மராட்டியர்கள்
விசயநகரத்தின் வீழ்ச்சிக்குப் பின் தக்காணத்திலும் தமிழகத்திலும் மராட்டிய அரசுகள் தோன்றின. இசுலாமியர் ஆதிக்கத்தை எதிர்த்து தக்காணத்தில் தோன்றிய மராட்டிய அரசு பேராற்றலாக மாறிப் போராட்டப் புயல்களை எழுப்பியது. இசுலாமிய அரசுகளை நசுக்கி மிதித்துக் கொண்டு முன்னேறியது. தமிழகத்தில் தோன்றிய மராட்டிய அரசு இதற்கு நேர்மாறாக விளங்கியது. மராட்டியர்கள் வடக்கில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை முறியடித்து விரட்டியடிக்க முழுமூச்சுடன் முயன்றபோது தமிழகத்தில் மராட்டிய அரசு உயிரற்று இயங்கியது. அது ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆங்கிலக் கம்பெனியாட்சி நிறுவுவதற்குத் துணை நின்றது.
தஞ்சை மராட்டியர்கள்
மராட்டியர்கள் முதன்முதலில் தஞ்சையில் அடியெடுத்து வைத்தனர். சரபோசி மன்னனின் ஆட்சிக்காலம் வரையில் மராட்டியரால் தமிழகத்தில் நன்மை ஏதும் விளையவில்லை. அவர்களுடைய காலம் எல்லாம் மைசூர் ஐதருடன் போராடித் தம் போர்த்திறனைக் காட்டிக் கொள்வதிலேயே கழிந்தது.
சாசி
கி.பி.1636 முதல் 1661 வரை பீசப்பூர் சுல்தானின் தளபதியாக விளங்கியவர் சிவாசியின் தந்தை சாசி. 1659க்கும் 1662க்கும் இடையில் கர்நாடகத்தில் புகுந்து, செஞ்சி,
தஞ்சை, தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை முதலிய இடங்களைக் கைப்பற்றிப் பீஜப்பூர்
அரசுடன் இணைத்தார். தஞ்சை 1659இல் கைப்பற்றப்பட்டது.
அவர் புதிதாகக் கைப்பற்றிய இடங்களில் ஆளுநர் ஆக அமர்த்தப்பட்டார்.
சாசி பெங்களுரையும், கோலாரையும் இருக்கைகளாக வைத்திருந்தார்.
நாயக்க அரசர்களுடன் ஏற்பட்டிருந்த உடன்பாட்டால் அவர் பீஜப்பூரின் மேலாதிக்கத்தை
உதறித் தள்ளினார். மராத்திய மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
சிவாசி
சாசியின் மூத்த புதல்வன் சிவாசி முசுலீம் அரசுகளுக்கு எதிராக மகாராட்டிரத்தில்
மராட்டிய அரசை நிறுவிப் புதுமுறைப் போராட்டங்களால் அவர்களைத் திணறடித்தார். கருநாடக தேசத்தையும் சோழ மண்டலத்தையும் தம் நாட்டுடன் இணைத்துக்
கொண்டு அவற்றுக்குத் தாம் பேரரசராக வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் சிவாசிக்கு இருந்தது.
அவ்விடங்களின் செல்வங்களை எல்லாம் கொள்ளை கொள்ள வேண்டும் என்று சிவாசி
எண்ணினார். சிவாசி தென்பகுதிகளைக் கைப்பற்றித் தனது நாட்டை விரிவுபடுத்தும்
நோக்குடன் படையெடுத்துள்ளார் என்பதைக் கர்நாடகத்தில் அவர் ஏற்படுத்திய நிர்வாக ஒழுங்குகள்
காட்டுகின்றன. சீரிசைலம், திருப்பதி முதலிய
இடங்கள் வழிச் சென்று காஞ்சி, செஞ்சி, வேலூர்
முதலிய இடங்கள் வழி முன்னேறிய சிவாசி பரங்கிப்பேட்டை, திருவதிகை,
புவனகிரி ஆகியவற்றையும் கைப்பற்றிக் கொண்டு 1677 சூலையில் கொள்ளிடக்கரையில் திருமாலப்பாடியில் முகாமிட்டார். சிவாசி தனது வெற்றி உலாவைத் தொடர்ந்து கொள்ளிடத்தின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி,
சாந்தாசியைச் செஞ்சியில் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திவிட்டு வடக்கில்
திரும்பினார். 1680இல் சிவாசி இறந்தார்.
முதலாம் சரபோசி மன்னன்
சரபோசி தஞ்சையில் அரசன் ஆனான். சாசியின் கலையார்வத்தைப் பெற்ற
சரபோசி புலவர்களைப் போற்றுவதிலும், கோயிற்பணி செய்வதிலும் விருப்புடையவனாக
விளங்கினான்.
இரண்டாம் சரபோசி
தஞ்சையில் 1798 சூன் மாத்தில் ஆட்சியைத்
துவக்கினான் இரண்டாம் சரபோசி. அரசபதவியைப் பெற்ற சரபோசி அதிகாரத்தைப்
பெறவில்லை. 1799இல் வெல்லெஸ்லியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு
ஓய்வு ஊதியம் பெற்று, தஞ்சைக் கோட்டைக்குள் ஒதுங்கினார்.
1799இல் தஞ்சைக் கோட்டையையும் வல்லத்தையும் வைத்துக் கொண்டு தஞ்சை நாட்டின்
ஆட்சியை ஆங்கிலேயரிடத்தில் ஒப்படைத்தார். தஞ்சை சென்னையுடன் இணைந்தது.
ஓய்வு பெற்று தஞ்சை அரண்மனையில் பதுங்கிய சரபோசி ஓய்வு ஊதியத்தை வைத்துக் கொண்டு
ஓய்வு காலத்தைக் கழிக்க ஆடம்பரத்தில் மூழ்கவில்லை. பாதிரியாரின் அரவணைப்பில் வளர்ந்த நற்குணம் படைத்த அந்த இளவரசன்
ஆங்கில இலக்கியத்தில் பற்றும் புலமையும் பெற்றிருந்தார். பல துறைகளை
நாடினார். பழைய ஆவணங்களையும், புத்தகங்களையும்
திரட்டினார். கிடைத்தவற்றைச் சரசுவதி மகால் நூலகத்தில் சேமித்தார்.
வேதாந்தம், காவியம், இலக்கியம்,
இசை, நடனம், கட்டிடக்கலை,
வான இயல், மருத்துவம் முதலிய பல்துறைகளைச் சார்ந்த
2200 சுவடிக்குமேல் அங்கே குவிந்தன. பெரும்பாலும்
அவை சமஸ்கிருத மொழியில் படைக்கப் பெற்றிருந்தன. பிறமொழி நூல்களும்
இருந்தன. இதனால் சரசுவதி மகால் பல்துறை ஆய்வுக் கூடமாக விளங்கியது.
சரபோசி மன்னன் மருத்துவ ஆய்வில் மிகுதியாகக் கவனம் செலுத்தினார். அதன் விளைவாகத் தற்காலத்தில் சரபோசி மருத்துவ நூல்கள் கிடைக்கின்றன.
இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும்,
இசுலாமியர்களுக்கும் அங்கே உயர் கல்வியுடன் ஆய்வு நடத்தும் கல்வி நிலையம்
இயங்கியது. 1805இல் தஞ்சையில் சரபோசி மன்னன் ஒரு அச்சுக் கூடத்தை
நிறுவினார். தேவநாகரி எழுத்துகளில் அச்சிடும் தொழில் அதில் நடைபெற்றது.
பழஞ்சுவடி ஆய்வு மட்டும் அல்லாது சரபோசி அறப்பணிகளும் ஆலயப் பணிகளும்
செய்துள்ளார். முசுத்தம்மாள் பெயரில் இராமேசுவரம் சாலையில் ஒரு
குளமும், ஒரத்த நாட்டில் ஒரு அன்னச் சத்திரமும் ஏற்படுத்தினார்.
தஞ்சை மராட்டிய அரசின் விளைவு
மராட்டிய அரசால் மக்கள் அளவற்ற தொல்லைகளுக்கு உள்ளானார்கள். மன்னர்கள் அடிமைகளாக இருந்தனர். மன்னர்களுக்கும்
மக்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. மக்கள் வரிப்பளுவால்
துன்புற்றனர். சமூகத்தின் மேல் மட்டத்திலும், அரண்மனையிலும் புலவர் குழாங்கள் மொழி ஆய்விலும், இலக்கண
ஆய்விலும், இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டிருந்தனர். மன்னர்களும் புலமை பெற்ற இலக்கியப் படைப்பாளர்களாக விளங்கினர். சாசி மன்னனின் அரண்மனையில் 46 புலவர்கள் வாழ்ந்தனர்.
வடமொழியில் உரை நூல்களும், காப்பியங்களும்,
நாடக நூல்களும் படைக்கப் பெற்றன. தெலுங்குப் புலவர்கள்
தெலுங்கு நூல்களைப் படைத்தனர். தமிழ்ப் புலவர்கள் தல புராணங்களையும்,
பக்திப் பாடல்களுக்கு உரை நூல்களையும் படைத்தனர். தாயுமானவர், அருணாசலக் கவிராயர் முதலியோர் இக்காலத்தில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஆவர். இலக்கியம் நீங்கலாக தத்துவம்,
இசை, நடனம் போன்றவைகளும், வான இயல், மருத்துவம் முதலிய அறிவியல் கலைகளும் ஆய்வாளர்களை
ஈர்த்தன.
--------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக