வெள்ளி, 4 டிசம்பர், 2020

புதுக்கவிதை - விதைச்சோளம்

 

விதைச்சோளம்

கவிஞர் வைரமுத்து

ஆடி முடிஞ்சிருச்சு

ஆவணியும் கழிஞ்சிருச்சு

சொக்கிகொளம் கோடாங்கி

சொன்னகெடு கடந்திருச்சு

 

காடு காஞ்சிருச்சு

கத்தாழை கருகிருச்சு

எலந்த முள்ளெல்லாம்

எலையோட உதிந்திருச்சு

 

வெக்க பொறுக்காம

றெக்க வெந்த குருவியெல்லாம்

வெங்காடு விட்டு

வெகுதூரம் போயிருச்சு

 

பொட்டு மழை பெய்யலையே

புழுதி அடங்கலையே

உச்சி நனையலையே

உள்காடு உழுகலையே

 

வெதப்புக்கு விதியிருக்கோ

வெறகாக விதியிருக்கோ

கட்டிவச்ச வெங்கலப்ப

கண்ணீர் வடிச்சிருச்சே

 

காத்துல ஈரமில்ல

கள்ளியில பாலுமில்ல

எறும்பு குளிச்சேர

இருசொட்டுத் தண்ணியில்ல

 

மேகம் எறங்கலையே

மின்னல் ஒண்ணுங் காங்கலையே

மேற்க கருக்கலையே

மேகாத்து வீசலையே

* * * * *

தெய்வமெல்லாம் கும்பிட்டுத்

தெசையெல்லாம் தெண்டனிட்டு

நீட்டிப் படுக்கையில

நெத்தியில ஒத்தமழை

* * * * *

துட்டுள்ள ஆள் தேடிச்

சொந்தமெல்லாம் வாரதுபோல்

சீமைக்குப் போயிருந்த

மேகமெல்லாம் திரும்புதய்யா

 

வாருமய்யா வாருமய்யா

வருண பகவானே

தீருமய்யா தீருமய்யா

தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

 

ஒத்தஏரு நான் உழுகத்

தொத்தப்பசு வச்சிருக்கேன்

இன்னும் ஒரு மாட்டுக்கு

எவனப் போய் நான் கேட்டேன்?

 

ஊரெல்லாம் தேடி

ஏர்மாடு இல்லாட்டி

இருக்கவே இருக்கா

இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

* * * * *

காசு பெருத்தவளே

காரவீட்டுக் கருப்பாயி

தண்ணிவிட்டு எண்ணெயின்னு

தாளிக்கத் தெரிஞ்சவளே

 

 

சலவைக்குப் போட்டாச்

சாயம் குலையுமின்னு

சீல தொவைக்காத

சிக்கனத்து மாதரசி

 

கால்மூட்ட வெதச்சோளம்

கடனாகத் தாதாயி !

கால்மூட்ட கடனுக்கு

முழுமூட்ட அளக்குறண்டி

* * * * *

ஊத்துதடி ஊத்துதடி

ஊசிமழை ஊத்துதடி

சாத்துதடி சாத்துதடி

சடைசடையாச் சாத்துதடி

 

பாழும் மழைக்குப்

பைத்தியமா புடிச்சிருச்சு?

மேகத்தக் கிழிச்சு

மின்னல் கொண்டு தைக்குதடி

 

முந்தாநாள் வந்த மழை

மூச்சுமுட்டப் பெய்யுதடி

தெசைஏதும் தெரியாம

தெரபோட்டுக் கொட்டுதடி

 

கூர ஒழுகுதடி

குச்சுவீடு நனையுதடி

ஈரம் பரவுதடி

ஈரக்கொல நடுங்குதடி

 

வெள்ளம் சுத்திநின்னு

வீட்ட இழுக்குதடி

ஆஸ்தியில சரிபாதி

அடிச்சிக்கிட்டுப் போகுதடி

 

குடி கெடுத்த காத்து

கூர பிரிக்குதடி

மழைத்தண்ணி ஊறி

மஞ்சுவரு கரையுதடி

 

நாடு நடுங்குதய்யா

நச்சுமழை போதுமய்யா

வெதவெதைக்க வேணும்

வெயில்கொண்டு வாருமய்யா

 

மழையும் வெறிக்க

மசமசன்னு வெயிலடிக்க

மூலையில வச்சிருந்த

மூட்டையப் போய் நான் பிரிக்க

 

வெதச்சோளம் நனைஞ்சிருச்சே

வெட்டியாய் பூத்திருச்சே

மொளைக்காத படிக்கு

மொளைகட்டிப் போயிருச்சே

 

ஏர்புடிக்கும் சாதிக்கு

இதுவேதான் தலையெழுத்தா?

விதிமுடிஞ்ச ஆளுக்கே

வெவசாயம் எழுதிருக்கா?

 

காஞ்சு கெடக்குதுன்னு

கடவுளுக்கு மனுச்செஞ்சா

பேஞ்சு கெடுத்திருச்சே

பெருமாளே என்னபண்ண?

 

கவிதையின் விளக்கம்

கவிஞர் வைரமுத்து அவர்கள் விதைச்சோளம் என்ற கவிதையில், விவசாயமே தங்களின் வாழ்வாதாரம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் துன்பத்தை எடுத்துரைக்கின்றார்.

மழையும் விவசாயமும்

மழை இன்றி உழவு இல்லை. உழவின்றி உணவு இல்லை. உழவர்களுக்கு மழையே தெய்வம். ஆனால், மழை பெய்யாமலும் கெடுக்கின்றது. பெய்தும் கெடுக்கின்றது. இதனை ஓர் உழவனின் மனநிலையில் இருந்து படைத்துக் காட்டுகின்றார் கவிஞர்.

மழை பெய்யாமையால் நேர்ந்த துன்பங்கள்

          உழவுத் தொழிலை மேற்கொள்ளும் உழவர்கள் மழை வேண்டி இறைவனைப் பாடுகின்றனர். விதை விதைக்க வேண்டிய ஆடி மாதம் முடிந்து விட்டது. ஆவணியும் முடிந்து விட்டது. மழை வரும் என்று சொக்கிக்குளத்தைச் சேர்ந்த கோடாங்கி உடுக்கை அடித்துச் சொன்ன கெடுவும் முடிந்து விட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

மழை பொழியாததால் காடுகள் காய்ந்து விட்டன. எளிதில் காய்ந்துவிடாத தன்மை கொண்ட கற்றாழைகள் இப்போது கருகி விட்டன. இலந்தை மரங்கள் பழங்களைத் தருவதற்கு முன்பே இலைகளை உதிர்த்து விட்டன. வெயிலின் கொடுமை தாங்காது தங்கள் சிறகுகள் வெந்துபோன நிலையில், குருவிகள் வெம்மை தரும் காட்டை விட்டு வெகு தூரம் சென்று விட்டன. காற்று வீசுவது குறையவில்லை. அதனால் புழுதிகள் மண்ணில் அடங்கவில்லை. தலை நனைய மழை பெய்யவில்லை. நிலத்தில் உழவு செய்யமுடியவில்லை. இவ்வாறு சென்றால், விதை விதைத்து வருமானம் ஈட்டி உயிரோடு வாழ்வேனா? அல்லது வறுமையால் இறந்துபோய் விறகாகி விடுவேனா? என்று கவலை கொள்கின்றார் விவசாயி. ஏர் உழுகின்ற கலப்பை, நிலத்தில் கால் வைக்க முடியாமையால் கண்ணீர் வடிக்கின்றது. காற்றில் ஈரம் இல்லை. அதனால் கள்ளிச் செடியில் கூட பால் வற்றிப் போய்விட்டது. சிறு உயிரினமான எறும்பு குளிக்கக்கூட இரு சொட்டு நீர் இல்லாத நிலை உருவாகிவிட்டது. மேகங்கள் ஒன்று கூட வில்லை. மின்னல்கள் வரவில்லை. மேற்குத் திசையில் மேகங்கள் கருக்கவில்லை. காற்றும் வீசவில்லை என்று புலம்புகின்றார்.

மழை கண்ட உழவனின் மகிழ்ச்சி

மழை வேண்டி அனைத்துத் திசையில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டி விட்டு மன உளைச்சலோடு படுக்கின்றார் உழவர். அப்போது அவருடைய நெற்றியில் மழைத்துளி விழுகின்றது.

செல்வம் இருப்பவனைத் தேடிவரும் திடீர் உறவினர்களைப்போல, வெளியூருக்குச் சென்றிருந்த மேகமெல்லாம் திரண்டு வந்து விட்டது என்று எண்ணி மகிழ்கின்றார். தென்னாட்டின் பஞ்சங்களைத் தீர்க்க வருண பகவானை அன்போடு அழைக்கின்றார்.

உழவு செய்ய முயலும் விவசாயி

ஏர் உழ உடல்நலம் சரியில்லாத ஒற்றைப் பசுவை வைத்திருக்கிறேன். ஏர் பூட்டி உழுக இன்னொரு பசுவை யாரிடம்போய்க் கேட்பேன் என்று கவலை கொள்கின்றார். கேட்டுக் கிடைக்கவில்லையெனில், இடுப்பு உடைந்தாலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை இன்னொரு பசுவாக்கி ஏர் உழத் தயாராகிவிட்டார். இதன் மூலம், ஊருக்கே உணவளிக்கும் இன்றைய விவசாயிகளின் நிலைமை இத்தகைய கொடுமையான சூழலில்தான் இருக்கின்றது என்பதை மிகத் துயரத்தோடு பதிவு செய்கின்றார் கவிஞர்.

கடன் பெறுதல்

ஊரிலேயே    பணமும், செல்வமும், சொந்தவீடும்  படைத்திருக்கும் கருப்பாயி சிக்கனம் என்ற பெயரில் கருமியாக இருப்பவள்.  தண்ணியை எண்ணெய் என்று ஊற்றித் தாளிக்கத் தெரிந்தவள் என்றும், சலவைக்குப் போட்டால் சாயம் போய்விடும் என்று புடவையைத் தோய்க்காதவள் என்றும் அவளுடைய கருமித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றார்  ஆசிரியர். அவளிடம் சென்று கால் மூட்டை விதைச் சோளத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, கால் மூட்டைக்கு வட்டியோடு முழு மூட்டையும் அளக்க வேண்டிய தம் நிலையை எண்ணி வேதனை கொள்கின்றார்.

பெய்து கெடுத்த மழை

கடனாகப் பெற்ற சோளத்தை விதைக்கலாம் என்று எண்ணியிருந்த வேளையில், முதலில் ஊசி ஊசியாய் இறங்கிய மழை, பின்பு பின்னிய சடை போல் பெய்யத் தொடங்கியது. மேகத்திற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதுபோல ஓயாமல் பெய்கின்றது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு மின்னல்கள் மின்னுகின்றன. மூன்று நாட்களாக விடாமல் பெய்கின்றது மழை. எந்தத் திசையில் பெய்கின்றது என்பதே தெரியாத நிலையில் திரை போட்டுக் கொண்டு பெய்கின்றது. கூரை வீடு ஒழுகுகின்றது. குடிசை வீடு நனைகின்றது. நிலத்தில் ஈரம் மிகுதியாகப் பரவ ஈரக்குலை நடுங்குகின்றது.  வீடுகள் வெள்ளத்தால் சூழந்து விட்டன. சேர்த்து வைத்திருந்த சிறிதளவு சொத்துக்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. பலமான காற்றால் வீட்டின் கூரை வீசியெறியப்பட்டுவிட்டது. மழை நீர் ஊறியதால் மண் சுவர்கள் இடிந்து போயின. மழை விரும்பிய விவசாயி, நாடு நடுங்கும் அளவிற்குப் பெய்கின்ற நச்சு மழையை வெறுக்கின்றார். விதை விதைக்க வெயில் அடிக்க வேண்டும் என்று வேண்டத் தொடங்குகின்றார்.

வெயில் வந்தது

மழை நின்றது. வெயில் அடித்தது. விதை விதைக்கத் தயாராகி கடனாகப்பெற்ற சோள மூட்டையைப் பிரித்தால், மழையால் விதைச்சோளங்கள் எல்லாம் நனைந்து விதைப்பதற்கு முன்பே பூத்துவிட்டன. முளைக்காத அளவிற்கு முளைக் கட்டிவிட்டன. அதைக்கண்ட விவசாயி அதிர்ச்சி கொண்டவராய் “ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு இதுதான் தலையெழுத்தா? விதி முடிந்தவர்களுக்குத்தான் விவசாயம் என்று எழுதியிருக்கா” என்று குமுறுகின்றார்.  “நிலங்கள் காய்ந்து கிடக்கின்றதே என்று எண்ணிக் கடவுளிடம் மழை வேண்டினால், அதிகமாகப் பெய்து கெடுத்துவிட்டதே இறைவா நான் என்ன செய்ய” என்று அழுகின்றார்.

முடிவு

விவசாயிகளின் வறுமை வாழ்க்கையையும், மழையால் அவர்கள் படும் துயரங்களையும், இன்றைய உழவுத்தொழிலின் அவலத்தையும் இக்கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

 

5 கருத்துகள்: