தமிழ்ஒளி – மீன்கள்
வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ – ஏழை
வாழும் குடிசையின் பொத்தல்களோ?
மாநில மீதில் உழைப்ப வர்கள் – உடல்
வாய்ந்த தழும்புகளோ அவைகள்?
செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம் – அங்குச்
சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?
சொந்த உரிமை இழந்திருக்கும் – பெண்கள்
சோக உணர்ச்சிச் கிதறல்களோ?
இரவெனும் வறுமையின் கந்தல் உடை தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக் கூழின்றியே வாடுபவர் – கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே?
காலம் உழுதும் எழுத்துக்களோ – பிச்சைக்
காரர் இதயத்தின் விம்மல்களா?
நீலக் கண்ணாடியின் கோட்டையிலே – மின்னல்
தெளிவை இறைத்திட்ட அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும் – இருள்
வேலிகட்டி யிங்கு வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர் எண்ண மெலாம் – அங்குப்
பொங்கிக் குமுறி இறைத்தனவோ?
விளக்கம்
சமூகத்தின்
அடித்தட்டு மக்களின் குமுறல்கள் எல்லாம், வானில் விண்மீன்களாக அமைந்திருப்பதாகக் கற்பனை
செய்கின்றார் கவிஞர்.
- கடல் போன்று விரிந்த வானத்தில் தோன்றுகின்ற முத்துகளாக,
- ஏழைகளின் குடிசையில் இருக்கின்ற ஓட்டைகளாக,
- உழைப்பவர்களின் உடலில் உள்ள தழும்புகளாக,
- உரிமை இழந்த பெண்களின் உணர்ச்சிச் சிதறல்களாக,
- உணவின்றி வாடுபவர்களின் கண்ணீர்த் துளிகளாக,
- வாழ வழியின்றி பிச்சையெடுப்பவர்களின் விம்மல்களாக
விண்மீன்கள் காணப்படுவதாகக்
கவிஞர் காட்சிப்படுத்துகின்றார். இதன் மூலம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப்
படம் பிடித்துக் காட்டுகின்றார். கோடைகாலத்து வெயில் போல அரசாங்கம் துன்புறுத்தினாலும்,
தங்கள் வாழ்க்கை இருளாகக் காட்சியளித்தாலும் பொய்யாக உழைக்கத் தெரியாதவர்கள் தொழிலாளர்கள்.
அவர்களின் எண்ணங்கள் எல்லாம் வானில் பொங்கி இறைந்துள்ளன என்றும் பாடுகின்றார். தங்கள்
துன்பங்களுக்கு அரசால் என்றாவது ஒருநாள் முடிவு கிடைக்கும் என்ற தொழிலாளர்களின் எண்ணங்களை
இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக