திங்கள், 2 செப்டம்பர், 2024

தொல்தமிழர்

 

தொல்தமிழர்

உலகம் கடல் நீரால் சூழப்பட்டது. உலகின் உள்ளே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து எரிமலையாக வெளிவந்தது. அவற்றினின்று வெளிவந்த பாறைக் குழம்புகள் தண்ணீரால் இறுகி மலைகளும் நிலமும் உருவாயின. நிலப்பகுதியாக உருவானபோது அனைத்து நிலங்களும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன. அதனைப் பங்கேயா என்று அழைத்தனர். பங்கேயா என்றால் அனைத்து நிலம் என்று பொருள். பங்கேயாவில் உள்ள புதைவடிவ மண் நம் தமிழகத்திலும் காணப்படுகின்றது. எனவே உலகில் நிலம் தோன்றிய காலத்திலிருந்தே தமிழக நிலப்பகுதி இருந்துள்ளது என்பதை உணரலாம்.

சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பகுதியாக விளங்கிய பங்கேயா இரண்டாக உடைந்தது. அது வடக்கு தெற்கு என இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. வடக்குப் பகுதிஇலாராசியாஎன்றும் தெற்குப் பகுதியைகோண்டுவானா” (கொண்டவனம்) என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

  • ·  இலாராசியாஇப்போதைய வட மெரிக்கா, ஐரோப்பா
  • · கோண்டுவானாபழந்தமிழ்நாடு, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, இத்தாலி துருக்கி, ஈரான்.

இந்தக் கோண்டுவானா கண்டம் பிளவுபட்ட பின்னர் பழந்தமிழ்நாடு தனியாகவும், ஏனைய நாடுகள் தனியாகவும் பிரிந்தன. அவ்வாறு பிரிந்த நிலப்பகுதியே இலெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப் படுகின்றது. லெமூர் என்ற பாலூட்டி விலங்குகள் வாழ்ந்த நிலப்பகுதியாக இருந்தமையால் லெமூர் எனப்பட்டது. ஆனால் தமிழர்கள் இதனைக் குமரி என்று அழைத்தனர். இந்த நிலத்தின் தென்பகுதிதான் உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டிருந்தது.

குமரிக்கண்டம்

வடக்கில் தக்காணம் முதல் தெற்கில் இந்துமாக் கடல் வரையிலும், கிழக்கில் சந்தாதீவு முதல் மேற்கில் மடகாஸ்கர் வரையிலும் பரவி உள்ள நிலப்பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக்கண்டத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன உள்ளிட்ட உயிர்கள் தோன்றிய பின்னர் மாந்தக் குரங்கினம் தோன்றியது. அவற்றின் பரிணாம வளர்ச்சியே மனிதன் ஆவான் என உயிரியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனின் மூதாதைகளுக்கு,

  • ஆத்திரேலோ பிதகசு (குரங்கு மனிதன்)
  • பிதகாந்தரப்பாசு (மனிதனின் மூதாதை)
  • ஓ மோசாப்பியன் (ஆதிமனிதன்)  எனப் பெயர்களிட்டனர்.

மனிதர்களின் மூதாதையர்கள் காட்டு விலங்கை ஒத்தவர்களாகவும், நாகரிகம் தெரியாதவர்களாகவும் இருந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு இயற்கையை நம்பி இருந்தமையால் அவர்களுக்கு ஏற்ற இயற்கைப் பெருவள நாடாக இருந்தது குமரிக் கண்டமே என்று தேவநேயப் பாவாணர் உறுதிபடக் கூறுகின்றார். எனவே, குமரிக்கண்டத்தில் வாழ்ந்த முன்னோர்களே முதல் மாந்தர்கள் எனில் தமிழினமே உலகின் முதல் மனித இனம் என்றும், அவர்கள் பேசிய மொழியே முதன் மொழி எனில் தமிழே முதல் மொழி என்றும் அறியமுடிகின்றது.

ஆகவே, முதல் மாந்தனாகிய தொல் தமிழரின் வரலாற்றைக் கால அடிப்படையில் 

  • வரலாற்றுக்கு முந்தைய காலம்
  • வரலாற்றுக் காலம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

வரலாற்றுக்கு முந்தைய காலம்

எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல் பழங்காலம் என்பர். இக்காலம் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டன. அக்காலத்தில் மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகத்தால் ஆன கருவிகள், ஓவியங்கள், எலும்புகள் முதலியவை கிடைத்துள்ளன. அவற்றின் வழியாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிய முடிகின்றது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான மிகப்பழைய கற்பாறைப் படிவுகள் தென்னிந்தியாவில்தான் காணப்படுகின்றன. இப்பகுதியில் காடுகளும் மலைகளும் செறிந்து கிடக்கின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மக்கள் தோன்றி வாழ்வதற்கு நல்வாய்ப்புகள் உண்டு.

ஆதிமனிதன் ஆங்காங்குக் கிடைத்த உணவுப் பண்டங்களைத் தேடிப் பிடித்து வயிறு பிழைத்தான். பின்பு வேட்டையாடக் கற்றுக் கொண்டான். எனவே, மனிதன் வேட்டையாடிப் பிழைக்க்க் கற்றுக் கொண்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தில்தான் தொல்தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விந்தியமலைத் தொடருக்கு வடக்கே பரந்து கிடக்கும் கங்கையாற்று வெளியும், இமயமலைத் தொடரும் முன்னொரு காலத்தில் கடலுக்குள் மூழ்கிக் கிடந்தன. இமயமலைத் தொடரில் ஆங்காங்குக் கடல்வாழ் உயிர்களின் எலும்புகள் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.

தென்னிந்தியாவிற்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவில்தான் முதன்முதல் மக்களினம் தோன்றியது எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின் ஆதிகுடிகள் எனவும் லெமூரியர்கள் கருதுகின்றனர். அங்கு வாழ்ந்த மக்களின் வழி வந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் இன ஒற்றுமை, மக்கள் உடற்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன. எனினும், தமிழர்கள் தமிழகத்தின் ஆதி குடிகள் என்ற கொள்கைக்கு விஞ்ஞான முறையில் இன்னும் சான்றுகள் கிடைக்கவில்லை. பழங்கற்காலத் தமிழன் எந்த மனித இனத்தைச் சார்ந்தவர் என்று ஊகித்தறிய போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய இன வேறுபாடுகள், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி ஆராயும்போது,

  • தமிழரின் உடல்தோற்றம்
  • புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தும் கருவிகள், பொருட்கள்         ஆகியவற்றின் அமைப்பு
  • அவர்களுடைய மொழியும், மொழிப் பிரிவுகளும்

என்ற மூன்று துறைகளில் கருத்தூன்ற வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். அதன்படி, தமிழகத்து மக்களின் நிற அமைதி, தலை வடிவம், முடி, உடல் அமைப்பு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் இனப்பாகுபாட்டை மக்கள் இன ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.

  • நிரதர்கள்கரிய நிறத்தையும், கட்டையான உடல் உருவத்தையும், அகன்ற தலைவடிவத்தையம், தட்டை மூக்கையும், சுருட்டை முடியையும் உடையவர்களே நிரதர்களாவர். இவர்கள் கற்காலம் தொட்டே வாழ்கின்றனர். வேட்டையாடுதல் இவர்களின் முக்கியத் தொழில்.
  • முதல்நிலை ஆத்திரேலியர்கள்கருமை நிறத்தையும், நீண்ட தலைவடிவத்தையும், அகன்ற மூக்கையும், சுருளும் தன்மையுடைய முடியையும் கொண்டவர்கள். பொதுவாக இவர்கள் நிலநடுக்கடல் இனத்தின் உடல் அமைப்பையும் பண்பாட்டையும் ஒத்தவர்களாவர். இந்தியாவிலிருந்து கற்காலத்தில் ஆஸ்திரேலியா வரை பரவியவர்களே முதல்நிலை ஆஸ்திரேலியர்கள் என்பர். தமிழகத்தில் இவர்கள் உழவுத்தொழிலைத் துவக்கினர். நெல், தென்னை, வாழை, வெற்றிலை போன்ற பயிர்களை வளர்த்தனர். நடுகல் வழிபாடு, இறந்தவர்களை வழிபடும் வழக்கம் இவர்களுக்கு உண்டு. யானையைப் பழக்கியவர்களும் இவர்களேயாவர்.
  • திராவிடர்கள்நீண்டு ஒடுங்கி உயர்ந்த தலைவடிவமும், குறுகியதும் அகலமானதுமான மூக்கும், மாநிறமும் உடையவர்களே நிலநடுக்கடல் இனத்தவர் எனப்பட்டனர். இவர்களின் வழிவழியாக வந்தவர்களே திராவிடர்கள் என்பர் இன ஆய்வாளர்கள்.  வேளாண்மையும், ஆடு மாடு மேய்த்தலும் இவர்களின் முக்கியத் தொழில். நீர்ப்பாசன முறை தெரிந்தவர்கள். அரண்மனை, நகரங்களை அமைத்தவர்கள். சக்தி, சிவன் வழிபாடு, கிராம தேவதைகளை வழிபடும் வழக்கம் இவர்கள்வழி தோன்றின. மனிதனின் மூதாதையர் வாழ்வுடன் பொருத்திப் பார்க்கின் குமரிக்கண்டம் தமிழர்களின் தாயகம் என்பதை உணர்த்துகின்றது.
  • ஆரியர்கள் உயரமான உடல் அமைப்பும், நீண்ட தலையும், ஒடுங்கி நீண்ட மூக்கும், நீலநிற விழிகளும், கருமையான முடியும், பொன்னிறமும் உடையவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர். தமிழகத்தில் இவர்கள் பிந்தைய காலத்திலேயே குடியேறினர். தமிழகத்தில் இவர்கள் புகும்போது தங்களைக் குருமார் நிலைக்கு உயர்த்தி இருந்தனர். நால்வகைச் சாதிக் கோட்பாட்டை வலியுறுத்தினர்.

இதனடிப்படையில் மக்கள் இன வரலாற்றை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர் ஆய்வாளர்கள். அவை,

      பழைய கற்காலம்

      புதிய கற்காலம்

      பெருங்கற்காலம் எனப்படும் உலோகக்காலம்

என்பனவாகும்.

இனக்கலப்பு

இக்காலத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இன்ன இன்ன இனக் கலப்பு உடையவர்கள் என்று கூற முடியவில்லை. கொச்சியைச் சேர்ந்த காடர்களும், புலையர்களும், திருவிதாங்கூரைச் சேர்ந்த மலைப்பண்டாரங்களும், வயநாட்டுப் பணியர்களும், ஆந்திராவைச் சேர்ந்த செஞ்சுக்களும் பழங்கற்கால மக்களின் வழிவந்தவர்கள் என இனவியலார் கூறுகின்றனர். பழங்கற்காலத்தவர்களைப்போல அவர்களும் நாகரிகத்தில் வளரவில்லை. காடர், புலையர் ஆகிய இனத்து மக்களில் நீக்கிரோவரின் குருதிக்கலப்பு காணப்படுகின்றது. சென்னையில் கிடைத்துள்ள பழங்கற்கால கருவிகள் தென்னாப்பிரிக்காவிலும் கிடைத்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து தென்னிந்தியாவில் குடிபெயர்ந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். இதற்குப் போதுமான சான்றுகள் இல்லை. ஆயினும் லெமூரியாக் கண்டத்தைச் சார்ந்தவர்கள் தான் தமிழர் என்ற கருத்து பொருத்தமாக உள்ளது.

திராவிடர்களே தமிழர்கள்

    புதிய கற்காலம் நிகழ்ந்தபோது தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்த மற்றுமோர் இனத்தினர் திராவிடர்கள். இவர்கள் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஆதிகுடிகள் என்றும், தமிழகத்தினின்று பரவிச் சென்று மத்தியத் தரைக்கடல் நாடுகளில் குடியேறினர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேறு சிலர் இவர்கள் யாவரும் இலெமூரியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.

          புதிய கற்காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கோலேரியர் என்ற இனத்தவரின் பண்பாட்டுக் கூறுகள் திராவிடர்களின் பண்பாட்டுக் கூறுகளோடு ஒத்துக் காணப்படுகின்றன. அதேபோன்று மத்தியத் தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த லிசியர்கள் என்ற இனத்தவர்கள் திரிம்ளை எனப்பட்டனர் என அவர்களுடைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இச்சொல்லின் ஒலி திரமிளம், தமிழ் என்ற சொற்களின் ஒலியுடன் ஒத்துப்போகின்றது. மேலும் மத்தியத் தரைக்கடல் பகுதி மக்கள், மேக்ரான், பலூசிஸ்தான், சிந்து ஆகிய தரைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் யாவருக்கும் திராவிடர்களின் பண்பாடுகள் ஒத்திசைந்து காணப்படுகின்றன. ஆயினும் திராவிடரின் குடியேற்றம் எப்போது தென்னிந்தியாவில் நிகழ்ந்தது என்பதற்கு தற்போது கிடைத்துள்ள அகச்சான்றுகளும், புறச்சான்றுகளும் தெரிவிக்கின்றன.

வரலாற்றுக் காலம்

எழுத்துச் சான்றுகள் தோன்றிய பின்பான காலத்தை வரலாற்றுக் காலம் எனலாம். தமிழிலக்கியங்களின் குறிப்புகள், வெளிநாட்டாரின் பயணக் குறிப்புகள், புராணங்கள், சமய இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், பிரிட்டிஷ், பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆவணங்கள், டச்சு, போர்த்துக்கீசிய பாதிரியார்களின் குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், அரசின் ஆவணங்கள் ஆகியன வரலாற்றுக் காலத்தை அறிய துணை புரிகின்றன. அதனடிப்படையில் இக்காலத்தை,

  • ·       சங்ககாலம்
  • ·       பல்லவர் காலம்
  • ·       சோழர் காலம்
  • ·       பாண்டியர் காலம்
  • ·       இடைக்காலம்
  • ·       பிற்காலம்

என வகைப்படுத்தலாம்.

வரலாற்றை அறிய உதவும்சான்றுகள்

இவ்விரு வரலாற்றை அறிய துணை புரிகின்ற சான்றுகளின் மூலமாகக் கிடைத்த தகவல்களால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களினத்தின் வாழ்க்கைமுறை, சமூக முறை, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், நம்பிக்கை, மொழி ஆகியவற்றை அறிய முடிகின்றது.

1.புதைபொருள் சான்றுகள்

    தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிய புதைபொருள் ஆய்வுகள் மிகுந்த துணைபுரிகின்றன. அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற்கருவிகள், சீப்புகள், சுடு மண்பாத்திரங்கள், வாழ்ந்த இடங்கள், முதுமக்கள் தாழிகள், பிணக்குழித் தோட்டங்கள், இசைக்கருவிகள், நாணங்கள் ஆகியவை புதைபொருள் ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக அம்மக்களின் தொழில்கள், கலை உணர்வு, சமூக வாழ்க்கை முறை, வாணிகத்தொடர்பு ஆகியவை விளக்கம் பெறுகின்றன. சான்றாக

  • மக்களின் குடியிருப்புகள் பாலாற்று, பெண்ணையாற்றுப்  படுகைகளில் இருந்த கூறுகளை 1968இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்
  • சேலம் மாவட்டத்தில் மோகனூர் என்னும் இடத்தில் இரும்புக் காலத்தைச் சார்ந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன  
  • கொற்கையில் தொல்பழங்காலச்சின்னங்கள் பல கிடைத்துள்ளன.    
  • அரிக்கமேட்டிலும், பாலாற்றின் கழிமுகத்திலும், வாசவசமுத்திரத்திலும் கிடைத்த சான்றுகள் யவனருடன் கொண்ட தொடர்பை விளக்குகின்றன
  • பிணங்களைப் புதைக்கப் பயன்படுத்திய பெருங்கற்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பலவகையான இரும்புக் கருவிகளும், சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மண்பாண்டங்களும் காணப்படுகின்றன       
  • புதைபொருள் ஆய்வின் மூலமான சங்க காலத்துத் தமிழ் மன்னர்களின் காசுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் யவன நாடு, சீன நாடு, தென்கிழக்காசிய நாடு ஆகியவற்றுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிபத் தொடர்பை அறிய முடிகின்றதுபட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி, மணிமேகலை ஆகிய இலக்கியங்களும் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

2.கலைச்சின்னங்கள்

கலைச்சின்னங்கள் அக்காலத்து மக்களின் கலை உணர்வை அறியத் துணை செய்கின்றன. தென்னகத்தில் கற்காலத்து ஓவியங்களைக் காண முடிகின்றது. பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், சாளுக்கியர் காலம், போசளர் காலம் ஆகிய காலங்களில் உள்ள சிற்பங்கள், சுவர்க்கோலங்கள் முதலியவையும், ஆடை அணிகலன்களும் அக்கால மக்களின் வாழ்க்கைக் கோணங்களைக் காட்டுகின்றன.

3.சாசனங்களும் பட்டயங்களும்

சாசனங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கல்வெட்டு, மற்றொன்று செப்பேடு. தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானவை தாமிழிஎன்ற எழுத்துகளாலான கல்வெட்டுகளாகும். பல்லவர் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. முதலில் அவை கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவற்றில் தமிழ்மொழிக் கலப்புத் தோன்றியது. மரபு தமிழ் எழுத்து, வட்டெழுத்து என்று தமிழ் எழுத்துகள் இருவகையாக ஆளப்பட்டுள்ளன.

·  கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் கிர்னார் கல்வெட்டு அன்றைய தமிழகத்து அரசுகளைக் காட்டுகின்றது.

· சமுத்திரக் குப்தனின் அலகாபாத் கல்வெட்டில் தமிழகத்து அரசியல் செய்தி காணப்படுகின்றது.

·       சம்பைக் கல்வெட்டு அசோகர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய சமயப் பொறையைக் காட்டுகின்றது.

· களப்பிரர் காலத்து அரசியல் குழப்பங்களை வேள்விக்குடி சாசனம் காட்டுகின்றது.

· உத்திரமேரூர் சாசனங்களும், கரந்தை, திருவாலங்காடு பட்டயங்களும், சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் மிக முக்கியமானவை.

4.மொழியில் ஆய்வு

   தற்காலத்து மொழியியல் ஆய்வு பல வரலாற்று உண்மைகளை உணர்த்துகின்றது. தமிழகத்து நடைமுறைகள், வழக்காறுகள் முதலியவை தொன்மையான காலத்தில் வடபுலத்திலும், வைதீக சமயத்திலும் புகுந்திருப்பதை மொழி உணர்த்துகின்றது. மொழியின் தன்மையைக் கொண்டு கால வரைமுறை நிர்ணயிக்க முடிகின்றது. மொழி ஆய்வின் துணை கொண்டு நிலநடுக்கடல் பகுதிகளில் வாழ்கின்ற மக்களினத்திற்கும் திராவிட இனத்திற்கும் உள்ள தொடர்பை டாக்டர் இலகோவரி என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

5.இலக்கியம்

          இலக்கியம் சமூக வாழ்வின் பகுதிகளை முழுமையாக அடையாளம் காட்டுகின்றது. இலக்கியச் சான்றுகளை, தமிழ் இலக்கியச்சான்றுகள், பிற இந்திய இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டுச் சான்றுகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • தமிழிலக்கியச் சான்றுகள்எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்கள் ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் அறநெறிகளை அடையாளம் காட்டுகின்றன. இதேபோன்று பல்லவர்காலம், சோழர்காலம், நாயக்கர்காலம் ஆகிய காலகட்டங்களில் வெளிவந்த இலக்கியங்களும், 18,19,20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களும் தமிழகத்தின் சமூகம், அரசியல், சமயம் முதவலியவற்றை அறிய உதவுகின்றன.
  • பிறமொழி இலக்கியங்கள் இராமாயணம், மகாபாரதம், மத்தவிலாசம் ஆகிய நூல்கள் தமிழகத்து வரலாற்றை விளக்குகின்றன.
  • பிற நாட்டு இலக்கியங்கள்இலங்கையின் மகாவம்சம், பிளினியின் வரலாற்றுக் குறிப்புகள், தாலமியின் பூகோளம், சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகள் ஆகியவை தமிழத்து மக்களின் வரலாற்றை உணர்த்துகின்றன.

6.ஐரோப்பியக் கம்பெனியாரின் ஆவணங்கள்

               போர்ச்சுக்கல், டச்சு, ஹாலந்து, இங்கிலாந்து, பிரஞ்சு வணிக்க் கம்பெனி சார்ந்த கடிதங்களும், கம்பெனி ஆவணங்களும் 16ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, சமய நிலைமையைக் காட்டுகின்றன.

7.பாதிரிமார் கடிதங்கள்

               கிறித்துவச் சமயத் தொண்டாற்றிய பாதிரிமார்கள் மதுரை நாயக்கர்களுடனும், தஞ்சை மராட்டியர்களுடனும், விஜயநர மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர். இவர்களின் கடிதங்கள் சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகும்.

8.கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள்

               19ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாளர்களின் கடிதப் போக்குவரத்துகளும், ஒப்பந்தங்களும், அரசு ஆவணங்களும், அதிகாரிகளின் அறிக்கைகளும் அக்கால வரலாற்றை அறிய உதவுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிம், 20ஆம் நூற்றாண்டிலும் தேசிய இயக்கச் சங்கங்களின் நடவடிக்கைக் குறிப்புகளும், தலைவர்களின் கடிதங்களும் தேசிய வரலாற்றை உணர்த்துகின்றன.

 ------------------------------------------------------------------------------------------------------------

 

பின்குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

சனி, 31 ஆகஸ்ட், 2024

புதிய கற்காலம்

புதிய கற்காலம்

காலம் செல்லச் செல்ல மனிதனின் தேவைகள் பெருகியதால், தங்கள் வசதிக்கேற்பக் கருவிகளிலும், கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. பழைய கற்காலத்தில் வழக்கில் இருந்த கரடுமுரடான கற்கருவிகளை விடுத்து, நன்றாக தேய்த்து வழவழப்பாகவும் கூர்மையாகவும் மெருகேற்றிக் கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவை படிக்கட்டுக் கல் என்ற ஒருவகைக் கல்லினால் செய்யப்பட்டன. இந்தக் காலமே புதிய கற்காலம் என அழைக்கப்படுகின்றது.

வாழ்க்கை முறை

          புதிய கற்கால மனிதர்கள் காடுகளைக் கட்டுப்படுத்தினர். வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். படகுகள் கட்டிக் கடலில் ஓட்டினர். நெருப்பு மூட்டக் கற்றுக் கொண்டது இவர்களின் தனிச்சிறப்பாகும். சிக்கி முக்கிக் கற்களைத் தட்டியும், மரத்தைக் கடைந்தும் நெருப்பு மூட்டினர். கடற்கரையிலும், நீர் நிலைக்கு அருகிலும் வாழ்ந்தவர்கள் சமவெளிக்குப் பரவினர். நாடோடி வாழ்க்கையை விட்டு பொருளாதார வாழ்க்கையை நோக்கி முன்னேறினர். நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில், நிலையான ஊர்கள் அமைத்தல், கால்நடைகளை வளர்த்தல் எனப் பல புதுமைகள் இக்காலத்தில் தோன்றின.

மனித உருவம்

புதிய கற்கால மனிதர்களின் கடுமையான முகத்தோற்றம் மாறி மென்மைத் தன்மை தோன்றியது. நீண்ட தாடியும், நீண்ட தலைமுடியும் பெற்றிருந்தனர். 

வாழ்ந்த இடங்கள்

புதிய கற்கால மனிதர்களின் குடியிருப்புகள் வடஆற்காடு மாவட்டங்களிலும், சேலம், கிருஷ்ணகிரி, பையம்பள்ளி, புதுக்கோட்டை, பழனிமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தகடூர், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பனையகுளம், பக்கல்வாடி, முல்லைக்காடு, கடத்தூர்,  மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அவர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. இவர்கள் குறிஞ்சி நிலத்தில் மட்டும் இல்லாமல் முல்லை நிலத்திலும் வாழ்ந்தனர்.  அவர்கள் வாழ்ந்த குமரிமலைத் தொடர் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை,  கிழக்கு தொடர்ச்சி மலை என அழைக்கப்படுகிறது.

கருவிகள்

புதிய கற்காலத்தில் கருவிகளின் வடிவங்கள் மாறின. கைப்பிடிகள் தோன்றின. அழகிய உளிகள், உலக்கைகள், சம்மட்டிகள், கொத்தும் கருவிகள், கோடரிகள் போன்ற வகைவகையான கருவிகளைப் படைத்தனர்.

  • தொடக்கக் காலத்தில் எலும்புக் கருவிகள்,  கற்கோடரிகளைப் பயன்படுத்தினர்.
  • மரங்களைக் கொண்டு கருவிகள் செய்தனர்.
  • தானியங்களை உடைக்க, அரைக்க, அம்மிக் கற்களையும், குழவிகளையும், கல் சட்டிகளையும் பயன்படுத்தினர்.
  • நிலத்தைத் தோண்டுவதற்குக் கைக்கோடரிகளையும், கலப்பைகளையும், வேட்டையாடுவதற்குக் கவண், வில், மான்கொம்பு, மாட்டுக்கொம்பு ஆகியவற்றையும் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
  • சக்கரங்களைத் துணை கொண்டு மன்பாண்டங்களைப் படைத்தனர்.
  • காய்கறிகள், பயறு வகைகள் போன்ற பொருள்களைப் போட்டு வைப்பதற்கு மண் சாடிகள், பனையினால் செய்யப்பட்ட பெட்டிகள், மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தினர்.
  • சமைப்பதற்கு சாம்பல் நிற மண்பாண்டங்கள், சிவப்பு நிற மண்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
  • வெட்டுக் கருவிகளும், கொத்துக் கருவிகளும் பழங்கள், கிழங்குகள், மீன், இறைச்சி முதலியவற்றை உண்ணப் பயன்பட்டன.
  • தட்டுகள், வட்டைகள் (கப்), கெண்டிப்பாத்திரங்கள், உருவச் சிலைகளும், முதுமக்கள் தாழிகளும் அவர்களுடைய அரும்படைப்புகளாகும்.

தொழில்கள்

  • மரத்தாலும், கல்லாலும் ஆன பொருட்கள் செய்தனர்.
  • விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தித் தோல் ஆடைகள் செய்தனர்.
  • கால்நடை வளர்த்தல், பயிரிடுதல் போன்ற தொழில்களைச் செய்தனர்.
  • மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆடு, மாடு, கோழி, எருமை போன்ற கால்நடைகளைத் தங்கள் வாழ்விடங்களில் இருக்கும்படி பழக்கினர்.
  • காடுகளை மேய்ச்சல் நிலங்களாக மாற்றினர்.
  • கால்நடைகளின்வழி பால், தயிர்,  நெய், இறைச்சி ஆகிய உணவு வகைகளைப் பெற்றனர்.
இருப்பிடங்கள்

பழைய கற்கால தமிழர்கள்  மலையடிவாரங்களிலும் மலை குகைகளிலும் வாழ்ந்தனர் அவர்கள் தொடக்கத்தில் உணவைத் திரட்டுவதும் வேட்டையாடுவதுமாக இருந்ததால் ஓரிடத்தில் நிலைத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. ஆனால் புதிய கற்கால தமிழர்கள் பயிர்த்தொழில் செய்ய அறிந்து கொண்டதால் கால்நடைகளை வளர்ப்பதற்காகவும், தானியங்களை விளைவிப்பதற்காகவும், அவற்றை காப்பாற்றுவதற்காகவும் நிலையாக ஓர் இடத்தில் தங்க வேண்டிய தேவை உருவானது. அதன் அடிப்படையில் சிறிய மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகள் பெருகின. இப்படி சேர்ந்த இடம் ஓர் ஊர் ஆகியது. இவ்வாறு பல ஊர்கள் தோன்றின.

மரக்கம்புகளை நட்டு அதன் மேல் புல்லால் கூரை வேய்ந்தனர். வீட்டின் சுற்றுச் சுவரை மண்ணாலும், மண் சேறு பூசியும் மெழுகிக் கொண்டனர்.  இவ்வாறு வீடுகளைக் கட்டத் தெரிந்த காலமே கட்டடக் கலையின் தோற்றம் என்று கூறலாம்.


வீட்டுத் துணைவன்

     வேட்டைக்கு நாய்களைப் பயன்படுத்தினர். வெள்ளாடு, செம்மறி, பசு, எருமை ஆகியவை அவர்களுடைய வீட்டுத் துணைவர்களாயின.

உணவுகள்

காய்கனிகள், தேன் ஆகிய இயற்கை உணவுகளையும், ஆடு, மாடு, மான், முயல் கோழி உடும்பு போன்றவற்றின் இறைச்சியையும், வரகு தினை போன்ற தானியங்களையும், அவரை துவரை போன்ற பயிர்களையும், கொள்ளு, வரகு பச்சைப்பயிறு ஆகிய தானியங்களையும் உணவாக உண்டனர்.

உடைகள்

மர உரி போன்ற நார் ஆடையையும், ஆட்டு மயிர்க் கம்பளியையும் முதலில் கை பின்னலாக நெய்து உடுத்திக் கொண்டனர். உறங்குவதற்கு ஓலைப் பாயையும், மூங்கில் பாயையும் முடைந்து கொண்டனர். வேட்டையாடிய விலங்கின் தோலை நன்கு பதப்படுத்தித் தங்களுக்குத் தேவையான தோல் ஆடைகளை உடுத்தினர்.

அணிகலன்கள்

நுண்ணிய கல்மணிகளையும் சங்கு மற்றும் எலும்பால் ஆன வளையல்களையும் கழுத்தணிகளையும் அணிந்தனர். வேட்டையின்போது கைப்பற்றிய புலியின் நகம் பல் போன்றவற்றையும் அணிகலன்களாக அணிந்தனர்.

பொழுதுபோக்கு

 வீட்டுச் சுவற்றின் மேல் வேட்டை நிகழ்ச்சிகளையும், நாட்டிக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டினர்.

பழக்க வழக்கங்கள்

     சந்தனக் குழம்பாலும், வண்ணச் சாந்தாலும், ஆண், பெண் இருபாலரும் மேனி முழுவதும் பல்வேறு ஓவியங்களை வரைந்து கொண்டனர். நிலையாக இருக்கும் வண்ணம் பச்சைக் குத்திக் கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

நம்பிக்கைகள்

        வேளாண்மை செய்ய மழை இன்றியமையாதது என்பதால் மழையைத் தெய்வமாக வணங்கினர். இறந்தவர்கள் மீண்டும் வேறு உயிர் பெறுவதாக நம்பி இறந்தவர்களை வழிபட்டனர்.

இறந்தவர்களைப் புதைத்தல்

புதிய கற்கால மனிதர்களின் அரும் படைப்புகளுள் ஒன்று முதுமக்கள் தாழி. இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைத்தனர். இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் சேர்த்துப் புதைக்கப்பட்டன. சீப்புகள், எலும்பினாலும், சிப்பியினாலும் கடைந்த மணிகள் ஆகியவற்றை புதிய கற்காலப் புதைகுழிகளில் கண்டெடுத்துள்ளனர். இவை யாவும் அம்மக்களின் கலை உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

இசைக் கருவிகள்

  • வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கில் குழாயில் காற்று மோதுவதால் இனிய ஒலி எழுந்ததைக் கண்டு துளைக் கருவிகளை உருவாக்கினர்.
  • இறுக்கிக் கட்டிய நரம்பைத தொட்டபோது இன்னிசை பிறந்ததைக் கண்டு யாழ் என்னும் நரம்புக் கருவியை உருவாக்கினர்.
  • ஆடு, மாடு, உடும்பு முதலியவற்றின் தோலை மரத்தில் கட்டி உலர்த்தியபோது காற்றின் அசைவால் இனிய ஒலி எழுந்ததைக் கண்டு துடி, தொண்டகம் போன்ற தோற்கருவிகளை உருவாக்கினர்.

தொடர்பு மொழி

         பழைய கற்கால மனிதர்கள் இயற்கை மொழியால் ஒருவர்க்கொருவர் தொடர்பு கொண்டனர். புதிய கற்கால மனிதர்கள் செயற்கை மொழி நிலைக்கு வளர்ச்சி பெற்றனர். பழைய கற்காலத் தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காகத் தோன்றிய சுட்டு ஒலிகள் புதிய கற்காலத்தில் தனித் தனிச் சொற்களாக வளர்ச்சி பெற்றிருந்தன.

புதிய கற்காலத்தின் முடிவில்

புதிய கற்காலத்தின் முடிவில் உலோகங்களும், செம்பால் ஆன கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. வேளாண்மைப் பொருளாதாரம் வாணிபப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறியது. பண்டங்களின் உற்பத்திப் பெருக்கம், பண்டங்களை மாற்றும் வழக்கம் ஆகியவை வாணிபத்தை விரிவடையச் செய்தன. ஆற்றுப்படுகை நகர நாகரிகத்தை மனித சமூகம் கண்டது.

------------------------------------------------------------------------------------------------------


பின்குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

 



பழைய கற்காலம்

 

பழைய கற்காலம்

இது மனித வாழ்வின் தொடக்க நிலையைக் குறிக்கிறது. இயற்கையாகக் கிடைத்த பதப்படுத்தாத கற்கருவிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மனிதர்களின் காலத்தைக் குறிக்கிறது.  கற்கருவிகளைப் பயன்படுத்திய பிறகே மனிதன் விலங்கில் இருந்து வேறுபட்டான். மலைத்தொடரில் வேட்டையாடி வாழ்ந்து வந்த தமிழர்களே முதல் மாந்தர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இப்போதைய தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும், வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் உள்ள கொற்றலையாற்றுச் சமவெளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, குடியம் ஆகிய இடங்களிலும், நெய்வேலி, வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை போன்ற தமிழகத்தின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன .

கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள்

      கோடரிகள்

      வெட்டுக் கத்திகள்

      சுரண்டிகள்

      கூர்முனைக் கருவிகள்

      மரம் இழைக்கும் உளி

இக்கருவிகளை நிலத்தைத் தோண்டவும், மரம் வெட்டவும் விலங்குகளைக் கொல்லவும் அதன் இறைச்சிகளைக் கிழிக்கவும்,  தோல் உரிக்கவும், மரப்பட்டைகளைச் சீவவும் பயன்படுத்தினர்.


 கருவிகள் கிடைத்த இடங்கள்

1916ஆம் ஆண்டு இராபர்ட் புரூசுட் என்பவர் பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளைக் கண்டெடுத்தார். 1863இல் பல்லாவரத்திற்கு அருகில் இருந்த செம்மண் மேட்டில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்தார்.  இதைப்போன்று பூண்டி, வடமதுரை, குடியம், பரிக்குளம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய இடங்களில் கைக்கோடரிகள், கிழிப்பான், சில்லுக் கருவிகள், வேட்டிகள், சுரண்டிகள் முதலிய கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை முறை

          தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்தில் இவர்கள் மரப்பொந்துகளில், பாறைக் குகைகளில் பதுங்கி வாழ்ந்தனர். வேட்டையாடவும், பதுங்கி வாழவும் இவர்களுக்கு மலை துணையாக இருந்தது. ஆறுகளும், பாறைச்சுனைகளும் நீர்வளமளித்தன.

நெருப்புப் பயன்பாடு

பழைய கற்காலத் தமிழர்கள் தொடக்கத்தில் நெருப்பின் பயன்பாட்டை அறியவில்லை.  வெயில் காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து நெருப்புப் பற்றிக் கொண்டது. அதைக்கண்டு அச்சம் கொண்டனர்.  பின்னர் கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டனர்.  குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், இறைச்சியை வதக்கி உண்பதற்கும் நெருப்பைப் பயன்படுத்தினர்.

 



தொழில்கள்

உணவு உண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதால், வேட்டையாடுதல் அவர்களின் முதன்மைத் தொழிலாக  அமைந்தது. காய்கனி பறித்தல், கிழங்கெடுத்தல், தேனெடுத்தல் ஆகியவையும் கற்கால மனிதர்களின் தொழில்களாக இருந்தன.

உணவுகள்

எலிகள், மான், பன்றி, ஆடு போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்டனர்.கிழங்குகளும் காய்கனிகளும் இவர்களுக்கு உணவாயின.

பொழுதுபோக்கு

தொல்லியல் துறை பல்வேறு இடங்களில்  நடத்திய ஆய்வுகளில், எண்ணற்ற பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓவியம் தீட்டுவது இவர்களின் பொழுதுபோக்காக இருந்தமையை அறிய முடிகின்றது.  ஆடு, மாடு, மான், பன்றி, உடும்பு, பாம்பு, மயில், கோழி, கொக்கு, அன்னம் முதலிய விலங்கினங்கள்,பறவையினங்களின் உருவங்களே அதிக அளவில் ஓவியங்களாகத் தீட்டினர். கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி கல், எலும்பு, கொம்பு முதலியவற்றில் குழி உருவாக்கி அதில் விலங்குகளின் இரத்தம், கொழுப்பு, மண் வகைகளை நிரப்பி வண்ணங்களை உருவாக்கி உள்ளனர்.  வெள்ளை, கருப்பு, மஞ்சள்,  சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கைவிரல்கள், விலங்கின் முடிகள் ஆகியவற்றைக் கொண்டு வண்ணம் தீட்டியுள்ளனர். களிமண்ணைப் பயன்படுத்தி வினோத பொருட்களை உருவாக்கினர்.

ஆடைகளும் அணிகலன்களும்

தொடக்கத்தில் ஆடையின்றி வாழ்ந்த மக்கள், வெப்பம் குளிர் முதலிய  இயற்கையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முற்பட்டனர். ஆகவே, இலை, தழை, மரப்பட்டை, நார் ஆகிவற்றைக் கொண்டு தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர். றுந்தழைகள், மலர்கள்,  பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை அணிகலன்களாகப் பயன்படுத்தினர்.

தொடர்பு மொழி

தொல் தமிழர்கள் தங்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்குத் தெரிவிக்க முதலில் கைகளால் சில சைகைகளைக் காட்டினர். வாயால் சில ஓசைகளை எழுப்பினர். அதன் படிநிலையாக மொழி தோன்றியது. 

நம்பிக்கை

இறைவன் குறித்தோ சமயம் குறித்தோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அச்சம் வியப்பு காரணமாக நெருப்பு, கதிரவன், நிலவு, நாகம் போன்றவற்றைத் தெய்வங்களாக வணங்கினர். இறந்தவர்களின் உடல்கள் இயற்கையாக அழியும் வகையில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இரையாக விட்டுவிட்டனர்.

சிறிய கற்காலம்

வேட்டையாடுதல் தொடர்ந்தமையால் விலங்குகளின் எண்ணிக்கைக் குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் பரவி வாழ்ந்தனர். சிலர் கடற்கரைகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டனர். சிறிய கற்கருவிகளுடன் நீர்நிலைகளின் அருகில் உணவு சேமிப்பவர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும், ஆடு, மாடுகளை வேட்டையாடக் கூடியவர்களாகவும், அவற்றைப் பழக்கி வளர்க்கக் கூடியவர்களாகவும் வாழ்ந்தனர். இக்காலம் தொல்பழங்காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும்.

இவர்களுடைய வாழ்விடங்கள் கடல் மட்ட நீர் ஏற்றம் பாதிப்பில்லாத இடங்களாகவும், வருடம் முழுவதும் தாவரம் நிரம்பிச் செழுமை கொழிக்கும் இடங்களாகவும், தானியங்களைத் தாமாக உற்பத்தி செய்யும் இடங்களாகவும் இருந்தன. சிறிய கற்கருவிகளைக் குச்சிகளிலும், எலும்புகளிலும் பொருத்திப் பயன்படுத்தினர். காட்டுத் தானியங்களை அறுவடை செய்யக் கற்களால் பல அருவாய்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய மக்கள் தமிழகத்தில் குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், மதுரை மாவட்டம் செங்கற்பட்டு மாவட்டம் ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில் பொருளாதார உற்பத்திக்கு அடித்தளமிட விலங்குகளைப் பழக்கியும், தானியங்களை அறுவடை செய்தும், மீன்பிடித்தும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டனர். ஆயினும் முன்னோர் வகுத்த வேட்டையைக் கைவிடவில்லை.


 

பின்குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.