடுகளான காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதல் அடியாக இருக்கின்றதோ என்று எண்ணினால் இல்லை. ஏனெனில், கடைசி குறளின் காலடி என்னைத் தோளில் வைத்துக் கொள் என்று கெஞ்சியிருக்க வாய்ப்புண்டு.

கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்க்க முடியாது என்பதுபோல   கடைசிக் குறளின் வேண்டுகோளை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

சிந்தனைகளை எண்ணிய வள்ளுவர் சீர்களை எண்ணவில்லை. ஆனால் நமக்கோ எண்ணிக்கைதான் முக்கியம். அவர் தந்த கருத்துகளை ஆராய்வதை விட்டு, ஏன் அவர் ஏழு சீர்களுக்குள் திருக்குறளை அமைத்திருக்கின்றார் என்று ஆராய்கின்றோம்.

ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

பணம் என்ற போதைக்கு அடிமையாகி அறத்தையும், இன்பத்தையும் அடகு வைக்கின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

வீடுபேறு தேடுகின்ற வெறியில் அறம், பொருள், இன்பத்தை எல்லாம் மதிக்காமல் மிதித்துக் கொண்டு ஓடுகின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

வாய்ப்புள்ளவர்கள் சீர்களைச் சமப்படுத்தட்டும் என்று வள்ளுவர் அதை விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்.

உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

மீண்டும் அவர் வந்து இன்னொரு திருக்குறள் படைக்கும்போது ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டும் என்று எட்டாவது சீர்கள் எல்லாம் திருவள்ளுவரின் சிலை முன் உண்ணாவிரதம் இருக்கின்றன.

என்று கவிநயத்தோடு இக்கவிதையைப் படைத்திருக்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக